காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் – இரும்புகை மாயாவி II

October 21, 2008 at 3:31 pm 9 comments

      முத்து காமிக்ஸானது எத்தனையோ கதாநாயகர்களை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ள போதிலும், இரும்புகை மாயாவியே எல்லோர் மனதிலும் நிற்கிறார்.  சென்ற பதிவில் போடப்பட்டுள்ள ஒட்டுகளின் எண்ணிக்கையும் அதைத்தான் சொல்கிறது (எத்தனை கள்ள ஒட்டுகளோ!  ரிப் கெர்பிக்கு மூன்று ஒட்டுகள் விழுந்தது ஆச்சரியம்.   தவறாக எண்ண வேண்டாம்.  Who are the Blacksheeep?)

     காமிக்ஸ் கதாநாயகர்கள் பல சாகசங்களை நிகழ்த்திய போதிலும், இரும்புகை மாயாவி நம் சிறிய வயதில் மனதில் பிடித்திருக்கும் இடத்தினை வேறு யாராலும் அந்த நேரத்தில் பிடித்திருக்க முடியாது.  காரணம் என்னவென்று யோசிக்கும்போது, நம் சிறிய வயதில் சில நேரங்களில் நாம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணுவோம். காரணம், வீட்டில் ஏதாவது ஒரு பொருளை உடைத்திருப்போம், உதைப்பற்காக தேடிக் கொண்டிருப்பார்கள்.  பள்ளியில் வீட்டுக் கணக்கு எழுதாமல் வந்திருப்போம்.  இது போன்ற காரணங்களுக்காக நாம் மற்றவர் கண்ணுக்கு புலப்படாமல் இருந்தால் தேவலை என்று நினைத்திருப்போம்.  அதனை இரும்புகை மாயாவி செய்கின்றபடியால்,சிறிய வயதினில் நம் மனதில் சற்று அதிகப்படியான இடத்தினை பிடித்திருக்கின்றார். 

     என்னுடைய சிறிய வயதில் பிளக் பாய்ண்டை பார்க்கும்போதெல்லாம், அதில் கையை விட்டு மறைந்துவிடலாமா என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும்.  குறிப்பாக, வார இறுதி விடுமுறையினை கொண்டாடிவிட்டு திங்களன்று பள்ளி திரும்புகையில்.  இரும்புகை எனக்கு கிடைத்தால் யார், யாரையெல்லாம் குத்த வேண்டும் என ஒரு பெரிய லிஸ்டே வைத்திருந்தேன்.  அதில் சில ஆசிரியர்களின் பெயர்களும் இருந்தன.

     இந்த கண்மூடித்தனமான பிரியத்தால் இரும்புகை மாயாவி தோன்றும் அனைத்து சித்திரக் கதைகளையும் தவறாது வாங்கி படித்தோம்.  அனைத்தும் பிடித்தும் இருந்தது.  கொஞ்சம் பெரியவர்களாக ஆனபிறகு, தலைமறைவாக இருப்பது என்ற வித்தை நமக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்து விடுகின்றபடியால், அவர் மேல் உள்ள அபிமானம் இயற்கையாகவே குறைந்து விடுகிறது.  எத்தனை தடவை கல்லுாரிக்கு/அலுவலகத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வேறு எங்காவது சுற்றியிருக்கிறோம்!

      இரும்புகை மாயாவியின் கதைகள் வண்ணம், டைஜஸ்ட் வடிவத்தில் என பல்வேறு விதங்களில் வந்திருக்கிறது.  அசல் கதைகளுக்கும், முத்து காமிக்ஸில் வந்தவற்றிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்த போதிலும், அவைகள் நமக்கு தெரியாத அளவுக்கு எடிட் செய்யப்பட்டிருக்கும்.  தமிழில் மிகச் சிறந்த சித்திர கதை எடிட்டர்கள் சிவகாசியில்தான் உள்ளனர். 

     இரும்புகை மாயாவியின் கதைகளில் உங்களுக்கு பிடித்தமான கதைகள் என்னவென்பதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  என்னுடைய டாப் ஐந்து.

