Archive for October, 2012
பெயரிடப்படாத ஒரு நாவலிலிருந்து
என் பெயர் முக்கியமல்ல. நான் அரசு துறையில் வேலை செய்கிறேன்.அன்றைய தினம் வழக்கம்போல, அலுவலகத்திற்கு தாமதமாக வந்து, என் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாள் படிக்க துவங்கினேன்.
இருபது நிமிடங்களுக்கு பிறகு, என் இருக்கையின் அருகே இரண்டு பேர் வந்தனர். அவர்களை கண்டுக் கொள்ளாமல் நான் வேலையில் கவனம் செலுத்தினேன்.
சார், எனக்கு ஸ்டூடன்ட் லோன் வேண்டும். அப்ளிகேஷன் எடுத்து வந்திருக்கிறேன்.
என் தலையில் எச்சரிக்கை மணி பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், நான் வேலை செய்வது வங்கியில் அல்ல.
அதற்குள், வந்த இருவரும் சட்டையை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் இருந்த முகமூடியை போட்டு கத்தியை எடுத்துக் கொண்டனர்.
நின்ஜாக்கள்!
அய்! சட்டவோ!
என்ற கூக்குரலுடன் என்னை தாக்க ஆரம்பித்தனர்.
என் பொது வாழ்க்கைச் சூழலில், என்னுடைய கடந்த காலம் குறுக்கிடுகையில் நின்ஜாக்கள் வருவதை தவிர்க்க முடியாதுதான்.
டைப்பிஸ்ட் கற்பகம் அய்யோவென்ற கூக்குரலுடன் பதறி ஒடினாள். ஒடுகையில், தன்னுடைய கைப்பையையும், டிபன் பாக்சையும் எடுத்துக் கொண்டே ஒடினாள். அநேகமாக, போத்திக்கு போய்விட்டு, வீட்டிற்கு போய்விடுவாள். இன்றைக்கு திரும்பி வரமாட்டாள். சில முக்கிய அலுவலக ஆவணங்களை அவள் எனக்கு தட்டச்சு செய்து தர வேண்டும்.
கோபம் உடனடியாக சக்தியை கொடுக்கும். எனவே, நின்ஜாக்கள் என் அக்காவை பற்றி ஜப்பானிய மொழியில் தவறாக பேசிகிறார்கள் என எண்ணி, கோபமடைந்து, எதிர் தாக்குதலில் ஈடுபட்டேன்.
என்னுடைய சூப்ரவைசர் பதறி என்ன நடக்கிறது என வினவ, பக்கத்து சீட் சுப்ரமணி
சார், இவர் பிரைவேட் பேங்கல கடன் வாங்கி ட்யூ கட்டாம இருந்திருப்பார். அதான் ஆள அனுப்பிச்சாட்டங்க. யூனிபார்ம்லாம் இப்போ இவங்களுக்கு கொடுக்கிறாங்க
என்றார்.
இதற்கிடையில், தாக்குதல் தீவிரமடைந்து நான் பல இருக்கைகளுக்கிடையே புகுந்து ஓடி, தடுக்க வேண்டியதாகிவிட்டது.
சூப்ரவைசர் அதற்குள்
ஏப்பா, சண்டையை நிறுத்துங்க, பேசி தீத்துக்கலாம். இல்ல உன் இன்க்ரிமெண்ட கட் பண்ணுவேன். சுப்ரமணி, அவன புடிப்பா.
சுப்ரமணி தன் கைபேசியில் சண்டையை ஆர்வமாக படமெடுத்துக் கொண்டிருந்தான்.
நின்ஜாக்களை வெல்லும் தருணத்தில், எனக்கு சகோதரிகள் யாரும் இல்லை என்ற உண்மை உறைக்க, கோபம் வடிய ஆரம்பித்தது. இந்த இடைவெளியில் நின்ஜாக்கள் தப்பி ஒடி விட்டனர்.
அலுவலகமே என்னை திக்பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த காலத்தை நான் மறந்தாலும், அது என்னை மறக்கவில்லை.
ஒரு பரிச்சயமான ஒலி தொலைவில் கேட்டது. அது ஏவுகணை ஏவப்படும் ஒலி. எப்படி மறப்பேன் அதனை?
என் பைபையும், டிபன் பாக்சையும் எடுத்துக் கொண்டு, அலுவலகத்தை விட்டு உடன் வெளியேறினேன்.
==========================================================
பெயரிடப்படாத என் நாவலிலிருந்து ஒரு அத்தியாயம். வாய்ப்பும், வளமும் கிடைத்தால் விரைவில் இதனை பூர்த்தி செய்வேன்.
Recent Comments