Archive for April, 2012
கோப்ரா தீவில் கோயாவி – 1.The Ghost Protocol
இந்திய உளவாளிகள் பெண்களை மயக்குவதில்லை. மாறாக மயங்குகிறார்கள். மொக்கை பிகர்களிடம் கூட. – ராவின் டைரிக்குறிப்பு |
கோயாவி தன் பாசறையில் பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவருக்கு ஒரு மிஸ்ட் கால் வந்தது. அது தலைமையகத்தின் அழைப்பு. புன்முறுவலுடன் பதிலுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு புறப்பட எழுந்தார்.
அவர் சைக்கிளை எடுத்து சீட்டை துடைத்துக் கொண்டிருக்கையில் அவருக்கு மீண்டும் ஒரு மிஸ்ட் கால் வந்தது. அதுவும் தலைமையகமே. அதை கண்டதும் கோயாவியின் முகத்தில் புன்முறுவல் மறைந்து, வியர்வை அரும்ப தொடங்கியது. தலைமையகம் இரண்டு மிஸ்ட் கால் கொடுத்ததென்றால், அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான்.
அது கோஸ்ட் ப்ரோட்டகால். பாஸ் அழைக்கிறார். அவசரமாக. சனியன், தாமதமாக போனால் பிசாசு போல பிடுங்கி எடுக்கும்.
உடனடியாக தலைமையகத்திற்கு செல்ல வேண்டும். கோயாவி சைக்கிளை வைத்து விட்டு பேருந்தை பிடிக்க விரைந்தார்.
கோயாவியின் பாஸ் திரு சாம்பசிவ ராவ், ஐ பி எஸ் (அட்டெம்ப்ட்). இந்திய உளவுத் துறையில் பல வருடங்கள் உளவாளியாக பணியாற்றியவர். அவர் தன் உளவு அனுபவங்களின் அடிப்படையில் ஒரு விரிவான அறிக்கையை தன் பழைய டைரியில் எழுதி, தன் மேலதிகாரிகளுக்கு சமர்பித்தார்.
அது உளவுத் துறை வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியலையை உருவாக்கியது. நிறைய பிரிவுகள் இருக்கும் இந்திய அரசாங்கத்தில் மேலும் பிளவு ஏற்பட்டது. இதை தடுக்க அவரின் அறிக்கையை பழைய டைரியில் எழுதியதால், அதை ஏற்க இயலாது என ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணை கமிஷன் குழுவால் அவ்வறிக்கை நிராகரிக்கப்பட்டது. திரு ராவ் உளவுத் துறையில் இருந்து நீக்கப்பட்டார்.
இருப்பினும், அந்த அறிக்கை “ராவின் டைரிக்குறிப்பு” என உளவுத் துறை வட்டாரங்களில் மிகவும் புகழ் பெற்றது. சில அனுபவம் மிக்க உளவுத் துறை ஜாம்பவான்கள் அவர் திறமை மீது மதிப்பு வைத்து அவருக்கு பட்ஜெட்டில் ஒரு ஷேர் கொடுத்து, அவரை ஒரு சிறிய உளவுத் துறை அலுவலகத்தை அமைக்க முடிவு செய்தனர்.
மிக சொற்ப தொகையில் ஒரு புண்ணாக்கு மண்டியில் அமைக்கப்பட்டதே தலைமையகம். கோயாவி பணியாற்றுவது அங்கேதான். பணப் பற்றாக்குறையினால் பணியில் பல இன்னல்கள் ஏற்பட்டாலும், திரு ராவ் அதனை தொடர்ந்து நடத்தி வந்தார்.
ஒருமுறை, சீன உளவாளிகள் இரவில் நடமாட தொந்தரவு செய்யும் தெரு நாய்களை ஒழிக்க, சீனா வைரஸ் கிருமியுடன் ஒரு உளவாளியை அனுப்பி வைத்தது. அந்த கிருமியினால் தெரு நாய்களை ஒழித்து விடலாம் என்ற மிகப் பெரிய அபாயம் இருந்தது. அதை தலைமையகம் கண்டறிந்து, முறியடித்தது. விமானத்தில் தப்பியோடிய அந்த உளவாளியை பிடிக்க, இரயிலில் ஸ்லீப்பர் வகுப்பில் துரத்தி சென்ற கோயாவி ஓரிசாவை சேருவதற்குள், அவன் பெய்ஜிங் சென்றடைந்து, அங்கே ஒரு திருமணமும் செய்துக் கொண்டான்.