1) விண்வெளி கொள்ளையர்

2) இயந்திர படை

3) நியூயார்க்கில் மாயாவி

4) சைத்தான் சிறுவர்கள் (புதியது)

5) மாயாவிக்கோர் மாயாவி

     முத்து காமிக்ஸில் வந்த கதாநாயகர்களை பற்றி பார்ப்பதற்கு முன் சில விக்ஷயங்கள்.  எல்லா கதாநாயகர்களையும் உங்களுக்கும், எனக்கும் தெரியும்.  இருப்பினும் ஏன் என்றால், நமக்கு பிடித்தவைகளை பற்றி எத்தனை தடவை பேசினாலும், படித்தாலும் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.  அதுபோல எனக்கு பிடித்தவைகளை பற்றி எழுதவும், அதனை படித்து விட்டு நீங்களும் மகிழ்ச்சி அடைவதும் மிகவும் பிடித்திருக்கின்றபடியால்தான்.

லாரன்ஸ் & டேவிட்

       எனக்கு இவர்களை அதிகமாக பிடிக்காது.  அ.கொ.தீ. கழகம் என்னும் முகந்தெரியாத எதிரி விளைவிக்கும் தீமைகளை கண்டுபிடித்து தடுப்பதாக இவர்களின் சாகசங்கள் வரும்.  எனக்கு பிடித்தமான இவர்களின் கதைகள் தலைகேட்ட தங்க புதையல் மற்றும் இன்னொரு கதை பெயர் நினைவில்லை.  ஆனால் அதில் வில்லன் மற்றும் இவர்கள் கவிதைகளாக சொல்லி சாகசங்கள் நிகழ்த்துவார்கள்.

மந்திரவாதி மான்ட்ரெக்

       இவர் கதைகள் நிறைய ஆர்ட்டிஸ்ட்களால் வரையப்பட்டு இருக்கின்றன.  முத்து காமிக்ஸில் ரூ.1 புத்தகங்களாக வந்த இவரின் கதைகள் அனைத்துமே நன்றாக இருக்கும்.  அதிகமாக மந்திரத்தை பயன்படுத்தாமல் க்ரைம் த்ரில்லர்கள் போல் செல்லும் கதைகள் நன்றாக இருக்கும்.  இவரின் கைத்தடியாக வருபவர் லொதார் என்னும் ஆப்பிரிக்க இளவரசன் (இவர் இளவரசன் என்பது நிறைய பேருக்கு தெரியாது).

      பிடித்த கதைகள் முத்து காமிக்ஸ் ரூ.1 கதைகள் அனைத்தும்.

ரிப் கெர்பி

      சில பேருக்கு சில டேஸ்ட்.  மற்றவர்களின் விருப்பத்தினை கேலி செய்கின்றேன் என நினைக்க வேண்டாம்.  ரொம்பவும் Down-to-Earth கதாநாயகன் இவர்.  இவர் வில்லனை நாலு அடி அடித்தால், அதில் இரண்டையாவது இவர் முகத்தில் வாங்கியிருப்பார். 

      எனக்கு பிடித்த கதை காசில்லா கோடீஸ்வரன்.

பிலிப் காரிகன்

      அமெரிக்க உளவாளியாக வரும் காரிகன் சாகசங்கள் நன்றாக இருக்கும். முத்து காமிக்ஸில் ரூ.1 புத்தகங்களில் வரும் இவரின் கதைகள் நன்றாக இருக்கும்.  இவரும் வில்லனின் ஆட்களிடம் கண்டபடி உதை வாங்கின மற்றொரு Down-to-Earth கதாநாயகன். படித்திருக்கின்றேனே தவிர, நிறைய கதைகள் நினைவில் இல்லை.

மூகமுடி வேதாளர்

      முத்து காமிக்ஸ் வெளியிட்ட இவரின் அனைத்து கதைகளும் நன்றாக இருக்கும்.  இவர் இராணி காமிக்ஸில் மட்டுமே சொதப்பினார்.  மிகத் தெளிவான படங்களை வடிவமைத்ததும் ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். 

ஜானி நீரோ

        இந்தாளை எனக்கு பிடிக்காது. இவருடைய செக்ரட்ரி இவர் மேல் ஒரு இதுவாக இருப்பாள். இவர் தமிழ்பட ஹீரோ போல் கண்டுக் கொள்ள மாட்டார்.

     பிடித்த கதைகள் எதுவுமில்லை.

