Archive for November, 2008

வேதாள நகரம் – 06. சின்ன அணில்

      கங்குவா இன செவ்விந்திய தலைவனின் குடில்.  நமது இலட்சிய குதிரை வீரர்களை சுற்றி இருநுாறு பேர் கூடியிருந்தனர்.  அவர்களின் தலைவன் மிகவும் குள்ளமானவனாக இருந்தான்.

‘எங்க எல்லைக்குள் அனுமதியில்லாம நுழைந்ததற்கு மரண தண்டனை தான் என்பது தெரியுமா?

    அவனின் ஆணவ பேச்சு சுத்த வீரனான விஷ்வாவின் இரத்தத்தை சூடேற்றியது.   அவனுக்கு சூடாக பதில் அளிக்க விரும்பினார். அந்த தலைவன் தான் சொன்னதை நிருபிக்க தன் கோவணத்தில் இருந்து மிகப் பெரிய கத்தியை எடுத்து சுற்றியும் காட்டினான்.  அந்த கத்தியை அலட்சியமாக பார்த்த சுத்த வீரன் விஷ்வா,  தன் எண்ணங்களை மிகத் தெளிவாக, எவ்வித அச்சமின்றி வெளியிட்டார்.

‘சாமியோவ், இது உங்க எல்லைங்கிறது எங்களுக்கு சத்தியமா தெரியாதுங்க.  தெரிஞ்சா வந்தே இருக்க மாட்டோங்க.  எங்களை மன்னிசிடுங்க.  இனிமே இந்த ஏரியா பக்கமே வர மாட்டோங்க.’

‘அது முடியாது.  எங்கள் குல வழக்கப்படி ஒன்று உங்க எல்லோருக்கும் மரண தண்டனை அல்லது எங்கள் குல சாம்பியனோட உங்களில் யாராவது முன்வந்து சண்டையிட்டு வெற்றிக் கொள்ள வேண்டும்.’

    விஷ்வா வேகமாக சிந்தித்தார்.  இவனுங்களா பார்த்தா காட்டுமிராண்டி பசங்க மாதிரி இருக்கு.  சண்டைன்னா பேயடி அடிப்பான்ங்க.  இது வேலைக்காவது.  இன்னும் கொஞ்சம் கெஞ்சி அழுது விடுதலை வாங்கிட்டு ஒடியே போய்ட்லாம் என முடிவு செய்தார். அதற்குள் அந்த செவ்விந்திய தலைவன் விஷ்வாவைப் பார்த்து புன்னகை செய்தான்.

‘நீ ஒரு சுத்த வீரன்தான்.  உன் நண்பர்களுக்காக சவாலை ஏற்றுக் கொண்டாயே?

         வெதுக்கென்றது நமது கதாநாயகனுக்கு.  திரும்பி பார்த்தால் அவர் உயிர் நண்பர்கள் இருவரும் மூன்றடி தள்ளி நின்றுக் கொண்டிருந்தார்கள்.  அடப்பாவிகளா!

‘வீரனே, ஒரு அரை மணி நேரம் ஓய்வெடு.  எங்கள் குல சாம்பியன் சின்ன அணிலோடு நீ மோதப் போகிறாய்.’

       விஷ்வா வெகு வேகமாக தன் நண்பர்களிடம் வந்து, ‘என் கூட தானே நின்னிங்க.  அப்புறம் ஏன்யா மூன்றடி பின்னாடி போனிங்க.  நான் மாட்டிக்கிட்டேன் பாத்திங்களா?

     கலீல், ‘விஷ்வா,  யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சின்னு திரும்புனேன்பா’

     சதீஷ், ‘கால்ல அரிச்ச மாதிரி இருந்துச்சி. அப்டியே திரும்புனேன்’

   ‘அதை விடு.  சின்ன அணில் தானே.  வாலைப் புடுச்சி ஒரு சுத்து சுத்தி போட்டுட்டு வா, விஷ்வா.  நாம கிளம்பி போய்கிட்டே இருக்கலாம்.’

