Posts filed under ‘Fundamental Analysis’
Fundamental Analysis #Capital : What is Q.I.B?
முதலில் நான் மறந்து போய்விடுவதற்குள் Q.I.B. என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன். Qualified Institutional Buyer என்பது தான் அர்த்தம்.
நிப்டியில் இருக்கும் யுனிடெக் குழுமம் Q.I.Bக்கு சில இலட்சம் பங்குகளை விற்றது என வணிகசெய்தித்தாட்களில் படித்திருப்போம். இதனால் அப்பங்கின் விலை ஏறுமா? அல்லது இறங்குமா? இது போன்ற கேள்விகளுக்கு பதில் காண்பதற்கு முன்னால் Q.I.B என்றால் என்ன என்பதை சற்று விளக்கமாக பார்ப்போம். இனிவரப்போகும் காலங்களில் இவர்களின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதால் இவர்களை பற்றி அடிப்படையாக தெரிந்துக் கொள்ளளலாம். மிக அடிப்படையாகவே விளக்க முயற்சிக்கிறேன். தெரிந்தவர்கள் விலகிக் கொள்ளலாம்.
ஒரு எளிய உதாரணத்தின் மூலமாக புரிய வைக்க முயற்சி செய்கிறேன்.
நீங்கள் கல்லுாரியில் படிக்கும் ஒரு கட்டழகு வாலிபர் (குழுமம்) என நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு புதிய தெலுங்கு படம் பக்கத்தில் உள்ள மல்ட்டிப்ளக்ஸில் வந்திருக்கிறது. நீங்கள் படித்துக் கொண்டிருப்பதால் உங்களிடம் ரொக்கம் இருக்காது (வேலைவெட்டி எதுமில்லாமல் இருப்பதால்). நீங்கள் அப்படத்தை பார்க்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள் (குழுமத்தின் ஆரம்ப கட்ட முயற்சிகள்).
உங்கள் பெற்றோர்களிடம் பணம் கேட்கின்றீர்கள். உடனே கொடுத்து விடுவார்களா? அவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டுமல்லவா? அந்த தெலுங்கு திரைப்படம் (தலைப்பு : ” நீ வான்னு சொன்னா நாந் வரமாட்டேன்னா சொல்லப்போறன்” என்கிற மாதிரி இருக்கும்) உங்களின் மேற்கல்வி தொடர்பாக எவ்வாறு உபயோகமாக இருக்கும் என்பதை விளக்கி சொல்லி, பணமும் பெற்று விடுகிறீர்கள் (இதுதான் ஐபிஓ).
உங்களை பார்த்து ரொம்ப நாட்களாக ஒரு மாதிரி சிரித்துக் கொண்டிருக்கும் உங்கள் காலேஜில் படிக்கும் ஒரு பெண் தீடிரென உங்கள் அருகில் வந்து, படபடவென கண்களை சிமிட்டிக் கொண்டே தானும் அப்படத்தை பார்க்க விரும்புவதாகவும் கூட்டிட்டுப்போ என்கிற ரீதியில் உங்களிடம் சொல்கிறாள். (புதிய சந்தர்ப்பங்கள் வருங்காலத்தில் இலாபத்தினை அள்ளித் தரக்கூடிய சந்தர்ப்பங்கள்)
உங்களிடம் இருக்கும் பணம் போதாது (மூலதனம்) என்ற நிலையில் இந்த நல்ல சந்தர்ப்பதை நழுவவிடக் கூடாது என முடிவு செய்து மேற்க்கொண்டு கொஞ்சம் பணம் (கூடுதல் மூலதனம்) திரட்டும் முயற்சியில் இறங்கி விடுகிறீர்கள்.
உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் :
1) பெற்றோர்களிடமே மீண்டும் பணம் கேட்பது (ரைட்ஸ் இஷ்யூ).
