Archive for January, 2010
Fantastic Mr. Fox – Truly Fantastic!
மிகவும் புகழ் பெற்ற சிறுவர்கதை எழுத்தாளரான ரோல் டால் (Roald Dahl) கதைகளில் நிறைய சித்திர திரைப்படங்களாகி இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜேம்ஸ் அன் த ஜயன்ட் பீச் (டிஸ்னி), சார்லி அன்ட த சாக்லேட் ஃபேக்டரி (ஜானி டெப் நடிப்பில்), மடில்டா (குழந்தை ஜீனியஸ்).
அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மக்கள் குழந்தை பருவத்தில் அவரின் ஒரு கதையையாவது கேட்டு, படித்து இருப்பார்கள். இவரின் கதை தொகுப்பிலிருந்து சித்திர திரைப்படமாக தற்பொழுது எடுக்கப்பட்ட படம்தான் Fantastic Mr.Fox.
மூன்றிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் தூங்குவதற்காக சொல்லப்படும் கதை இது என்பதால் பெரிய அளவில் வீர சாகசங்கள், அதி பயங்கர வில்லன்கள், பிரமிக்க வைக்கும் காட்சிகள் எதுவுமே இருக்காது.
மூன்று பண்ணை அதிபர்களிடமிருந்து கொள்ளையடித்து தன்னை நம்பியுள்ள குடும்பத்தினையும் (சுயநலம்) மற்றும் சில குடும்பங்களையும் (பொது நலம், ஹீரோ மெட்டிரியல்!) திருவாளர் நரி காப்பாற்றுகிறது.
இது பொறுக்காத மூன்று பண்ணை அதிபர்களும் அந்நரியை வேட்டையாட புல்டோஸர், துப்பாக்கி, ஹெலிகாப்டர் என பல்வேறு விதமாக முயல, அம்முயற்சியில் நரி மற்றும் இதர மிருகங்களின் இருப்பிடங்கள் அழிக்கப்படுகின்றன. மற்ற மிருகங்கள் நமது ஹீரோவால் தானே இவ்வளவு தலைவலி என புலம்ப, திருவாளர் நரி தான் உருவாக்கிய பிரச்சினையை தானே தீர்த்து வைப்பதே கதை.
மிருகங்களை எடுத்துவிட்டு பார்த்தோமென்றால் இந்த கதை தமிழ் திரையுலகிற்கு புதிதில்லை என்றாலும், இந்த கதையை சித்திர திரைப்படமாக எடுக்க முயன்றது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் இக்கதையில் க்ராபிக்ஸ் உத்தியில் புகுந்து விளையாட தேவையான அளவிற்கு கதை அமைப்பு இடங்கொடுக்காது.
மற்றொரு ஆச்சரியம் ஜார்ஜ் க்ளூனி, மெரில் ஸ்ரிப்,வில்லியம் டெஃபோ, பில் முர்ரே போன்ற பிரபலங்கள் குரல் தர முன்வந்தது. இச்சித்திர படத்தின் ட்ரைலரை பார்த்த பொழுது நான் வெறுத்தே போய்விட்டேன். 1970-களில் வெளிவந்த டிஸ்னி கார்ட்டூன் கள் போல இருந்தது. சித்திர திரைப்படங்களின் தீவிர இரசிகனான நான் இச்சித்திர திரைப்படம் வெளிவந்து சில மாதங்கள் ஆகியும் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமின்றி இருந்தேன்.
ஜார்ஜ் க்ளூனி என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகர். ப்ராட் பிட் போன்று முக அழகோ, உடல் வடிவமைப்போ கிடையாது. இருந்தும் ஹாலிவூட்டில் மிக அழகான நடிகர்களில் இவரும் ஒருவர் என கருதப்படுகிறார். அப்படியாயின் அழகு எங்கே, எதில் இருகின்றது என்ற தத்துவ விசாரம் எழுந்தாலும் அதை ஆராயும் இடம் இதுவல்லவே. வேட்டைக்காரனை வீம்புடன் பார்க்கின்றபோது இதை ஏன் விட்டுவைப்பானேன் என பார்த்தேன்.
வெறும் குரலின் மூலம் எவ்வாறு மாயாஜாலம் காட்டுவது என்பதை இவர்களை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். எந்தவித க்ராபிக்ஸ் வித்தைகளும் இச்சித்திர படத்தில் இல்லையெனினும், படத்தில் ஒரு கணம் கூட நம்மை ஆர்வம் இழக்க வைப்பதில்லை. ஜார்ஜ் க்ளுனியின் அந்த கரகரத்த குரல் மற்றும் நரியின் ஸ்டைல் என அவர் ஒரு மெல்லிய விசிலுடன் உதட்டை சுழிப்பது என மனிதர் பின்னியெடுத்திருக்கிறார்.