     இவர்களெல்லாம் பழைய கதாநாயகர்கள். புதிய கதாநாயகர்கள் சிலரை முத்து காமிக்ஸ் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மர்ம மனிதன் மார்ட்டின்

       இப்போதைக்கு எனக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகர்களின் ஒருவர்.  முதல் இரு கதைகளில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவிட்டாலும், அடுத்த இரு கதைகளால் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.  இவரின் புத்தகம் தான் முத்து காமிக்ஸின் அடுத்த வெளியீடு. வழக்கம் போல் காலதாமதம்.  என்று வரும் என காத்திருக்கிறேன்.

சி.ஐ.டி இராபின்

    என்னை பொறுத்த வரையில் இவர் தேறா கேஸ்.  உங்களில் யாருக்காவது இவரை பிடிக்குமா?

கேப்டன் டைகர்

      இவரை பற்றி தவறாக ஒரு வார்த்தை நான் எழுதினாலும் என்னை வீடு புகுந்து உதைக்கக் கூடிய என் நண்பர்களை இரசிகர்களாக பெற்றிருப்பவர்.  அமெரிக்காவில் சிவில் யுத்தம் நடக்கையில் நடந்த நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் பின்புலத்தினை கொண்டது.  அட்டகாசமான சித்திரங்கள், அருமையான கதைகள். 

     குறை என்னவென்றால், அனைத்தும் பெரிய கதைகளாக இருப்பதால் சிறிது சிறிதாக போடுவது அதனுடைய வீர்யத்தை குறைப்பதாக உள்ளது.

        என்னுடைய பேவரைட் அனைத்து கதைகளும் என்றாலும், தங்க கல்லறை சான்ஸே இல்லை.

         முத்து காமிக்ஸ் பற்றி இன்னும் பேசலாம் என்றாலும், இந்த பதிவோடு முடித்துக் கொண்டு, அடுத்த பதிவில் மற்றொரு காமிக்ஸை பற்றி பேசலாமா என்பதற்கு உங்கள் கருத்துகளை எதிர்நோக்கியிருக்கிறேன்.

                                                        (……………..இன்னும் பேசலாம்……………………)

Entry filed under: Hunter's Mind.

21-10-2008 22-10-2008

9 Comments Add your own

  • 1. King Viswa  |  October 21, 2008 at 9:12 pm

    Dear Share Hunter,

    மிகவும் சிறப்பாக உள்ளது தங்களின் காமிக்ஸ் கட்டுரைகள். தயவு செய்து நிறுத்த வேண்டாம்.

    //அதில் சில ஆசிரியர்களின் பெயர்களும் இருந்தன.//

    அடடே, என்ன ஆச்சர்யம். இங்கேயும் அதே சிந்தனைதான்.

    //Who are the Blacksheeep?//

    ரிப் கிர்பி’இன் சிறப்பான கதைகளை நாம் இன்னமும் தமிழில் படிக்க வில்லை. நாம் படித்தவை எல்லாம் எடிட்டர்’க்கு பிடித்த கதைகளே. இருந்தாலும் நான் அந்த கருப்பு ஆடு இல்லை.

    //இன்னொரு கதை பெயர் நினைவில்லை. ஆனால் அதில் வில்லன் மற்றும் இவர்கள் கவிதைகளாக சொல்லி சாகசங்கள் நிகழ்த்துவார்கள்//

    அந்த கதை பரலோக பயணம் (இதழ் என் 194 ). லேட்டஸ்ட்’அக வந்த கதை அது. ஒரிஜினல் Fleetway Publication கதை அல்ல அது.

    //எனக்கு பிடித்த கதை காசில்லா கோடீஸ்வரன்//

    மினி லயனில் வந்த இந்த கதை உங்கள் மனதை கவர்ந்ததில் வியப்பில்லை.

    //மூகமுடி வேதாளர் = முத்து காமிக்ஸ் வெளியிட்ட இவரின் அனைத்து கதைகளும் நன்றாக இருக்கும். இவர் இராணி காமிக்ஸில் மட்டுமே சொதப்பினார்//

    இதன் மூலம் எடிட்டரின் திறமையை நாம் அறியலாம். ஒரு நல்ல கதையை மோசமான எடிட்டர்’அல் கொள்ளல முடியும் (ராணி காமிக்ஸ் எண் 91’க்கு பிறகு வந்த எடிட்டர் A.M சாமி).