இதில் சில பாதகங்கள் உள்ளன. நீங்கள் கடந்த செமஸ்டரில் நல்ல மதிப்பெண்கள் (காளைச் சந்தை) எடுத்திருந்தீர்களானால் தைரியமாக கேட்கலாம். உங்களை பற்றிய சில சரியான வதந்திகள் (குழுமத்தை பற்றிய வதந்திகள்) ‘எதிர்த்த வீட்டு கார்த்தியோட சேந்துக்கிட்டு தெரு முனையில சிகரெட் பிடிக்கிறியாமே?’ ஏகப்பட்ட கேள்விளுக்கு (செபி கேட்கும்) பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
2) உங்கள் கைக்கடிக்காரத்தினை அடகு வைத்தல் அல்லது விற்றல் (நிறுவனர் பங்குகளை அடகு வைத்தல், வாரண்ட் வெளியிடுவது)
3) உங்கள் நண்பனின் கைக்கடிக்காரத்தினை அடகு வைத்தல் (சில குழுமங்கள் இது மாதிரியும் செய்திருக்கின்றன அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்)
4) வேறு ஒரு பசையான பார்ட்டிக்கிட்ட நிலைமையை சொல்லி பதிலுக்கு வேற ஏதாவது பண்றேன் (உன் ஆளுக்கு லவ் லட்டரு நான் கொடுக்குறேன், பரிட்சையில் பிட்டு தயாரித்து தரேன் இது போன்ற உதவிகள்) என வாக்குறுதி கொடுத்து பணம் வாங்குதல். இந்த பசையான பார்ட்டித்தாங்க Q.I.B.
இந்த உதாரணம் மேலும் மோசமான கட்டத்திற்கு போகும்முன் நிறுத்தி விட்டு, இவர்களால் என்ன இலாபம் என பார்க்கலாம்.
பேருக்கேற்றபோல் ஆள் பசையான பார்ட்டி என்பதால் ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையிருக்காது. பார்ட்டியும் இது போன்ற விஷயத்தில் கெட்டிக்கார ஆளுங்கறதால டக்குன்னு விஷயத்தை புரிஞ்சிக்கும். அழகான பொண்ணே வந்து சினிமாவுக்கு கூப்பிடுதுன்னா சும்மாவா? நல்ல சந்தர்ப்பம் அல்லவா?
பெற்றோர்களுக்கும் (முதலீட்டாளர்களுக்கும்) நிறைய விளக்க வேண்டியதில்லை. குறைந்த கேள்விகள் (செபியின் விதிகள் அவ்வளவாக கடுமையாக இந்த விஷயத்தில் இருப்பதில்லை).
கடுமையான விதிகள் இதற்கு வேண்டுமா? எவ்வாறு கூடுதல் முதலீட்டினை திரட்டுக்கிறார்கள்? இதனால் குழுமத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? பங்கு சந்தையில் உடன் ரீயாக்ஷன் எவ்வாறு இருக்கும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அடுத்த பகுதியில் இன்னும் விளக்கமாக பார்க்கலாம்.
#6 Fundamental Analysis-Capital II
குழுமம் ஒவ்வொரு நிதியாண்டு (Financial Year) முடிவிலும் அதன் பங்குதாரர்களுக்கு ஆண்டு கணக்கறிக்கையை (Balance Sheet & Profit & Loss Account) கொடுக்கவேண்டும். நிதியாண்டு முடிவில் பெற்ற இலாபத்தில் எவ்வளவு ஈவுத்தொகையைாக (Dividend) வழங்க போகிறது, மீதியுள்ள இலாபத்தை என்ன செய்ய போகின்றது என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இலாபம் பெற்றவுடனேயே ஈவுத்தொகை வழங்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. பொதுவாக முதல் ஐந்தாண்டுகளில் பெறும் இலாபத்தை ( இலாபத்தில் மிகச் சிறிய சதவீதம் மட்டுமே ஈவுத் தொகையாக வழங்கப்படும்) மீதியை குழும ரிசர்வ் தொகையில் (Reserves & Surplus) சேர்த்துவிடுவார்கள், குழும விரிவாக்கத்திற்கு உதவும் என்பதால். இந்த நிலையும் தற்போது மாறி வருகிறது. முதல் ஆண்டிலேயே ஈவுத் தொகை வழங்க ஆரம்பித்த குழுமம் என்ற விளம்பரத்திற்காக சில குழுமங்கள் ஈவுத் தொகை முதல் இலாபத்திலேயே வழங்க ஆரம்பித்து விடுகின்றன.
