The Princess Bride (1987) – a Laugh Riot

              கற்பனை உலகில் (Fantasy) நடைபெறுவதாக காண்பிக்கப்படும் திரைப்படங்களில் முக்கியமான அம்சங்கள் என்னவென்றால் மிகுந்த பொருட்செலவுடன் கூடிய கிராபிக்ஸ் வித்தைகள், பிரமாண்டமான செட்களில் படமாக்கப்படுகின்ற சண்டைக்காட்சிகள், பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு.  தற்போது ஒலி, ஒளித் தரத்தில் மிகுந்த முன்னேற்றம் அடைந்திருப்பதால் 1980-1990-ம் ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் கற்பனை உலகு (Fantasy) படங்களை பார்க்கும்போது  ஒருவித சலிப்பு அடைந்திருக்கிறேன்.
  
             எங்கள் தெருவில் வசிக்கும் பெரிசுகள் பென்ஹர் புராணத்தையே பாடிக் கொண்டிருப்பார்கள்.  ‘ஒட்டுவான் பாரு தேரை’, ‘ச்சும்மா கிண்ணுன்னு இருப்பான் கதாநாயகன் அப்ப நானும் அப்படிதான் இருந்தேன் (சைடுல இப்படியொரு பிட்டை போடுவார்கள்).    பென்ஹர் எனக்கு மிகுந்த ஏமாற்றமளித்த திரைப்படம்.  அத்திரைப்படத்தில் ஆண், பெண் என எல்லோரும் அரைப்பாவாடை கட்டிக் கொண்டு படம் முழுக்க அலைந்தார்கள்.  உச்சக்கட்ட காட்சியான தேர்ப் பந்தயமும் அவ்வளவாக கவரவில்லை.

The Princess Bride 1987 இலுமினாட்டி ஸ்டைலில் போஸ்டர்

         நிறைய க்ளாஸிக் படங்களை இதன் பொருட்டே தவிர்த்திருக்கிறேன்.  கற்பனை உலகு (Fantasy)  வரிசையில் முதல் பத்து இடங்களில் இருக்கும் படங்கள் என்னவென்று ஒரு முறை பார்க்கும்போது The Princess Bride என்ற திரைப்படமும் பட்டியலில் இருந்தது.  படம் வெளியான ஆண்டு 1987.
   
       அந்த பட்டியலில் உள்ள மற்ற படங்களை பார்த்திருந்தேன்.  இத்திரைப்படத்தையும் முதல் பத்து நிமிடங்கள் பார்ப்போம் என முடிவு செய்து பார்க்க துவங்கினேன்.  திரைப்படம் முடிந்த பிறகுதான் நேரம் உறைத்தது.

கதாநாயகி எப்படி இருப்பாருன்னு தெரியுனுமில்ல ஹி..ஹி எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவரான ஷான் பென்-ன் மனைவி

       ஒரு கற்பனை நாடு.  அங்கே வசிக்கும் ஒரு பண்ணை வேலையாளுக்கும், ஒரு அழகிய பெண்ணுக்கும் காதல். பொருள் தேடி காதலன் வெளியூர் செல்ல, அவளோ சந்தர்ப்பவசத்தால் அந்நாட்டின் இளவரசனால் பட்டத்து இராணியாக்கப்படுகிறாள்.  பிரச்சினைகள்.  காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? அவ்வளவுதான் கதை.

இனிகோ மண்டோயா - உங்க கையில ஆறு விரல் இருக்கா?

         பிரமிக்கதக்க வைக்கும் காட்சிகள் என எதுவுமே இல்லை.  பிரமாண்டமான செட்கள் கிடையாது.  ஒளிப்பதிவு சாதாரண ரகம்தான்.  கதாநாயகியின் முதல்படம்.   வேறு எது இப்படத்தை முதலிடத்தில் வைத்து மற்றத் திரைப்படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றால் வசனங்கள். Not Swashbuckling Action, but Swashbuckling Dialogues.  பின்னியெடுத்திருக்கிறார்கள்.  படத்தில் வெகு சில வசனங்களே சாதாரணமாக இருக்கின்றன.  மற்றவை எல்லாவற்றையுமே Quotation வகையறாக்களில் சேர்த்துவிடலாம்.

கதாநாயகனும் துண்டு மீசையும்

         படத்தின் வசனங்களை கதாநாயகன் மற்றும் இதர கதாபாத்திரங்கள் சொல்லும் விதம் இன்னும் பத்து வருடங்கள் கழித்து பார்த்தாலும் கொஞ்சங்கூட சலிப்பில்லாமல் பார்க்க முடியும்.  கதாநாயகனின் துண்டு மீசை அவ்வளவு அழகு.
 