    //மர்ம மனிதன் மார்ட்டின் = இவரின் புத்தகம் தான் முத்து காமிக்ஸின் அடுத்த வெளியீடு. வழக்கம் போல் காலதாமதம். என்று வரும் என காத்திருக்கிறேன்//

    பொன்னில் ஒரு பிணம் தயார் ஆகி விட்டது. தீபாவளிக்கு முன் வெளி வரும்.

    //சி.ஐ.டி இராபின் = என்னை பொறுத்த வரையில் இவர் தேறா கேஸ். உங்களில் யாருக்காவது இவரை பிடிக்குமா?//

    மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நமது சிந்தனை மாறுபடுவது இந்த ஒரு விஷயத்தில் தான். தயவு செய்து வீடியோவில் ஒரு வெடிகுண்டு என்ற கதையை படிக்கவும்.

    //கேப்டன் டைகர் = என்னுடைய பேவரைட் அனைத்து கதைகளும் என்றாலும், தங்க கல்லறை சான்ஸே இல்லை.//

    அனைத்து காமிக்ஸ் பிரியர்களின் தேர்வும் அதுவே.

    அவரது ஒரிஜினல் பெயர் ப்ளுபெர்ரி ஆகும். திரு விஜயனின் புண்ணியத்தால் அவர் டைகர் ஆனார். தங்க கல்லறை சினிமாவாக வெளி வந்தது. மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்: http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/icerberg-comics-3rd-issue-blueberry.html

    நீங்கள் தொடர்ந்து முத்து காமிக்ஸ் பற்றியே எழுதவும். இல்லை என்றால் நானே பல கள்ள வோட்டுகள் போட வேண்டி வரும்.

    நன்றியுடன்,

    கிங் விஸ்வா.
    http://www.tamilcomicsulagam.blogspot.com

  • 2. sathish  |  October 22, 2008 at 8:39 am

    அன்பிற்குரிய பங்கு வேட்டையருக்கு,

    எனது ஆல்-டைம் ஃபேவரைட் ஹீரோவான இரும்புக்கை மாயாவியைப் பற்றி பதிவிட்டதற்கு நன்றி.

    எனக்கு மிகவும் பிடித்த கதை “நடுநிசிக் கள்வன்” தான். ஏனென்றால் நான் தமிழில் படித்த முதல் காமிக்ஸ் இதுதான் (1986-ல் மறுபதிப்பாக வந்த போது). ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. கதையும் ஓவியமும் இன்னும் கண்ணில் நிற்கிறது.

    இதில் வில்லனாக வரும் “மாண்டிஜுமா” ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். பார்வையிழந்த நிலையிலும் அவர் காளையுடன் கடைசி மோதலுக்கு தயாராகும் கட்டம் அற்புதம்.

    கதையின் ஆரம்பமே அதிரடியாக இருக்கும். மாண்டிஜுமா பங்கேற்கும் ஒரு ஜல்லிக்கட்டைக் காண மாயாவி வந்திருப்பார். எல்லோரும் மாண்டிஜுமாவின் வீரத்தை புகழ மாயாவி மட்டும் “காளைக்கே வெற்றி கிடைக்கலாம்” என ‘பஞ்ச்’ அடித்து விட்டு அங்கிருந்து வெளியே வந்து அருங்காட்சியகத்தில் நடக்கும் ஒரு கொள்ளையை அன்றிரவு தடுப்பார். அதன் பிறகு மண்டிஜுமாவே நேரில் வந்து ஜன்னலில் மோதிரத்தால் வட்டமாக ஓட்டை போட்டு ஒரு பண்டை அஸ்டெக் பொக்கிஷத்தை களவாடிச் சென்று விடுவார். அவர் தான் “நடுநிசிக் கள்வன்” என்று நமக்கு அப்போது தான் தெரிய வரும்.

    அதே போல் பார்வையிழந்த ஒரு விமானியை அரூபமாக இருக்கும் மாயாவி வழி நடத்திச் செல்லும் கட்டமும் அற்புதம். அந்தக் காட்சியின் IRONY என்னை மிகவும் கவர்ந்தது.