சிறுவர்களுக்கான கதையை ஒட்டியே பெரியவர்களுக்கான நுட்பமான நகைச்சுவையுடன் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் வெஸ் ஆன்டர்சன். நகைச்சுவை ரசனையை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் படம் இது. தவற விடாதீர்கள்.
படத்தின் ட்ரைலர் (And so it begins………….)
ஆயிரத்தில் ஓருவன் – திரை விமர்சனம்
தமிழ் திரையுலகிற்கு இக்கதை புதிது. அப்படிப்பட்ட கதைக்கு திரைக்கதை அமைப்பதில் மிக பிரமாதமாக கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். இது போன்ற கதைக்களன் பிரமாண்டமாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு நிதியும் பெரிதாகவே தேவைப்படும் என்பதை அறிந்தும் இப்படி ஏன் சொதப்பியிருக்கிறார் என்று தெரியவில்லை.
சோழர்-பாண்டியர் மோதலின் பின்புலத்தையொட்டி இக்கதை இருக்கின்றது. ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இத்திரைப்படத்தை பார்த்த பிறகு தமிழர்கள் தங்களது வரலாற்றை அறிய விழைவார்கள் என்கிற வகையில் இயக்குநர் பேசியிருந்தார். உண்மைதான். ஏகப்பட்ட தகவல் பிழைகள். சரியான வரலாறு இதுவல்லவென்றால் வேறு எப்படி இருக்குமென்ற ஆவலில் அறிய விழைவார்கள்.
கதாநாயகன் கார்த்தி, ரீமா சென், ஆன்ரியா மற்றும் ஆர் பார்த்திபன் சில வித்தியாசமான உரையாடல்கள் மற்றும் உடலசைவுகள் மூலம் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். பெரிதாக குறிப்பிட்டு சொல்லும்படியான நடிப்பினை யாரும் கொடுத்துவிடவில்லை. உலக திரைப்படங்களை நிறைய பார்த்து அதனுடன் ஒப்பிட்டு சரியில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் நிறைய திரைப்படங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. பழங்கால வாத்தியங்களை பயன்படுத்தியிருந்தாலும் பின்னணி இசை ஒரு ஆக்ஷன் படத்திற்கு இருப்பது போலவே இருக்கிறது. படத்தில் துள்ளி விளையாடுவது எடிட்டிங் மட்டுமே.
திரைப்படத்தில் ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சில :
சோழர்கள் பழுப்பு நிறத்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்படத்தில் அடர்த்தியான கருமை நிறத்துடன் காணப்படுகிறார்கள். மலையினடியில் சூரிய ஒளி படாமல் ஒளிந்து கொண்டிருந்தாலுமா?
சோழர்களின் நிர்வாக முறை மிகவும் சீரானது. மன்னனுக்கு ஆலோசனை சொல்ல அமைச்சர்கள் சூழ்ந்திருப்பார்கள். இராணுவமும் மிக செம்மையாக இருக்கும். இத்திரைப்பட சோழர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு இருக்கின்றது போல் இருக்கிறது.
வரலாற்றில் பாண்டியர்களை சோழர்கள், சேரர்கள் மற்றும் புதியதாக தமிழகத்திற்கு வரும் வெளியூர் மன்னர்கள் எல்லோருமே சுயலாபத்திற்கு பயன்படுத்தி பின்னர் தூக்கியெறிந்து விடுவதே நடந்திருக்கிறது. அதனால்தான் தமிழர்களை கேரளாவில் இன்னும் பாண்டி என்று அழைக்கின்றார்கள் போலும். முந்நூறு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பகையை வளர்த்துக் கொண்டு வருகின்றது போல் காட்டுவது நம்ப தகுந்தவையாக இல்லை. இருநூறு வருடங்களுக்கு மேல் இங்கே மூதாதையர்களை அடையாளம் காண்பது பொதுவாக நடைமுறையில் இல்லை.
வரலாறு மட்டுமல்ல புவியியலும் திரைப்படத்திற்கு முக்கியமே. அடர்ந்த காட்டின் நடுவே தேட வேண்டுமென்றால் வான் வழியாக செல்ல முடியாது.. சமவெளி பிரதேசத்தில் ஏன் வானூர்திகளை பயன்படுத்த வில்லை?
நடுவில் அமானுட காட்சிகள் வேறு சரியான விளக்கங்கள் இல்லாமல் பயமுறுத்துகின்றன.
இறுதி போர்க்களக் காட்சிகளில் திரைப்பட பாண்டியர்கள் ஏன் வானூர்திகளை பயன்படுத்தி சண்டையிடவில்லை. வெகு எளிதில் திரைப்பட சோழர்களை முறியடித்திருக்கலாமே?
