Posts filed under ‘Market Analysis’
பங்கு சந்தை 2010
சென்ற வருடத்து சராசரி ஹிட்டுகள் 120 என வருகின்றது. இது பெருமையாக இல்லாமல் மெல்லிய குற்ற மனப்பான்மையை எனக்கு உருவாக்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக பங்கு சந்தை குறித்து எதுவும் எழுதாத நிலையிலும், தொடர்ந்து இத்தளத்திற்கு வந்து புரிகின்றது போல் எழுதுகின்றேனா என நிறைய பேர் வந்து பார்த்திருக்கிறீர்கள்.
தினசரி சந்தை பற்றிய கருத்துக்களை இவ்வருடத்தின் முதல் சில மாதங்கள் தொடர்ந்து எழுதி வந்திருக்கின்றேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது சலிப்பு தட்டிவிட்டது. சந்தையின் டெக்னிகல் வரைபடங்களை கிட்ட வைத்து பார்க்கும்போது தூர தென்படுகின்ற மாற்றங்கள் புலப்படாமலே போய்விட்டன. உதாரணத்திற்கு, இந்திய-சீன வியாபார ஒப்பந்தங்கள். சீனாவை எப்போதும் எதிரி நாடாகவே நினைத்து வந்திருக்கிறோம். இராணுவ ரீதியிலும், வியாபார ரீதியிலும் கூட. இந்தி-சீனி பாய்-பாய் என ஏமாற்றப்பட்ட வரலாற்றையே நினைத்துக் கொண்டிராமல் இப்போது இந்தி-சீனி ஹாய்-ஹாய் என்ற மாற்றத்திற்கு வந்திருக்கிறோம்.
இதனால் என்ன பெரிய மாற்றம் வரும்? குறுகிய காலத்தில் எதுவும் பெருத்த அளவில் மாற்றம் இராது. உலகின் மிக வலுவான வாடிக்கையாளர் சந்தையை கொண்டுள்ள நாடுகள் இணைவது மேற்கத்திய பொருளாதாரத்திற்கு அவ்வளவாக பிடிக்காத போதிலும், இந்த மாற்றம் நீண்ட கால ரீதியில் மிகுந்த வலுவான பொருளாதார சுபிட்சத்திற்கு அடிகோலும் என்றே நினைக்க தோன்றுகிறது.
மற்றபடி, சந்தை மட்டுமே வாழ்க்கை என்றிராமல் பிடித்த சில விஷயங்களை பற்றியும் எழுதியிருக்கிறேன். இனி பங்கு சந்தை தொடர்பாக தினமும் எழுதாவிட்டாலும், சில முக்கிய நிகழ்ச்சிகளை பற்றி மீண்டும் எழுதலாம் என நினைக்கிறேன்.
முதலில் நமது பங்கு சந்தையை 2010-ல் நிர்ணயிக்கப் போகும் சில முக்கிய காரணிகளை பார்க்கலாம்.
நமது சந்தையும் கடந்த சில மாதங்களாக 400 புள்ளிகளில் சிறிய மேடு பள்ளங்களுடன் பயணித்து வந்திருக்கிறது. 5200 என்ற நிலையை மெல்ல மெல்ல கடக்க முயன்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல் மூன்று மாதங்களில் சந்தை எவ்வாறு இருக்குமென என பல்வேறு நிபுணர்கள் பல்வேறு விதமான அலசலையும் கொடுத்துள்ளார்கள்.
முதலில், பண வீக்கம். பண ஒட்டத்தை ரிசர்வ் வங்கி சற்று அதிகமாகவே ஒட அனுமதித்துவிட்டது. இறங்கியிருந்த ரியல் எஸ்டேட் மீண்டும் மெள்ள மெள்ள மேலேற ஆரம்பித்துவிட்டது. அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையையும் மேலேற்றி விட்டிருக்கிறது. பண புழக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் சாட்டையை சொடுக்குமென எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட், வங்கி மற்றும் எப் எம் சி ஜி துறைகள் பாதிப்படைய வாய்ப்புண்டு.
இரண்டாவது, பொருளாதார ஊக்கங்கள். நலிந்து பொருளாதாரம் மேம்பட தேவையான பொருளாதார ஊக்கங்கள் கொடுத்தாகிவிட்டது என நிதி அமைச்சம் தற்போது யோசிப்பதால், வருகின்ற பட்ஜெட்டில் சில சலுகைகள் இரத்து செய்ய வாய்ப்புண்டு. இது குறித்த புரளிகளே சந்தையை பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவில் ஆட்டுவிக்கும்.
மூன்றாவது, பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த மூன்றாவது காலாண்டு அறிக்கையின்போது லாபத்தை உறுதி செய்து கொள்ள வாய்ப்புகள் பெருத்த அளவில் இருக்கின்றன.
ஆக முதல் மூன்று மாதங்கள் சந்தையானது பெருத்த அளவில் ஏறாமல் இருக்க தேவையான அளவிற்கு தடைக்கற்கள் இருக்கின்றன. முதலீட்டு உத்திகளை அதற்கேற்ப மாற்றிக் கொள்வது குறித்து யோசியுங்கள்.
