Archive for August, 2010
வேட்டையாடும் தேவதைகள்
கிறிஸ்தவ ஆதிநூல்களில் ஒன்றான Enoch புத்தகத்திலிருந்து
கடவுள் தனது பிரியத்திற்குரிய மனிதர்களை படைத்தபின் அவர்களை கண்காணிக்கும் பொருட்டு தேவதை குழுவினை பணித்தார். இவர்கள் கண்காணிப்பாளர்கள் எனப்பட்டனர். கடவுளின் ஆணைப்படி மறைந்திருந்து மனித இனத்தை கண்காணித்தபடி இருந்தனர்.
நீண்ட காலத்திற்கு பிறகு கண்காணிப்பாளர்கள் மானிட பெண்களின் மேல் மையல் கொண்டு அவர்களுடன் கலந்தனர். அவர்களது பிள்ளைகள் தேவதைகளின் குணங்களை பெற்றும், மனித குணங்களையும் பெற்றும் பிறந்தன.
தேவதை குணங்களை பெற்ற பிள்ளைகளை இவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர். தங்கள் தந்தைகளிடமிருந்து போர்த்திறமைகளை கற்றுக் கொண்ட அவர்கள் நெப்லியம் (Nephilim) என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆறரை அடி உயரத்தில் நீலக் கண்களுடன் மிகுந்த அழகுடன், தாங்கள் நினைப்பதை அடைவதற்கு எத்தகைய குரூரமான வழிகளையும் பின்பற்ற தயங்காதவர்கள்.
மிகச் சிறந்த போர் வீரர்களான இவர்கள் மனித இனத்தை கூடிய விரைவில் அடிமைப்படுத்தினர். தங்களை முதன்மை உயிர்களாக இந்த பூமியில் கருதினர்.
கோபம் கொண்ட கடவுள் தலைமை தேவதைகளை கொண்டு கண்காணிப்பாளர்களை பாதாள உலகில் சிறையலடித்து விட்டார். பாதாள உலகில் அவர்கள் வீழ்ந்துக் கொண்டிருக்கையில் அவர்களது தீனக்குரலை கேட்ட போர்த் தேவதையான கேப்ரியல் இரக்கங்கொண்டு தனது கையிலிருந்த தெய்வீக யாழை அவர்களை நோக்கி வீசியது.
பாதாளத்திலிருந்து தங்களை தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்க யாரேனும் வருவார்களா என அவர்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் அடிப்படையாக மனதில் வைத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை தகர்க்கும் வண்ணம் எழுதப்படும் புத்தகங்களே நம்மிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. டேன் ப்ரவுன் தன்னுடைய The Da Vinci Code நாவலில் கிறிஸ்துவின் புனித கோப்பை குறித்து புதிய எண்ணங்களை புகுத்தினார். அதற்கு தேவையான ஆதாரங்களையும் அப்புத்தகத்தில் முன்னிலைப்படுத்தினார். கிறிஸ்தவர்களின் எண்ணத்தை பரவலாக அது காயப்படுத்தியபோதும், விற்பனை ரீதியில் முதலிடத்தை பிடித்தது.
அது போலவே, தேவதைகள் குறித்து நம்மிடம் இருக்கும் அடிப்படை எண்ணங்களை Danielle Trussoni எழுதிய Angelology நாவல் மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த கதாசிரியரின் முதல் நாவல் இது. இதற்கு முன்னர் தன்னுடைய தந்தையின் வியட்நாம் போர் அனுபவங்களை (அவர் தந்தை ஒரு சுரங்க எலி (Tunnel Rat) ) வைத்து ஒரு நூல் எழுதியிருந்த போதிலும், கற்பனை என்ற வகையில் அவரின் முதல் புத்தகம் இது.
1942-ல் ஐரோப்பா இரண்டாம் உலகப்போரினால் நிலைகுலைந்திருந்த சமயத்தில் ஒரு ஆராய்ச்சி குழுவினர் பல்கேரிய மலையடிவாரத்தில் உள்ள சாத்தானின் வாய் என்றழைக்கப்படுகின்ற பெரும் பள்ளத்தின் அருகே ஒரு தேவதையின் இறந்த உடலை ஆராய்ச்சி செய்கின்ற காட்சியுடன் துவங்கிறது இந்த நாவல்.
பத்தாம் நூற்றாண்டில் ஒரு மறைநூல் அறிஞரால் தெய்வீக யாழை தேடி கண்டடைந்த குறிப்புகள் 1943-ல் தேவதைகளை பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளும் குழுவினருக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் அந்த தெய்வீக யாழை கண்டுபிடிக்கின்றார்கள். அதன் சக்திகள் சரிவர தெரியாத நிலையில், இவர்களை தொடர்ந்து வரும் தேவதைகளுக்கு அது கிடைத்துவிடக் கூடாது என அமெரிக்காவிற்கு கொண்டுச் சென்று மறைத்து விடுகின்றனர்.
1999-ல் க்ரிகோரி என்ற பழமையான நெப்லியம் குடும்பத்தினரின் வாரிசு பெர்ஸிவல் க்ரிகோரி. தனக்கு ஏற்பட்ட தீடீர் சுகவீனத்தால் தனது அழகிய இறக்கைகள் செயலிழந்து, உதிர்ந்து போனதால் அதை தீர்க்கும் பொருட்டு அவர் தெய்வீக யாழை தேட ஆரம்பிக்கிறார்.