ஒரு குழுமம் குறிப்பிட்ட அளவு முலதனத்துடன் தொடங்கி, விற்பனையை பெருக்கி நன்றாக வளர்ந்து வருகின்றது என்னும்போது, அக்குழுமத்தின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? தங்களுடைய விற்பனையை விரிவுபடுத்த, புதிய எல்லைகளை தொட, புதிய விற்பனை மையங்களுக்கு செல்ல வேண்டுமென தோன்றுவது இயற்கைதானே! குழுமம் ஆரம்பித்த சில வருடங்களிலே விரிவாக்கம் என்னும்போது அக்குழுமத்திற்கு பெரிய அளவில் ரிசர்வ் தொகை ஏதும் இருக்காது. அச்சமயத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட முலதனம் பற்றாது என்பதால், தேவைப்படும் முலதனத்திற்கு கீழ்க்கானும் வழிகள் முலம் மீண்டும் முலதனம் திரட்ட வகை செய்யும்.
1) முலதனம் விரிவாக்கம் (உரிமை பங்குகள் (Right Issue))
10 கோடி ருபாய் முலதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு குழுமம் புதிய தொழிற்சாலை ஆரம்பிக்க/புதிய துறையில் இறங்க/மற்றொரு குழுமத்தை கையகப்படுத்தும் பொருட்டு கூடுதல் முலதனம் தேவைப்படின், புதியதாக தேவைப்படும் முலதனத்தையும் பங்குகளாக பிரித்து அதனை அக்குழும பங்குதாரர்களுக்கு ஒரு குறிபிட்ட விகிதத்தில் வழங்கும் முயற்சியே Right Issue எனப்படும். இதற்கு அக்குழுமம் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் செபி போன்ற அமைப்புகளிடம் அனுமதி பெற்றாக வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட தேதியை தேர்ந்தெடுத்து அத்தேதியில் யாரிடம் அக்குழும பங்குகள் இருக்கின்றதோ, அவர்கள் இந்த உரிமை பங்குகளை வாங்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். உரிமை பங்குகள் வெளியீடும்போது சந்தை விலையை விட குறைவான விலை வைத்தே வெளியிடுவதால், உரிமை பங்குகளை வாங்குவதற்காக முதலீட்டாளர்கள் அக்குழும பங்குகளை விலையேற வைத்து விடுவார்கள். அக்குழுமமும் ஆரம்பத்தில் வெளியிட்ட பிரிமியம் விலையைவிட அதிகமாகவே வைத்து வெளியிடும். அந்த குறிப்பிட்ட தேதி முடிந்தவுடன் அக்குழும பங்குகளானது விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும், அந்த காலாண்டு முடிவுகள் சரியாக அமையாவிட்டால் மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில், இலாபத்தை பங்கு போட நிறைய பங்காளிகள் வந்துவிட்டனர் அல்லவா! அந்த தேதியில் பங்குகள் வைத்திருப்பவர்கள் வீட்டு முகவரிக்கு ஒரு மாதம் அல்லது இரு மாதங்களுக்குள் உரிமை பங்குகள் கோரும் விண்ணப்பம் தபாலில் அனுப்பப்படும். வாங்க வேண்டுமென்ற கட்டாயமில்லாவிட்டாலும், சந்தை விலையை விட குறைவாக கிடைக்கும் பொழுது வாங்குவது கண்டிப்பாக இலாபம் தான் (நல்ல குழுமம் என்றால் மட்டுமே).
