Archive for July 13, 2008

பணவீக்கம் II

     பண்டமாற்று முறையை எளிதாக்க வேண்டி நாணயம் அறிமுகப்படுத்தப் பட்டது.  செம்பு, இரும்பு, வெள்ளி  போன்ற உலோகங்களில் நாணயங்கள் அச்சிடப்பட்டு உபயோகத்தில் விடப்பட்டன. தோலில் கூட நாணயம் தயாரிக்கப்பட்டன. அந்த நாணயங்களுக்குரிய மதிப்பு இடத்திற்கு இடம், நாட்டிற்கு நாடு மாறுபட்டது. ஒரு நகரத்தில் பெரிய மதிப்பைக் கொண்ட ஒரு நாணயம் மற்றொரு நகரத்தில் அதே மதிப்பீட்டில் பரிமாற்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.  இந்த வரிசையில் தங்கம் சேர்ந்தபிறகுதான் பண்டமாற்று முறையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது எனலாம். உலகப் பொருளாதாரத்தில் கூட தான். அனைத்து நாடுகளுக்கும் கடற்பாதை கண்டுபிடித்த பிறகு, தங்கமே முக்கிய பண்டமாற்று நாணயமாக ஆயிற்று.  அதன்பின், உலக நாடுகள் அனைத்தும் தங்கத்தை அடிப்படையாக கொண்டே நாணயங்கள் வெளியிட ஆரம்பித்தன. உலக பொருளாதாரமே தங்கத்தை மையமாக வைத்து எழுப்பப்பட்டன. தங்கம் இத்தகைய இடத்திற்கு செல்ல முக்கிய காரணங்கள் : தங்கம் கிடைப்பதற்கரிய பொருள், நெடுநாள் உபயோகப்படுத்தலாம், எந்த சூழலிலும் போலி தயாரிப்பது அரிது. நமது நாட்டில் அரசர்கள்  புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு தங்கக் காசுகள் அடங்கிய பொற்கிழியை தருவார்கள் என படித்திருக்கின்றோம். தங்கம் அடர்த்தி அதிகமாதலால் எடை அதிகமாக இருக்கும். புலவர்கள் பொதுவாக ஸ்லிம்மாக தான் இருப்பார்கள். எவ்வாறு பொற்கிழியை துாக்கிக் கொண்டு போயிருக்க முடியும்?  மேலும் உலகத்தில் பல பகுதிகளிலும் இம்மாதிரி புகழ்ந்து பாடினால் பரிசு என்ற வழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை.

     பண்டமாற்று முறையை எளிதாகதான் பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்றால் அதை அச்சடித்து கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். முதல் பகுதியில் சொன்ன பணம் மற்றும் பொருட்களின் சமநிலையை பேண வேண்டியதும் அரசின் கடமை என்பதால், இஷ்டப்படி பணத்தை அச்சடித்து வெளியிட முடியாது. எவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்படுகிறதோ, அந்த அளவு மதிப்பிற்கு தங்கத்தை சேமிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முறை இருந்தது. இந்த முறைக்கு Gold Standard  என்று பெயர். இந்த முறையில் உள்ள நன்மைகள் என்னவென்றால், பணவீக்கத்தை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும், பொருள்-பணம்-பரிமாற்றம் போன்றவற்றிற்கு சமநிலையை சீராக பேண முடியும். மிக வலுவான பொருளாதாரம் நாட்டில் ஏற்படும். ஆனால், சந்தை பொருளாதாரம் வளர வளர அதற்கேற்ப பணத்தை புழக்கத்தில் விட இயலவில்லை. பணத்தின் மதிப்பிற்கேற்ப தங்கத்தை சேமிப்பில் வைக்க வேண்டியிருந்ததே இம்முறையின் தோல்விக்கு காரணம் என சொல்லலாம். தற்போது இம்முறையை எந்த நாடுகளும் முழுவதும் பின்பற்றுவதில்லை. ஸ்விட்சர்லாந்தை தவிர. இதில்  Silver Standard என்ற முறை கூட உண்டு. 

      தற்போது அனைத்து நாடுகளும் பின்பற்ற தொடங்கியிருப்பது பியட் பணம் (Fiat Currency)  (கார் இல்லீங்க) என்ற முறையே ஆகும். பியட் என்ற சொல் இலத்தீன் மொழியில் வந்தது. அதற்கு அர்த்தம் “அடிச்சு பட்டய கிளப்புங்க”.  அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கேற்ப பணத்தை அச்சடித்து விநியோகம் செய்யலாம். அச்சிடும் பணத்தின் மதிப்பிற்கேற்ப வேறு எந்த பொருளையும் கையிருப்பில் வைத்திருக்க அவசியமில்லை. இது எப்படியென்றால் பலசரக்கு கடை மாதிரி. முறையான கணக்கு ஏதும் சரிவர பேணப்படாமல், தினசரி ரொடேஷன் செய்து வணிகம் செய்வது மாதிரி. இது பற்றி மிக விரிவாக பேசலாம் என்றாலும், தற்சமயம் இதன் சில இருண்ட முகங்களை மட்டும் பார்ப்போம். அரசாங்கம் நீண்ட கால நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி சமநிலையை பேணாமல், குறுகிய கால நோக்கில், சரியான திட்டநோக்கு இல்லாமல் செயல்படுத்தினால் தீவிர பணவீக்க பிரச்சினை (Hyperinflation)  வர வாய்ப்பும் உண்டு. முதல் உலகப்போர் முடிந்த பிறகு ஏற்பட்ட தீவிர பணவீக்கத்தால் ஜெர்மனியில் குளிருக்கு தீ முட்ட பணக்கட்டுகளே பயன்படுத்தப்பட்டன. விறகு வாங்குவதை விட பணக்கட்டுகளை உபயோகிப்பது செலவு குறைவாக இருந்தது. இந்த முறை உலகில் ஒரு சமச்சீரற்ற பொருளாதார நிலையை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் வளர்ந்து வரும் உலக பொருளாதாரத்திற்கேற்ப இன்னும் Gold Standard முறையை பயன்படுத்த முடியாது என்றபோதிலும், இம்முறையை இன்னும் சீரமைக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் ( இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்)  கருதுகின்றார்கள். இந்த முறையால் இருபத்தோராம் நுாற்றாண்டில் இனி நடக்கப்போவது எல்லாம் பொருளாதார போர்களே. எந்த நாடும் எந்த நாட்டின் பணத்தை வேண்டுமானாலும் மதிப்பிழக்க வைக்க முடியும். நாம் தலையில் துாக்கி வைத்து கொண்டாடும் அமெரிக்க டாலர்கள் கூட விதிவிலக்கல்ல.

