Archive for May, 2009
28-05-2009
அமெரிக்க பொருளாதாரத்தில் ஆட்டோ மொபைல்ஸ் துறை ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அத்துறையை நம்பி ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் டெட்ராய்ட்டில் மட்டும் அல்ல நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன.
நம் கிராமத்தில் 500 குடும்பங்கள் உள்ளன என வைத்துக் கொண்டால் கார் வைத்திருப்பவர்கள் என பார்த்தால் 20 கூட தேறாது. ஆனால் அங்கேயோ 200 குடும்பங்கள் என வைத்துக் கொண்டால் குறைந்தபட்சம் 600-க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கும். அது சார்ந்த தொழில்களான கார் மெக்கானிக் ஷாப், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் என ஏகப்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் துறை அது. பள்ளியிறுதியை முடிக்கவில்லையென்றாலும் காரை துடைக்கக் கற்றுக் கொண்டு வேலையில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 20 கார்களாவது சேவைக்கு வரும்.
ஒரு கிராமத்திலேயே இவ்வாறு என்றால் நகரங்களில் இந்த துறையை நம்பி ஏகப்பட்ட சேவை மையங்கள் இருக்கும். அங்கே பல்லாயிரக்கணக்கானோர் இது தொடர்பான சேவையை அளிக்கின்றனர். முதல் அடி ஜப்பான் நாட்டு கார்களின் இறக்குமதியால் விழுந்தது. பின்னர் சமாளித்துக் கொண்டது என்றாலும், அடுத்த அடி நீண்ட நாள் கழித்து இப்போது விழுந்திருக்கிறது. இருப்பினும், ஜெனரல் மோட்டார் இத்துறையில் ஒரு முக்கிய குழுமம். இவர்களின் கார்கள் அமெரிக்காவில், உலகில் பல பகுதிகளில் விற்பனைக்கு உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவின் மிகப் பெரிய ஆட்டோ மொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார் திவாலாகும் நிலையில் உள்ளது. ஒரு கார் கம்பெனிதானே என நமக்கு தோன்றினாலும், அமெரிக்க ஆட்டோமொபைல் துறையில் மிக பழைமையான குழுமம் இந்த நிலைக்கு வந்தது பற்றி முதலீட்டாளர்கள் வட்டத்தில் ஒரு அதிர்வுகள் கண்டிப்பாக இருக்கும்.
ஒரு உதாரணத்திற்கு, உதாரணத்திற்கு மட்டுமே, நம் தகவல் தொழில் நுட்பத் துறையில் மகுடமாக விளங்கும் இன்போஸிஸ் இந்நிலைக்கு தள்ளப்பட்டால் நம்மில் பலர் தகவல் தொழில் நுட்பத் துறையில் இல்லையென்றாலும், நம் உணர்வுகள் எவ்வாறு பாதிக்குமோ அந்நிலையில்தான் அங்கே அமெரிக்க பங்கு சந்தையானது உள்ளது.
இது தொடர்பாக அக்குழுமத்தை காப்பாற்றும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஒருவேளை காப்பற்றவும் படலாம். ஆனால் அது ஏற்படுத்திய அதிர்வுகள் இருந்துக் கொண்டேதான் இருக்கும். எத்தனை குழுமங்களைதான் அமெரிக்க அரசாங்கம் காப்பாற்றும்? இதற்கு முன்னால், வங்கிகள், இப்போது ஆட்டோமொபைல், அப்புறம்? இது ஒரு தொடர்கதையாகவே செல்ல வாய்ப்புள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அமெரிக்க சந்தையானது கரடிகள் சந்தையில் சிக்கி, பொருளாதார மந்தம் சூழ்ந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பொருளாதார மந்தம் முடிந்தது என அறிக்கையெல்லாம் விடப்பட்டு சந்தைகளெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மிகப்பெரிய குழுமம் இந்நிலைக்கு வந்திருக்கிறது என்றால்…….
உண்மையில் பொருளாதார மந்தமானது இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவடைந்து விட்டதா என்பதை பற்றி இன்னொரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்.
வட கொரியா பற்றி தனியாக எழுதலாம் என்று நினைக்கிறேன். அதுவும் தற்போதைய நிலையில் முக்கிய விஷயமாகவே படுகிறது.