‘சின்ன அணில்ன்னு சொல்றான்ங்க.  அவன் ஏதாவது படாத இடத்தில கடிச்சு வைச்சானா என்ன பண்றது’

     ஒரு  வயதான செவ்விந்திய வீரன் அவர்களை நோக்கி வந்தான்.

‘வீரனே, இந்த ஒற்றைக்கு ஒற்றை மோதல் எங்கள் குல வழக்கம்படி நடக்கும்.  போட்டியிடும் இரு வீரர்களும் எங்களின் புனித துணியின் இரு முனைகளை அவரவர் வாயில் வைத்து கடித்துக் கொண்டே சண்டையிட வேண்டும்.  எவர் துணியை விடுகிறார்களோ அல்லது முதலில் எமனுலகம் போய் சேர்க்கிறார்களோ அவர் தோற்றவர் ஆவார்’ என ஒற்றைக்கு ஒற்றை மோதலின் முதல் விதியை விளக்கினார்.

      ‘வாயில துணியக் கட்டிக்கிட்டு சண்டையா.  இத மாதிரி ஏற்கெனவே செய்திருக்கேன்.  ஆனா அது ஒரு பொண்ணுக்கூட. நல்ல வேளை, சின்ன அணில் நம்மளை படாத இடத்துல கடிச்சு வைக்க மாட்டான்.’

———————————————————————-

     நமது இலட்சிய வீரர்கள் தப்பியதை அறிந்த ஜானி பீரோ கொதித்தான்.  அவர்களுக்கு ஏதோ ஒரு புதையலின் வரைபடம் கிடைத்திருக்க வேண்டும். அதனாலேயே சிறைச் சாலையிலிருந்து தப்பித்திருக்கிறார்கள் என முடிவு பண்ணி தன் அப்ரண்டீஸ் செழியுடன் அவர்களை தேடி புறப்பட்டான்.

————————————————————————

       அந்த செவ்விந்திய குடியிருப்பிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் மர்ம குதிரை வீரர்கள் காத்திருந்தனர்.

—————————————————————————–

     அந்த செவ்விந்திய குடியிருப்பிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் நோவடி நகரை நோக்கி ஒரு கோச் வண்டி வந்து கொண்டிருந்தது.

———————————————————————————

       ஒரு கடற்கரை.  அங்கே இக்கதையின் ஆசிரியன் கதை நாலாபக்கமும் அலைவதால் கதையை எங்கே விட்டோமென்று குழம்பிக் கொண்டு நிற்கிறார்.

—————————————————————————-

      செவ்விந்திய குடியிருப்பு.  ஒற்றைக்கு ஒற்றை போட்டி திடல்.

     ‘விஷ்வா, சட்டுபுட்டுன்னு சண்டைய முடிச்சுட்டு வா. ’

    ‘ஏம்பா, இவர பாத்தா சண்டய விரும்புற மாதிரி தெரியலையே’

   ‘என்ன பெருசு, இப்படி சொல்லிட்ட, அண்ணன் தானா சண்டக்கு போக மாட்டாரு.  சண்டன்னு வந்திச்சி, பறந்து பறந்து அடிக்கிறதுல பல்லி, முள்ளு முள்ளா குத்துறதுல கள்ளி, மொத்தத்துல சண்டன்னு வந்தா பெரும் புள்ளி.’

‘டாய், எவன்டா இங்க சின்ன அணில்? சீக்கிரம் அவனை கூட்டிட்டு வாங்கடா. பல ஜோலிக் காரங்கடா நாங்க. சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டு அடுத்த சவாலை நோக்கி போக வேண்டாம்?  அண்ணே, நீங்க போங்கண்ணே, ஜெயிச்சிட்டு வாங்கண்ணே.’

‘டேய் சின்ன அணில் பயலே, எங்க அண்ணங்கூட மோதப் போறே, வூட்டுல சொல்லிட்டு வந்துறு.  எங்க அண்ணன் உடம்பு இரும்பு, அவரு மனசு கரும்பு, உயிரோட இருக்கணும்னா போட்டிய விட்டு நீ கிளம்பு’

‘யோவ், நிறுத்துங்கய்யா, எனக்கென்னமோ ஒரே திகிலா இருக்கு.’

