பொருளாதாரமும், பலியாடும்
September 6, 2008 at 1:06 pm 3 comments
இன்றைக்கு பிஸீனஸ் லைன் (Business Line) செய்தித் தாளில் முதல் பக்கம் வந்திருக்கும் பார்க்ளேஸ் கேப்பிடல் (Barclays Capital) நிறுவனத்தின் அறிக்கையில் இந்திய நிதி அமைச்சர் கூடிய விரைவில் மாற்றப் படலாம் என்ற செய்தி.
பார்க்ளேஸ் நிறுவனம் (Barclays Inc) உலகளாவிய நிதி நிறுவனங்களின் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பார்ட்சூன் 500 (Fortune 500) நிறுவனமாகும். ஆசிய, ஐரோப்பிய கண்டங்களில் இந்நிதி நிறுவனம் ஏகப்பட்ட முதலீடு செய்திருக்கிறது. குறிப்பாக சீனா, இந்தியா. இந்நிலையில், இந்நிறுவனத்திலிருந்து வெளிவந்த அறிக்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு கூடிய விரைவில் புதிய பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தி பணவீக்கத்தை குறைக்க வாய்ப்பிருக்கிறது. புதிய பொருளாதார கொள்கைகளை புதிய நிதி மந்திரி முலமாக செயல்படுத்த வாய்ப்பிருக்கிறது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பணவீக்கம் என்றால் என்ன என்று நமக்கு ஒரளவு தெரிந்தாலும், இந்த ஏறும் விலைவாசிக்கு மத்திய அரசையே முழுவதும் குறைசொல்ல முடியாது. பணவீக்கம், விலைவாசி ஏற்றம் ஆகியவை நம் நாட்டில் மட்டும் ஏறவில்லை. எல்லா நாடுகளிலும் தான் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால், மற்ற நாடுகள் இதனை எதிர்கொள்ளும் விதமும், நம்நாடு எதிர்கொள்ளும் விதமும் வேறுமாதிரியாக இருக்கின்றது. இவற்றை நீண்டகால நோக்கில் எதிர்கொள்ளும் வகையிலேயே பொருளாதார கொள்கைகள் அமைக்கப்பட வேண்டும். ஒருவேளை, அக்கொள்கைகள் பயனளிக்கும் காலத்தில் தாங்களே ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுவது தாய்நாட்டுக்கு செய்கின்ற துரோகம். அவ்வாறு செயல்படும்போது, கொள்கைகளை அனைத்தும் குறுகிய காலத்தில் பயனடைகின்ற மாதிரி அமைக்கும்போது, நாட்டின் பணப்புழக்கம் முற்றிலும் குறைக்கப்படுகின்றது. பணப்புழக்கமும் இரத்தம் மாதிரி. அது குறைக்கப்படும்போது நாட்டின் தொழிற்துறை முன்னேற்றம் மந்தமாகின்றது.
