Archive for July, 2009
ஹாரிபாட்டரும் மிக்சரும் க்வாட்டரும்
சொந்த வாழ்வில் துயரத்துடன் தன் மகளுடன் ஒருநாள் ரயிலில் சென்றுக் கொண்டிருக்கையில் உதித்த ஒரு எண்ணத்தை வைத்து ஜே கே ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதைத் தொடர்கள் இந்த அளவிற்கு பிரபலமாகும் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஹாரிபாட்டரை தெரியவில்லையென சொன்னால் பொடிசுகள் நம்மை பார்க்கும் கேவலமான பார்வையை தவிர்க்க படிக்க ஆரம்பித்தவர்கள் அப்படியே அந்த புத்தகத்திலே ஆழ்ந்துவிட்டார்கள். அடுத்த பகுதிக்காக உலகமே காத்திருக்க ஆரம்பித்தது.
மாயாஜாலம் கலந்த கதைத் தொடர்கள் நிறைய ஆங்கிலத்தில் உண்டு. கொஞ்சம் டிராகன்கள் (‘யோவ், யாருய்யா நீ, மேஜிக் கதைன்னு எடுத்துட்டு வந்துட்ட, ஒரு டிராகன் கூட இல்லை’) , குள்ள மனிதர்கள், சூனியக்காரி என ரெடி ரெஸிப்பிகளும் உண்டு. அதைத் தாண்டி இந்த தொடர் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரு புதிய உலகத்தை உருவாக்கி மெள்ள மெள்ள அதில் நம்மை இழுத்ததுதான். இதற்கு முன் எழுத்தில் இந்த மாயாஜாலத்தை ஜே ஆர் ஆர் டோல்கியன் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் நிகழ்த்தியிருக்கிறார். த ஹாபிட் மற்றும் த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற புத்தகங்களில் மிடில் எர்த் என்ற ஒரு மாய உலகை உருவாக்கி அதன் பாத்திரங்களுடன் நம்மை உலவ விட்டிருப்பார்.
இரண்டாம் உலகப்போரின் நடுவே எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் வழக்கமாக மாயாஜால புத்தங்களுக்கு கொடுக்கப்படாத இலக்கிய அந்தஸ்தை அடைந்தன. அதனை ஹாலிவூட் படமாக்க நினைத்த போது உலகமெங்கும் இருந்த டோல்கியன் இரசிகர்கள் கோபம், கொலைவெறி என இரசிப்புத்தன்மைக்கேற்ப உணர்ச்சியை அடைந்தனர். ஆனால் பீட்டர் ஜாக்ஸ்ன் கதையை சிதைக்காமல் அவருக்குரிய சுதந்திர தன்மையுடன் கதையை திரை வடிவில் சிறப்பாக அளித்து பாதிப்பேரின் (இன்னும் நிறையபேர் திரைப்படத்தினை பார்த்து உறுமிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்) பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டார்.

இன்னுமாடா இந்த உலகம் நம்ம நம்பிட்டு இருக்கு
ஆனால் ஹாரிபாட்டருக்கு நேர்ந்த கதி கொடுமையானது என்றுதான் சொல்ல வேண்டும். கதைத் தொடர் முடிவடையும் முன்னரே ஹாலிவூட் இந்த கதைத் தொடரை சிதைக்க தயாராகிவிட்டது. ஆரம்பத்திலிருந்து இந்த கதைத் தொடரை காத்திருந்து படித்தவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரை ஒரு படம் கூட தேறவில்லை. வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் இரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் வயிற்றெரிச்சலுக்கு ஆளாக்கிய படங்கள் இவை.
ஹாரிபாட்டர் கதைத் தொடரின் முக்கிய அம்சத்தை நாம் சின்ன வயதிலேயே படித்திருப்போம். ஒரு ரூபாய், ஐம்பது பைசா விலைகளில் வந்த அழுக்கு காகிதங்களில் அச்சான ‘அந்தரத்தில் வந்த மந்திர பூதம்’, ‘மேகமலை ராட்சதன்’, ‘சரசுக்குட்டி’ போன்ற புத்தகங்களில் வந்த கதைதான்.
ஒரு நாட்டினை ஒரு ராட்சதன் அல்லது ஒரு பூதம் அல்லது ஒரு மந்திரவாதி பயமுறுத்திக் கொண்டிருப்பான். ராஜகுரு கதாநாயகனான இளவரசனை அழைத்து இந்த நாடே உன்னை நம்பிதான் இருக்குன்னு சொல்ல, இளவரசன் தன் அள்ளக்கையுடன் குதிரையில் கிளம்பி, போகும் வழியில் ஒரு பிகரை பிக்அப் பண்ணும்போது ஒரு உண்மையை கண்டறிவான்.