      இப்போது தாய்நாட்டிற்கு திரும்புவோம். 1965-1977 வரை நம்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள்.  அந்த நேரத்தில் அயல்மொழிகளில் வரும் புத்தகங்கள், செய்திதாட்கள் அனைத்துமே இந்தியா பக்கீர்களும், மிகுந்த குழப்பமான சாலைப் போக்குவரத்தையும், நாகரிகமற்ற மக்களையும் கொண்டிருக்கும் நாடு என்ற கருத்திலேயே இருந்தன. சிறுவர், சிறுமியருக்கு பிரியமான டின் டின் சித்திர தொடரில் கூட அதன் கதாசிரியர் இத்தகைய கண்ணோட்டத்திலேயே எழுதியிருப்பார். தற்போதைய கார்ப்ரேட் இந்தியா பற்றி யாரேனும் கனவு கண்டு சொல்லியிருந்தால் அவரை ஒரு மாதிரியாகவே பார்த்திருப்பார்கள்.

     இந்திய-பாகிஸ்தான் போர் 1965 ( இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப் பெரிய இரானுவ யுத்தம் என்று இதை சொல்லலாம். அதன் பிறகு வந்த யுத்தங்கள் அனைத்திலும் அதி நவீன போர்க் கருவிகள் பங்கேற்க ஆரம்பித்தன),  வறட்சி, போன்ற சிக்கல்களில் நம்நாடு முழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா மற்றும் அதன் சார்பு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை செல்லப்பிள்ளையாக பாவித்த கால கட்டம் அது. லால் பகதுார் சாஸ்திரி மரணமடைந்து இடைக்கால பிரதமர் பதவியேற்று முடித்து இந்திரா காந்தி பதவிக்கு வருகிறார். அரசாங்கம் ஒரளவு ஸ்திரதன்மை பெற்றது.  அந்த நேரத்தில் தான் நம்ம சூப்பர் ஸ்டார் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்து அறிமுகம் ஆவார்.(யோவ், இதுக்கும் பணவீக்கத்திற்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்காதீர்கள், நமக்கு பிடிச்ச பழமொழிகளை மட்டும் தான் கட்டுரையில்ல சேர்க்க வேண்டும் என்று  விதி இருக்கா).  1971-ல் பாகிஸ்தானுடன் மீண்டும் யுத்தம் செய்து பட்டையை கிளப்பி பங்களாதேஷ்-ஐ உருவாக்கினோம். ஒரு நாட்டை ஆரம்பத்திலிருந்து உருவாக்குவது என்பது எவ்ளவு கடினமான காரியம் என்று தெரியுமா! தற்போது ஈராக்கில் மாட்டிக் கொண்டு முழிக்கும் அமெரிக்காவை பார்த்தால் தெரியும். நாம் அதை 1972-லேயே செய்து விட்டோம். நம்முடைய பொருளாதாரம் அப்போது எந்த நிலையில் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். போதாக்குறைக்கு பொக்ரானில் அனுக்குண்டு வெடிக்க இரகசியமாய் திட்டங்களையும் தீட்டிக் கொண்டிருந்தோம். எவ்வளவு மிகவும் தைரியமான அரசாங்கம் அது!
     அந்த காலகட்டத்தில் 1975-ல்  ஒரு அமெரிக்க டாலர் எத்தனை ருபாய்க்கு சமம் என்று தெரியுமா? வெறும் எட்டே ருபாய் தான். அப்போது அனுகுண்டு வெடிக்கவில்லை, பெரிய அறிவியல் முன்னேற்றங்களை அடைந்திருக்கவில்லை. தகவல் தொழிற்நுட்பங்களில் …. அதை விடுங்கள், கணிப்பொறிகளே நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தன. இப்பொழுது நாம் உலக வல்லரசுகளின் மதிப்பிற்குரிய நாடு. ஒரு அமெரிக்க டாலருக்கு நாற்பத்தி நான்கு ருபாயாக பரிமாற்ற விலை இருக்கிறது. இதற்கிடையில் என்ன நடந்தது, நாம் சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கின்றோமா, பணவீக்கத்தின் அடிப்படையை நாம் நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால் நமது ருபாயின் வரலாறையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

July 13, 2008 at 10:40 am 4 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
July 2008
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031