Archive for March, 2013

முகமூடி கொள்ளையர்

       அமாவாசை இரவு. கும்மிருட்டில் இரு வீரர்கள் முன் செல்ல அந்த பல்லக்கு காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அதன் திரைகள் கத்தரிக்காய் நிற சீனப் பட்டினால் மறைக்கப்பட்டிருந்தன.  செல்வந்தர் வீட்டு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், இந்த இரவில். கள்வர் சூழ்ந்த பாதையில் பயணம் ஏன் மேற்கொள்ள வேண்டும்?

ஒரு கரிய உருவம் பாதையை மறித்தப்படி நின்றிருந்தது. அடர்ந்த இருட்டில் எதுவுமே கருப்பாகத்தான் இருக்கும் என்பதால், தற்சமயம் அதை கரிய உருவம் என்றே அழைப்போம். பல்லக்கு நிறுத்தப்பட்டது. தீவட்டி கொளுத்தப்பட்டது. அதன் வெளிச்சத்தில் அவனின் கரிய நிறம் புலப்பட்டது.

யாரடா, நீ?

 

பிரபல தீவட்டிக் கொள்ளைக் காரன் கருப்பனை தெரியாதவர்கள் இந்த பகுதியில் கிடையாது. ஹஹஹஹ

நாங்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கிடையாது. ஆகவே, எங்களுக்கு தெரிய நியாயமில்லை.. அறிமுகத்தை முடித்துக் கொண்டாயிற்று, உனக்கு பெயர் வைப்பதில் உனது பெற்றோர் நீண்ட நேரம் சிந்தனை செய்ய அவகாசம் இல்லை போல. நல்லது, நாங்கள் அவசரமாக போக வேண்டும். வழியை விடு

 

அடேய், முட்டாளே, ஒரு தீவட்டிக் கொள்ளைக்காரன் பல்லக்கு பரிவாரத்திடம் அறிமுகப்படுத்திக் கொண்டு போக அனுமதித்தால் சரித்திரம் அவனை காறித் துப்பாதா?

அச்சமயம், இருளைக் கிழித்துக் கொண்டு, ஒரு வீரனின் தலைமையில் ஒரு கும்பல் தீவட்டிக் கொள்ளையரை தாக்கியது. கண நேரத்தில், தீவட்டிக் கொள்ளையர் சிதறியோடினர்.

கருப்பன் தரையில் வீழ்ந்து கிடந்தான். தோல்வியின் சாயை அவனது முகத்தில் அப்பிக் கிடந்தது. புழுதியும் கூட.

பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு, ஒரு அழகிய நங்கை வெளி வந்தாள். அந்த வீரத் தலைவன் அவளை நெருங்கி,

    அழகியே, கருப்பனின் கூட்டம் முறியடிக்கப்பட்டது. என்னை வீரன் என்றும், கோயாவி என்றும் அழைப்பார்கள். வீரக்கோயாவி என்று நீ அழைத்தால் எனக்கதில் ஆட்சேபம் இல்லை.

 

கோயாவியாரே, உமது சேவையை மெச்சினோம். முத்துநகை, இந்த மோதிரத்தை அவருக்கு பரிசாக கொடு.

கோயாவி மெல்ல தொண்டையை கனைத்துக் கொண்டார்.

தவறாக நினைக்க வேண்டாம், நாரீமணியே. தீவட்டியை பிடித்துக் கொண்டு சற்றும் நாகரிகமற்ற முறையில் கொள்ளையடிக்கும் இந்த முட்டாள்களை துரத்தி விட்டு, கொள்ளையை மிகச் சிறப்பாக மேற்கொள்ளவே நான் வந்துள்ளேன். ஆகவே, மோதிரத்தை மட்டுமில்லாமல் அனைத்து நகைகளையும் என்னிடம் அளித்து விடுங்கள். உங்கள் பயணம் இன்ப மயமாகட்டும்.

கீழே கிடந்த கருப்பனின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

    Image

       கோயாவியை சில கணங்கள் உற்றுப் பார்த்த அந்த நங்கை, பல்லக்கில் உள்ளேயிருந்து ஒரு பட்டாக் கத்தியை எடுத்து, கோயாவியின் கழுத்தில் வைத்தாள்.

கொள்ளையரே, நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு, அரசியல்வாதிகள் மற்றும் கொள்ளையரிடமே பணம் சேர்ந்துள்ளது. அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கவே நாங்கள் கிளம்பியிருக்கிறோம். உங்கள் கொள்ளைப் பொருட்களை இந்த பல்லக்கில் நிரப்புங்கள். உங்களுக்கு இனிய இரவாக இது அமையட்டும்.

கருப்பனின் புருவங்கள் ஆச்சர்யத்தில் மேலேறியன.

அவளை நோக்கி புன்னகை புரிந்த கோயாவி, மின்னலென தன் உள்ளாடையில் இருந்து ஒரு சிறுவில்லை எடுத்து நாண்பூட்டி, அவளை நோக்கி குறி வைத்தார்.

