Archive for November, 2009
The Princess Bride (1987) – a Laugh Riot
கற்பனை உலகில் (Fantasy) நடைபெறுவதாக காண்பிக்கப்படும் திரைப்படங்களில் முக்கியமான அம்சங்கள் என்னவென்றால் மிகுந்த பொருட்செலவுடன் கூடிய கிராபிக்ஸ் வித்தைகள், பிரமாண்டமான செட்களில் படமாக்கப்படுகின்ற சண்டைக்காட்சிகள், பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு. தற்போது ஒலி, ஒளித் தரத்தில் மிகுந்த முன்னேற்றம் அடைந்திருப்பதால் 1980-1990-ம் ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் கற்பனை உலகு (Fantasy) படங்களை பார்க்கும்போது ஒருவித சலிப்பு அடைந்திருக்கிறேன்.
எங்கள் தெருவில் வசிக்கும் பெரிசுகள் பென்ஹர் புராணத்தையே பாடிக் கொண்டிருப்பார்கள். ‘ஒட்டுவான் பாரு தேரை’, ‘ச்சும்மா கிண்ணுன்னு இருப்பான் கதாநாயகன் அப்ப நானும் அப்படிதான் இருந்தேன் (சைடுல இப்படியொரு பிட்டை போடுவார்கள்). பென்ஹர் எனக்கு மிகுந்த ஏமாற்றமளித்த திரைப்படம். அத்திரைப்படத்தில் ஆண், பெண் என எல்லோரும் அரைப்பாவாடை கட்டிக் கொண்டு படம் முழுக்க அலைந்தார்கள். உச்சக்கட்ட காட்சியான தேர்ப் பந்தயமும் அவ்வளவாக கவரவில்லை.
நிறைய க்ளாஸிக் படங்களை இதன் பொருட்டே தவிர்த்திருக்கிறேன். கற்பனை உலகு (Fantasy) வரிசையில் முதல் பத்து இடங்களில் இருக்கும் படங்கள் என்னவென்று ஒரு முறை பார்க்கும்போது The Princess Bride என்ற திரைப்படமும் பட்டியலில் இருந்தது. படம் வெளியான ஆண்டு 1987.
அந்த பட்டியலில் உள்ள மற்ற படங்களை பார்த்திருந்தேன். இத்திரைப்படத்தையும் முதல் பத்து நிமிடங்கள் பார்ப்போம் என முடிவு செய்து பார்க்க துவங்கினேன். திரைப்படம் முடிந்த பிறகுதான் நேரம் உறைத்தது.
ஒரு கற்பனை நாடு. அங்கே வசிக்கும் ஒரு பண்ணை வேலையாளுக்கும், ஒரு அழகிய பெண்ணுக்கும் காதல். பொருள் தேடி காதலன் வெளியூர் செல்ல, அவளோ சந்தர்ப்பவசத்தால் அந்நாட்டின் இளவரசனால் பட்டத்து இராணியாக்கப்படுகிறாள். பிரச்சினைகள். காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? அவ்வளவுதான் கதை.
பிரமிக்கதக்க வைக்கும் காட்சிகள் என எதுவுமே இல்லை. பிரமாண்டமான செட்கள் கிடையாது. ஒளிப்பதிவு சாதாரண ரகம்தான். கதாநாயகியின் முதல்படம். வேறு எது இப்படத்தை முதலிடத்தில் வைத்து மற்றத் திரைப்படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றால் வசனங்கள். Not Swashbuckling Action, but Swashbuckling Dialogues. பின்னியெடுத்திருக்கிறார்கள். படத்தில் வெகு சில வசனங்களே சாதாரணமாக இருக்கின்றன. மற்றவை எல்லாவற்றையுமே Quotation வகையறாக்களில் சேர்த்துவிடலாம்.
படத்தின் வசனங்களை கதாநாயகன் மற்றும் இதர கதாபாத்திரங்கள் சொல்லும் விதம் இன்னும் பத்து வருடங்கள் கழித்து பார்த்தாலும் கொஞ்சங்கூட சலிப்பில்லாமல் பார்க்க முடியும். கதாநாயகனின் துண்டு மீசை அவ்வளவு அழகு.
நான் இரசித்த சில வசனங்களை தமிழ்படுத்தி கொடுக்க முயற்சிக்கிறேன். ஆனால் அவைகளை திரைப்படத்தில் ஆங்கிலத்தில் பார்த்தால்தான் அதன் முழு அர்த்ததையும் அனுபவிக்க முடியும்.
தன் தந்தையை கொன்ற ஒரு கயவனை தேடும் ஒரு குடிகார வாள்வீரன் சொல்வது
‘எங்கப்பனை கொன்னவனை பார்த்தால் அவன் கையில நான் மூனே மூணு வார்த்தைதான் சொல்வேன். என்பேரு இனிகோ மண்டோயா. எங்கப்பனை நீ கொன்னுட்ட. சாவுடா.’
கதாநாயகனிட்ம் சின்ன வில்லன் சொல்வது
‘உங்கிட்ட என்னால சண்டைப் போட்டு ஜெயிக்க முடியாது. ஆனா புத்திசாலித்தனத்தில் என்ன யாரும் அடிச்சிக்க முடியாது.‘அவ்வளவு புத்திசாலியா நீ?’‘பிளாட்டோ,அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் இவர்களை உனக்கு தெரியுமா?‘தெரியும்.’‘முட்டாப்பசங்க.’
கதாநாயகனை சித்ரவதை செய்ய கிளம்பும் தளபதி இளவரசனை பார்த்து கேட்கிறார்
‘நான் அவனை சித்ரவதை செய்றதை பார்க்க வறீங்களா?‘வர ஆசைதான். ஆனா பாரு, நாளைக்கு முக்கியமான நாள். நான் கல்யாணம் பண்ணி, என் பொஞ்சாதிய கொன்னு, அந்த பழிய அடுத்த நாட்டு மேல போடணும். நான் வரலை.’
கதாநாயகன் இறந்து விட்டான் என எண்ணி கதாநாயகி தற்கொலை செய்வதற்காக குறுவாளை தன் மார்பில் பாய்சச முற்படும்போது கட்டிலில் சோர்வாக படுத்திருக்கும் கதாநாயகன் சொல்லும் வசனம் தான் என்னுடைய பேவரைட்.
‘அழகிய மார்புகள் அரிதாக உள்ள இவ்வுலகில் ஏன் அவைகளை சிதைக்க முற்படுகிறாய், என் அன்பே.’
இத்திரைப்படம் 1987-ல் வந்தது என்பதற்காக யாரும் பார்க்காமல் இருந்து விடாதீர்கள். தவறவிடாக்கூடாத திரைப்படம்.
Recent Comments