‘(மெல்லிய குரலில்) விஷ்வா, இப்படியெல்லாம் பிட்டு போட்டுதான் எதிராளிய பயமுறுத்துணும், நீ சும்மா இரு…. (உரத்த குரலில்) டாய், எங்க அண்ணனை பாத்தா திகிலுக்கே திகில் வருண்டா …’

     மேற்கொண்டு சதீஷ் பேசும்முன் அங்கிருந்த கூடாரத்தை விலக்கிக் கொண்டு சின்ன அணில் வெளியே வந்தான்.  ஆறரை அடி உயரத்துடன் இருந்தான்.  பொதுவாக கட்டுடல் கொண்டவர்களுக்கு சிக்ஸ் பேக்ஸ் இருக்கும், இவனுக்கோ சிக்ஸ்டீன் பேக் இருந்தது.  அவன் மார்பிலே வெற்றி பெற்ற படத்தின் நுாறாவது நாள் போஸ்டரை ஒட்டலாம். அவனுடைய கைகள் ஒவ்வொன்றும் இரண்டு உலக்கைகள் போல இருந்தன.  அவனுடைய கால்கள் போர்க்கப்பல்களில் உபயோகப்படுத்தும் நங்கூரங்கள் போல இருந்தன. ஒரு கோவணம் மட்டுமே அணிந்திருந்தான்.  நமது இலட்சிய வீரர்களை பார்த்ததும் ஒரு உறுமல் அவனிடமிருந்து எழுந்தது.

     ‘சதீஷ், பூமி நடுங்கிக் கொண்டிருக்கிறது போல இருக்கிறதே.  பூகம்பம் வருவது போல இல்லை’

    ‘அப்டியெல்லாம் இல்லை, விஷ்வா.  உன் கால்கள் இரண்டும் ராக் அண்ட் ரோல் ஆடிக்கொண்டிருக்கின்றன.’

                                                                                                               தொடரும்

November 29, 2008 at 8:49 am 11 comments

வேதாள நகரம் 5. சிறைச்சாலை

     பெருசு, இதான் அந்த வரைப்படமா?

     ஆமாம்பா, மனசுலேந்து ஒரு பெரிய பாரம் இறங்கினா மாதிரி இருக்கு.  நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோட இருப்பேன்.  எனக்கு நீங்கதான் இறுதிசடங்கு செய்யணும்.

‘அது சரியா வராது பெருசு.  நாளைக்கு காலையில டிபன் பண்ணிட்டு நாங்க கிளம்பறோம்.  அதுக்குள்ள நீ டிக்கெட் வாங்கிட்டா உனக்கு எல்லா சடங்கும் செய்வோம். ’

‘விஷ்வா, ஏம்பா இப்படி பேசுற. ஒன்னு செய்வோம்.  பெருசயும் நம்ப கூட கூட்டிட்டு போவோம். பெருசு, எங்க டிக்கெட் வாங்குதோ அங்கேயே இறுதி சடங்கு செஞ்சிறலாம்.’

‘சரிப்பா, அப்படியே செய்வோம்.’

டொக் டொக்

‘எவன்டா இந்த நேரத்துல கதவ தட்டுறது.  கலீல் போய் பாரு’

‘யார ஒருத்தன் லுசு மாதிரி இருக்கான்பா. யாருய்யா நீ?’

‘நான் இந்த ஊரு டெபுடி, உங்கள அரஸ்ட் செய்ய வந்துருக்கேன்’

பின்னால் விஷம புன்னகையுடன் ஜானி பீரோ.

—————————————————————————-

       டூமில்குப்பத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில்   கங்குவா இனத்தை சேர்ந்த ஒரு செவ்விந்தியன் ஒரு குதிரை வீரன் கொடுத்த பணப்பையை வாங்கி தன் குதிரையில் வைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் கிளம்புகிறான்.