இங்கே இன்னொரு விஷயம் குறிப்பிட விரும்புகின்றேன். எனக்கு தெரிந்த நிறைய முதலீட்டாளர்கள் இம்மாதிரி உரிமை பங்குகள் வாங்க வாய்ப்பிருந்தும் வாங்காமல் விட்டுவிட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், உரிமை பங்குகள் கோரும் விண்ணப்பமானது மிக சிக்கலான மொழியில் இருந்ததது என்றும், அதனை Fill up செய்ய தங்களுக்கு தெரியவில்லை என்றும், அதனால் போனால் போகின்றது என்று விட்டுவிட்டதாகவும் கூறியிருக்கின்றனர். இது பற்றி உங்கள் யாருக்காவது ஏதேனும் அனுபவங்கள் இருந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, டாடா மோட்டார் (Tata Motors) குழுமம் உரிமை பங்கு வெளியீடாக ஆறு பங்குக்கு ஒரு பங்கு (1:6) என்ற விகிதத்தில் ருபாய் 295/- வீதம் வெளியிட்டது. டாடா மோட்டார் குழும பங்குகளை 09.09.2008 அன்று வைத்திருப்பவர்கள் அனைவரும் இதில் பலன் பெறலாம்.
#6 Fundamental Analysis – The Capital I
ஒரு குழுமத்தின் கணக்கு அறிக்கையினை (Accounting Statement) பார்க்கும்பொழுது அவற்றின் அடிப்படையாக இருப்பது குழுமத்தின் முலதனம் (Capital) எனலாம். ஒரு குழுமத்தின் சந்தை விலையானது அக்குழும முலதனத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இதை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டோமென்றால், இத்தொடரின் முதல் பகுதியில் நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலும் கிடைக்கும். ரு.2/- முக மதிப்பு கொண்ட எல் & டி பங்கின் சந்தைவிலை ரு.2600/- (01-09-2008 அன்றைய மதிப்பில்).
ஒரு குழுமம் ஆரம்பிக்கப்படும்பொழுது, அதற்கு எவ்வளவு முலதனம் தேவைப்படும் என்பதை அதன் நிறுவனர்கள் முடிவு செய்கின்றார்கள். அதனை முடிவு செய்தபின்னர், அத்தொகையினை ரு.10/- என்ற முக மதிப்பில் பங்குகளாக பிரிக்க முடிவு செய்கின்றனர் (பொதுவாக துவங்கப்படும் குழுமங்களின் முக மதிப்பு ரு.10/- என்ற அளவிலேயே பிரிக்கப்படும். ஆனால் சில குழுமங்கள் ரு.100/- என்பது போல மதிப்புகளிலும் பிரிக்கப்படும். சந்தையில் Liquidity குறைவதால் கூடுமானவரை அனைத்து குழுமங்களும் ரு.10/- என்ற முக மதிப்பு அளவிலேயே பிரித்து விடுகின்றன. சந்தையில் சில பழைய குழுமங்கள் ரு.100/- முக மதிப்பிலேயே இன்னும் விற்பனையாகின்றன. உதாரணத்திற்கு ஜண்டு பார்மா (Zandu Pharma) ,ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் (State Bank of Travancore) முதலியன) அவ்வாறு பிரிக்கப்படும் பங்குகளின் பெருன்பான்மையை நிறுவனர்களே தங்கள் பெயரில் வைத்துக் கொள்வார்கள். இதில் பெருன்பான்மை என்பது 51% சதவீதம் என்றாலும், சில குழுமங்களில் இந்த சதவீதம் 30-48% என்ற அளவிலேயே இருக்கும். மீத சதவீதத்தில் பெருன்பான்மை வரக்கூடிய சதவீதத்திற்கான பங்குகளை ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் ஒரு மறைமுக ஒப்பந்தத்துடன் விற்று விடுவார்கள். இப்பங்குகளை வாங்கும் நிதி நிறுவனங்கள் விற்க நேரிடும் பட்சத்தில் முதலில் நிறுவனர்களை கலந்தாலோசித்துவிட்டு, அவர்கள் வாங்க இயலாவிட்டால் மட்டுமே சந்தையில் விற்க வேண்டும். கடந்த சிலமாதங்களுக்கு முன் ரிலையன்ஸ் கம்யுனிகேஷன் (Reliance Communications) அதிபர் திரு அனில் அம்பானி தென்னாப்பிரிக்க தொலைதொடர்பு நிறுவனமான எம்.டி.என் (M.T.N.) -க்கு பங்குகளை விற்க நேரிட்டபோது, அவருடைய முத்த சகோதரர் இது குறித்து நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியது நினைவிருக்கலாம்.
