Archive for August, 2009
twit…twit….twit
உலக சோம்பேறிகளில் ஒருவரான நான் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளேன். என்னுடைய ட்விட்டர் ஐடி
marcopolo7
இதை கொடுப்பது என்னை தொடர வேண்டுமென்பதற்காக இல்லை. சந்தை நாளின் ஏதாவது எண்ணங்கள் தோன்றினால் (இதுவரை தோன்றியதில்லை) அதை பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான்.
இன்று நிப்டியானந்தரின் பரிந்துரை பகுதியை புதுப்பித்திருக்கிறேன் (என்னா தமிளு). இது போல….
எனக்கு மிகவும் பிடித்த பயணிகளில் மார்க்கோ போலாவும் ஒருவர். இவர் எழுதிய பயணக்கட்டுரை (இவர் சொல்ல எழுதிய என்றும் சொல்லலாம்) பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. இன்றும். இவரை போலவே நானும் ஆக வேண்டுமென்ற ஆசையும் உண்டு. என்னுடைய பயணக்கட்டுரைக்கு இப்போது பெயர் மட்டுமே வைத்திருக்கிறேன். பயணங்கள் இன்னும் முழுமையடையவில்லை.
தலைப்பு: சுந்தரி பின்னே ஞான்………………
Smith & Wesson – மேற்கில் இன்னும் சில கோமாளிகள்
Disclaimer:
ஒரு வருடத்தில் அனைத்து நாட்களிலும் சந்தையில் நான் வணிகம் செய்வதில்லை. வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் தொடர்ந்து இடைவெளி விட்டு விடுவேன். அப்போது சந்தையை பற்றி சிந்திக்காமல் (சந்தை எவ்வாறு ஏறி இறங்கினாலும்) பிடித்த விஷயங்களை செய்வதென சில வருடங்களாகவே செய்து வருகிறேன். நம் உள்ளுணர்வுகளை வலுவாக்க இந்த இடைவெளி உதவும் என்பது என் நம்பிக்கை. இப்ப உதாரணத்துக்கு ஒரு பொண்ணு பின்னாலயே போறோம், கொஞ்ச நாள் ……..வேண்டாம், இது விபரீத எடுத்துக் காட்டாக மாறிவிடும்…. இப்ப மௌன விரதம் ….. சரி, வரல்ல விட்ருவோம் இதை.
இத்தகைய காலகட்டங்களில் சந்தையை பற்றிய செய்தியல்லாமால் நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.. (எப்பதான் தெரிஞ்சத எழுதுவானோ) வாழ்க்கை என்பது பங்கு சந்தை மட்டும் தானா என்ன?
—————————————————————————————————————-
அமெரிக்க தெற்கு கடைசியில் பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் முக்கிய தொழிலாக கால்நடை பராமரித்தலே இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தது. பாலைவனத்தையும், செவ்விந்திய குடியிருப்புகளை சுற்றிலும் அமைந்துள்ள வெள்ளையரின் குடியிருப்புகளில் கால்நடையே முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கியது. அந்த கால்நடைகளை பராமரிக்க பண்ணை முதலாளிகளால் பணியில் அமர்த்தப்பட்டவர்களே கௌபாய்கள்.
கால்நடைகளை தாக்கவரும் விலங்கினங்கள், களவாடவரும் செவ்விந்தியர்கள், உள்நாட்டு எத்தர்கள் இதுபோன்ற அபாயங்களிலிருந்து அவைகளை காப்பதே இவர்களின் பணி. இவர்களின் தோற்றம் எப்படியிருக்குமென்றால், முரட்டு அழுக்கான துணிகள், வெயிலிருந்து பாதுகாக்க தோலினாலான தொப்பி (இவற்றை சமயத்தில் நீரரருந்தும் பாத்திரமாக உபயோகப்படுத்துண்டு), No Sunglass. குளித்தல், பல்தேய்த்தல் போன்ற வழக்கங்கள் எல்லாம் பொதுவாக அவர்களிடம் இராது. கால்நடைகளுக்கும், அவர்களுக்கும் எவ்வித வாசனை வித்தியாசங்களும் இருக்காது. கடமை, கண்ணியம், கட்டுபாடெல்லாம் அவர்களிடம் அவ்வளவாக இராது. தங்கம், டாலர் இவைகளே அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள். சிலர் சண்டியர்-கம்-நாடோடிகளாகவும் சுற்றுவார்கள்.
