Archive for May, 2013

முடிக்கப்படாத நிரல் (#!@?>

digitial கோயாவி பலூடா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவரது செல் அதிர ஆரம்பித்தது.

****, காலங்காத்தால உயிர எடுக்கிறான்ங்க என சலித்துக் கொண்டார். அப்போது மணி காலை 11.30.

வணக்கம் சார், நான் கோயாவி பேசுறேன்.

ஆபிசுல சீட்ல உன்ன காணலயே. எங்கேய்யா இருக்கே?

ஒரு இன்ஸ்வெடிகேஷன் சம்பந்தமாக….

ஒனக்கு தான் ஒரு மசுரு கேசும் கொடுக்கலையே

சரி, அதுக்கு இன்னாங்கறே என்று சொல்ல நினைத்தாலும்,

சாரி சார், இப்போ வந்துடறேன்.

கோட்டூர்புரத்தில் இருக்கும் இந்திய விஞ்ஞான கழகத்தில் ஒரு மர்டராம். போய் பாரு,

அழைப்பு துண்டிக்கப்பட்டதும், கோயாவி ஆழ்ந்த சிந்தனையில் முழ்கினார். அடுத்தது, சமோசாவா அல்லது பிரன்ஞ் பிரை சாப்பிடலாமா?

கோட்டூர்புரம், விஞ்ஞான கழகம்.

கம்ப்யூட்டர் டெர்மினல் எதிரேயுள்ள நாற்காலியில் பிணம் கிடந்தது. எதிரேயுள்ள கணிணி திரையில்,

#include

void main()

{

Printf(“Hello_

என்ற கணினி நிரல் முடிக்கப்படாமல் இருந்தது.

சிறப்பு ஆய்வாளர் பராங்குசம் பதட்டத்தில் இருந்தார். அவரால் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை. இறந்தவர் கணிணி விஞ்ஞானி பிங்களன் என்றும், அவர் இறப்பதற்கு முன்னர் ஒரு முக்கியமான கணிணி நிரலை எழுத முற்படுகையில் இறந்து விட்டார். உலகையே மாற்றவல்ல முக்கிய கணிணி நிரலாகத்தான் அது இருக்க வேண்டும். நல்லவேளை, இதை துப்புதுலக்க இன்னொரு துப்பறிவாளரை நியமித்துள்ளார்கள்.

வணக்கம் சார், நான் பராங்குசம் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கோயாவியிடம் கை குலுக்கினார். கையெல்லாம் எண்ணெய் பசை பிசுபிசுவென்றது. சுருக்கமாக, கோயாவியிடம் கொலை தொடர்பான விவரங்களை சொன்னார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தை கோயாவி அமைதியாக சுற்றிப் பார்த்தார். பிறகு, துணியை விலக்கி பிணத்தின் முகத்தை பார்த்தார். பிறகு கேட்டார்,

யார் இவர்?

கணிணி விஞ்ஞானி பிங்களன். இன்றைக்கு அவர் பணியில் சேருவதாக இருந்தது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாற்றலாகி வந்திருக்கிறார். பாவம் அல்பாயிசு.

மெள்ள ஜன்னலருகே தன் செழுமிய பின்புறத்தை மற்றவர்களுக்கு காட்டி நின்றுக் கொண்டார். அனைவரும் மூச்சை பிடித்துக் கொண்டு அவர் என்ன சொல்வார் என காத்திருந்தனர். கோயாவி மனதில் ஒன்று, இரண்டு என எண்பத்தி மூன்று வரை எண்ணினார். சடாரென்று திரும்பினார்.

முதலில், இவர் கணிணி விஞ்ஞானி பிங்களனே இல்லை. பிங்களன் என பேர் வைத்துக் கொண்டு, கணிணி விஞ்ஞானி என்றால் சோதிக்க வேண்டாமா?

அதிர்ச்சி அலையலையாய் பராங்குசத்தை தாக்கியது.

பிறகு யார் இவர்? எப்படி கண்டுபிடித்தீர்கள்?

இவன் இந்த கட்டிடத்து வாட்ச்மேன் குமார். ஒரு துப்பறிவாளன் எப்போதும் அனைத்தையும் சொல்வதில்லை.

அனைவரும் பிரமித்தனர், நிம்மதி பரவியது. செத்தது இரவு காவலனாம். அனைவரும் புன்னகைத்தனர். கோயாவியின் துப்பு துலக்கும் திறனை பாராட்டினர். அனைவருடனுடம் கைகுலுக்கி, மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டு, பிஸ்கட், டீ அருந்தி விட்டு கோயாவி கிளம்பினார்.