கொள்ளையரை கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பலை பிடிக்க அரசனால் நியமிக்கப்பட்டிருக்கும் இரகசிய உளவாளி நான். வேலை இவ்வளவு சுலபமாக முடியுமென நான் நினைக்கவில்லை.

கருப்பனின் கண் பயத்தில் குறுகியது.

கோயாவியை உறுத்துப் பார்த்த அந்த நங்கை பெரும் சத்தத்துடன் சிரிக்கலானாள்.

கருப்பனின் முகம் கடுப்பாகியது.

அன்பரே, கோயாவி, கொள்ளைக் கும்பலை கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பலை பிடிக்க நியமிக்கப்பட்டிருக்கும் இரகசிய உளவாளி ஒழுங்காக வேலை செய்கிறாரா என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சரால் நியமிக்கப்பட்டிருக்கும் உளவாளியே நான். திறம்பட வேலை செய்கிறிர்கள்.

எரிச்சலான கருப்பன்,

***, ஒரு இரவிற்கு தேவையான திருப்பங்களை தாண்டி இத்தனை திருப்பங்களா? வெளியேறுங்கள், இங்கிருந்து. நான் உங்களை வெறுக்கிறேன்

எனக் கூறி தூவென காறி உமிழ்ந்தான்.

அனைவரும் புன்முறுவல் பூத்தனர்.

March 27, 2013 at 1:03 pm 6 comments

என் மனங்கவர்ந்த பெரிய மனிதர்

      என் மனங்கவர்ந்த பெரிய மனிதர் என்றால் அவர் வேறு யாருமில்லை. எங்கள் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிய நரசிம்மன் சார்தான்.

      பள்ளியில் முதல் மணி அடித்த பத்து நிமிடங்கள் கழித்து பதுங்கி பூனைப் போல், தலைமை ஆசிரியர் கண்களில் படாமல் எங்கள் வகுப்பில் அவர் நுழைவதை மாணவர்களாகிய நாங்கள் பெரிதும் இரசிப்போம்.

        அவ்வாறு வகுப்பில் உட்கார்ந்த உடன் ஆண் குறியை சுட்டும் பல்வேறு தமிழ்ச் சொற்களில் ஒன்றை அவர் சொல்வது எங்களால் பெரிதும் விரும்பப்பட்டு  வந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

      ஒருமுறை, இளநீரில் பிராந்தியை கலந்து அவர் குடிக்கையில், தலைமை ஆசிரியரால் கண்டறியப்பட்டு, அவரது அறைக்கு அழைக்கப்பட்டார். அவர் வகுப்புக்கு திரும்புகையில், தலைமை ஆசிரியரின் பிறப்பினை பற்றிய பல ஊகங்களை மாணவர்களாகிய எங்களிடம் எழுப்பினார். அவரின் தந்தை யார் என்ற மர்மத்தினை பலரை வைத்து விளக்கினார். அதில் சில மிருகங்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

       தமிழ் பாடநூலில் வரும் பாடல்களால்லாது அவரால் சொந்தமாக பாடப்பட்ட பாடல்கள் பசுமரத்தாணி போல் எங்கள் மனதில் பதிந்தன.

உதாரணத்திற்கு,

தண்டபாணி தோப்புக்கு

         தடியோட போனான்

காந்தாமணி அஞ்சே

       மாங்காயோட நிக்கா

மற்றும்

கூட்டுக்குள்ளே கருங்கிளி

        ஒத்தையில வாடுது

     ஆனால், மக்களுக்கு இந்த பாடல்கள் வேம்பாக கசந்தது. குறிப்பாக, பஞ்சாயத்து தலைவர் தண்டபாணி உறவுகளுக்கு. பொது இடங்களில் இப்பாடலை பாடிய போது நாங்கள் சவத்தப்பட்டோம்.

       இத்தகைய அருமையான வாத்தியார் இருந்தும், என்னுடைய தமிழ்க் கட்டுரைகள் பத்துக்கு ஐந்து மதிப்பெண்களே பெற்றன. எனக்கு வருத்தமதான். ஒருநாள் விளையாடிவிட்டு பள்ளி வழியாக வீடு திரும்புகையில், சாரின் வண்டி பள்ளியில் இருப்பதை பார்த்தேன். அடக்கிய மூத்திரம் பொங்குவது போல, வருத்தம் துணிச்சலாக பொங்கியது

     சார், சார் என குரலெழுப்பிய வண்ணம் பள்ளியில் பாய்ந்தேன். தலைமை ஆசிரியர் அறையில் அய்யா கரை திரும்பிய திமிங்கலம்  போல படுத்திருந்தார். மூச்சும் அவ்வாறே வந்துக் கொண்டிருந்தது. தூரத்தில் அலமேலு அக்கா ஒடிக் கொண்டிருந்தாள்.

       அவள் சிறப்பாக ஒடுகிறாள், எனினும் கொலுசை கழட்டி விட்டு ஒடினால் வேகம் அதிகரிக்கும் என அய்யாவிடம் என் கருத்தை தெரிவித்து, நான் வந்த நோக்கத்தை கூறினேன்.

