Archive for February, 2014
நிலவொளியில் ஒரு நரபலி
தமிழில் வெளிவரும் சித்திரக்கதைகள் மற்றும் அதன் வெளியீட்டாளர்கள் மீது எனது சற்றே தீவிரமான கருத்துகளை வெளியிட்ட வேளையில், தமிழில் சித்திரக் கதைகளானது உரிய கால வரிசையில் வந்ததில்லை, அச்சுத் தாட்களின் தரம் வெகு மலிவாகவும், அச்சுத் தரமும் சொல்லும்படியான நிலையில் இருந்ததில்லை. வருடந்தோறும் சந்தா கட்டி அடுத்த புத்தகம் என்றைக்கு வெளியிடப்படும் என்ற நிலை சந்தாதாரருக்கும் தெரியாமல் இருந்தது.
கடந்த சில மாதங்களில் இந்நிலை பெரிதும் மாறிவிட்டது. நான் கடந்த ஒராண்டு காலமாக எந்த சித்திரக்கதைகளையும் (தமிழில்) படிக்க வில்லை. புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்ற வகையறாக்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துக் கொண்டிருந்தேன். சற்றே தீவிர வாசிப்புதான். சித்திரக் கதைகள் படிக்க ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டேன் இதற்கிடையில் சமூக ஊடக தளங்களிலும் பெரிய மாற்றம் கடந்த ஒராண்டில் ஏற்பட்டிருந்தது. புதிய சித்திரக்கதை ஆர்வலர்கள் இவற்றில் தங்களின் கருத்துகளை தொடர்ந்து பதிய ஆரம்பித்தனர். அதற்குமுன் சக ஆர்வலர்களை சித்திரக் கதை புத்தகங்களில் வரும் கடிதங்கள் மூலமே அறிய இயன்றது. இத்தளங்கள் மூலமாக புதிய தோழமைகள் எனக்கு கிடைத்தன.
அவர்களுக்குள் பல பிரிவுகள் உருவாயின. அது இயற்கைதான். என்றாலும், சில கருத்துக்கள் சித்திரக்கதையின் மீதுள்ள ஆர்வம் என்பதன் எல்லையை மீறி கசப்புணர்வை உண்டாக்குவதாக உணர ஆரம்பித்தேன். என் நண்பர்களும் அதில் வசைப்பாட பட்டார்கள், அவர்களது தரப்பை உறுதி செய்ய வீண் விவாதங்களில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் சமூக வலைத் தளங்களில் பார்வையாளனாக பின்வாங்கி பின்னர் எப்போதாவது செல்லும் பயணியாக மாறினேன்.
கடந்த சில மாதங்களில் இந்நிலை மாறி, சித்திரக் கதை பதிப்பகம் புதிய வெளியீடுகளை சந்தா தாரர்களே திணறும் வண்ணம் வெளியிட ஆரம்பித்தார்கள். அச்சுத் தரமும், தாட்களும் தரமானவைகளாக அமைந்திருந்தன. இப்போது ஊடக தளங்களில் மொழி பெயர்ப்பு குறித்து புதிய விவாதங்கள் எழ ஆரம்பித்திருந்தன. படிக்காத சித்திரக் கதைகளை பற்றிய என் கருத்தினை எவ்வாறு பதிவது? என நான் விலகியே இருந்தேன். அதனால் எனக்கு லாபமோ அவர்களுக்கு நஷ்டமோ இல்லைதான்.
நேற்றைய தினம் என் நண்பரிடமிருந்து கடந்த ஒராண்டில் வந்த அனைத்து இதழ்களையும் வாங்கி, படிக்க ஆரம்பித்தேன். காலவரிசையின்றி கிடைத்த புத்தகத்தில் ஒன்று என தேர்ந்தெடுத்தேன். டெக்ஸ் வில்லரின் நிலவொளியில் ஒரு நரபலி என்ற சித்திரக் கதையினை படித்து முடித்தேன்.
