Archive for July, 2014
கல்வெட்டு – வரலாற்று குறுங்கதை
குஸ்தியாப்பட்டினத்து பேரரசர் கோயாவியின் அரண்மனை. பேரமைச்சர் பதட்டத்துடன் இருந்தார்.
சோழ நாட்டை தாக்க மன்னர் பிறப்பித்த ஆணையின் பேரில் கோயாவியின் பெரும் படை சென்றிருந்தது. போரின் முடிவு என்ன ஆகியிருக்குமோ என்ற பதட்டத்தில் அமைச்சர் இருந்தார்.
ஒற்றர் படை தலைவன் தேர்க்கோடகன் உள்ளே வந்து அமைச்சரை வணங்கினான்.
என்ன ஆயிற்று? ஒரே வரியில் சொல்.
அமைச்சரே, பெருந்தோல்வி.
என்னடா சொல்கிறாய்
நமது படையிலிருந்து பாதிப்பேர் பிரிந்து காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவினை பார்ப்பதற்காக சென்று விட்டனர். மீதிப் படைகளுடன் சோழ சைன்யத்துடன் போர் தொடுத்தோம். கால்நாழிகை பொழுது கூட போர் நீடிக்க வில்லை.
அங்குள்ள நமது ஒற்றன் சோழ நாடு குஸ்தியாப்பட்டினம் மீது தனது சைன்யத்தை ஏவியிருக்கிறது என தகவல் அனுப்பியிருக்கிறான். படைபலத்தினை இந்த ஒலையில் குறித்துக் கொடுத்திருக்கிறான்.
அப்போது சிரித்த முகத்துடன் வந்த பேரரசர் கோயாவி,
என்ன அமைச்சரே, சோழ நாட்டின் பேரரசனாக என்றைக்கு முடி சூடிக் கொள்ளலாம் என்று நாள் பார்த்து விட்டீர்களா?
மன்னர்பிரான் மோசமான செய்திகளை கேட்டால் எவ்வாறு சொன்னவனை தண்டிப்பார் என அறிந்த அமைச்சர், உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு,
மன்னா, சோழ நாடு நம் மீது சைன்யத்தினை ஏவியிருக்கிறது என ஒற்றரிடமிருந்து ஒலை வந்திருக்கிறது.
நமது எல்லை பாதுகாப்பு படையினரை தயார் படுத்துங்கள். அதற்கிடையில் நமது பெரும்படை புரிந்த சாகசங்களை விளக்கமாக சொல்லுங்கள்.
அமைச்சர் ஒலையினை பிரித்து படிக்க ஆரம்பித்தார்,
டேய், கோடகா, பூஜ்யங்களை இப்படி கவனமில்லாமல் ஒலையிலே இரைத்திருக்கிறான்.
அது சரியான எண்ணிக்கைதான், அமைச்சரே.
அதற்குள் அரசர் கோயாவி,
அமைச்சரே, அடுத்த முழுநிலவிற்குள் பட்டாபிஷேகத்தை நடத்தி விடலாமா?
தளர்ந்த குரலில் அமைச்சர்
மன்னா, சோழ படை 110000 எண்ணிக்கையில் நம் நாட்டை நோக்கி வருகிறது.
நிறைய பூஜ்யங்களை சேர்த்திருக்கிறாய். அதில் ஏதேனும் தவறுக்கு இடமிருக்குமா?
மன்னா, தெறித்து ஒடினால் மட்டுமே நாம் பிழைக்க முடியும், உடனே கிளம்புவோம்.
பெருமூச்செறிந்த கோயாவி,
சோழ நரிகள் இவ்வாறு குயுக்தியில் இறங்குவார்கள் என நான் எதிர்பார்க்க வில்லை. அந்த புரத்தில் உள்ள அரசிகளை உடன் பயணத்திற்கு தயார்படுத்துங்கள்.
ஒற்றன் தேர்க்கோடகன்,
மன்னா, அவர்கள் நாட்டின் எல்லையை தாண்டி நாழிகைகள் பல ஆகின்றன.
அமைச்சர் உண்மையான வருத்தத்துடன்,
நாம் தோற்று விட்டோம், மன்னா,
மெல்லிய புன்னகையுடன் அவரை நோக்கி திரும்பிய மன்னர் கோயாவி,
அமைச்சரே, உடன் நமது ஆஸ்தான சிற்பியை இங்கே வரச் சொல்லுங்கள்.
————————————————————————————————-
கி.பி. 2014-ம் வருடம், சென்னைப் பல்கலைகழகத்தில், வரலாற்று பேராசிரியர் ஷங்கரின் வகுப்பறை.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் அருகே கட்டுமான பணி நடைபெற்ற ஒரு களத்தில் இந்த கல்வெட்டு கிடைக்கப் பெற்றது. இதன்படி, சோழ பேரரசில் ஒரு பெரும் வீரனது சரித்திரம் விளக்கப்பட்டுள்ளது.
மற்ற எந்த சோழர் கால கல்வெட்டுகளிலும் இவனது பெயர் காணப்படவில்லை. சோழப் பெரும் சைன்யத்தை சிறு படை கொண்டு முறியடித்தான் என்றும், சோழ தளபதி பெருவளத்தானை சிறை பிடித்து தனது அரண்மனை பெண்டிருக்கு மேலாடை தைக்கும் பணியில் ஈடுபடுத்தினான் என இந்த பெரும் வீரனின் சாகசங்களை இக்கல்வெட்டு புகழ்ந்து பாடுகிறது.
புத்தி – பெருங்கதை
என் அப்பா உயிரையே வைத்திருந்த ரேடியோவை உடைத்தபோதுதான் நான் எப்பேர்ப்பட்ட புத்திசாலி என எனக்கு தெரியவந்தது.
