Archive for July, 2012

தன்னடக்கம்

நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்த ஒருவரை கடைத் தெருவில் சந்திக்க நேர்ந்தது.  அவருடைய மகன் மார்ச் 2012-ல் ப்ளஸ் டூ எழுதியிருந்தான்.  நன்றாக படிக்கக் கூடியவன்.  அதனால், என்ன மதிப்பெண்கள் என கேட்டு வைத்தேன்.

உடனே தொலைக்காட்சி குடும்பப் பெண் வெட்கும் வகையில் சோகமானார்.

நல்லாத்தான் படிச்சுக்கிட்டு இருந்தான். கடைசி நேரத்தில விட்டுட்டான். எவ்வளவோ நம்பி இருந்தேன்.

என்ன சார் சொல்றீங்க?

ஆமாம்பா, வீட்ல எல்லாம் இடிஞ்சி போய்ட்டாங்க.

எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.  எப்போது பார்த்தாலும் விளையாடாமல் படித்துக் கொண்டிக்கிறவன்.  அவன் விளையாடுவதை இவர் அனுமதிப்பதில்லை.  குழந்தை வன் கொடுமை என சொல்ல முடியாது.  பயல் எதிர் வீட்டு பெண்ணை பார்க்கும் பார்வையை நான் பார்த்திருக்கிறேன். அவளின் அக்கா எனது Glassmate.

அவள் குழுவில் வந்து சேர்ந்து பிறகுதான் நிதானமாக இரசித்து நேர்நடையுடன் பார்/உணவகத்திலிருந்து வெளியே செல்ல ஆரம்பித்தோம். அதற்கு முன்னர், அதிகமாயிற்று என்பதை கண்டறிய இருந்த ஒரே வழி.  இன்னொரு நண்பனை குடி குடியை கெடுக்கும் என சொல்லச் சொல்வோம். எப்போது அது அதிக சிரிப்பை மூட்டுகிறதோ அதுவே கடைசி கிண்ணம்.

என்ன மார்க் சார்?

1178 தாம்பா.

சட்டென்று எரிச்சலாக உணர்ந்தேன். என் நண்பர்கள் இரண்டு பேர் ப்ளஸ் டூ-வில் எடுத்த மொத்த மதிப்பெண்களை விட ஐந்து மார்க் அதிகமாகவே இருந்தது.

அடக் கடவுளே, எப்படி சார் இவ்ளோ மார்க் குறைஞ்சது? இப்ப என்ன பண்ணுவீங்க? ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.

அவர் சந்தேகத்துடன்,

நல்ல மார்க் தான் ஆனால்……

காலேஜில இடம் கிடச்சிதா சார், காரைக்காலில் வேணா ஒரு காலேஜ் இருக்கு.

ச்சேச்சே இங்கேயே கூப்ட்டு கொடுத்தாங்க.

தன்னடக்கம் என்பது நல்ல பண்பு என்பதை இவர்கள்தான் மாற்றுகிறார்கள்.  திரையுலகில் காட்டும் தன்னடக்கம் கொடூரமாக இருக்கும்.  திரைப்படம் வெற்றி விழாவில் வெற்றி பெற காரணம் இவர்தான் என குற்றச் சாட்டு போல் பேச, அவர் அதை வன்மையாக மறுப்பார். கதாநாயகன்தான் தன் திறமையால் படத்தை தூக்கி பார்வையாளர்கள் மீது விசிறியடித்தார் என உருகுவார். 

I’m a damn good blogger! 😉

July 27, 2012 at 7:37 am 3 comments

வியட்நாம் உணவு

நான் காலை ஒட்டத்திற்கு செல்லும் வழியில் ஒரு புதிய உணவகம் திறந்திருந்திந்தார்கள்.  மல்டி க்யூசீன்.  அதில் வியட்நாம் உணவும் அடங்கும். சிறிய உணவகம்தான். அன்றைய தினம் மாலையே அங்கு சென்றேன்.

அவ்வளவாக கூட்டமில்லை. முதலாளியே வந்து ஆர்டர் எடுத்தார். சமையல் நிபுணர் (செப் அவர் வார்த்தையில்) மதுரையிலிருந்து வந்திருப்பதாக கூறியதும் எனக்கு அவரை சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு இரண்டு காரணங்கள். பிரபல பதிவர் என்பது அதில் ஒன்று இல்லை.

