Archive for September, 2009
The Hobbit – மாய காவியம்
அழகான வீடு. உழைத்து பணம் சேர்க்க தேவையில்லாத அளவிற்கு செல்வம். வாழ்க்கையை கொண்டாடும் மக்கள். மழைக்காலத்தில் கணப்பின் அருகே அமர்ந்து மதுவை அருந்திக் கொண்டே உறவினர்களுடன் பழங்கதை பேசுதல். சுகமான வாழ்க்கை. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்? இவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் பில்போ பேகின்ஸ் இல்லத்திற்கு ஒரு மழை இரவில் ஒரு பயணி வருகிறார். சாகசத்திற்கு தயாரா என்கிறார். சுக வாழ்க்கை வாழ்கின்ற பில்போ பேகின்ஸ் அதற்கு சம்மதிக்க த ஹாபிட் (The Hobbit) என்னும் மாய காவியம் ஆரம்பமாகிறது.

பயணத்தின் ஆரம்பம்
சூப்பர் ஹீரோக்களையும், மாய உலகங்களையும் எடுத்துக் கொண்டால் ஒரு ஒற்றுமை தென்படும். அவற்றில் பெரும்பாலனவை உலகப் போரின் இறுதியிலோ, பங்கு சந்தை வீழ்ச்சியிலோ உருவாக்கப்பட்டவை. மிகுந்த சிரமமான பொருளாதார சூழலின் நடுவில் இருக்கும்போது இப்படிப்பட்ட கற்பனை உலகங்கள் நமக்கு தேவையாக இருக்கின்றன. அவ்வாறாக நிறைய உலகங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, பேட் மேன் வாழும் கோதம் சிட்டி, ஹாரி பாட்டர் படித்த ஹாக்வர்ட்ஸ். இது போன்ற மாய உலகங்களில் மிடில் எர்த் என ஜே ஆர் ஆர் டோல்கியன் உருவாக்கிய உலகம் உலகெங்கும் இன்னும் நிலைத்திருக்கிறது.

புத்தகத்தின் அட்டைப் படம்
லார்ட் ஆப் த ரிங்ஸ் என்னும் நாவலின் முன்னோடியே த ஹாபிட். இந்த நாவலும் உலகப் போர் நிகழ்வுகளுக்கிடையில் எழுதப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது. இரண்டாவது வெளிவந்த லார்ட் ஆப் த ரிங் நாவலினால் ஹாபிட் அதற்குரிய முக்கியத்துவம் பெறாமலேயே போய்விட்டது. ஆனாலும் என் மனதை கவர்ந்த கதைகளில் இதுவும் ஒன்று. டோல்கியனின் மிகச் சிறந்த புதினமே இதுதான்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொண்டிருக்கும் பில்போ பேகின்ஸ் அந்த வாழ்க்கையை விட்டு சிரமங்கள் நிறைந்த ஒரு சாகச வாழ்க்கையை நோக்கி போகும் கதையே இது.

மர்மங்களை அடக்கியுள்ள ஒரு காட்டின் நுழைவு பாதை
சுக வாழ்க்கை கசந்து போய் ஒருவித விரக்தியில் இருக்கும் பில்போ பேகின்ஸ் நீண்ட பயணத்திற்கு கூப்பிடும் கண்டல்பை (Gandalf the grey) நம்பி இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையை உதறி சாகசத்திற்கு தயாராகிறார். தனித்திருக்கும் மலை (Lonely Mountain ) என்ற பகுதியில் ஒரு டிராகனால் பாதுகாக்கப்படும் புதையலை தேடி, குள்ளர்கள் இனத்தை சேர்ந்தவர்களுடன், கன்டல்ப் என்ற மந்திரவாதியுடன் துணைக் கொண்டு பில்போ பேகின்ஸ் ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகின்றார். போகும் வழியில் மற்ற இனத்தவர்களால் ஏற்படும் அபாயங்கள், நீண்ட, அபாயகரமான பயணப் பாதை, வஞ்சக நண்பர்கள், பல விந்தை மிருகங்களால் ஏற்படும் அபாயங்கள் என பல்வேறு இடையூறுகளை தாண்டி இவர்களுடன் பயணிக்கும் பில்போ, கோலம் என்ற விசித்திர ஜீவனிடமிருந்த தந்திரமாக மாயசக்தி கொண்ட மோதிரத்தை அபகரிக்கின்றார். அந்த மோதிரத்தின் கதை லார்ட் ஆப் த ரிங்ஸ் புதினத்தில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கும்.

