Archive for April, 2014

காப்டோன் அமெரிக்கா

    காப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரம் நடிக்கின்ற புதிய திரைப்படம் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. யார் இந்த காப்டன் அமெரிக்கா? அவரது பூர்வீகம் என்ன? என்பதை அறிந்து இத்திரைப்படத்தினை பார்த்தால் நன்றாக இரசிக்க முடியும்.

    ஸ்டீவ் ரோஜர் என்பவர் மற்றவர்களுக்கு உதவும் தங்கமான உள்ளமும், சண்டைக்கு பின்வாங்காத தீரமும் உள்ள பூஞ்சை உடம்புள்ள சோப்ளாங்கி. இவரை பற்றி நன்கு அறிந்த ஒரு விஞ்ஞானி அவருக்கு போடாக்ஸ் போல் ஒரு ஊசி போட்டு, கவசப் பெட்டியில் மூடி விடுகிறார்.

   சிறிது நேரத்திற்கு பிறகு அப்பளம் பொறிப்பது போல் ஸ்டீவ் ரோஜர்ஸ் விம்மி புடைத்து வெளி வருகிறார். இதற்கிடையில் விஞ்ஞானியை வில்லனின் கையாட்கள் துப்பாக்கி குண்டுகளால் துளைத்து விடுகிறார்கள். என்னே, விதியின் விந்தை?  அந்த முட்டாள் விஞ்ஞானி அந்த ஊசியை அவனுக்கே போட்டு பார்த்திருக்க வேண்டாமா? முதல் அவென்ஜராகும் பெருமை கிடைத்திருக்கும் அல்லவா? முன்னால் கொஞ்சம் முடி இல்லாத அவென்ஜராக இருந்திருப்பார். அவர் மரித்து விடுகிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் வெறுத்து போகிறார்.

    அமெரிக்க ராணுவம் அவருக்கு அழகிய உடையணிவித்து, காப்டன் அமெரிக்கா என பெயர் சூட்டி,  போர் முனைக்கு போர் வீரர்களை குஷிப்படுத்த அனுப்புகிறார்கள்.

    இவரும் ஆட்டம், பாட்டு என வீரர்களை மஜா படுத்துகிறார். இதற்கிடையில் எதிரிகளிடம் செமையாக உதைபட்டு வரும் ஒரு வீரர், இந்த மசுருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, நீ சண்டைக்கு போனா தெரியும் என உசுப்பேத்த, ஸ்டீவ் ரோஜர் தன் கலக்கல் ஆடையுடன் போரில் குதிக்கிறார்.

    இவருக்கு சண்டை போடவும் வரும் என கண்டுக் கொண்ட அமெரிக்க இராணுவம் இரகசிய பாசறைக்கு அனுப்புகிறது. அங்கே பணிபுரியும் பெண்கள் ஊசியினால் இவருக்கு வேறெந்த பாகங்கள் பெரிதாகி இருக்கின்றன என்பதை அறிய ஆர்வமுடன் இருக்கின்றார்கள். அதில் ஆர்வமில்லாமல் இருக்கும் பெகி கார்ட்டர் என்ற பெண்ணுடன் சினேகம் கொள்கிறார் ஸ்டீவ் ரோஜர்ஸ்.

    வில்லனின் இடத்திற்கு போய் தீவிர சண்டையிடுகையில், வில்லனால் நியூயார்க் நகரத்தினை அழிக்க தானியங்கி விமானம் ஏவப்படுகிறது. அதில் தொற்றிக் கொள்ளும் காப்டன் அமெரிக்கா அதை இலக்கை நோக்கி போகாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்கிறார். அந்தோ பரிதாபம், இவருக்கு போட்ட ஊசி அதற்கான அறிவை இவருக்கு தரவில்லை. மேலும், இவர் தரைப்படையில் இருப்பவர். ஆகாய விமானத்தை ஒட்ட முயற்சிப்பது எப்படி முடியும். இவர் விமானத்தை கடலுக்கடியில் மூழ்கடித்து விடுகிறார்.

    பல்வேறு பத்தாண்டுகளுக்கு பிறகு ஆழ்கடலில் ஆய்வு நடத்தும் ஒரு நீர்மூழ்கி இவர் பனிப்பாறையில் துயில் கொண்டிருப்பதை கண்டறிகிறது. பாவிப்பய, இப்படியா ஒரு மனுஷன் தூங்குவான் என வியப்புடன் இரசிகர்கள் திரையரங்கை விட்டு செல்வதுடன் முதல் பாகம் முடிகிறது.

    தொடர்ந்து அவென்ஜ்ர்ஸ் என்ற திரைப்படத்தில் காப்டன் அமெரிக்காவின் வாழ்க்கை மீண்டும் தொடரப்படுகிறது.

    துயிலில் இருந்து மீண்ட காப்டனுக்கு ஷில்ட் என்ற அமைப்பின் இயக்குநர் ப்யூரி என்பவரின் அறிமுகம் கிட்டுகிறது. ஆண்டுகள் பல ஆயினும், இவர் மெருகு குலையாமல் இருப்பதை பார்த்து வியக்கிறார். காப்டன் அமெரிக்கா தனக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதியம் பாக்கி இருப்பதாகவும், அது கிடைக்க வாய்ப்புள்ளதா என கேட்க, ப்யூரி கடுப்பாகி விடுகிறார். இதனால் இவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே மற்ற அவென்ஜர்களுக்கும் காப்டனுக்கும் உரசல்கள் ஏற்படுகின்றன.

     புதிய வில்லன் வேறு கிரகத்திலிருந்து விலங்குகளை பூமிக்கு வரவழைக்கிறான். (இது எப்படி என விரிவாக தெரிந்துக் கொள்ள இயக்குநர் ராம நாராயணன் இயக்கிய ஆடிவெள்ளி என்ற திரைப்படத்தின் உச்சக் கட்ட காட்சியை பார்க்கவும்.) கடும் போராட்டத்திற்கு பிறகு அவன்ஜர்கள் வில்லனை  வெற்றிக் கொண்டு, உணவகம் சென்று சாப்பிடுகிறார்கள்.  காப்டன் அமெரிக்கா பில்லை கொடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்று இந்த பதிவினை படிக்கும் வாசகர்கள் அறிவார்கள்.

    கடைசிக் காட்சியில், ஸ்டீவ் ரோஜர்ஸ் தன்னந்தனியாக மோட்டார் வாகனத்தில் கடுப்புடன் கிளம்பும்போது, அவருக்கு ஓய்வூதியம் இன்னமும் அமெரிக்க அரசால் சரிவர வழங்கப்படவில்லை என தெரிகிறது.

    இப்பதிவை படித்த பிறகு, இன்று வெளியாகும் காப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர் என்ற திரைப்படத்தினை பார்க்கும்போது உங்களால் சிறப்பாக இரசிக்க முடியும். இத்திரைப்படத்தில் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அது தொடர்பான பதிவினை விரைவில் வெளியிடுகிறேன்.

April 4, 2014 at 5:30 pm 3 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
April 2014
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930