சிறை முகாமில் சிறைப்பட்ட சோழர்கள் திரையரங்கில் எழுந்து தம்மடிக்க போகும் இரசிகர்கள் போல அடிக்கடி போய் வருகின்றார்கள். மேலும் இராணுவ வீரர்கள் கேப்டன் விஜயகாந்த்தின் கீழ் பணிபுரிந்தவர்கள் போல் இயந்திர துப்பாக்கியை குலுக்கி குலுக்கி சுடுகின்றார்கள்.
சோழர்-பாண்டியர்களை இழுக்காமல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆல்பா ஏ என்ற குறுநில மன்னனுக்கும், பீட்டா பி என்ற மற்றொரு மன்னனுக்கும் இடையே நடந்த மோதல் என்றிருந்தால் எவ்வித தர்க்கமும் பார்க்காமல் படத்தை மற்ற மசாலா படத்தை போல் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். தர்க்க ரீதியாக தமிழ் படம் பார்க்க முடியாது என்றாலும் சோழர்-பாண்டியர் வரலாற்றை மிக மொக்கை தனமாக பயன்படுத்தியிருப்பதால் இவையெல்லாம் சொல்லப்பட வேண்டும். வித்தியாசமான முயற்சி என்றாலும் வரலாற்றை திரிக்கக் கூடாதே! நல்ல மர்ம படமாக வரவேண்டியது …………
கந்தசாமி எவ்வாறு சிறுவர்களுக்காக எடுக்கப்பட்டதோ அதேபோல் இத்திரைப்படமும் தமிழகத்தின் வரலாற்றையொட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
கோட்டை உடைப்பு படலம் – சரித்திர புதினம்
In this world, the world of Sorrow, one must have a sense of of humour, neh?
– Lord Toranaga Yoshi, James Clavell’s Gai-Jin
A man with a wicked sense of humour is, by default, a good kisser.
– A wise man from South India (me)
சாண்டில்யன், கல்கி, நா பார்த்தசாரதி போன்றோரின் சரித்திர புதினங்களில் எவ்வளவு மோசமான வில்லன்களானாலும் நாகரிகத்துடனே உரையாடுவார்கள். ஆனால் உண்மை சரித்திரம் அவ்வாறு இராது என தற்போதைய சரித்திர புதினங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளுடன் வந்த வண்ணம் உள்ளன.
பழந்தமிழன் தனக்கு பிடித்த கதையெதும் படித்தால் உடன் ஒரு போஸ்ட் கார்டை எடுத்து அவ்வாசிரியருக்கு ஒரு கடிதம் எழுதி போடுவார். நவீன இணைய தமிழனோ தானும் ஒரு கதை அல்லது கவிதையை எழுதி சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு அனுப்பி தானும் ஒரு ரௌடிதான் ஊர்ஜிதப்படுத்துவதே தற்போதைய பழக்கம்.
அதுபோல் எனக்கும் சரித்திர நவீனங்கள் எழுத வேண்டுமென்ற ஆசை ஒருநாள் நள்ளிரவு பீரிட்டெழுந்தது. அதன் விளைவாக சில, பல அத்தியாயங்களை எழுத ஆரம்பித்தேன். எழுதி முழுக்க பதிவிட்டால் அது சீந்துவாரான்றி கிடக்கும் என்றும், அடிக்கடி பில்டப் கொடுத்தாலே அதனை படிக்க ஆட்கள் வருவார்கள் என்பதை அறியாத அறிவிலியல்லவே நான்?
எதற்கும் இருக்கட்டுமென நடுவிலிருந்து ஒரு அத்தியாயம் எடுத்து கொடுத்திருக்கிறேன். படித்து பாருங்கள். சரித்திர நாவல்களில் முக்கியமாக காணப்படும் வர்ணனைகளை (அந்தளவுக்கு தமிள் வராது) தவிர்த்து வித்தியாசமாக எழுதலாமென்ற எண்ணம்.
.
கோட்டை உடைப்பு படலம்
கொங்கன் நாயரின் தலைமையில் வந்த படை ஆடி பதினெட்டாம்பேர் மார்த்தாண்ட வர்மனின் கோட்டைக்கு அரைக் காதத்துக்கு தொலைவே முகாமிட்டு இருந்தது. கோட்டையை கைப்பற்ற தீவிர மந்திரயாலோசனை நடந்துக் கொண்டிருந்தது.
மந்திரயாலோசனை முகாமில் படைத்தலைவருக்கு ஆலோசனை சொல்ல நீலகண்ட சாஸ்திரிகள் எழுந்து பின்வருமாறு உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த கோட்டை பார்க்க மிக பலமாக இருக்கின்றது. மிக மிக கவனமாக திட்டமிட்டே நாம் தாக்குதலை நடத்த வேண்டும்.