இதற்காக வெர்லேன் என்ற தனியார் துப்பறிவாளரை அவர் அமர்த்தி அந்த தெய்வீக யாழ் கடைசியாக தென்பட்ட ரோஸ் கான்வென்ட்டில் தேட பணிக்கிறார். ரோஸ் கான்வென்ட்டில் இருக்கும் கன்னியாஸ்திரியான ஈவான்ஜலின் வெர்லேன் கோரும் தகவல்களினால் கவரப்பட்டு தனது கடந்த காலத்தை அறிய முற்படுகிறாள்.
நாவல் 1943-ல் நடக்கும் தெய்வீக யாழை தேடும் முயற்சிகள், தற்காலத்தில் தேடும் முயற்சிகள் என இரு தளங்களில் பயணித்து செல்கின்றது. கூடவே, க்ரிகோரி குடும்பத்தின் இரத்த வரலாறும் நடுநடுவில் விவரிக்கப்படுகிற்து.
ஒரு உதாரணமாக,
க்ரிகோரி குடும்பத்தை சேர்ந்த ஆர்தர் க்ரிகோரி என்பவர் 1800-ல் ஈஸ்ட் இந்தியா என்ற குழுமத்தின் பங்குகளை மிக் குறைந்த விலையில் வாங்குகிறார். இந்தியா அவர்களிடத்தில் வீழ்ந்த பிறகு அக்குழுமத்தின் மதிப்பு அதிகரிக்கிறது. வடக்கிந்தியாவில் சில கிராமங்களில் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து புரட்சி நடக்கிறது. அதை தடுக்க வழிவகை தெரியாமல் அக்குழுமத்தினர் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். குழும பங்குகளின் விலை மெள்ள மெள்ள சரிந்துக் கொண்டிருக்கிறது.
தானே களத்தில் இறங்குகிறார் ஆர்தர் க்ரிகோரி. அக்குழுமத்தின் உதவிக்காக அனுப்பப்பட்ட சொற்ப இராணுவ படையுடன் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிராமத்தில் நுழைகிறார். கிராம மக்களை ஒன்றாக்கி மைதானத்தில் நிறுத்தி வைத்து அவர்களிடத்திலிருந்து சிறுவர்களையும், சிறுமிகளையும் தனியே பிரிக்கிறார்.
மற்ற ஆங்கிலேயரிடமிருந்து வித்தியாசமாக இருக்கும் இவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமியை கூப்பிட்டு, அவள் கையை பிடித்து மெள்ள அழைத்துச் சென்று, பீரங்கியின் வாயில் திணித்து திகைத்து நிற்கும் சிப்பாயிடம் திரியை பற்ற வைக்கச் சொல்கிறார்.
சில நாட்களுக்கு பிறகு புரட்சி முற்றிலுமாக நசுக்கப்படுகிறது.
கன்னியாஸ்திரி ஈவான்ஜலின் வாழ்க்கையில் உள்ள மர்மம் என்ன? அந்த தெய்வீக யாழை கண்டறிந்தார்களா? அதன் சக்தி என்ன? அந்த யாழை எப்படியும் கண்டுபிடித்து விட வேண்டுமென்று துடிக்கும் தீய தேவதைகளின் முயற்சிகள் வெற்றி பெற்றதா?
மறைநூல்களில் காணப்படும் தேவதைகள் பற்றிய பத்திகள், அவர்களின் குணங்கள் என ஆதாரங்களை நாவலின் ஊடே முன்னிலைப்படுத்துகிறார். தன்னுடைய முதல் நாவலையே ஒரு தொடர் நாவலாக எழுதுவதற்கு முனைந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
தேவதைகள் குறித்த புதிய பார்வையை இந்த நாவல் வைக்கிறது. கிறிஸ்வ, முஸ்லீம் மற்றும் இந்து மதங்களிலும் தேவதைகள் பற்றிய கதைகளில் ஒரு பொதுவான தன்மை காணப்படுகின்றன. எனவே, இந்த நாவலை படிப்பதற்கு தேவதைகளின் வரலாறு பற்றிய அடிப்படை சிறிது தெரிந்திருந்தால் போதும்.
மேற்கொண்டு படிக்க, இரசிக்க
1, Patrick Heron எழுதிய Nephilim and the Pyramid of the Apocalypse
2. Elizabeth Clare Prophet எழுதிய Fallen Angels and the Origins of Evil: Why Church Fathers Suppressed the Book of Enoch and Its Startling Revelations
இது தொடர்பாக படிக்க ஏராளமான புத்தகங்கள் இருப்பினும், மேற்சொன்ன இரு புத்தகங்கள் வெகு எளிதான அறிமுகத்தை வழங்குகின்றன.
3. Dogma என்ற கெவின் ஸ்மித் இயக்கிய திரைப்படம். தேவதை கதையினை வெகு எளிதாக நகைச்சுவையுடன் புரிந்துக் கொள்ள இத்திரைப்படத்தை பார்க்கலாம். .
4. சுரங்க எலி (Tunnel Rats) என்பவர்கள் போர்முறையை அறிய Frederick Forsyth எழுதிய The Avenger என்ற நாவலை பரிந்துரை செய்கிறேன்.
Recent Comments