ஒன்று, முருகதாஸ் ஏழாம் அறிவில் தமிழர்களுக்கு அந்தளவிற்கு விவரம் பத்தாது, போதிசத்துவர் தமிழர் என்பது மலேசியா, சிங்கப்பூர், சீனாவில் உள்ளவர்களுக்கு தெரிந்தது நம்மூர் ஆட்களுக்கு தெரியவில்லையே என வருந்தி இருந்தார்.  ரெட் ஜெயன்ட்ஸ் தயாரிப்பு வேறு.  அவர்கள் அதை க்ளாஸிக் என சொல்லியிருப்பதால், காமெடி என கருதலாகாது. அவர்களே காமெடி என்று சொன்னால்தான் சிரிக்க வேண்டும். ஒரு தமிழன் வியட்நாம் உணவின் தயாரிப்பின் நுட்பங்களை கற்று தேர்ந்திருக்கிறான், குறைந்த பட்சம் பாராட்டி சாப்பிட வேண்டாமா?

இரண்டாவது, சமையல் நிபுணர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் மிகச் சிறந்த சமையல் டிப்ஸ் கொடுப்பார்கள். அப்படி ஒருவர் கொடுத்த டிப்ஸ் இன்னும் எனக்கு உபயோகமாகிக் கொண்டிருக்கிறது. (இதான் என் நம்பரு, உனக்கு ஏதாச்சும் வேணும்னா இந்த நம்பருக்கு கால் அடி. அரை மணி நேரத்தில வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் )

செப் நல்ல களையாக, உற்சாகமாக இருந்தார். வாடிக்கையாளர்கள் அவரிடம் வந்து பேசுவது முதல்தடவையாம்.  முதலாளியும் கூடவே நின்றிருந்தார்

நான்

வியட்நாம் உணவு தயாரிக்க எங்கே கத்துக்கிட்டிங்க?

செப்

சார், நிறைய பேருக்கு தெரியாது, வியட்நாம் சமையலும் பர்மா சமையலும் ஒண்ணு. ஒரே மாரிதான் இருக்கும்.

 

       முதலாளி, இல்லையா பின்ன என புன்னகை செய்கிறார்.

நான்

ஒன்னாவா இருக்கும்?

செப்

பர்மாவில் நம்மாளுகதான் செட்டியார்கள் நிறைய பேர் இருந்தாங்க. பிரச்சினை வந்த உடனேதான் திரும்பி வந்துட்டாங்க.

நான்

ம்

செப்

அவங்க சமையலதான் இன்னமும் பர்மா காரங்க சாப்டுறாங்க.

 

முதலாளிக்கும் இந்த விஷயம் தெரியவில்லை என்பதால், இருவரும் வியந்தோம்.

நான்

அப்ப செட்டிநாட்டு சமையலுக்கும், பர்மா வியட்நாம் சமையலும் ஒண்ணா?

செப்

(எச்சரிக்கையுடன்) கண்டிப்பா இல்லை. முதல்ல சிக்கன சாப்சீன்னு சொல்லுவாங்க. அப்புறம் வேற வேற தட்டுல பரிமாறணும். இந்த மாரி நிறைய விஷயம் இருக்கு சார்.

 

எனக்கு அவருடைய தன்னம்பிக்கை பிடித்து இருந்தது.

July 26, 2012 at 7:49 am 3 comments

கோப்ரா தீவில் கோயாவி – கடிதங்கள்

இந்த தொடரை எழுதும்போது இவ்வளவு பாராட்டு வரும் என நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.  நிஜத்திலும் அப்படி பெரிய அளவில் பாராட்டுக்கள் வந்து குவிந்து விடவில்லைதான். இருப்பினும், சில கடிதங்கள் என்னை ஊக்கப்படுத்தின. நிறைய நாடுகளிலிருந்து இந்த தொடரை இரசிகர்கள் படிக்கின்றார்கள்.  கவுதமாலாவிலிருந்து கூட படிப்பது என் மனதில் கிலியை கிளப்புகிறது.

காப்பி தானே அடிச்சே, சொல்லு! பாரீஸிலிருந்து மோரீஸ்

டாய் பொறுக்கி,

         இதெல்லாம் ஒரு பொழப்பாடா? பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்ட்றான், உனக்கெதுக்கு? ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரத்தின் கதையை அப்படியே காப்பியடித்து வேறு மாதிரி எழுதினா தெரியாதுன்னு நினைச்சியா?

வெட்கங்கெட்டவனே, அடுத்து என்னடா? தமிழ்த் திரைப்படம் இயக்க திட்டம் உள்ளதா?

