பொன்னில் ஒரு பிணம் – முத்து காமிக்ஸ் விமர்சனம்

October 31, 2008 at 9:19 pm 3 comments

      டாவின்சி கோட், ஹாரி பாட்டர் நாவல்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  உலகையே புரட்டிப் போட்ட நாவல்கள் அவை.  அவற்றில் என்னதான் எழுதியிருக்கிறது என்று பார்த்தால் டாவின்சி கோட் 400 பக்கங்களையும், ஹாரி பாட்டர் நாவல்களோ 2000 பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன.  அவற்றை படிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லையென்றும், இருந்தாலும் அத்தனை பக்கங்களையும் படிக்கும் அளவுக்கு பொறுமையும் இல்லையென நீங்கள் நினைத்து படிக்காமல் விட்டிருக்கலாம்.

     ஆனால் மனதில் அது போன்ற நாவல்களை யாரேனும் படிக்கையில் நாமும் அவ்வாறு படிக்க வேண்டுமென்ற ஆவல் எழும்.  அவர்கள் கூறும் பழங்கால பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் நடந்த பழங்கால வரலாற்று சான்றுகளை பற்றி அப்புத்தகங்களில் எழுதியிருப்பதை தீடிரென படிக்கையில் சற்று புரியாமல் திகைக்கக் கூடும்.   கவலையே படாதீர்கள், இன்னும் கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.  முதலில் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கலாம். 

     மேற்சொன்ன நாவல்களில் சொல்லப்பட்டவாறு மிகவும் பழங்கால வரலாற்றை அடிப்படையாக கொண்டு முத்து காமிக்ஸின் ‘பொன்னில் ஒரு பிணம்’ என்ற சித்திர கதை படைக்கப்பட்டிருக்கிறது.  100 பக்கங்களுக்கு குறைவாகவே இருக்கிறது.  தமிழில் மிகவும் விறுவிறுப்புடன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

     100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் ஒரு தேவாலாயத்தை சீரமைக்கும் முயற்சியில் அதனுடைய பாதிரியார் மிக குறைந்த பணத்துடன் ஈடுபட்டிருக்கிறார்.  அப்போது அவருக்கு ஒரு பழங்கால குறியீடுகளுடன் கொண்ட ஒரு காகிதம் கிடைக்கிறது.  அதனை பற்றி அவர் தீவிரமான ஆராயும்போது, சில விஷயங்கள் அவருக்கு புலப்படுகிறது. பின்னர் அவர் அந்த தேவலாயத்தை சீரமைப்பதற்கு பணத்திற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தது மாறி, மிக பிரமாண்டமாய் அந்த தேவலாயத்தை விரிவுபடுத்துகிறார். 

       இப்போது நம் கதாநாயகன் தற்காலத்தில் அறிமுகமாகின்றார்.  அவர் ஒரு ஆராய்ச்சியாளர். 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளின்  தொடர்பான மர்மங்களை அவர் தற்சமயம் கிடைக்கும் தடயங்களை வைத்து எவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றார் என்பது தான் கதை. 

      கிறிஸ்தவத்தின் ஆதித் தோற்றம், இரசவாதம் போன்ற வரலாற்று உண்மைகளுடையே பயணக்கின்றது இந்த சித்திரக்கதை. ஒரு இன மக்களை கொல்ல பிரென்ஞ் அரசாங்கம் உத்தரவிடும் போது அவர்கள் சொல்லுவதாக இச்சித்திர கதையில் சொல்லப்படும் ஒரு வாக்கியம் வரலாற்று உண்மை.

  “இந்த இன மக்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொல்வது?”

“உங்கள் கண்ணில் தென்படும் எல்லோரையும் கொல்லுங்கள் உண்மையான கிறித்துவன் சொர்க்கத்திற்கு போவான். மற்றவர்கள் நரகத்திற்குதான் செல்வார்கள்.”

    மேற்சொன்ன கதையை விரிவாக 400 பக்கங்களுக்கு ஒரு முழு நீள நாவலாக எழுதலாம். ஆனால் இக்கதை வெறும் 100 பக்கங்களுக்குள் அயல் நாட்டு சித்திரக் கதை என்ற போதிலும் கொஞ்சம் கூட பிசிறு தட்டாத தமிழ் மொழிபெயர்ப்பில் முத்து காமிக்ஸால் வெளியிடப்பட்டுள்ளது. 