இப்படிப்பட்ட கௌபாய்களை மையமாக வைத்து இத்தாலியிருந்து உலகப் போருக்கு முன்னரே சித்திரத் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலுள்ள கௌபாய்களில் சுத்தமாகவும், மிகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் கதாநாயகர்களாகப்பட்டனர். தொடர்கள் இத்தாலியில் பெரும் வெற்றியடைந்தன. அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் கெளபாய்கள் ஒரு கதாநாயக அம்சத்துடன் பார்க்கப்பட்டனர். நாளைய தினத்தை பற்றிய கவலை இல்லாத வாழ்க்கை, இந்த பண்ணை இல்லாவிட்டால் அடுத்த பண்ணை, வேலைக்கு நேர்க்காணல், குரூப் டிஸ்கஷன் போன்றவை இல்லாதது இந்த அம்சங்களுடன் இருந்த அவர்களை உலகப்போருக்கு பிறகு வேலைக்கு கஷ்டப்பட்ட மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. கௌபாய்கள் சித்திரத் தொடர்கள் காவியமாக்கப்பட்டன. இவற்றில் புகழ் பெற்ற கதாநாயர்கள் டெக்ஸ் வில்லர், கேப்டன் ப்ளுபெர்ரி.
இதனை கிண்டல் செய்யும் வகையில் மேலும் சில சித்திரத் தொடர்கள் உருவாக்கப்பட்டன. பொதுவாக இவையனைத்தும் பெல்ஜியம் மற்றும் ப்ரான்ஸ்காரர்களால் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இத்தொடர்களும் பெரும் வெற்றியடைந்தன. அதில் மிகவும் புகழ் பெற்றவர் லக்கி லுக்.
இந்த வரிசையில் நானும் ஒரு புதிய சித்திரத் தொடர் ஒன்றினை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சித்திரத் தொடரின் பெயர் ஸ்மித் அன்ட் வெஸன் (Smith & Wesson). Soleil பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்த சித்திரத் தொடரானது கௌபாய்களை கேலி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட தொடர். இரு முக்கிய பாத்திரங்கள். ஸ்மித் மற்றும் அவருடைய அடிப்பொடி வெஸன். ஸ்மித் அன்ட் வெஸன் என்பது அமெரிக்க பிரபல துப்பாக்கி ப்ராண்ட் என்பது உபரி தகவல்.
இது போன்ற ஆல்பங்களை வரிசையாக படிக்க வேண்டுமென்பதில்லை. எந்த வரிசையில் வேண்டுமானாலும் படிக்கலாம். கதையானது ஒரு ஆல்பத்திலேயே முடிந்து விடும். ஒவ்வொரு ஆல்பமானது சில நகைச்சுவை சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் அதிகபட்சம் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்து விடும். அதாவது பனிரெண்டு படங்களுக்குள் உங்கள் உதட்டில் புன்னகையை வரவைக்கும் முயற்சி. அவற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
இது இலகுவான வேலைதானே என நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். இரு பக்கங்களை மொழி பெயர்க்கவே ஏகப்பட்ட மணித்துளிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் ஒரு குழுமத்தின் கணக்கு வழக்குகளை பார்த்து தேறுமா, தேறாதா என சொல்லி விடலாம். ஆனாலும் இந்த அனுபவம் இனிதாக இருந்தது.
இரு பக்கங்களை என்னால் முடிந்தவரை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு அவற்றில் புன்னகை வரவில்லையென்றால் அதை மொழிபெயர்த்த என் குறை தானே தவிர அவர்களின் தவறு இல்லை. இது போன்ற சித்திர தொடர்கள் இந்தியாவிலும் தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனையாகின்றன. விலை சற்று அதிகம்தான். தமிழ்படத்தின் ப்ளாக் டிக்கெட்டுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக அதிகமில்லை என சொல்லலாம்.
பின்குறிப்பு சித்திரத் தொடர்கள் பற்றி எழுதுவதில் எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் தரம். உழைப்பு மற்றும் ஸ்கேன்கள் போன்றவற்றிற்கு முன்னே இது மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது என்பது உண்மை. Please don’t say anything about my scans. I know it sucks!
Recent Comments