    அதன் பிறகு தான் முத்துவின் தீவிர ரசிகனானேன். அப்போதெல்லாம் லயன், மினி லயன், திகில், ராணி எனப் பல காமிக்ஸ் வந்தாலும் நான் முத்து மட்டும் தான் வாங்குவேன். ஏன்னா அதுலதானே மாயாவி வர்றாரு!

    இதோ எனது டாப்-5 மாயாவி கதைகள்.

    1) நடுநிசிக் கள்வன்
    2) இயந்திரப் படை
    3) சைத்தான் சிறுவர்கள்
    4) இரும்புக்கை மாயாவி (முதல் கதை)
    5) நியூயார்க்கில் மாயாவி

    ஆனால் நீங்கள் சொல்லுவது போல் லாரன்ஸ் & டேவிட் மற்றும் ஜானி நீரோ & ஸ்டெல்லா ஒன்றும் மோசமான கதைத் தொடர்கள் அல்ல.

    லாரன்ஸ் & டேவிட்டின் ஃபார்மூலா X-13, மஞ்சள் பூ மர்மம், பனிக்கடலில் பயங்கர எரிமலை, தலை கேட்ட தங்கப் புதையல், ஃப்ளைட் 731 முதலிய பல கதைகளும், ஜானி நீரோ & ஸ்டெல்லாவின் மூளைத் திருடர்கள், சதிகாரர் சங்கம், கடத்தல் முதலைகள், பெய்ரூட்டில் ஜானி, கொலைக்கரம் என அனைத்துக் கதைகளும் அட்டகாசமாக இருக்கும்.

    உண்மையைச் சொல்வதானால் மாயாவி கூட அவ்வப்போது சொதப்புவார் (களிமண் மனிதர்கள், இயந்திரத் தலை மனிதர்கள் எல்லாம் டுபாக்கூர் கதைகள்). ஆனால் இவ்விரு சாகச ஜோடிகளும் ஒரு போதும் சோடை போனதில்லை. முத்து காமிக்ஸின் வெற்றிக்கு இவர்களின் பங்களிப்பு மகத்தானது.

    ரிப் கிர்பி, காரிகன் கதைகள் அனைவருக்கும் பிடிக்காதுதான், ஆனால் காரிகனின் மடாலய மர்மம், பனித்தீவின் தேவதைகள், இரண்டாவது வைரக்கல் எங்கே?, வான்வெளி சர்க்கஸ், வைரஸ்-X முதலிய பல கதைகளும், ரிப் கிர்பியின் புதையல் வேட்டை, கள்ள நோட்டுக் கும்பல், ரோஜா மாளிகை ரகசியம், சூரிய சாம்ராஜ்யம், மரண மாளிகை (லயன்) போன்ற கதைகளும் அற்புதமாக இருக்கும்.

    காரிகனில் ஓவியர் அல் வில்லியம்சனின் ஓவியங்கள் அற்புதமாக இருக்கும். அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பியின் கதைகளில் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் ரசனைக்குரியதே. அதிலும் டெஸ்மாண்ட் ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு குளறுபடி செய்து நம்மை சிரிக்க வைத்து விடுவார்.

    இது தவிர முகமூடி வேதாளன் (ஜூம்போ, கீழ்த்திசை சூனியம், பூவிலங்கு, முத்திரை மோதிரம், முகமூடி வேதாளன்), மந்திரவாதி மாண்ட்ரேக் (மர்மத் தலைவன், கொலைக்கு விலை பேசும் கொடியவன், எமனின் எண் 8, இருளின் விலை இரண்டு கோடி, குறும்புக்கார சுறாமீன்), சிஸ்கோ கிட் (ஆவியின் கீதம், இரத்த வெறியர்கள், இரயில் கொள்ளை, யார் குற்றவாளி?, மர்மச் சுரங்கம்), சார்லி (சிறை மீட்டிய சித்திரக் கதை, பேய்த்தீவு ரகசியம், திக்குத் தெரியாத தீவில், ஒரு நாள் மாப்பிள்ளை, குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்), விங் கமாண்டர் ஜார்ஜ் (ஒற்றன் வெள்ளை நரி, நெப்போலியன் பொக்கிஷம், 10 டாலர் நோட்டு, பனியில் புதைந்த ரகசியம், மரண மச்சம்) ஆகியோரின் கதைகளும் மறக்க முடியாது.