. புத்திசாலி தனத்தை எண்களால் மதிப்பிடுகையில், என்னுடையது சராசரியை விட 70 அதிகமாகவே இருந்தது. சுருக்கமாக சொன்னால், நான் அதிபுத்திசாலி. தண்ணீர் கீழே சிந்தினாலே என்னை வெளுத்துக் கட்டும் என் அப்பா, அவரின் ரேடியோ சிதறினால் என்ன செய்வார்? என் எஞ்சிய வாழ்நாளின் கணங்களை எண்ணிக் கொண்டே அந்த ரேடியோவின் பாகங்களை கோர்த்தேன். ரேடியோவில் வழக்கமாக எழும் அலை சத்தம் இல்லாமல் ரேடியோ பாடுகையில், அவர் மாற்றத்தை உணரவில்லை. நான் உணர்ந்தேன்.
நான் பள்ளியில் படித்த பாடத்திட்டங்கள் வெகு மட்டமானவை. நீண்ட நாட்களாக அவை மாறவேயில்லை. என் ஆசிரியர்களும் அதையே படித்திருந்தமையால், மதிப்பெண்களை பொறுத்தமட்டில் சுமாரான மாணவன் நான்.
அலைஅலையாய் பொறியியலில் மாணவர்கள் சேர்ந்த காலத்தில், நானும் மெக்கானிக்கல் பிரிவினை தேர்ந்தெடுத்து சேர்ந்தேன். நடை, உடை,பேச்சு, பாவனைகளை வைத்து கணித்தால், என்னை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான ஆள் இல்லை. இயந்திரங்களை உருவாக்க, ஒத்துழைக்க செய்வதில் எனக்கு நிகர் அந்த மாநிலத்திலேயே யாரும் இல்லை. இயந்திரங்கள் என்னை புரிந்துக் கொண்டன. என் பேராசிரியர்கள் அதிக மதிப்பெண்கள் எனக்கு கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர்.
இறுதியாண்டு படிக்கையில் வேலைக்கான நேர்க்காணல்களில், ஆரம்பக் கட்டங்களை நான் தாண்டவே இல்லை. ஒரு பன்னாட்டு பொறியியல் குழுமம் சார்பாக நடந்த நேர்க்காணலில் கலந்துக் கொண்டேன். பொறியியல் வட்டாரங்களில் எத்தகைய பெயரையும் அந்நிறுவனம் பெற்றிருக்கவில்லை. நேர்க்காணலுக்கு கொடுக்கப்பட்ட பெயர்களும் குறைவுதான். சென்றவர்களும் சில நிமிடங்களுக்குள் திரும்பினர்.
என் முறை வந்தது. உள்ளே ஒரு வெள்ளையர் வியர்வை ஊறிய நீலச் சட்டையுடன் சலிப்பான பார்வையுடன் அமர்ந்திருந்தார். அமரச் சொன்னார். என் மதிப்பெண் சான்றுகளை பார்த்த அவர்,
மதிப்பெண்கள் அதிகம் நீ பெற்றிருக்கவில்லை. இல்லையா?
இந்த பாடத் திட்டத்தினை படித்த வரை நான் பெற்றது இதுவே அதிகம் என நினைக்கிறேன்.
அவர் உதட்டில் மெல்லிய புன்னகை வந்தது.
ஆக, நீ வெளிநாட்டில்,உதாரணமாக, கால்டெக் போன்ற பல்கலைக் கழகத்தில் படித்திருந்தால் நல்ல மதிப்பெண்களை பெற்றிருப்பாய், இல்லையா?
அங்குமே இதே மதிப்பெண்கள்தான் பெற்றிருப்பேன்.
ஆர்வமூட்டுகிறாய். இரண்டு பாடத்திட்டங்களும் ஒன்று என்கிறாயா?
இரண்டுமே தவறான அணுகுமுறை என்கிறேன்.
எவ்வாறு?
இயந்திரம் என்றில்லை, எந்தப் பாடத்திட்டங்களிலும் உள் உணர்வை மையமாக வைத்து எழுதப்படுவதில்லை. மாணவனின் உள்உணர்வை வெளிக் கொண்டுவருவதில் எத்தகைய உத்வேகமும் பாட நிறுவனங்கள் காட்டுவதில்லை.
ஆனால், அமெரிக்காவில் ….
சிலர் அப்பாடத்திட்டங்களை மீறி தனித்துவம் நிறுவியவர்கள் என ஒத்துக் கொள்கிறேன். எஞ்சியவர்கள்?
இயந்திரங்களை பொறுத்த மட்டில்….
நிறைய மைல்கல்களை கடந்திருக்கிறீர்கள். உண்மைதான். ஆனால் தவறான பாதையில்
இப்போது அவர் கண்களில் தெரிந்தது வேறொன்று. தான் டியட்ஸர் என அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு எவ்வளவு நேரம் நேர்க்காணல் நடைபெற்றது என நினைவில்லை. இரு சக அறிவுகள் அளவளாவும்போது நேரம் பொருட்டே இல்லை.
நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
டியட்ஸரும் நானும் ஒருமிய மனநிலையில் இருக்கிறோம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.
புதிய தூரங்களை கடப்பதில் இருவரும் நேரேதிர் கொள்கைகளை கொண்டிருந்தோம் என்பது பிறகே எனக்கு புரிந்தது. வெகு தாமதமாக.
– தமிழில் நெடுங்கதை எழுத வேண்டுமென்ற ஆசையில் எழுத ஆரம்பித்த கிகில் கதை. இரவு நேரத்தில் படிக்காதீர்கள் என்ற எச்சரிக்கையுடன். இதன் அடுத்த பகுதிகளை கூடிய விரைவில் படிக்கலாம்.
Recent Comments