————————————————————————-

ஷெரீப் அலுவலகம். டூமில்குப்பம்.

   ‘யோவ் நாங்க என்ன தப்பு செய்தோம்?

   ‘சூப் வாங்க வந்த ஒரு பாட்டியை நீங்க மூன்று பேரும் கையப்பிடித்து இழுத்துருகீங்க’

   ‘நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலை.  லாஜிக்கா பாத்தாலும் பாட்டிக்கு ரெண்டு கை தான் இருக்கும்.  எப்படி மூணு பேரு புடிச்சு இழுக்க முடியும்?

‘அதெல்லாம் காலையில்ல கோர்ட்டுல சொல்லுங்க. இப்ப ஜெயில்ல போய் படுங்க’

‘நாங்க இந்த ஊரு ஜட்ஜ உடனே பாக்கணும்’

‘அடப்பாவிகளா, நீங்க கைய பிடிச்சு இழுத்த பாட்டிதான்யா ஜட்ஜ்’

அப்போது அட்டகாசமாக சிரிப்புடன் ஜானி பீரோ அவன் உதவியாளர் செழியுடன் வருகிறான்.

‘அந்த கிழவன் உங்ககிட்ட எதையோ கொடுத்தான், அது என்னா?

‘மரியாதையா கேட்டா சொல்ல மாட்டீங்க.  தெரியற வரைக்கும் இந்த ஊரவிட்டு நீங்க நகர முடியாது’

      செழி உடன் ஒரு மரியாதையான பார்வையுடன் விஷ்வாவை பார்த்து, ‘நீங்க இந்த ஊருக்குள்ளே நுழையும்போது வாசலில் ஒரு உலகத் தரமான ஹைக்கூ எழுதினிங்களே, அப்புறம் ஏன் இந்த காட்டு பசங்களோட அலையிறிங்க. என்ன ஒரு கவிதை அது.  நிலா, சப்பாத்தி, துப்பாக்கி. அட அடா, நிலா பௌர்ணமி முடிஞ்சு தேய தொடங்கிடும். ஆனா அமாவசைக்கு அப்புறம் வளர தொடங்கிடும். சப்பாத்தி பிச்சு பிச்சு தின்னா காண போயிடும். ஆனா புதுசா சுட்டா முழுசாயிடும். துப்பாக்கி சுட சுட குண்டு தீந்து போயிடும். அப்பால புதுசா ரொப்பிக்கலாம். அதே போல தான் வாழ்க்கைன்னு எவ்ளோ எளிமையா சொல்லிட்டிங்க’ என வியந்து போகிறார்.

      அந்த இடத்தில் ஒரு மயான அமைதி நிலவியது.

   ஒவ்வொருவராக  விஷ்வாவை ஒரு பயந்த பார்வை பார்த்துக் கொண்டே கிளம்ப ஆரம்பிக்கிறார்கள். டெபுடி அவர்களை நோக்கி, ‘சரி, உங்கள் ஆயுதங்களை எல்லாம் என்னிடம் கொடுங்கள்’

     குதிரை வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கழற்றி கொடுக்கிறார்கள். கலீல் தன் சாட்டையை டெபுடியிடம் கொடுக்கிறார்.

‘வேண்டாங்க, இதை நீங்களே வைச்சுகோங்க’

‘இல்லீங்க, இது ஒரு ஆயுதங்க.’

‘பரவாயில்லையிங்க.’

‘அட, சொன்னா கேளுங்க, இது ஒரு ஆபத்தான ஆயுதங்க.’

‘அட வேணாம்னு சொன்ன கேளுங்க எடுத்துட்டு போங்க’

கடுப்புடன் கலீல் தன் சாட்டையுடன் சிறைக்கு செல்கிறார். அவர்களை அடைத்து சிறையை பூட்டிவிட்டு டெபுடியும் கிளம்புகிறார்.

‘இதுல ஏதோ ஒரு மர்மம் இருக்கு.  நம்ப மேல ஒரு வீண் பழி சுமத்தி ஏன் நம்மை இங்கே அடச்சு வைக்க பாக்கறாங்க.  ஏம்பா, கைய புடிச்சு இழுத்திட்டிங்களா?