    சமீபத்தில் வந்த கதைகளில் கேப்டன் டைகர் தவிர மற்ற யாரும் பெரிதாக பாதிக்கவில்லை. C.I.D. ராபின் ஒரு சில கதைகள்தான் நன்றாக இருக்கும். மர்ம மனிதன் மார்டின் கதைகள் எல்லாமே சுமார் ரகம்தான். முக்கால்வாசி டுபாக்கூர் தான்.

    ரிப்போர்ட்டர் ஜானி திகிலிலிருந்தே பரிச்சயமானவர். எனக்கு அவரின் எல்லா கதைகளும் பிடிக்கும். பலருக்கு புரிவதில்லை என்பதால் பிடிக்கவில்லை என்கின்றனர்.

    நீண்டு கொண்டே செல்லும் இந்த பின்னூட்டத்தை இத்தோடு முடித்துக் கொள்கிறேன். தொடரட்டும் உமது பணி.

    வாழ்த்துக்கள்,

    தே.சதீஷ்.

  • 3. sharehunter  |  October 22, 2008 at 6:38 pm

    சதீஷ்,

    காரிகனின் கதைகள் நன்றாக இருக்கும் என்றல்லவா சொல்லியிருக்கிறேன். ரிப் கிர்பி விக்ஷயத்தில் உங்கள் கருத்துடன் மாறுபட வேண்டியதிருக்கிறது.

    லாரன்ஸ் டேவிட் கதைகளில் தலை கேட்ட தங்க புதையல் எனக்கு பிடிக்கும். மற்ற கதைகளை படித்திருக்கின்றேன் என்றாலும்………

    ஜானி நீரோ விக்ஷயத்தில் நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    மற்ற கதாநாயகர்களை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

    உங்கள் பின்னுாட்டம் மிகவும் அருமை. விஸ்வா உங்களை பற்றி சொன்னார். சி ஐ டி இராபின் கதைகளை பற்றிய உங்கள் கருத்துகளை அவரிடம் சொன்னீர்களா? 🙂

  • 4. ramprasad.v  |  October 22, 2008 at 7:09 pm

    hi

    u digged out my school days.
    (palli naal ninaivugalai kilarivitteergal)

    how about LOOK-LUCKY-LOOK like comedy stories…?
    they are “COMPLETE FUN”

    i eagarly read RANI 007 stories on “release” days.

    however 17-18-19th century GANGSTER ACTION stories of US attracted me a lot. I don’t know y?

    good work by you.

  • 5. King Viswa  |  October 22, 2008 at 7:33 pm

    சதீஷ்,

    நீங்கள் என்னுடைய இரும்புக்க் கை மாயாவி பற்றிய எண்ணங்களை தூண்டி விட்டீர்கள்.

    நாடு நிசி கள்வன் கதையின் முடிவில் மான்த்சுமா காளையை எதிர் கொள்ளும் அந்த பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது.

    மிகவும் ரசிக்கத்தக்க வில்லன் அவர்.

    King Viswa.

    http://www.tamilcomicsulagam.blogspot.com

  • 6. simba  |  October 25, 2008 at 8:07 pm

    ரிப் கெர்பிக்கு ஒட்டு போட்டது ஆடு இல்ல சிங்கம். 😉 😉 …

    15 வருசமா தொடர்ந்து படித்த கதைகள். சமீபகாலமா அதற்க்கான வாய்ப்பு கிடைகல. காரணம் இங்க காமிக்ஸ் புத்தகங்கள் கிடைப்பதில்லை. அது என்னோமோ தெரியல எனக்கு ரிப் கெர்பி சாகசங்கள் ரொம்ப பிடிக்கும். அதும் புதையல் வேட்டை, மரண மாளிகை போன்ற கதைகள் இன்றும் நினைவில் உள்ளது.

    அது இல்லாமல் பெய்ரூட்டில் ஜானி, தலை கேட்ட தங்க புதையல் , மஞ்சள் பூ மர்மம், போன்ற கதைகளை மறக்க முடியாது.