இப்புத்தாண்டில் புத்தக கண்காட்சிகளில் நிறைய முதலீடு செய்திருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவதை முதலீடாகவே பார்க்கிறேன். படித்த புத்தகங்கள் குறித்தும் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன்.
நாளை நமது பங்கு சந்தையானது புதிய கால அட்டவணைப்படி துவங்குகிறது.
I Wish You Happy Investing in 2010!
22-06-2009
காளைகளின் ஒட்டத்திற்கு இந்த வாரம் தடைபோடுமென நினைக்கிறேன். சில முக்கிய நிகழ்வுகள் இந்த வாரம் நடக்கவுள்ளன.
முதலில் நம் நாட்டில். நிதிநிலை அறிக்கை. இன்னும் நாட்கள் இருக்கிறது என்றாலும் சந்தை மெள்ள மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பெட்ரோல் விலை ஏறும் பட்சத்தில், பண வீக்க விகிதம் மீண்டும் 1 சதவீதத்திற்கு மேல் முடிய வாய்ப்புள்ளது.
சில முக்கிய அமைச்சகத்திலிருந்து முக்கிய முடிவுகள் வெளிவர உள்ளன. அவைகள் சந்தையை கீழே கொண்டுச் செல்லவே வாய்ப்புள்ளன.
Futures & Options இந்த வாரமே முடிவடைய உள்ளது. சந்தையின் ஊசலாட்டத்தை இது அதிகரிக்கும்.
சந்தையானது 3500 என்ற நிலையில் நிலைபெறுமென தற்போதைய டெக்னிகல் தெரிவிக்கிறது. அதிலிருந்து இறங்கவே வாய்ப்பு தற்சமயம் அதிகமாக உள்ளது. என்னதான் புதிய அரசாங்கம் முழு மெஜாரிட்டியுடன் இருந்தாலும், அதன் கொள்கைகள் பலனளிக்க இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளாவது ஆகும்.
பாரதீய ஜனதா கட்சியில் ஏற்பட்டு வரும் உள்கட்சி பூசலினால், மத்திய அரசாங்கம் சில துணிகர முடிவுகளை நிதி நிலை அறிக்கையில் எடுக்கவே வாய்ப்புள்ளது. எதிர்க்க எதிர்க்கட்சிகள் (குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள்) இல்லாதது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். சொல்லப்போனால் இப்போது அவர்கள் எடுக்கும் சில முடிவுகளே இந்தியாவின் அடுத்த ஐந்து வருடங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் என நான் நம்புகிறேன்.கண்டிப்பாக ஆரம்பத்தில் அவை சந்தைக்கு கசப்பு மாத்திரைகளாகவே இருக்கும்.
மிக கவனமாக வணிகம் செய்ய வேண்டிய வாரம். கவனமாக இருங்கள்.
சந்தையை பாதிக்கும் முக்கிய செய்தி ஏதேனும் இருந்தாலொழிய தினம் எழுதுவதில் பலனில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம்.
Have a happy week!
19-06-2009
First of all, I’m Back (அட அல்ப!)
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சந்தை எடுத்த வேகம் அசாதாரணமானது என்பது சந்தேகமில்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி. எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போடும் இடது சாரிகளின் படுதோல்வி. சந்தை உற்சாகமடைந்ததில் தவறே இல்லை. 1000 புள்ளிகள். கொஞ்சம் அதிகம்தான்.
காங்கிரஸ் ஆட்சியின் கடைசிக் காலத்தில் பொருளாதார மந்தம் தொடங்கியது. அதனை போக்க உலக நாடுகள் அனைத்தும் மிகக் கடுமையாக முயற்சிகள் எடுத்தன. அமெரிக்க பிரபல நிதி நிறுவனங்கள் தடுமாற தொடங்கின. பொருளாதார தூண்கள் என நம்பப்பட்ட நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசி கொடுக்க ஆரம்பித்தன.
ஆனால் கடந்த சில வாரங்களாக பொருளாதார மந்தம் முடிவடைந்தவிட்டதாக உலக சந்தைகள் ஏற ஆரம்பித்தன. நம் சந்தையோ பறக்க ஆரம்பித்தது. பொருளாதார மந்தம் என்பது ஏதோ சிலமாதங்கள் வந்து போகிற விஷயம் அல்ல. பத்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் வரும் காலங்களுக்கு பிறகே வரக் கூடிய ஒரு தவிர்க்க முடியாத விஷயம். குறைந்த பட்சம் இரு வருடங்களுக்காவது அதன் பாதிப்பு இருக்கும்.
இந்த பொருளாதார மந்தத்தில் என்ன விசேஷம் என்றால் அமெரிக்க குழுமங்கள் செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வெளிப்பட ஆரம்பித்தன. சில தவறுகள் இன்னும் வெளிப்பட வில்லை என்பது குறிப்பிடதக்கது. கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குழப்படிகள் அகல கால் வைத்தது எல்லாம் சேர்ந்து பயங்கர பாதிப்புள்ளாகின.