அதாகப்பட்டது, அந்த ரா (அ) பூ (அ) ம-யை நேரடியாக யுத்தம் செய்து கொல்ல முடியாது. அவனது உயிர் ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி அங்குள்ள ஒரு குகையில் உள்ள ஒரு வண்டில் உள்ளது. அந்த வண்டை கைமா செய்தால் பலானவர் டிக்கெட் வாங்கிவிடுவார்.
ஹாரிபாட்டரின் கதைத்தொடரில் முக்கிய அம்சமே இதுதான். ஆனால் கதையுலகை உருவாக்கிய விதத்தில் கதாசிரியரின் திறமையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும். அம்மாயவுலகை அப்படியே வார்த்தைகளில் செதுக்கியிருக்கிறார். கதைத் தொடரை படிப்பவர்கள் அவ்வுலகில் வாழ வேண்டும் விரும்ப ஆரம்பித்தாலே கதாசிரியர் வெற்றி பெற்று விட்டார். உலகின் பல்வேறு பிரபலங்கள் அவ்வுலகின் வலையில் விழுந்ததே கதையின் வெற்றிக்கு காரணம். வாடிகன் இந்த புத்தகத்தை வெறுக்க ஆரம்பித்ததும் அப்போதுதான்.

நான் உன்னோட பத்திரமா இருக்கேன், ஹாரி. (நாங்க அப்படி இல்லீயே நைனா)
ஆனால் திரைப்படங்கள்…… சகிக்க முடியாத வகையில் எடுக்க ஆரம்பித்தனர். நானும் விடாமல் ஏதாவது ஒரு பாகத்தில் புரிந்துக் கொண்டு நன்றாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பார்த்தால்… நல்லவன்னு நினைச்சுட்டாங்க.. சமீபத்தில் வெளியாகிய The Half-Blood Prince பார்த்து நொந்து போய் வெளியில் வந்தால் திரைப்படம் அமெரிக்காவில் வசூலை அள்ளுகிறது என தகவல் வர வெறுத்துபோய்விட்டேன்.
இக்கதைத் தொடரை படிக்காதவர்கள் இப்படங்களை பார்க்கும்போது எவ்வாறு உணர்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை. படித்தவர்கள் வேதனைப்படுவார்கள் என்றே நான் உணர்கின்றேன். ஹாரிபாட்டர் அவனுடைய நண்பர்கள் மற்றும் செவரஸ் ஸ்னேப் ஆக ஆலன் ரிக்மேன் இதைத்தவிர மற்ற துணை கதாபாத்திரங்களை பற்றி எதுவும் விசேஷ அக்கறை எடுத்ததாக தெரியவில்லை. கதையை படிக்கும்போது அந்த உலகத்தினை பற்றி ஏற்பட்ட ஒரு கற்பனையை படத்தில் சிதறடித்திருக்கிறார்கள்.
கதைத் தொடர் முடிவதற்குள் மற்றும் அதன் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்கள் வயது ஏறிக் கொண்டே இருப்பது போன்ற நேரக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்த பிரமாண்ட கதைத் தொடரை தயாரிக்கும்போது உரிய முன் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அல்லது சித்திர திரைப்படமாகவாது எடுத்திருக்கலாம். இப்போது வேண்டுமானால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வசூலை அள்ளலாம். இன்னும் சில காலம் கழித்து விமர்சகர்களின் நேர்மையான விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இந்த நூற்றாண்டின் இறுதியில் வந்த மிகச் சிறந்த கதைத் தொடரானது படமாக்க பட்ட விதத்தை ஹாலிவூட் ஒரு அவமானமாக கருதும். அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.
Princess Mononoke – திரை விமர்சனம்
பலத்த மழைக்கு பிறகு ஆள் நடமாட்டம் குறைந்த கடற்கரையில் நடந்து செல்கின்றீர்கள். கருமேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு தீடிரென வெளிப்படும்போது கடவுள் உங்கள் அருகே கைக்கோர்த்து அமர்ந்து இருப்பது போல தோன்றியிருக்கிறதா? நல்லது. இது பற்றி உங்கள் அலுவலக நண்பர்களிடம் அப்படியே சொன்னால் அன்றைய தினத்திலிருந்து உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதை தவிர்த்து விடுவார்கள். என்னிடம் கடவுள் தன்மை இருக்கிறதா என்ற கேள்வியை உங்கள் மேலதிகாரி கண்டிப்பாக ரசிக்க மாட்டார். நான் கடவுள் என சொன்னால் சீட்டு கிழித்து விடுவார்கள்.