டெக்ஸ் வில்லரின் சித்திரக் கதைகள் இலக்கியம் என கருத இயலாது. அவற்றில் ஆன்ம தேடலான உரையாடல்களோ, சிறப்பான சித்திரங்களோ. இருந்ததில்லை. டமால்களும் டூமில்களும்தான். சிறு வயதில் சித்திரக் கதைகளின் (தமிழில்) மூலமாகதான் புதிய வாழ்க்கை முறைகளை, நிலங்களை, மக்களை, கண்டறிந்தேன். அப்போது ஒரு சாகசத்தினை படிக்கும்போது ஏற்பட்ட மன எழுச்சி பெரும்பாலான ஆர்வலர்களிடத்தில் தற்சமயம் இல்லை என உணர முடிகிறது. திரைப்படங்களில் உருவான தொழிற்நுட்பம் பழைய சாகச சித்திரக் கதைகளின் மீதுள்ள ஆர்வத்தினை புறம்தள்ளி விட்டதென்றே நினைக்கிறேன்.
The Thirteenth Warrior திரைப்படம், Eaters of the Dead என்ற மைக்கேல் கிரைட்டனின் நாவலை ஒத்து வெளிவிந்த திரைப்படம். இச்சித்திரக் கதையும் அது போன்ற ஒரு வேட்டையாடும் இயல்பை தீவிரமாக கொள்ளும் ஒரு மக்கள் இனத்தை பற்றிய கதை. டெக்ஸ் குழுவினர் அதனை தடுப்பது எவ்வாறு என்பதுதான் கதை.
இச்சித்திரக் கதையின் மொழி பெயர்ப்பில், சித்திரங்களில் சில தடுமாற்றங்கள் இருக்க செய்கின்றன இதை விட சிறப்பாக சிலர் மொழிபெயர்க்க இயலும், அவர்கள் மொழி பெயர்த்த சித்திரக் கதைகள் மிக சிறப்பாக வந்திருக்கினறன இந்த பதிப்பத்தால் அவ்வாறு கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் வலைத் தளங்களில் சற்றே காட்டமாக முன் வைக்கப்படுவதை பார்த்திருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு சித்திரக் கதைகள் வெளிவரும் கால நேரமோ, பதிப்பகம் மற்ற வாசகர்களிடம் தற்சமயம் செய்யுமளவு கலந்துரையாடல் செய்ததாகவும் எனக்கு நினைவு இல்லை. பெரிய மாற்றம் அவர்களிடத்தில் வந்துள்ளது. சக ஆர்வலர்களும் புதிய சித்திரக் கதைகள், நாயகர்கள், சித்திரங்கள், புதிய களன்கள் என சித்திரக் கதைகளில் வாசிப்பை நீட்டித்த வண்ணம் செல்கிறார்கள்.
சில கருத்து பரிமாற்றங்களில் மெல்லிய வெறுப்புணர்ச்சி ஊடாடுவதை நான் பார்க்கிறேன். விமர்சனங்களில் வெறுப்பு கலந்தால் பாதிப்பு இரு தரப்புக்கும்தான். ஒரு வாசகனாக அதை தவறென என்னால் சுட்டிக்காட்ட இயலும். இதன்மூலம் பதிப்பகம் வெளியிடும் அனைத்து வெளியீடுகளுக்கும் தரச் சான்று அளிப்பதாக அர்த்தம் இல்லை. கடந்த சில மாதங்களில் பெரிய மாற்றங்களை அவர்கள் செய்துள்ளார்கள். மொழி பெயர்ப்பு தரத்திலும் அதை வரும் காலத்தில் எதிர்பார்க்கலாம். குறைந்தபட்சம் அந்த அவகாசத்தினை அவர்களுக்கு கொடுத்தலே நியாயம் என படுகிறது. அது தொடர்பாக சீரிய விமர்சனங்கள் தொடர்ந்து வர வேண்டும்.
நீண்ட நாட்களுக்கு பின்பாக படித்த சித்திரக் கதையினாலயா என்று தெரியவில்லை. சிறிய வயதில் கௌபாய் சாகசக் கதைகளை படிக்கும் போது ஏற்பட்ட மன எழுச்சியினை இன்றும் உணர்தேன். சாகசங்களை விரும்பும் ஒரு சிறுவன் என்னில் இன்னும் இருக்கிறான். ஒருவேளை சித்திரக் கதைகளை படிக்க அந்த மனநிலைதான் வேண்டுமா?
Recent Comments