எதற்கு இப்போது பழைய கதையெல்லாம்? கதை இன்னும் முடியவில்லை. ஒரு திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென்றால் நல்ல கதை வேண்டும். அது போலவே ஒரு வலுவான காளைச் சந்தைக்கு மிகவும் அடிப்படையாக ஒரு கதை வேண்டும். இந்தியா உலக சந்தையில் மிகப் பெரிய இடத்தை பெறப்போகிறது. உண்மைதான். ஆனால் இன்னும் சில வருடங்கள் ஆகும் அதற்கு.
நாட்டின் மொத்த உற்பத்தி விகிதத்தை (ஒன்பது முதல் நான்கு வரை) பிரதமர் முதல் அவர் அலுவலக கடைநிலை ஊழியர்வரை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வு பூஜ்யத்தை நெருங்கிவிட்டது. நான்கு பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் பெட்ரோல் விலை என சேர்த்து கணக்கிட்டு குறைத்து விட்டார்கள்.
தற்போது பெட்ரோலின் விலை ஏற்றப்பட உள்ளது. முதல் விளைவு பெட்ரோலின் விலை ஏறிவிடும் ( 🙂 ). பறந்துக் கொண்டிருக்கும் விமான போக்குவரத்து நிறுவனங்களின் பங்கு க்ராஷ் லேண்ட் ஆகிவிடும். விலைவாசி உயர்வு சடாரென மேலேற ஆரம்பிக்கும். இதனை தவிர்க்க இப்போதிருக்கும் முழு மெஜாரிட்டி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவுமே முதலில் கசப்பான மாத்திரைகளை சந்தைக்கு கொடுப்பதை தவிர்க்க இயலாது.
இந்திய நிறுவனங்களில் கேஷ் ப்ளோ என்கிற துட்டு பிரச்சினை வெகுவாக எழுந்திருக்கிறது. உபரி விஷயங்களை விற்க ஆரம்பித்து பணத்தை திரட்ட ஆரம்பித்திருக்கின்றன. QIP அடிக்கடி இப்போது நீங்கள் கேள்வி படலாம். Insider Trading சற்று அதிகமாக உள்ளது. இவ்விஷயத்தை நன்கு கூர்ந்து கவனிக்கவும். 2000-2004 போன்ற வருடங்களில் புதிய குழுமங்களை தன்னுடன் இணைத்துக் கொண்ட குழுமங்கள் அனைத்தும் பெரிய நிதி சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அவற்றில் சில நிப்டி மற்றும் சென்செக்ஸ் பகுதியில் இருப்பதால் இவைகளும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
சரி, மார்க்கெட் அனாலிஸ் பகுதியை ஏன் தொடர்ந்து எழுதவில்லை. இது போன்ற நேரங்களில் சந்தையில் ஒரு இடைவெளி விடுவது நல்லது என நினைக்கிறேன். சந்தையும் எவ்வித டெக்னிகல் பகுதிகளிலும் சிக்காமல் ஆடும். ஒரே நாளில் 150 புள்ளிகள் இறங்க, மறு நாளில் 125 புள்ளிகள் ஏறிய சீ-சா ஆட்டம். இந்த மாதிரி சமயங்களில் சந்தையை பற்றி நான் யோசிப்பதேயில்லை. முன்னரே சொன்னதுபோல் 3500 என்பது தற்போதைய சரியான நிலை. அதற்கு மேல் சந்தையானது 600 புள்ளிகள் காற்றின் மீது இருப்பது போல இருக்கிறது.
சரி, என்ன செய்யலாம்? ஒதுங்கி இருத்தல் நலம். அடுத்த இறக்கம் சந்தையை புதிய பள்ளங்களுக்கு எடுத்து செல்ல வாய்ப்பிருப்பதாக உள்ளூர நினைக்கிறேன். இது என் எண்ணம் மட்டுமே. புதியவர்கள் சந்தையை விட்டு விலகியிருப்பது நல்லது.
தின வர்த்தம் செய்பவர்கள் செய்யலாம். இன்ஸ்டன்ட் லாட்டரி போல அன்றைக்கே முடிவு தெரிந்து விடுவதால் எந்த பிரச்சினையும் இருக்காது. கூடுமானவரை டெர்மினல் அருகே இருக்குமாறு பார்ததுக் கொள்ளுங்கள்.
நீண்ட கால முதலீடு செய்பவர்கள் பொறுத்திருக்கலாம். நல்ல விலையில் பங்குகளை கொடுக்க சந்தை காத்திருக்கிறது. நீங்களும் காத்திருங்கள்.
இந்த நேரத்தில் நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். இசை, உடல்நலம், உடற்திறன், சுற்றுலா என எவ்வளவோ இருக்கிறது. அத்தனையையும் சந்தைக்காக தியாகம் செய்ய வேண்டுமா? அடுத்த முறை சிக்ஸ்-பேக்குடன் சந்தைக்கு சென்றால் எவ்வளவு பெருமித உணர்வு நமக்கு ஏற்படும்.
சந்தையின் தினசரி நடவடிக்கைகளை பற்றி எழுதாமல் வேறு சில டெக்னிகல் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என பார்க்கிறேன்.
Recent Comments