படைத்தலைவன் கொங்கன் தன் கோமணத்தை சரி செய்தவாறே எழுந்து
யோவ், அதால நாங்க பாத்துக்கிடுதோம். ஏலே, கூறு கெட்ட குறும்பைகளா, நாஞ் சொல்றத கேட்டுக்கிடுங்க. ரொம்ப நுணுக்கமான திட்டமாக்கும் இது சொல்லிட்டேன்
காலையில இஞ்ச இருந்து நாந் ஜுட் சொன்ன கையோடு எல்லாரும் குடு குடுன்னு ஒடிபோய் கோட்டை கதவை ஒடச்சுட்டு உள்ளே பூந்துடுங்க. குறுக்கே யார் இருந்தாலும் போட்டு தள்ளிடுங்க. அம்பிடுதான். புரிஞ்சிடுதா, மண்டைய மட்டுந் ஆட்டுங்கடே.
லே, வீரமுத்து, இந்த தபா நீதான் முன்னாடி போணும். போன தபா ஒண்ணுக்கு வருதுன்னு ஒடிப்போய்ட்ட. அந்தபுரத்துப் பக்கம் போம்போது எல்லோருக்கு முன்னடி ஒடுன. இப்ப ஏதாச்சும் பண்ண அறுத்துடுவேன்.
யோவ், கண்டரே, ஏதாச்சும் சொல்லிப்போடும். வாயில எதையோ வைச்சு முழுங்கிட்டு கிடக்கிதீங்க.
நீலகண்ட சாஸ்திரிகள் தொண்டைய கனைத்துக் கொண்டு ‘இந்த காட்டுமிராண்டி பசங்க கூட வந்து மாரடிக்கிறான் பாரு, இஞ்சே அனுப்பிச்ச எங்கப்பன சூளையில போட்டு எரிக்கணும்‘ என நினைத்தவாறே,
படைத்தலைவரே, முதலில் கோட்டையை முற்றுகை இட வேண்டும்
என்ன மயிருக்கு வோய்?
என்ன இப்டி கேட்டுட்டிங்க, கோட்டைய சுத்தி ஆகாரம், தண்ணி போகாமல் பாத்துக்கிட்டு இருந்தோம்ன உள்ளே இருக்கறவன்க பணிஞ்சு ஒரு வாரத்தில நம்ம கிட்ட சரண் ஆயுடுவோங்க.
முட்டா பய மக்கா, அது வரைக்கும் நம்மாளுங்க புல்லையா தின்னுவாங்க. உன்னதான் அண்டாவுல போட்டு பொங்கணும்
சரி, அப்போ ஒரு தூதுவனை அனுப்பி அவங்கிட்ட பேச சொல்வோம் என்ன சொல்றீங்க.
உன்ன போட்டு விலாவில மிதிக்க, யோவ், இவ்வளவு கும்பல வந்துருக்கோம். பொங்கல் வைக்க வந்துருக்கோம்ன நினைப்பாங் அவன், ஆள அனுப்பபுறானாந் ஆள. போறவனை சூப்பு வைச்சுருவான். நீ போவீரா
அப்புறம் என்ன மயித்துக்குவேய் எங்கிட்ட கேட்குதீங்க, எழவேன்னு கத்திட்டு போய் எல்லோரும் கதவை ஒடச்சுட்டு உள்ளே போ வேண்டியதுதானே
அட கூறு கெட்டவரே, அதத்தானே அப்பயிலிருந்து சொல்லிட்டு இருக்கேன்.
இவ்ளோ பெரிய கோட்டைய இருக்குதே, நம்மாளுங்கள உசுப்பி விட நீங்க எதாவது பெரிசா பேசிதான் ஆவணோம்.
என்ன பெருசா உசுப்பி விடுறது, கோட்டையில பெரிய அந்தப்புரம் இருக்குதுன்னு சொல்லு. மூணு கால்ல ஒடுவான்ங்க, பக்கி பசங்க.
இவ்வாறாக சபை கலைந்து நாளை கதிரவன் உதிக்கையில் கோட்டையை கொங்கன் நாயரின் படை தாக்குவது என ஒரே மனதாக முடிவெடுக்கப்பட்டது. சரித்திரம் ரத்த நாக்குகளால் நாளை தீர்மானிக்கப்படும் என கதாசிரியன் நினைத்துக் கொண்டான்.
(தொடரும்)
காலதேவன் கருணை இருந்தால் இச்சரித்திர நவீனம் அடுத்த புத்தக சந்தையில் ரூ.1250 என்ற விலையில் (புத்தக சந்தையில் மட்டும் சகாய விலையாக ரூ.1115-க்கு கிடைக்கும்) தமிழகத்தின் முன்னணி பதிப்பகத்தால் வெளியிடப்படும்.
This post is humbly dedicated to the Chennai Book Fair #0033.
Recent Comments