      நம் நாட்டிலும் இது போன்ற மர்மங்களை வரலாறு விட்டு வைத்திருக்கிறது.  நம் ஊரில் உள்ள பழைய கோவில்களுக்கு போயிருக்கிறோம். 100 வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயங்களும் பல உள்ளன.  என்றாவது அந்த ஆலயங்கள் எவ்வாறு கட்டப்பட்டிருக்கும் என சிந்தித்திருக்கின்றோமா?  ஒவ்வொரு கோவிலுக்கும் இன்னொரு பக்கம் உண்டு. சிலவற்றில் இரத்தம் தோய்ந்த வரலாறும் இருக்கும்.  நம்மில் சிலருக்கு அந்த மறுபக்கம் கோவிலின் மடைப்பள்ளி என்பதாகதான் தெரியும் (கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் கோவிலில் உள்ள மடைப்பள்ளியில் ஒருமுறை சர்க்கரை பொங்கல் சாப்பிட்டிருக்கிறேன், வெகு நன்றாக இருந்தது என்பதை இந்த சமயத்தில் என்னால் மறைக்க முடியவில்லை)

    உதாரணத்திற்கு, முகலாயர் படையெடுப்பு தமிழ்நாட்டில் நடந்தபோது இங்கே உள்ள முக்கிய கோவில்களில் உள்ள புனித விக்ரகங்களையெல்லாம் அவர்கள் கையில் சிக்கிவிட கூடாது என மறைத்து விட்டார்கள்.  இது குறித்து சரியான தகவல்களை அவர்கள் விட்டுச் சென்றார்களா என்பது ஒரு வரலாற்று மர்மம். இவ்வாறு ஒவ்வொரு பழைமையான கோவிலுக்கும் ஒரு வரலாறு இருக்கும்.

     மற்றொன்று சந்திரகாந்த கல் (Philosopher’s Stone என்று அழைக்கப்படுவது வேறு, அது மேற்கத்திய உலகின் இரசவாதத்திற்கும், மரணமில்லா வாழ்விற்கும் தேவையான ஒரு பொருள்) என ஒரு பொருளை பற்றி நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.  சிலர் அது மாதிரி எதுவும் கிடையாது, போலி என்றும், சிலர் அது உண்மையென்றும் சில வரலாற்று ஆதாரங்களை காட்டுகின்றார்கள்.  அது ஒரு சுவாரஸ்யமான இன்னும் தெளிவுபடுத்தப்படாத வரலாறு மர்மம். 

    அடுத்ததாக, இரசவாதம்.  நம் சித்தர்கள் சர்வசாதாரணமாக செய்த வித்தை என நாடோடி கதைகளில் இது குறிப்பிடப்படுகின்றன.  சில வகையான மூலிகைகளைக் கொண்டு அவர்கள் இரசவாதம் செய்ததாக சில ஒலைச்சுவடிகளில் இருப்பதாகவும், சுவடிகள் இதுவரை முழுவதும் கிடைக்கவில்லை என்றும் வதந்திகள் இருக்கின்றன.  இது குறித்தும் விரிவான ஆராய்ச்சி நம் நாட்டில் செய்யப்படவில்லை.  ஒரு கட்டுக்கதை என்பதாக அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

     இது போன்று நிறைய வரலாற்று மர்மங்கள் நம் நாட்டிலும் உள்ளது.  அவைகள் சரியான முறையில் பதியப்பட வில்லை.  காலம் இன்னும் கடந்துவிடவில்லை.  இது குறித்து நம்மிடமும் விழிப்புணர்ச்சி வரவேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையில் பார்த்தால் வெறும் காதல் வார்த்தைகளை கல்வெட்டுகளாக பொறித்திருக்கின்றார்கள்.

     அன்றாட வாழ்விலிருந்து சற்று விலகி சிந்திக்க இது போன்ற வரலாற்று மர்மங்கள் உதவும். வாழ்க்கையின் மீது ஈர்ப்பு வரவும் இவைகள் உதவும் என்பது ஒரு பிரபல கவிஞரின் (நான்தான்) கூற்று.