    இப்பொழுது நீங்கள் சொல்வது போல் டைகர் கட்சிகள் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. எனது all time favorite தங்க கல்லறை. ஒரு முறை இரண்டாவது பாகம் கிடைக்கவில்லை என்று மீண்டும் முதல் பாகம் வங்கி படித்தேன்.

    ரிப்போர்ட்டர் ஜானி கதைகளும் எனக்கு பிடிக்கும். ஆனால் பெரும்பாலான கதைகளின் பெயர்கள் மறந்து விட்டன.

    இந்த பதிவை படிக்க , ரசித்து படிக்க ஒரு நாள் வேண்டும். ஆகையால் தான் இன்று இந்த பின்னூட்டம்.

    இன்னும் அதிகமா எழுதுங்க.. அருமையா இருக்கு…

  • 7. Rafiq Raja  |  October 30, 2008 at 12:48 pm

    ரிப் கிர்பி யின் சாகசங்கள் நிறைய பேருக்கு பிடிக்காது என்பது உண்மை தான் என்றாலும், அவரின் ஆர்பாட்டமில்லாத துப்பறியும் திறன், எனக்கு என்றும் பிடித்த ஒரு விஷயம். என்னுடைய வலைப்பதிவில் தற்போது அவர் தளங்யங்கத்தை பகிர்ந்து கொண்டு இருப்பதிலேயே, உங்களுக்கு புரிந்து இருக்கும். இருந்தாலும் நான் போட்ட வோட்டு சந்தேகம் இல்லாமால் இரும்பு கை ‘கு தான்.

    சிறுவயதில், அவர் சாகசங்களை படித்து, அரூவமாக இருந்தால் கிடைக்கும் லாபங்களை கனவில் சஞ்சரித்தது, இன்றும் நினைவில் தங்கும் விஷயங்கள். அவர் தோன்றிய எல்லாம் சிதிரகதைகளும் எனக்கு பிடித்தவை தான்.

    // தமிழில் மிகச் சிறந்த சித்திர கதை எடிட்டர்கள் சிவகாசியில்தான் உள்ளனர். //

    முற்றிலும் உண்மை.

    உங்களுடைய பட்டியலில், அனைவரும் எனக்கு பிடித்த கதாநயகர்களே. ராபின் (aka, Nick Raider) உங்களுக்கு பிடிக்காமல் போனது ஒரு ஆச்சர்யம். விஸ்வா கூறியது போல “வீடியோவில் வெடிகுண்டு” தொட்று சமீபத்திய “சித்திரமும் கொல்லுதடி” (அதை பற்றியும் எனது வலைப்பதிவில் பதிந்து இருக்கிறேன் http://comicology.blogspot.com/2008/07/muthu-309-detective-robin-july.html), முதற்கொண்டு அனைத்தும் அனைவர் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது.

    சமீபத்திய கதாநாயகர்களில் என்னுடைய மனம் கவர்ந்தவர்கள்:

    1. ரிப்போர்ட்டர் ஜானி: இடியாப்ப சிக்கல் மர்மங்களை அவர் தோண்டி எடுப்பது ஒரு தனி சுவாரசியம். இரண்டு முறை படித்த பின்பே கதை முழுவதும் புரிவது Top Class.

    2. டைகர் (அல்ல Blueberry): டெக்ஸ் வில்லர் க்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்த ஒரு Wild-West ஹீரோ.

    3. லக்கி லுக்: இவரை பிடிக்காதவர் யாராவது இருக்க முடியுமா?

    4. மார்டின்: விஞ்ஞானம், மந்திரம், கலந்த இவரின் சாகசங்கள் தற்போதைய Sci-Fi genre க்கு ஒரு சரியான விருந்து.

    முத்து காமிக்ஸ் ‘இன் மார்டின் கதை தற்போது வெளி வந்து விட்டது. ஒரு முன்னோட்டம் விட எனது வலைப்பதிவை சுட்டி பாருங்கள், கூடவே கருத்துக்களை பதிந்தால் மிக்க நன்று.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்
    – “ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்”

  • 8. Rafiq Raja  |  October 30, 2008 at 12:55 pm

    ரிப் கிர்பி யின் சாகசங்கள் நிறைய பேருக்கு பிடிக்காது என்பது உண்மை தான் என்றாலும், அவரின் ஆர்பாட்டமில்லாத துப்பறியும் திறன், எனக்கு

    என்றும் பிடித்த ஒரு விஷயம். என்னுடைய வலைப்பதிவில் தற்போது அவர் தளயங்கத்தை பகிர்ந்து கொண்டு இருப்பதிலேயே, உங்களுக்கு புரிந்து

    இருக்கும். இருந்தாலும் நான் போட்ட வோட்டு சந்தேகம் இல்லாமால் இரும்பு கை ‘கு தான்.