‘யோவ், நீயே இப்டி கேட்டா எப்டி? எனக்கு உம்மேல தான் சந்தேகமா இருக்கு?

‘எம்மேலயா?

‘ கவித எழுதற நீ கைய பிடிச்சு இழுக்க மாட்டியா?

‘விஷ்வா, சதீஷ், சண்ட போடுறத நிறுத்துங்க. நாம இங்கேயிருந்து தப்பிக்கணும்.  எம்மேல சுமத்தப்பட்ட பழிய மத்தவங்க கேட்டா எவ்வளவு அவமானமாக இருக்கும்? என்னோட இமேஜ் என்ன ஆகும்? பாட்டியை போய்……………… என்ன கொடும சார் இது?

      சிறையை சுற்றி பார்க்கின்றனர்.  தீடிரென்று விஷ்வாவுக்கு ஒரு எண்ணம் உதயமாகிறது. 

    ‘சதீஷ், உன்னோட மருந்து பெட்டிய எடு’

   விஷ்வா  சதீஷின் மருந்து பெட்டியை திறந்து அதில் காணப்படும் சிரப்புகளில் சிகப்பாக இருப்பதை எடுத்து சிறைக்கம்பிகளில் ஊற்றுகிறார்.  சில நொடிகளுக்கு பிறகு ஸ்ஸ் என்ற சத்தத்துடன் சிறைச்சாலை கம்பிகள் உருக தொடங்குகின்றன.

     ‘அட்டகாசம் பண்ணிட்ட, விஷ்வா.    ஆமா, சதீஷ், என்ன சிரப்யா இது?

    ‘இருமல் சிரப்.’

    மயான அமைதி.

    ‘யோவ், பொட்டிய உடனே மூடி சாவிய எங்கிட்ட கொடு’

  சிறையிலிருந்து தப்பி மூன்று இலட்சிய குதிரை வீரர்களும், எஸ்கோபரும் நகரை விட்டு வெளியேறுகின்றனர்.  டூமில் குப்பத்திலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவு சென்றதும்,  இரவு அங்கு தங்கி மறுநாள் கிளம்ப முடிவு செய்கின்றனர்.

     மறுநாள் காலை.  நம் கதாநாயகர்கள் கண்களை திறந்து பார்த்தபொழுது, அவர்களைச் சுற்றி கண்களில் கொலைவெறியுடன் கங்குவா இன செவ்விந்திய வீரர்கள் இருபது பேர்.

                                                                                                    தொடரும் …………..

November 28, 2008 at 5:33 pm 2 comments

27-11-2008

       மும்பை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

       இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என்ற போதிலும், வரலாற்றை புரட்டி பார்த்தோமென்றால் நமது அரசாங்கம் தீவிரவாதிகளிடம் ஒரு மென்மையான அணுகுமுறையையே மேற்கொண்டுள்ளது.  இதில் முஸ்லீம் தீவிரவாதிகள் என்ற பட்டம் வேறு அவர்களுக்கு கொடுக்கப்படும்.  தீவிரவாதிகளை முஸ்லீம் தீவிரவாதிகள், ஹிந்து தீவிரவாதிகள்  என பிரித்து அழைப்பது அபத்தம்.  அவர்கள் தீவிரவாதிகள்.  அவ்வளவுதான். 

      மக்கள் ஒட்டு என்ற கணக்கை வைத்து செயல்படாமல் உண்மையிலேயே மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்ப்போம்.

     பலத்த காற்று இங்கே வீசிக் கொண்டிருக்கிறது.  மழையும் விட்டபாடில்லை.  

      வேறு ஏதாவது பங்கு  பரிந்துரை நிப்டியானந்தர் பக்கத்தில் கொடுக்கமுடியுமா என இன்று முயற்சி செய்கிறேன்.     

      Good Morning to you all!

November 27, 2008 at 6:53 am 4 comments

Older Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
November 2008
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930