     என் தந்தையின் குஞ்சாமணிகளை நான் பிறப்பதற்கு முன்னரே அவர் தீக்கிரையாக்கி இருக்க வேண்டும் என அய்யா விசனப்பட்டாலும், பத்துக்கு எட்டு மதிப்பெண்கள் கட்டுரைக்குக் கொடுத்தார்.

   அவர்தாம் நியாயத்தை புரிந்துக் கொண்ட எத்துணை நல்லவர்!

       அவர் வகுபபில் அடிக்கடி உற்சாகமாக பாடும் பாடலை கொண்டு இக்கட்டுரையை முடிப்பதுதான் சாலச் சிறப்பாக இருக்கும்.

          அப்பாடலை ஒருமுறை பாடிப் பார்க்கையில், தமிழுலகு அதற்கு  இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும் என தோன்றுகிறது.

March 18, 2013 at 8:59 pm 3 comments

இரும்புக்கை கோயாவி

பெறுநர்

டாக்டர் நஞ்சுண்டராவ்

இராணுவ இரகசிய ஆராய்ச்சியகம்

ரீகல் தியேட்டர் பின்புறம்

மும்பை

 

மதிப்பிற்குரிய டாக்டர் அய்யா அவர்களுக்கு.

     அன்பன் கோயாவி தண்டனிட்டு எழுதுவது, உபயகுசலாம்பரி,

     ஆபரேஷன் இடிமின்னல் என்கிற இரகசிய நடவடிக்கை இராணுவத்தால் துவங்கப்பட்டு,  எதிரிகளுக்கு அதிரடி கொடுக்கும் பொருட்டு உளவாளிகளுக்கு இரும்புக் கை பொருத்தும் திட்டத்தில் நான் முதலாளாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இத்தனைக்கும் அதற்கு நான் விண்ணப்பிக்கவே இல்லை.

     இருப்பினும் பல மருத்துவ இடையூறுகளை கடந்து எனக்கு தங்கள் தலைமையில் இயங்கிய மருத்துவக் குழுவினால் பல தொழில் நுட்பங்களை அடங்கிய இரும்புக் கை பொருத்தப்பட்டது.

இரும்புக்கை கோயாவி!    

 கேட்பதற்கு இனிய ஒசையுடன் கூடிய இச்சொல் என் மனதில் பெரும் பூரிப்பை ஏற்படுததியதென்றால் அது மிகையாகாது.

ஆனால், ஐய்யா, அதற்கு பின்னர் எனது வாழ்க்கையில் அனைத்துமே தடம் புரண்டு விட்டன.மின்சாரம் என்னை மறைவிக்கும் என்ற நம்பிக்கையில்  உயர் அழுத்த மின் கம்பியில் கை வைத்து உயிருக்கு போராடிய நிலையில் தூக்கி வரப்பட்டேன். தாங்கள் அடுத்த முறை மின் கம்பியில் கைவைத்தால் ஒரேடியாக மறைந்து விடுவாய் என எச்சரித்ததை ஒட்டி அந்த பக்கமே போவதில்லை.

எனது வாழ்க்கையே இரும்புக்கை வந்த பிறகு நரகமாகி போனதய்யா.

1)   இரவு தூங்கும் பொழுது, எனது பொக்கிஷத்தின் இடைப்பட்ட பகுதிகளை சொறிகையில், இரும்புக் கை நகம் பட்டு அந்த இடமே இரத்த விளாறாக ஆகிறது. காலையில் எழுந்து பார்க்கையில் எனது போர்வையில் இரத்த அபிஷேகம் நடைபெற்றிருப்பதை பார்த்து நிறைய தடவை மூர்ச்சையாகி விழுந்திருக்கிறேன்.

 

2)   ஹோட்டல் ஜலஜாவில் என் நண்பியுடன் காதல் களியாட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் இரும்புக் கை விரல் துப்பாக்கி வெடித்து, பரிமளத்திற்கு படுகாயம் உண்டாயிற்று. என் மனம் மிகவும் புண்பட்ட சம்பவமய்யா அது.

 

3)   என் மூக்கை துடைக்கையில் இரும்புக் கை விரலிலிருந்து வெளிவரும் மயக்க வாயுவினால் கழிப்பறை, டவுன் பஸ், இரகசிய அலுவலக வெளிவாயில் போன்ற இடங்களில் மயக்கமடைந்து விழுந்து விடுகிறேன். ஒரு சமயம், முக்கிய இராணுவ நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் அவ்வாறு நடந்து விட்டது. எவ்வளவு அவமானமாக போய்விட்டது தெரியுமய்யா, அது,

     அய்யா, இந்த இரும்புக்கை எதிரிகளை விட என்னைத் தானய்யா மிகவும் பாதிக்கிறது. தயவு கூர்ந்து, இந்த இரும்புக் கையை அகற்றி, என்னை சாதாக்கை கோயாவியாக மாற்றி விடுங்கள். உங்களுக்கு கோடிப் புண்ணியமாக போகும்

அன்பன்

கோயாவி, கண்ணீருடன்.

March 12, 2013 at 6:31 pm 2 comments

Older Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
March 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031