இன்றைய விஞ்ஞான உலகத்தில் கடவுள்கள் கோயில்களில் அடைக்கப்பட்டு விட்டார்கள். அதை தவிர வேறு எங்குமே அவரை காண இயலாது. அங்கே தவிர வேறு எங்கும் அவரை பற்றி பேச முடியாது. மின்சாரம் தடைபடும்போது மெழுகுவர்த்தியை தேடுவதுபோல பிரச்சினை வரும்போது நினைவு வரும். மின்சாரம் திரும்ப வந்தவுடன் மெழுகுவர்த்தியின் நிலைதான் அவருக்கும். விஞ்ஞானம் நம்மிடம் நெருங்கி வர, கடவுள் விலகி போய்விட்டார்.
ஆனால் உலகமெங்கும் காணப்படும் அனைத்து நாடோடி கதைகளிலும் கடவுள்கள் நம்மோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதை ஒரு சாதாரண விஷயமாகவே சொல்கின்றன. பகவத்கீதை, பைபிள் போன்ற மதநூல்களும் இந்த உண்மையை பதிந்துள்ளன. அப்போது மலையுச்சிகள், பாலைவன சோலைகள், அடர்ந்த காடுகள் கடவுள்களின் வசிப்பிடமாகவே கருதப்பட்டன.
இது போன்ற ஒரு கதைதான் ‘இளவரசி மோனோன்கோ’. இயக்கம் மியஸகி.

காட்டின் நடுவே உள்ள குளம்
தீய ஆவியினால் பீடிக்கப்பட்ட ஒரு காட்டுப் பன்றியின் தாக்குதலை தடுக்கும்போது அந்த பிராந்திய இளவரசன் அஷிடகா அதை அழித்து விடுகிறான். அந்த முயற்சியில் அவனுக்கு கையில் காயம் பட்டுவிடுகிறது. அந்த சபிக்கப்பட்ட காயம் அவன் உடம்பில் பரவி உயிரை குடித்து விடும் என அறிய வரும்போது, அந்த காட்டுப்பன்றியின் இருப்பிடத்தை தேடி ஒரு நெடும் பயணம் செல்கிறான்.
இரும்பு கோட்டை என்ற பெண்களாலேயே ஆளப்படும் ஒரு கிராமம். அதன் தலைவிக்கு அந்த கிராமத்தை சுற்றியிருக்கும் காட்டை அழிக்க வேண்டுமென்ற உத்வேகம். ஏனென்றால் அந்த கிராமத்தின் வலிமையான துப்பாக்கி தோட்டாக்கள் உருக்க தேவையான தீயை அந்த காட்டின் மரங்கள் அளிக்கின்றன. அந்த காட்டில் அவளின் உயிரை குடிக்க காத்திருக்கும் எதிரி.
இத்தகைய வளமையான, வலிமையான கிராமத்தை தாக்கி கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு சமுராய் பிரபு. அந்த கிராமத்தை கைப்பற்ற அவன் போடும் போர்வியூகங்கள்.
அந்த காட்டில் மான் தேவதை பகலில் மானாகவும், இரவில் காட்டின் பாதுகாவலரகவும் மாறி காட்டை ஆட்சி செய்கின்றது. அதன் இரத்தம் பட்டால் மட்டுமே அஷிடாகாவின் சாபம் குணமடையும். அந்த தேவதை உருமாற்றம் அடையும் அந்த நேரத்தில் அதன் தலையை வெட்டி எடுக்க அலையும் ஒரு கும்பல்.
அந்த காட்டில் மூன்று ஓநாய்களுடன் அலையும் ஒரு பெண். அந்த காட்டை அழித்துக் கொண்டிருக்கும் இரும்புக் கோட்டையின் தலைவியை அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்பவள்.
அங்கே செல்லும் அஷிடாகாவால் அந்த சூழ்நிலைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைதான் மியஸகி கவிதைமயமான தருணங்களுடன் விவரிக்கின்றார்.
மூன்று ஓநாய்களுடன் சுற்றும் பெண், காட்டின் நடுவே உள்ள ஒரு குளத்திற்கு வரும் மான் தேவதை, காட்டுப் பன்றிகளின் படை என பல்வேறு கதாபாத்திரங்களுடன் மியஸகி படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கையும் காடு வடிவத்தில் முக்கிய வேடத்தை ஏற்றிருக்கிறது.