வழியில் நேரும் அபாயங்கள்
இடையில் கண்டல்ப் காணாமல் போய்விடுகின்றார். எல்லாப் பயணங்களிலும் ஒருமுறையாவது காணாமல் போய்விடுகிறார் கண்டல்ப். அவரின் துணையில்லாமலே பயணக் குழுவினர் பல்வேறு சிக்கல்களுக்கிடையே டிராகன் இருக்கும் மலைத் தொடரை அடைகின்றார்கள். டிராகனை தந்திரமாக ஏமாற்றி புதையலை இவர்கள் வசம் ஆக்கிக் கொள்கின்றார்கள். இப்போது டிராகனை விட மோசமான எதிரி ஒருவர் உருவாகிறார். பேராசை. டிராகன் வைத்திருக்கும் புதையல் பல்வேறு இனத்தவர் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி ஒரு பெரிய யுத்தம் அவர்களுக்கிடையே நடைபெறுகிறது.

புதையல் காக்கும் டிராகன்
இதற்கிடையில் பயணத்தில் இவர்கள் சந்தித்த எதிரி இனத்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து இவர்களை தாக்க தங்களது இராணுவத்தால் அம்மலையை முற்றுகை இடுகின்றார்கள். கண்டல்ப் தமிழக காவல்துறை போல கடைசி நேரத்தில் வந்து இவர்களை சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து எதிரியை தாக்கி யுத்தத்தில் வெற்றி பெறுகின்றார்கள். யுத்த வெற்றிக்கு பிறகு புதையல் பங்கு பிரிக்கப்படுகிறது. இந்த யுத்தம் பில்போ பேகின்ஸ் மனதில் ஒரு பெரிய சலனத்தை உருவாக்குகிறது. புதையலில் பெறவிருக்கும் பங்கினை மறுத்து விடுகிறார். எந்த சுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாரோ அந்த இடத்ற்கு போக மனம் இப்போது ஏங்குகிறது. பணக்காரராக தன்னுடைய வீட்டிற்கு திரும்புகிறார். இப்போது வீடே அவருக்கு சொர்க்கமாகின்றது.

அற்புதமான சாகசத்திற்கு பிறகு வாழ்க்கை அனுபவித்தல்
இந்த நாவலை எத்தனை தடவை படித்திருப்பேன் என்பதற்கு கணக்கு இல்லை. ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டி அதிலிருந்து படிப்பது என மாதத்திற்கு சில தடவையாவது இந்த புத்தகத்தை புரட்டி விடுகிறேன். ஒரு பயணம் ஒருவரை எவ்வாறு மாற்றுகின்றது என்பதை அழகாக விவரிக்கும் நாவல் இது. இந்த நாவல் வரிசைக்கென தனியாக ஒரு மொழியையே உருவாக்கினார் டோல்கியன். இவரின் தீவிர ரசிகர்களால் இம்மொழி ஈல்விஷ் என அழைக்கப்பட்டு இன்றும் உலகெங்கும் பேசப்படுகிறது. ஒரு மாயஜால புத்தகத்திற்கு முதன் முதலாக இலக்கிய அந்தஸ்தை வழங்கப்பட்டது இதற்குதான்.
இவரின் படைப்புகள் பல இருந்தாலும் படிக்க வேண்டிய வரிசை என்றால் முதலில் த ஹாபிட் பிறகு த லார்ட் ஆப் த ரிங்ஸ். அதற்கு பிறகே மற்றவைகள். இந்த புத்தகங்கள் வாயிலாக அவர் உருவாக்கிய மிடில் எர்த் என்ற உலகத்தில் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவர உங்களுக்கு மனசு வராது. தமிழில் இவரது படைப்புகள் இதுவரை மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை. இந்திய மொழிகளில் வேறு எதிலும் வந்தனவா என்றும் தெரியவில்லை.
பீட்டர் ஜாக்சனால் இயக்கப்பட்டு வெளிவந்த த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற வெற்றிப் படத் தொடர்களினால் இவரின் புத்தகங்கள் மேலும் பிரபலமடைய தொடங்கின. டோல்கியனின் தீவிர ரசிகர்களால் அப்படத் தொடர்களையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை விட இப்படைப்பின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும்?
Recent Comments