பொதுவாக அனைத்து குழுமங்களின் நிறுவனர்களும் அக்குழுமத்தின் மீது தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காமலிருக்கும் பொருட்டு, அக்குழுமத்தின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பார்கள். அவர்கள் காளைகள் சந்தையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் விற்றுவிட்டு, கரடிகள் சந்தையில் மீண்டும் அவற்றை வாங்கி விடுவார்கள். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால், முதல் ஒரு கோடி சம்பாதிப்பது மட்டுமே கஷ்டம், அடுத்த கோடிகள் வெகு எளிதில் வந்துவிடும். மேலும் கரடிகள் சந்தையிலும், அவர்கள் அப்பங்கினை சந்தையில் வாங்கும்போது அப்பங்குகள் ஒரு குறிப்பிட்ட சதம் மேலேறே வாய்ப்புகள் உண்டு. நிறுவனர்கள் இப்பங்கினை மீண்டும் வாங்க போகிறார் என்ற வதந்தியில் கூட சில பங்குகள் வெகு வேகமாக மேலேறுவதுண்டு. அச்சமயத்தில் தீர விசாரிக்காமல் முதலீடு செய்யக்கூடாது. நிறுவனர்கள் மீள வாங்குவதை தள்ளி போடும்பட்சத்தில், நஷ்டம் நமக்குதான். அதே சமயத்தில் நிறுவனர்கள் பங்குகளை மீள வாங்கும்போது செபி (SEBI) க்கு கண்டிப்பாக தகவல் கொடுக்க வேண்டும்.
சில குழுமங்கள் மட்டுமே நிறுவனர் பெருன்பான்மை பங்கு இல்லாமல் சந்தையில் விற்பனையாகின்றது. அக்குழுமங்களின் பெருன்பான்மையான பங்குகளை நாம் வாங்கும் பட்சத்தில் நாம் அக்குழுமத்தின் நிறுவனராகி விடுகின்றோம். ஒரு குழுமத்தின் பங்குகளில் 5% சதவீதத்திற்கு மேல் வாங்கும்பட்சத்தில் நாம் செபி (SEBI)-க்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அத்தகவலானது அன்றைய தினம் மாலைக்குள் செய்தி பலகையில் (Bulletin Board) வெளிவந்துவிடும். நிறுவனர் பெருன்பான்மை இல்லாத பங்குகளில் குறிப்பிடத்தக்கவை இன்போஸீஸ் டெக்னாலஜீஸ் (Infosys Technologies) . உங்கள் கையில் 102,000 கோடிகள் இருந்தால் குழும பங்குகள் மொத்தத்தையும் வாங்கிவிடலாம். ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ருபாய்கள் குறைந்தால் சொல்லுங்கள். அதை நான் போட்டு நாமிருவரும் பார்ட்னர்ஸ் ஆகிவிடலாம். அக்குழுமத்தில் 40% சதவீதம் வாங்கக் கூட ரு.48,000 கோடிகள் தேவைப்படும். இதுபோன்ற குழுமங்களை பெரிய குழுமங்கள் சந்தையில் வாங்க முற்படும்போது இப்பங்குகளின் விலை ஏறி, நம்மை போன்ற சிறிய முதலீட்டாளர்களை சந்தோஷப்படுத்தும். ஆனால், இதிலேயும் சில உள்குத்து வேலைகள் உண்டு. அவைகளை இத்தொடரின் பிற்பகுதியில் பார்ப்போம்.
குழும முலதனம் என்ற தலைப்பில் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றபடியால், இதை ஒன்று, இரண்டு, முன்று என வரிசைப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த பகுதியினை வாரக் கடைசியில் பதிவேற்றம் செய்கின்றேன்.
விநாயகரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முக்கியமானது பொறுமை. விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடுவோம்!
Recent Comments