தற்போது நம் நிதி மந்திரி திரு ப சிதம்பரம் அவர்களை மாற்ற வாய்ப்பு இருக்கின்றது என கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நானும் நம்புகின்றேன். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், நாட்டின் விலைவாசி உயர்வு என்ற பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும்போது, இதற்கு காரணம் காட்ட ஒரு பலியாடு ஒன்றை தற்போதைய மத்திய அரசு தேர்ந்தெடுக்க முயலக்கூடும். மத்திய அரசு வரும் காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது தெரியவிட்டாலும், நமது நிதி மந்திரி மாற்றப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு தமிழர் என்ற வகையில் இல்லாமல், அவரும் நம்மைப்போல ஒரு இந்தியர் என்ற அளவில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
எல்லா கொள்கைகளும் தேர்தல், ஒட்டுகள் என அமைவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சியே ஆகும். ஆனால், அனுசக்தி கொள்கையில் நம்நாட்டு பிரதம மந்திரி எடுத்த உறுதியான செயல்பாடு மிகவும் பாராட்டுதலுக்குறியது. அந்த முடிவினால் நம்நாட்டு வளர்ச்சிக்கு ஆபத்து, ஆபத்தில்லை என இருவேறு கருத்துக்கள் இருவேறு தளங்களில் இயங்கிவந்தாலும் இதன் நன்மை, தீமைகளை இன்னும் ஐந்து வருடங்கள் கழித்தே அறிய இயலும். இவ்வாறு ஐந்து, பத்தாண்டுகள் வரை நீண்டகால நோக்கினையொட்டி திட்டங்கள் தீட்டுவது நம் நாட்டில் இப்போது மிகவும் குறைந்து வருகின்றது. எந்த திட்டங்களை எடுத்தாலும், இதனால் எந்த பகுதி மக்கள் வளமடைகின்றனர், அந்த பகுதியில் நம் கட்சியின் செல்வாக்கு எப்படி, இத்திட்டத்தினால் கட்சி செல்வாக்கு வளருமா இக்கேள்விகள் தான் முக்கியமாக இருக்கின்றன. இராஜீவ்காந்தி கணினி பயன்பாட்டை நம்நாட்டிற்கு எடுத்துவந்தபோது, கணினி பயன்பாட்டால் நாட்டின் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிடும், நாட்டில் உள்ள 20-25-வயதுக்குட்பட்ட வாலிபர்கள் வேலையில்லாமல் நடுத்தெருவில் நிற்க நேரிடும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த காலக்கட்டத்தில் எழுத்தாளர் இரங்கராஜன் (சுஜாதா) போன்றோர் கணினி செயல்பாடு வேலையில்லா திண்டாட்டத்தை பெருக்காது என கூறிய போதும் அக்கருத்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டன. ஏனெனில், நீண்டகால நோக்கில் கருத்துக்களை சொல்லும் நிபுணர்கள் எல்லாம் மக்களுக்கு புரியும் வண்ணம் பேசமாட்டார்கள். அவர்கள் கருத்தும் ஊடகங்களால் திரித்து கூறப்படும். அவர்கள் கருத்துகளும் மென்மையாக கூறப்படும். குரலை ஏற்றி, இறக்கி நாடகபாணியில் கருத்துக்கள் கூற அவர்களால் இயலாது. கணினி பயன்பாட்டைக் கொண்டுவந்ததால் ஏற்பட்ட விளைவுகள் நல்லதா, கெட்டதா என்ன என்பதை தற்சமயம் நாமே பார்த்துப் புரிந்துக் கொள்ளலாம். இந்த நீண்டகால திட்டங்களை நிறைவேற்றும்பொழுது நம்நாட்டில் ஏற்படும் தடங்கல்கள் சொல்லி மாளாது. பாரதீய ஜனதா அரசும் அனுசக்தி சார்பாக சில கொள்கைகளை வகுத்தபோது, எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் அதனை கடுமையாக எதிர்த்தது. இதில் என்ன லாஜீக் என்றே புரியவில்லை. தற்போதைய அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் பேசுகையில், வெங்காயம் விலை என்னாட்சி என்ற கோஷத்தை எழுப்புகின்றார்கள். வெங்காயமும் முக்கியம்தான். நாட்டின் இறையான்மையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது அல்லவா!
இந்தியன் என்று சொல்வதில் நாம் இங்கு பெருமை படலாம். வெளிநாட்டில் வசிக்கும் நம் மக்களும் இந்தியன் என்று சொல்வதில் பெருமைபட வேண்டுமல்லவா!
Entry filed under: செய்தி அலசல்.
1.
Ganesh | September 7, 2008 at 5:10 pm
Dear Sharehunter,
Good article, Thank you for postings, Keep it up.
Thanks.
2.
R.senthilkumar | September 7, 2008 at 5:45 pm
இங்கு பெட்ரோல் விலை கூடினால் வியாபரிகள் இதை காரணமாக வைத்து அவர்கள் இஷ்டம் போல பொருளுக்கு விலை ஏற்றி விடுகிறார்கள் . இதுவும் inflation கூடுவதற்கு காரணமாக இருக்கிறது என்பது என்னுடைய கருத்து , உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது ..நன்றி சார் ..
3.
lakshmi | September 9, 2008 at 6:02 pm
thankes yours Articals