Hava Nagila – Song
பங்கு சந்தையை பற்றி முதலில் எழுதும்போது சந்தையில் நுழையும்போது நம் மனநிலை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை பற்றி இரு பதிவுகள் எழுதினேன். அதன் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன
அதனை தொடர்ந்து இந்த பதிவினை எழுதி பதிவேற்றம் செய்யவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை பற்றி பகிர்ந்து கொள்வதற்காக எழுதினேன். அந்த சமயத்தில் இதனை பதிவேற்றம் செய்தால் இவ்வலைப்பூவினை படிக்கும் நண்பர்கள் குழம்பிவிடுவார்களே (ம்க்கூம்.. இப்போ மட்டும் என்ன வாழுதான்) என எண்ணி ட்ராப்டாகவே வைத்து விட்டேன்.
சந்தை எந்த டெக்னிகலிலும் மாட்டாத இந்த வாரத்தில் பழைய பதிவுகளை எல்லாம் பார்ததுக் கொண்டே வரும் போது இந்த பதிவு பதிவேற்றப்படாமலே இருந்ததை பார்த்தேன்.
ஹவா நகிலா என ஆரம்பிக்கும் இந்த பாடல் ஒரு யூத பாடலாகும். அதன் வரிகள் ஹீப்ரூ மொழியை சேர்ந்தவை. சில வரிகளே அந்த பாடல்.
‘ வாருங்கள் கொண்டாடுவோம், மகிழ்ச்சியாக பாடுவோம், சகோதரர்களே விழித்துக் கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக ஆடுவோம்‘’
இவ்வளவுதான் இப்பாடல் வரிகளின் அர்த்தம். இதென்ன பிரமாதம்? கேட்டு பாருங்களேன். தெரியும்.
இந்த பாடலை கேட்டு ஆடாத யூதர்களே கிடையாது. இஸ்ரேல் நாட்டின் ஆரம்ப வருடங்களில், இஸ்ரேலை சுற்றி அரபு நாடுகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த போதிலும் யூத மக்கள் இந்த பாடலை பாடி ஆடியிருக்கிறார்கள். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துக் கொண்டிருக்கின்றன, விமானங்கள் எந்த நேரத்திலும் குண்டு போட்டு தாக்கும் நிலை, உலக நாடுகள் பெரும்பாலும் ஆதரிக்காத நிலை, தோல்வியானது கண்ணுக்கு எட்டிய தொலைவில்தான் இருக்கிறது. இருந்த போதிலும் அவர்களால் அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக, மன உறுதியுடன் இருந்து பாடி ஆடிய பாடல் இது.
இப்பாடலை நீங்கள் மறைமுகமாக நிறைய தடவை கேட்டிருப்பீர்கள். இப்போது கேட்டால் எங்கேயோ கேட்டது போலவே தெரியும். பொதுவாகவே உலக புகழ் பெற்ற பாடல்களை நாம் தமிழ் திரைப்படங்களில் எடுத்தாண்டிருப்பார்கள். எல்லாமே கேட்ட மாதிரிதான் இருக்கும்.
இந்த பாடலானது விக்ரம் திரைப்படத்தில் இளையராஜா இசையில் ‘எஞ்சோடி மஞ்சக்குருவி’ என ஆரம்பிக்கும். இளையராஜா இந்த பாடலின் மூலத்தை தெரியப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. இந்த பாடலானது உலகத்தில் பல்வேறு இசை குழுக்களால் பாடப்பட்டு வந்தபோதிலும் இந்த பாட்டிற்கு அவர்கள் கிரெடிட் கொடுத்திருப்பார்கள். இப்பாடலானது இந்தி திரைப்படங்களிலும் கண்டிப்பாக வந்திருக்கும். அந்த காலக்கட்டங்களில் தமிழ் திரைப்பட இசையைதான் இந்தியில் எடுத்தாண்டிருப்பார்கள்.