மியஸகியின் சித்திர திரைப்படங்களில் சற்றே பெரிய திரைப்படம்தான். ஆனால் படம் முடிந்த பிறகுதான் அது நமக்கு தெரியும்.
ஜே ஆர் ஆர் டோல்கியனால் எழுதப்பட்ட ‘த லார்ட் ஆப் த ரிங்ஸ’ ( The Lord of the Rings) புத்தகத்தை பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு விமர்சனம் இருந்தது.
‘ஆங்கிலம் தெரிந்தவர்களை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று இந்த புத்தகத்தை படித்தவர்கள், மற்றொன்று இதை படிக்காதவர்கள் என.’
அதுபோலவே, மியஸகி படங்களுக்கு எந்தவித ஸ்டார் ரேட்டிங்கும் தேவையில்லை.
NPA அப்டீன்னா?
வங்கிப் பங்குகளில் முதலீடு செய்து கோடீஸ்வரர் யாரும் லட்சாதிபதி ஆனதாக கேள்விப்பட்டதில்லை. பொறுமையுடன் காத்திருக்க முடிந்தால் வங்கி பங்குகளில் முதலீடு செய்வது ஒரளவு பாதுகாப்பானது என்றே கூற முடியும். மற்றவை போல் வெகு வேகமான ஆட்டம் எல்லாம் இவ்வகை பங்குகள் காட்டாது. அதனாலேயே தின வர்த்தகத்திற்கு இவ்வகை பங்குகள் ஏற்றதில்லை.
ஏன் இந்திய வங்கி பங்குகள் பாதுகாப்பானது?
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் போல் நமது வங்கிகள் அகல கால் விரிக்காது. பெடரல் வங்கி போன்ற அமைப்புகள் இருந்தும் அவற்றின் கட்டுப்பாட்டில் அயல்நாட்டு வங்கிகள் இயங்குவதில்லை. நமது நாட்டிலே ரிசர்வ் வங்கி கையிலேயே குடுமி இருக்கும்.அதனால் ஒரே நாளில் மஞ்சக் கடுதாசி கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. ரிசர்வ் வங்கியும் அதற்கு அனுமதிப்பதில்லை. எவ்வளவு மோசமான நிலையிலும் வங்கியினை காப்பாற்றவே பார்க்கும். (ஒரியன்டல் பேங்க் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்).
ஆனால் மிக பெரிய வளர்ச்சி எதையும் உடன் அடைந்துவிடுவதில்லை. ஒட்டப்பந்தயத்தில் முதல் ரவுண்ட்டில் போட்டி போட விட்டாலும், பந்தயத்தின் நடுவே காலை உடைத்துக் கொள்வதில்லை.
நமது வங்கிகள் அமெரிக்க வங்கிகள் போன்று எல்லோருக்கும் கடன் கொடுத்துவிடாது. இந்தியாவை பொறுத்த மட்டில் வங்கியில் கடன் வாங்குவதற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு தானே உழைத்து இந்த தொகையை சம்பாதித்து விடலாம் என தோன்றி விடும். அத்தகைய தன்னம்பிக்கையை நமது வங்கிகள் ஒரு சாமான்யருக்கு கொடுத்துவிடும்.
வங்கிகள் வரவு செலவுக் கணக்கில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி இங்கே பார்ப்போம். அதுதான் NPA. Non-Performing Assets.
முதலில் நாம் வங்கியில் சேவிங்ஸ் கணக்கிலும், ரொக்க முதலீடு செய்யும் தொகையை வங்கிகள் வரவாகவோ அல்லது சொத்தாகவோ எடுத்துக் கொள்ளாது. இவை அனைத்தும் கடன் பிரிவிலேயே வரும். இவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ரிசர்வ் வங்கியில் டெபாஸிட் செய்துவிட வேண்டும்.
ஒருவேளை வங்கி திவாலாக நேர்ந்தாலும் வங்கியில் சேவிங்ஸ் கணக்கு மற்றும் ரொக்க முதலீடு செய்பவரின் பணம் ஏறக்குறைய முழுமையாக கிடைப்பதற்கு இந்தியாவில் வாய்ப்புண்டு. ஏனென்றால் அவர் வங்கியின் கடன்தாரர். வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வதருக்கு அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால் அவர் முதலீட்டாளர்.
பங்கு சந்தை நீதி: கடன்தாரரை ஏமாற்றக்கூடாது. முதலீட்டாளர் விதிவிலக்கு.
