Archive for November, 2012
கோயம்புத்தூர் 1
மலைகளின் அடிவாரத்தில் வசிக்க வேண்டுமென்ற என்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது.
சென்ற வாரம் முதல் நான் கோயம்புத்தூர் வாசியாகி விட்டேன். ஆச்சரியக்குறி!
கடற்கரையிலேயே வசித்த நான், மலையடிவாரம் வந்தபோதுதான் கடலின் பிரிவை உணர்ந்தேன். மலையடிவார கடற்கரையில்தான் இனி வசிக்க வேண்டும்.
பேருந்தை விட்டு கீழே இறங்கிய போது என்னை வரவேற்க பெருங்கூட்டம் காத்திருக்கும் என எதிர்பார்த்தேன். ஆட்டோக்காரர் கூட வரவில்லை. விடியற்காலை 5 00 மணியவில் இதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது என சமாதானம் செய்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
அடுத்த கட்டம், வசிக்க ஒரு வீடு. அலுவலகத்திற்கு பக்கமாக. எனக்கு பிடித்தமான பகுதி கொச்சினில் இருந்தது. சரிவராது. இன்னும் சற்று பக்கமாக பார்க்க வேண்டும்.
வீடு வாடகைக்கு பார்ப்பதை கட்டாயம் ஆயகலைகளில் சேர்க்க வேண்டும். அதில் நிபுணன் என்ற பெயர் நான் வாங்கியிருந்தேன். என்னிடம். இது குறித்து சில அடிப்படைப் பாடங்கள் உண்டு.
முதலில் வீடு தேடும் நகரப் பகுதியிலோ, கிராமப் பகுதியிலோ தீவிரவாதி நோட்டம் விடுவதை போல ஒரு பார்வையுடன் சுற்றி வரவேண்டும். வீடு வாடகைக்கு என்ற பலகையை நீங்கள் பார்ப்பது அரிது. காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை போல அதை நீங்கள் உணர்வீர்கள். ஆனால் பார்க்க இயலாது
தாய்மார்கள் பூச்சாண்டி என சுட்டிக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டுகையில், அந்த பகுதியினை விட்டு நகர்ந்து விட வேண்டும். இனி அங்கே உங்களுக்கு வீடு கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் சோறு ஊட்டும் தாய்தான் சரியான தகவல் சொல்ல வாய்ப்பிருக்கிறது.
டீக்கடையிலோ, பெட்டிக் கடையிலோ சிகரெட்டை வாங்கி பத்தவைத்து. ஒரு டீயுடன் அவர்களிடம் தகவல் எதிர்பார்ப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு மரபு.
சிரித்த முகத்துடன் பெண் கேட்கலாம். வீடு கேட்கக்கூடாது. மிக இறுக்கமான முகபாவத்துடன், ஒரு துக்க செய்தியை சொல்லும் பாவனையில் கேட்க வேண்டும். மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், கிழிந்த ஜீன்சும், கலைந்த தலையும் பார்த்து இரண்டாயிரம் வாடகை வீடு கூட தரமாட்டார்கள்.
அது போலவே, சன் க்ளாஸ் போட்டுக் கொண்டு வீட்டின் உள்ளே போகக்கூடாது. எனக்கு தெரிந்த வீட்டு உரிமையாளர் சன் க்ளாஸ் அணிந்து வீடு தேடிய ஒரு பையனை ரேப்பிஸ்ட் என்றார். இதை ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். சன் க்ளாஸ் தவிர்க்கவும்.
நானும் களத்தில் இறங்கினேன். முதலில் டெரர் வாக் முடித்து, பகல் பன்னிரெண்டு மணியளவில் குழந்தைக்கு சோறு ஊட்ட ஆரம்பித்த ஒரு தாயை குறிவைத்து நெருங்கினேன்.
இங்க வீடு ஏதாவது வாடகைக்கு இருக்குங்களா?
அவர் திகைப்புடன் என்னை பார்த்தார். சில மணித்துளிகளுக்கு பேச்சு வரவில்லை. ம். இங்கே யாரும் இப்படி ஒரு அழகை பார்த்திருக்க மாட்டார்கள்.
அல்லது அவருக்கு தமிழ் தெரியாதிருக்கலாம்.
Recent Comments