    சிறுவயதில், அவர் சாகசங்களை படித்து, அரூவமாக இருந்தால் கிடைக்கும் லாபங்களை கனவில் சஞ்சரித்தது, இன்றும் நினைவில் தங்கும்

    விஷயங்கள். அவர் தோன்றிய எல்லாம் சிதிரகதைகளும் எனக்கு பிடித்தவை தான்.

    // தமிழில் மிகச் சிறந்த சித்திர கதை எடிட்டர்கள் சிவகாசியில்தான் உள்ளனர். //

    முற்றிலும் உண்மை.

    உங்களுடைய பட்டியலில், அனைவரும் எனக்கு பிடித்த கதாநயகர்களே. ராபின் (aka, Nick Raider) உங்களுக்கு பிடிக்காமல் போனது ஒரு ஆச்சர்யம்.

    விஸ்வா கூறியது போல “வீடியோவில் வெடிகுண்டு” தொட்று சமீபத்திய “சித்திரமும் கொல்லுதடி” (அதை பற்றியும் எனது வலைப்பதிவில் பதிந்து

    இருக்கிறேன் http://comicology.blogspot.com/2008/07/muthu-309-detective-robin-july.html), முதற்கொண்டு அனைத்தும் அனைவர் மத்தியில்

    நல்ல பாராட்டுகளை பெற்றது.

    சமீபத்திய கதாநாயகர்களில் என்னுடைய மனம் கவர்ந்தவர்கள்:

    1. ரிப்போர்ட்டர் ஜானி: இடியாப்ப சிக்கல் மர்மங்களை அவர் தோண்டி எடுப்பது ஒரு தனி சுவாரசியம். இரண்டு முறை படித்த பின்பே கதை முழுவதும்

    புரிவது Top Class.

    2. டைகர் (அல்ல Blueberry): டெக்ஸ் வில்லர் க்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்த ஒரு Wild-West ஹீரோ.

    3. லக்கி லுக்: இவரை பிடிக்காதவர் யாராவது இருக்க முடியுமா?

    4. மார்டின்: விஞ்ஞானம், மந்திரம், கலந்த இவரின் சாகசங்கள் தற்போதைய Sci-Fi genre க்கு ஒரு சரியான விருந்து.

    முத்து காமிக்ஸ் ‘இன் மார்டின் கதை தற்போது வெளி வந்து விட்டது. ஒரு முன்னோட்டம் விட எனது வலைப்பதிவை சுட்டி பாருங்கள், கூடவே

    கருத்துக்களை பதிந்தால் மிக்க நன்று.

    ரஃபிக் ராஜா
    http://comicology.blogspot.com
    காமிக்கியல் – “ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்”

  • 9. ஸ்ரீனி  |  January 10, 2010 at 10:27 am

    எனக்கு மிகவும் பிடித்த் காமிக் புக் ஹீரோ ஃபிலிப் காரிகன்.. இப்போது தான் தேடி நெட்டில் சிலவற்றை மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

    லாரன்ஸ் அண்ட் டேவிட்டின் ‘தலை கேட்ட தங்கப் புதையல்’ ( இது மெக்சிகோவின் அஸ்டெக் குறித்த கதையென்று நினைக்கிறேன் ) மிகவும் பிடித்தது…

    வேதாளரும் மாண்ட்ரேக்-நர்தா/லொதார்-கார்மா(I think I got her name right !! ) எல்லாக் கார்ட்டூன் காரக்டர்களுமே மிகவும் பிடித்தவை..

    ரிப் கிர்பியின் ‘சூரிய சாம்ராஜ்யம்’ மறக்க முடியாதது (கதையால் மட்டுமல்ல வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும் 🙂 )…

    பழைய நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி..

    -ஸ்ரீனி

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
October 2008
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031