Archive for April, 2016

Heart Attack

Disclaimer : இது தெலுங்கு படத்தின் விமர்சனம் அல்ல.

சென்ற சனிக்கிழமை விடியல் காலை 01.00 மணியளவில் தூக்கத்திலிருந்து எனக்கு விழிப்பெற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமப் படலானேன். இதயம் சற்று சப்தமாக அடித்துக் கொள்வதாக வேறு தோன்றியது. உடன் இதனை ஹார்ட் அட்டாக்காகதான் இருக்கும் என ஊகித்தேன்.

சட்டி சுட்டதடா, இந்த தேசத்தின் குரல், போ இங்கு நீயாக, டேரி மேரி (இந்த பாடல் எப்படி சேர்ந்ததென தெரியவில்லை) போன்ற பாடல்கள் கேட்க ஆரம்பித்தன.

இப்போது உங்கள் மனதில் எழும் இரு கேள்விகளுக்கான பதில்கள்

01) ஆம். மேற்காண் பாடல்கள் என் ப்ளே லிஸ்டில் இடம் பெற்றிருக்கின்றன.

02) இல்லை. அச்சமயத்தில் நான் ஹெட்போன் அணிந்திருக்கவில்லை.

தடுமாறி, கைபேசியில் இணையத்தினை தொடர்பு கொண்டு, இது போன்ற சமயத்தில் என்ன செய்ய வேண்டுமென தேடிப் பார்த்தேன். 911 கூப்பிட வேண்டும் அல்லது மருத்துவரை பார்க்க வேண்டுமென்ற வலியுறுத்தப்பட்டிருந்தது

வீட்டினை பூட்டி விட்டு, மெள்ள நடந்து முக்கிய சாலைக்கு வந்தேன். காலியாக வந்த ஒரு டாக்ஸியை கைநீட்டி ஏறி, பொது மருத்துவமனைக்கு செல்லுமாறு பணித்தேன்.

முதல் கிலோ மீட்டர் தாண்டுவதற்குள், டாக்ஸி ட்ரைவரிடம் அவருக்கு சேர வேண்டிய சேவைக் கட்டணத்தை இப்போதே வாங்கிக் கொள்ளுமாறு, பின்னர் அது அவருக்கு கிடைக்காமலேயே போகலாம் என பூடகமாக சொல்லி அவரின் இதயத்தினையும் சோதித்தேன்.

கிளம்புகையில் உயில் எழுத ஒரு பேனாவை எடுத்துச் சென்றிருந்தேன். சொத்து என்று ஒன்றுமில்லை. காமிக்ஸ் புத்தகங்கள்தான். ரபீக்-கு ரோஜரின் மஞ்சள் நிழல் புத்தகத்தையும், மாடஸ்தி புத்தகங்களை விஸ்வாவிற்கும், டெக்ஸ் வில்லர் கதைகளை ஷங்கருக்கும் அளிக்கலாம், ஸ்மர்ப்ஸ் புத்தகத்தினை என்னுடன் புதைத்து விடலாம்  என முடிவு செய்தேன்.

ஒரு வழியாக, பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். எங்கள் இருவருக்குமே நன்றாக வியர்த்திருந்தது.

இரவு சேவையில் இருந்தது மருத்துவக் கல்லூரியில் பயிலும் பெண்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் தெளிவாக பதிலளித்து சிறிது நேரத்தில் அவர்களையும் குழப்படித்தேன்.

அவர்கள் டியூட்டி டாக்டரை பார்க்கும்படி என்னை அனுப்பினார்கள். எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என அவரை அணுகினேன். நடு வயதை கடந்த பெண். சற்றும் ஏறிட்டும் பார்க்கவில்லை. ஒரு செவிலியரை கூப்பிட்டு, என்னுடைய ரத்த அழுத்தத்தை எடுக்குமாறு ஆணையிட்டார்.

ஜெஸ்டபோ ஆபிசரை எதிர்கொள்ளும் நார்மன் போல, துணிந்து கையை நீட்டினேன்.

ரத்த அழுத்தம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. சுகர் இருக்கிறதா?

ஐயாம் ச்சோ ஸ்வீட் என சொல்லி செருப்படி வாங்க வேண்டாம் என முடிவு செய்து, இல்லை என தலையசைத்தேன்.

இதயத்தின் இரு பக்கமும் வலிக்கிறது, ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என நம்பிக்கையுடன் வினவியவதற்கு, அதெல்லாமில்லை என அலட்சியமாக பதில் வந்தது.

ரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரை ஒன்றை அளித்து, சிறிது நேரம் அந்த பெட்டில் உட்காரும் படி கூறினார். பக்கத்து பெட்டில் இருந்த நோயாளியை பார்த்து மெல்லிய புன்னகை செய்தேன். பதிலுக்கு ஒன்றையும் பெற்றேன். அதை டாக்டரும் நோக்கினார். சிறிது நேரத்திற்கு பிறகு, டாக்டர் என்னை செல்லலாம் என அனுப்பி விட்டார்.

இரத்த அழுத்தம்! சில உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவ்வளவுதான்.

நேற்று டிஸ்னியின் ஜங்கிள் புக் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது. தவறாமல் பார்த்து விடுங்கள்.

April 11, 2016 at 12:22 pm 6 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
April 2016
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930