இப்படிக்கு

மோரீஸ் ப்ரம் பாரீஸ்

டியர் மோரீஸ்,

ஏன்ய்யா?  விஷ்ணுபுரம் நாவலின் உட் கட்டமைப்பை உள் வாங்கி அதன் வெளி மையங்களை சீர்படுத்தி அதை இந்த தொடரில் கொண்டு வந்திருக்கிறேன்.  அநேகமாக இதை நான் மட்டுமே செய்திருப்பேன்.  அதை நியாயமாக நீங்கள் பாராட்டி இருக்க வேண்டும்.

பக்கோடா எதன் குறியீடு என்பதை உணர முடிகிறது. இருப்பினும், கஜ்ஜீரா என்ற உதாரணம் சாலச் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து படியுங்கள். அடிக்கடி எழுதாதீர்கள். அடியோஸ் அமிகோஸ்.

இலங்கையிலிருந்து ஸ்ரீபதி,

அண்ணேன்,

நான் உங்கட பரம இரசிகன்.  நான் எட்டாம் வகுப்பு வாசித்து வருகிறேன்.  கோயாவி கதைன்னா எனக்கு அப்படி இஷ்டம்.  அண்ணேன், உங்கட வலைப்பூவிற்கு காலையிலிருந்து இராத்திரி வரை திரையில் வச்சு இரசித்துக்கிட்டு இருக்கேன்.

அண்ணேன், நீங்க எண்ட தெய்வம். கோயாவிக்கு ஷீலாவை கட்டி வையுங்கோள். கோயாவி ஒரு நல்ல ஏஜெண்டாக்கும். அவருக்கு பெலத்தை கொடுங்கோள்.

தண்டனிட்டு

ஸ்ரீபதி

தம்பி ஸ்ரீ,

கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளதடா.  இப்படிதான் இலுமின்னு ஒரு தம்பி இருந்தான். நேரம் சரியில்லாம பய ரௌடியாக போய்ட்டான். யார் எது சொன்னாலும், அதுக்கென்ன இப்போ-ன்னு திரியறான். நல்ல வாசகனாக்கும். ஆனா கண்டதை படிக்கிறான். அது போலவே, நீயும் ஆயுடாதே, கண்ணா.

            சின்ன வயசு வாசகர்களும் எனக்கு முக்கியம்தான். குருவி கொத்தி, குதிரை குதிச்சா கொப்பறகேசரியும் குப்புற விழுவான் என்பது ஆன்றோர் மொழி.

நான் பாராட்டுதலையும், விமர்சனத்தையும் சமமாகவே பாவித்து வருகிறேன். இத்தொடருக்கு நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.  ஆன்லைன் சாட்டில் வாசகர்களுடன் கதைக்கையில், அவர்கள் எண்ணத்தை அறிய முடிகிறது.

         தனிப்பட்ட காரணங்களால், வெளியூர் அன்பர்களின் ஆன்லைன் சாட்டை நான் தவிர்க்க நேரிடுகிறது. இருப்பினும், உங்கள் அன்புதான் என்னை இத்தொடரை எழுத வைத்திருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

ஆன்லைன் சாட் நாள் 15.07.2012 நேரம் மாலை நான்கு மணி

மோரீஸ் டேய்
நான் வணக்கம் மோரீஸ், நலமாக உள்ளீர்களா?
மோரீஸ் ஜெயமோகன் ஒரு சூரியன் போல, நீயெல்லாம் கடன் வாங்கிதான் எழுதற. ஒரு சூரியன்தான். தெரிஞ்சிக்கோ.
நான் கிட்ட இருப்பது ஒரு சூரியன்தான்.  அனைத்து நட்சத்திரங்களும் சூரியன்தான் என்பதை மறவாதீர்கள். 😉
மோரீஸ் பெரிய பருப்பு மாதிரி பேசிட்டதாக நினைப்பா?
நான் டேய், செருப்பால அடிப்பேன்.
மோரீஸ் பொறுக்கி ராஸ்கல், உனக்கு தைரியம் இருந்தா அட்ரஸ் சொல்லுடா
நான் உங்கக்காக்கிட்ட கேளுடா, புறம்போக்கு. 😉
மோரீஸ் என்னைக்காச்சும் எங்கையில் நீ மாட்டுவடா?
நான் ஓ, ரெய்டு போலீசா நீ, ஹஹஹஹஹஹஹஹ

 

Happy Weekend!

July 20, 2012 at 11:10 pm 5 comments

Older Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
July 2012
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031