சமீபத்தில் வந்திருக்கும் ‘மொழி’ திரைப்படத்தில் இந்த பாடல் மிக அருமையாக அப்படியே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். நினைவு இருக்கிறதா? பிரகாஷ் ராஜ் குளித்துவிட்டு துண்டுடன் பாடி ஆடுவாரே? பின்னணியில் இப்பாடல்தான் ஒலிக்கும். அவர்களாவது இப்பாடலை உபயோகப்படுத்தியதற்கு கிரெடிட் கொடுத்தார்களா என தெரியவில்லை.
இப்பாடலை நிறைய குழுவினர் பாடியிருக்கிறார்கள். முதலில் Andre Rieu இசைக் குழுவினரால் பாடப்பட்ட இப்பாடலை கேட்க கீழே உள்ள சுட்டியில் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=BFtv5qe5o3c
காலையில் எழுந்து உற்சாக மனநிலைக்கு மாற கண்டிப்பாக இப்பாடலை கேட்கலாம். துண்டுடன் ஆட்டம் போடுவது உங்கள் விருப்பம்.
18-05-2009
எதிர்பார்த்தது போல் மூன்றாவது அணிக்கு பெருத்த தோல்வியே கிட்டியது. சந்தைக்கு முக்கிய உற்சாகத்தை அளிக்கக்கூடிய மற்றொரு செய்தி இடதுசாரிகளின் தோல்வி. முந்தைய அரசே மீண்டும் பதவியேற்பதால் தொழில் சார்பான கொள்கைகளில் பெருத்த அளவில் மாற்றம் வராது என நம்பலாம்.
மத்திய அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என நினைக்கிறேன். குறிப்பாக, நிதி மற்றும் வர்த்தகம் துறைகளில். இன்றைய உலக சந்தைகள் இறக்கத்துடன் ஆரம்பித்திருக்கின்றன. நமது சந்தையும் அவ்வாறே ஆரம்பிக்கும் என்றால் யாரும் நம்பபோவதில்லை. தேர்தல் முடிவுகளின் உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. சந்தையின் துவக்கம் ஏற்றத்துடன் அமையும் என அனைவருமே எதிர்பார்க்கின்றார்கள். விற்பதற்கு ஆள்கள் குறைவாக உள்ளதாலும், வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலும் துவக்கம் அதிகப் புள்ளிகளில் துவங்கலாம்.
இந்த உற்சாகம் 200 முதல் 300 புள்ளிகள் வரையே நீடிக்கும். இன்னும் இரு அல்லது மூன்று நாட்கள் நீடிக்கலாம். பின்னர் பழைய கதைதான். உலக சந்தைகளில் குறிப்பாக அமெரிக்க சந்தையில் ஒரு சரிவினை இம்மாதத்தில் எதிர்பார்க்கிறேன். அது உலக சந்தைகளை பாதிக்கும். நம் சந்தை எவ்வாறு ரீயாக்ட் செய்யும் என்பது தெரியவில்லை.
சந்தையானது தற்போதைய நிலையில் 3500 என்ற நிலையே நல்ல சப்போர்ட் நிலையாக உள்ளது. மீண்டும் சந்தையானது இந்நிலையை சோதிக்கும்போதுதான் சந்தையின் உண்மையான நிலை தெரியும். அதுவரை நமது சந்தை காளைகளின் கைகளில்தான் இருக்கும்.
காளைகளின் ஒட்டத்தில் இதுவரை நான் கவனித்தது என்னவென்றால், முதலீட்டாளர்கள் மற்றவர்களின் அறிவுரைகளை கேட்பதில்லை. இன்றைக்கு சந்தை ஏறும் அப்புறம் என்ன? என்ற மனநிலைதான் இருக்கும். சந்தையானது கரடிகளின் பிடியில் சிக்கியவுடன் எல்லோர் அறிவுரைகளையும் கேட்க ஆரம்பிப்பார்கள்.
எனவே இன்னும் சில தினங்களுக்கு ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் இருந்தொலொழிய புதியதாக எழுதுவதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதால் இப்பகுதியில் எழுதபோவதில்லை.
இது ஆரம்பகட்ட காளைகள் சந்தை இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சந்தையின் மொத்த பிடியும் இன்னும் கரடிகள் கைகளில் உள்ளது. இந்த உற்சாக குமிழ் உடையும்போது கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிடும். கவனமாக வணிகம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
Read Disclaimer!
Good Morning to you all!
Recent Comments