அந்த ஆபரேஷன் தோல்வியடைந்ததை ஒட்டி, கோயாவி டாஸ்மாக்கில் குடித்து புலம்பிக் கொண்டிருக்கையில் அவருக்கு இலவசமாக சைட் டிஷ் கொடுத்த சக குடிகாரர் கோலிவூட்டில் பணியாற்றும் ஒரு அஸிஸ்டென்ட் டைரக்டர். சில மாதங்களுக்கு பிறகு, இந்த உண்மைச் சம்பவத்துடன் புத்தரை சேர்த்து ஒரு முழு நீள ஆக்ஷன் படம் வெளிவந்தது.
தலைமையகம் அவசரமாக கூப்பிடுகிறது என்றால், மீண்டும் ஒரு அவசரப் பணி. நாட்டை நோக்கி மிகப் பெரிய அபாயம் வருகிறது. அதை தடுக்க கோயாவி தலைமையகத்தை நோக்கி விரைந்தார்,
http://www.youtube.com/watch?v=XAYhNHhxN0A
கோப்ரா தீவில் கோயாவி – துவக்கம் சீன ஏவுகணை
மலைகள் சூழ்ந்த அந்த சாலையில் ஒரு கார் வெகு வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. காரில் அமர்ந்திருந்த கோடீஸ்வரர் பொன்னம்பலத்தின் மனமோ இயற்கை எழிலை இரசிக்க இயலாமல் எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தது.
கார் மரங்களர்டந்த பங்களாவில் போய் நின்றது. ட்ரைவர் நாச்சி முத்து கதவை திறக்க, கோபத்துடன் உள்ளே நுழைந்தார் பொன்னம்பலம்.
“சரளா, ஏ,சரளா”, என கூவிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
“அத்தான், வந்து விட்டீர்களா?”, என 25-வயது நாரீமணி ஓடி வந்தாள். அவளை கண்டதும், பொன்னம்பலத்தின் கோபம் எல்லை மீறியது.
“பசப்பாதே, என் அனுமதி இல்லாமல் என் பெட்டகத்திற்கு சென்று எனக்கு சொந்தமான பொருளை எப்படியடி எடுப்பாய்” என இரைந்தார்.
“நாதா, அனுதினமும் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் என் மீதா சந்தேகப்படுகிறீர்கள்?”
“ச்சீ, சாகச வார்த்தைகள் பேசி என் மனதை மாற்ற முயலாதே. நன்றாக கேட்டுக் கொள். நாளைக்குள் எனக்கு அது திரும்ப வேண்டும்.”
“இந்த அபலை மீது இப்படியொரு தீஞ்சொற்களை உதிர்க்க எப்படி அத்தான் உங்களுக்கு மனம் வந்தது” என்றவாறு சரளா கேவினாள்.
“நாளை பகல் பன்னிரெண்டு மணி வரை உனக்கு கெடு. அப்புறம் நான் மனிதனாக இருக்க மாட்டேன். டேய், நாச்சி, வண்டிய எடுடா” என சொல்லி பொன்னம்பலம் வெளியேறினார்.
கார் மலைகள் சூழ்ந்த சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.
காரில் அமர்ந்திருந்த பொன்னம்பலம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது, ட்ரைவர் நாச்சிமுத்து ஆ வென அலறினான்.
“நாச்சி, என்னாச்சிடா”
நாச்சிமுத்து அழகன் அல்ல, இருப்பினும் பயத்தினால் அவன் முகம் விகாரமாக இருந்தது.
“முதலாளி, அங்கே பாருங்கள்”, என அலறினான்.
பொன்னம்பலத்தின் காரை நோக்கி ஒரு ஏவுகணை வந்துக் கொண்டிருந்தது. அது ஒரு சீன ஏவுகணை. அதன் முனையில் “Made In Taiwan” என்ற வாசகம் இருந்தது.
“நாச்சி, வண்டிய திருப்புடே ”
அதற்குள் ஏவுகணை அந்த காரின் மீது மோதியது.
டமால் !
புதிய தொடர்
நண்பர்களே,
வேதாள நகரம் என்ற தொடர் ஆரம்ப காலக் கட்டத்தில் எழுதினேன். இப்போது மற்றொரு புதிய தொடரை எழுதலாம் என்றிருக்கிறேன். இவ்விரண்டுக்கும் நடுவே என்னுடைய நகைச்சுவை உணர்வு மாறியுள்ளதா, தேறி உள்ளதா, உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளும் நோக்கமே தவிர வேறொன்றுமில்லை.
இதை எழுத ஊக்கப்படுத்திய என் அன்பு நண்பர்கள் எம் எம் சிங், விஜி, க்ரூய்ஸ் போன்றோருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெயரில்லாமல் தொடர் எழுதக்கூடாது என்ற முது மொழிக்கேற்ப, இத்தொடருக்கு
கோப்ரா தீவில் கோயாவி
என நாமகரண்ம் சூட்டியுள்ளேன்.
😉
Recent Comments