வாசலில் மெள்ள சிரித்துக் கொண்டார்.

சரசா புருஷனை எனக்கு தெரியாதா என்ன?
துப்பறிவாளன் எப்போதுமே அனைத்தையும் சொல்வதில்லை.

May 11, 2013 at 1:58 pm 4 comments

எங்கே காஞ்சனா?

       கோயாவி ஒய்வாக அமர்ந்திருக்கையில் அவரது அறை கதவு தட்டப்பட்டது. வெளியே 40 வயது மதிக்கதக்க ஒரு நபர் நின்றிருந்தார். மனிதனுக்கு நாற்பது வயதிற்கு மேல் நாய்க்குணம் என்ற வரி கோயாவியின் மனதில் ஒடியது.

சீக்ரெட் ஏஜெண்ட் கோயாவி வீடு இதுதானே?

இருக்கலாம். நீங்க யாரு?

அத அவருக்கிட்டதான் சொல்ல முடியும். நீங்கதானே அவரு?

நீங்க யாருன்னு தெரியாம அத உங்ககிட்ட சொல்ல முடியாது.

இருவரும் கனத்த மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர்.Image

பாகிஸ்தான் வெப்சைட்ல உங்க போட்டோவ பாத்திருக்கேன்.

கோயாவியின் தலையில் ஆபத்து எனும் சிகப்பு விளக்கு மினுக்க ஆரம்பித்தது.

நீயும் ஸ்பையா?

இல்ல, நான் காஞ்சனா புருஷன்

        இப்போது சிகப்பு லைட் பிரகாசமாக எரிய ஆரம்பித்திருந்தது. காஞ்சனா, கோயாவியின் நண்பிகளில் ஒருவர். முன்னாள். துயரம் தரும் பிரிவு. வேலு மிலிட்டரி ஒட்டலின் வாசலில் வைத்து, விறகு கட்டையால் அடித்து, கைப்பையில் இருந்து கத்தியை எடுப்பதற்குள், கோயாவி அவளுடன் ப்ரேக் அப் செய்து விட்டார். ஒற்றர்களில் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.

உள்ள வா.

      உள்ளே பாயில் வசதியாக அமர்ந்தனர். மீண்டும் கனத்த மௌனம் நிலவியது. கோயாவி படித்துக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரையின் நாவல் குப்புற கிடந்தது.

விஷயத்திற்கு வா

என் சம்சாரம் மேல எனக்கு சந்தேகம் வந்துருக்கு.எனக்கு தெரியாம அவ வேற யாரையோ காதலிக்கிறாளோன்னு சந்தேகம்.

எங்கிட்ட ஏன் வந்தே?

அத கண்டுபிடிக்கணும். என்னால இப்ப தூங்க முடியல, சரியா சாப்பிட முடியல. ஒரே மென்டல் டார்ச்சர இருக்கு. ப்ளீஸ் எனக்கு உதவி செய்யுங்க.

இங்க பாரப்பா. குடும்பம்னு இருந்தா இந்த மாதிரி ஏதாச்சும் இருக்கதான் செய்யும். ஆனா உன் பொண்டாட்டி நேச்சருக்கு, நீ இன்னும் உயிரோட இருக்கேன்னே காதல் எங்காவது இருக்கதான் செய்யும்.

      வந்தவனின் தலை மெள்ள மெள்ள அசைய ஆரம்பித்து, வேகமாக ஆட ஆரம்பித்தது. கண்கள் பிரகாசமாயின. தழுதழுத்த குரலில்,

என்னை மன்னித்து விடுங்கள். எவ்வளவு பெரிய விஷயத்தை ஈசியாக சொல்லி விட்டீர்கள். நான் இங்கு வந்தே இருக்கக்கூடாது. தயவு செய்து, இதை வெளியில் சொல்லாதீர்கள்.

சரி.

    வந்தவன் போன பின், கோயாவி ஆழ்ந்த பெருமூச்செறிந்தார். சந்தேக கணவன். ம்ம்ம்ம். மெல்லிய தலைவலி ஆரம்பித்தது.

காஞ்சனா, ஒரு காப்பி கொடும்மா.

 

May 5, 2013 at 1:50 pm 9 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
May 2013
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031