இவ்வாறு நம்மிடமிருந்து எந்த கேள்வியுமின்றி பெற்ற பணத்தை ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு தேவையுள்ளவர்களுக்கு கடனாக அளிக்கிறது. அது மட்டுமில்லாது இந்த தொகையை கடன் பத்திரங்கள் சந்தையிலும் உலவ விட்டு (லோக்கல் பாஷையில் சொன்னால் ‘ரொடேஷன்’) வட்டித் தொகை சம்பாதிக்கின்றன.
வங்கிகளின் வரவு செலவு அறிக்கையில் நாம் டிமாண்ட் டிராப்ட் வாங்க கொடுக்கும் கமிஷன் எல்லாம் சொற்ப பங்குதான். இது போன்று கடன்பத்திர சந்தையில் பணத்தை புரட்டி சம்பாதிக்கும் வரவே அதிகம்.
நம்ப பணத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுத்தவுடன் அத்தொகையானது வங்கியின் சொத்துப் பகுதியில் சேர்ந்து விடும். அதாவது நம்முடைய டெபாஸிட் தொகை வங்கியின் கடன் பகுதியில் இருக்கும். அதிலிருந்து வங்கி மற்றொரு பார்ட்டிக்கு கொடுக்கும் கடன் வங்கியின் சொத்து பகுதியில் வந்து விடும்.
இந்த கடன் பெற்றுக் கொண்ட புண்ணியவான்கள் வங்கிக்கு வட்டித் தொகையை தவறாது செலுத்தி வர வேண்டும் என்பது ஐதீகம். இருப்பினும் சிலர் குறிப்பிட்ட நாளுக்கு பிறகும் (பொதுவாக 90 நாட்கள்) வட்டித் தொகையை செலுத்தாமல் ‘வாங்கின கடனை திருப்பிக் கொடுக்கிறது என் வாழ்க்கையிலே இல்லை’ என்ற குறிக்கோளை பின்பற்றினால் அந்த கடன்கள் அனைத்தும் இந்த NPA (Non-Performing Assets) என்ற வகையில் வந்து சேர்ந்து விடும்.
ஒவ்வொரு வங்கியும் தனது காலாண்டு அறிக்கையில் இந்த வாராக் கடன்கள் பற்றிய விவரங்களை மறைக்காமல் உண்மையை சொல்லவேண்டும் என்பது செபியின் கட்டளை. போன வருஷத்தை விட இந்த வருஷம் லாபம் அதிகம் அப்புறம் போன வருஷத்தை விட இந்த வருஷம் என்பிஏவும் அதிகம் ஐ ஜாலி… இந்த வங்கி பங்கில் முதலீடு செய்யலாம் என முடிவு எடுத்து விடக் கூடாது.
எல்லா வங்கியிலும் வாராக் கடன்கள் இருக்கும். அதன் சதவீதம் வருடத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டும். அதன் வழியாக வங்கியின் நடுநிலை மேலாண்மை எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த விகிதமானது குறைந்துக் கொண்டே வந்தால் வங்கியின் நிர்வாகம் சீராக இயங்குகிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
பொதுவாக இந்திய வங்கிகளின் என்பிஏ வெளிநாட்டவருடன் ஒப்பிடுகையில் குறைவாகதான் இருக்கும். அரசு துறை வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே கடன் கொடுக்கின்றன. வாராக்கடன்களை வசூலிக்கவும் சில தனியார் வங்கிகள் தனியே ஆட்டோமேன் ….ச்சே…. ஆம்பட்ஸ்மேன் வைத்துள்ளன.
NPA (Non Perofirming Assets க்கும் Bad Debts என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரண்டாம் வகையை சேர்ந்தவை காந்தி கணக்கில் வரக்கூடியவை. வசூலிக்கவே முடியாத கடன். இதனை எவ்வாறு உதாரணம் சொல்லி விளக்குவது என யோசித்துக் கொண்டிருக்கையில் தன் தமையன் வெகு எளிதான உதாரணத்துடன் எனக்கே விளக்கி விட்டான்.
‘ஒரு வங்கி எனக்கு கடன் கொடுத்தா அது NPA-ல் வரும். உனக்கு கொடுத்தா அது Bad Debts.’
கால்குறிப்பு (Footnote-ன் தமிழாக்கம்) NPA என்பதை ஒரு எளியதாக விளக்க முயற்சி செய்துள்ளேன். இதில் இன்னும் நிறைய சொல்லாத விஷயங்கள் இருக்கின்றன. இந்த பகுதிக்காக வங்கியின் வரவு செலவு கணக்கு ஆண்டாய்வு அறிக்கையில் நிறைய பக்கங்கள் ஒதுக்கப்படும். ஒருமுறை அதனை படித்து பாருங்கள்.
Recent Comments