            ‘பொன்னில் ஒரு பிணம்’ என்ற தலைப்பில் ரூ.10- மதிப்பில் ஒரு சித்திர கதையாக முத்து காமிக்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கின்றார்கள்.  எல்லா ஊர்களிலும் கிடைக்குமா என தெரியவில்லை.  கிடைப்பதற்கு சில நாட்கள் ஆகுமென நினைக்கிறேன்.  முதலீட்டாளர்களுக்கு இதில் இரட்டை இலாபங்கள் உள்ளன.  ஒன்று இப்புத்தகத்தை படிப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் மற்றும் இரண்டாவது இதே புத்தகத்தை ஐந்தாண்டுகள் கழித்து நீங்கள் விற்றால் உங்களுக்கு குறைந்தது மூன்று மடங்காவது விலை போகும்.  1985 (சரியாக வருடம் தெரியவில்லை) அன்று வெளிவந்த ரூ.10 மதிப்பில் வெளிவந்த ஒரு சித்திரகதை புத்தகம் தற்போதைய மதிப்பில் ரூ.2000- போகும். கிட்டதட்ட 200 மடங்கு அதிகமாக பிரீமியமாக விற்பனை செய்யப்படுகிறது.  அதுவும் லேசில் கிடைத்து விடாது.

     காமிக்ஸ் பிரியர்கள் இதனை தவறாமல் வாங்கி படிப்பார்கள்.  சித்திரக் கதைக்கு புதியவர்கள் ஒருமுறை வாங்கி படித்து பாருங்கள்.  ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்.

Entry filed under: காமிக்ஸ்.

31-10-2008 இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் VII

3 Comments Add your own

  • 1. simba  |  October 31, 2008 at 10:40 pm

    ஜோஸ் சார்… இங்க எங்க ஊருல அந்த புத்தகம் கிடைகரதில்லை.. ரொம்ப காலம் ஆச்சு. படிக்கணும், உங்க எழுத்து வேற அந்த ஆசைய அதிகமாக்கி விட்டது…

    ஒரு நாள் இல்ல ஒரு நாள் சிவகாசி போய் அத்தன புத்தகங்களையும் அள்ளிக்கிட்டு வரணும்…

  • 2. King Viswa  |  November 1, 2008 at 4:04 am

    Josh,

    இந்த புத்தகத்தின் ஒரிஜினலும் கருப்பு / வெள்ளையிலேயே வந்தது.

    // 1985 (சரியாக வருடம் தெரியவில்லை) அன்று வெளிவந்த ரூ.10 மதிப்பில் வெளிவந்த ஒரு சித்திரகதை புத்தகம் தற்போதைய மதிப்பில் ரூ.2000- போகும்//

    October 1987இல் வந்த தீபாவளி மலர் அது.

    மிகவும் சிறப்பாக உள்ளது தங்களின் பணி.

    தொடருங்கள்.

    கிங் விஸ்வா.

    தமிழ் காமிக்ஸ் உலகம்

  • 3. Rafiq  |  November 2, 2008 at 7:41 am

    அன்பர் ஜோஸ், அருமையான தமிழ் நடையில் பொன்னில் ஒரு பிணம் பற்றியும் அதன் சரித்திர பின்னனி பற்றியும் எழுதி இருந்தது, படிக்க படிக்க இனித்தது என்று சொன்னால் மிகையாகாது.

    நமது புராதன சின்னங்கள் பற்றியும் காமிக்ஸ் கதைகள் வடிக்கலாம் தான், ஆனால் அப்படி செய்ய இங்கு தகுதியுள்ள சித்திரகதை படைப்பாளிகள் இல்லை என்பது தான் உண்மை. ஆங்கிலத்தில் Virgin மற்றும் Vimanika போன்ற இந்திய சித்திரகதைகளின் வரவு ஒரு உற்சாகமான விசயமாக இருந்தாலும், அவர்கள் கற்பனை கதைகளில் உலவுவது ஒரு வருந்தத்தக்க விசயமே.

    தமிழில் ஒரு பதிவை போட்டு விட வேண்டும் என்ற எனது வெகு நாலு ஆர்வத்தை தூண்டுவதகாவும் உங்கள் பதிவு இருந்தது. விரைவில் நமது அ.கொ.தீ.கா. வில் உறுப்பினர் ஆகியவுடன் அதற்கு வலி வகுத்து விடுகிறேன்.

    தீவிரவாதி No. 1
    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்
    – “ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்”

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
October 2008
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031