       
     நான் இரசித்த சில வசனங்களை தமிழ்படுத்தி கொடுக்க முயற்சிக்கிறேன்.  ஆனால் அவைகளை திரைப்படத்தில் ஆங்கிலத்தில் பார்த்தால்தான் அதன் முழு அர்த்ததையும் அனுபவிக்க முடியும்.
 
  
       தன் தந்தையை கொன்ற ஒரு கயவனை தேடும் ஒரு குடிகார வாள்வீரன் சொல்வது
  
‘எங்கப்பனை கொன்னவனை பார்த்தால் அவன் கையில நான் மூனே மூணு வார்த்தைதான் சொல்வேன்.  என்பேரு இனிகோ மண்டோயா.  எங்கப்பனை நீ கொன்னுட்ட.  சாவுடா.’
 
     கதாநாயகனிட்ம் சின்ன வில்லன் சொல்வது
   
‘உங்கிட்ட என்னால சண்டைப் போட்டு ஜெயிக்க முடியாது.  ஆனா புத்திசாலித்தனத்தில் என்ன யாரும் அடிச்சிக்க முடியாது.
‘அவ்வளவு புத்திசாலியா நீ?’
‘பிளாட்டோ,அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் இவர்களை உனக்கு தெரியுமா?
‘தெரியும்.’
‘முட்டாப்பசங்க.’
 
     கதாநாயகனை சித்ரவதை செய்ய கிளம்பும் தளபதி இளவரசனை பார்த்து கேட்கிறார்
   
 ‘நான் அவனை சித்ரவதை செய்றதை பார்க்க வறீங்களா?
‘வர ஆசைதான்.  ஆனா பாரு, நாளைக்கு முக்கியமான நாள். நான் கல்யாணம் பண்ணி, என் பொஞ்சாதிய கொன்னு, அந்த பழிய அடுத்த நாட்டு மேல போடணும்.  நான் வரலை.’
       
           கதாநாயகன் இறந்து விட்டான் என எண்ணி கதாநாயகி தற்கொலை செய்வதற்காக குறுவாளை தன் மார்பில் பாய்சச முற்படும்போது  கட்டிலில் சோர்வாக படுத்திருக்கும் கதாநாயகன் சொல்லும் வசனம் தான் என்னுடைய பேவரைட்.
   
‘அழகிய மார்புகள் அரிதாக உள்ள இவ்வுலகில் ஏன் அவைகளை சிதைக்க முற்படுகிறாய், என் அன்பே.’
   
இத்திரைப்படம் 1987-ல் வந்தது என்பதற்காக யாரும் பார்க்காமல் இருந்து விடாதீர்கள்.  தவறவிடாக்கூடாத திரைப்படம்.

5 comments November 20, 2009

The Hobbit – மாய காவியம்

       அழகான வீடு.  உழைத்து பணம் சேர்க்க தேவையில்லாத அளவிற்கு செல்வம்.  வாழ்க்கையை கொண்டாடும் மக்கள்.   மழைக்காலத்தில் கணப்பின் அருகே அமர்ந்து மதுவை அருந்திக் கொண்டே உறவினர்களுடன் பழங்கதை பேசுதல்.  சுகமான வாழ்க்கை.  இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?  இவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் பில்போ பேகின்ஸ் இல்லத்திற்கு ஒரு மழை இரவில்  ஒரு பயணி வருகிறார்.  சாகசத்திற்கு தயாரா என்கிறார்.       சுக வாழ்க்கை வாழ்கின்ற பில்போ பேகின்ஸ் அதற்கு சம்மதிக்க   த ஹாபிட் (The Hobbit)  என்னும் மாய காவியம் ஆரம்பமாகிறது.

பயணத்தின் ஆரம்பம்

பயணத்தின் ஆரம்பம்

        சூப்பர் ஹீரோக்களையும், மாய உலகங்களையும் எடுத்துக் கொண்டால் ஒரு ஒற்றுமை தென்படும்.  அவற்றில் பெரும்பாலனவை உலகப் போரின் இறுதியிலோ, பங்கு சந்தை வீழ்ச்சியிலோ உருவாக்கப்பட்டவை.  மிகுந்த சிரமமான பொருளாதார சூழலின் நடுவில் இருக்கும்போது இப்படிப்பட்ட கற்பனை உலகங்கள் நமக்கு தேவையாக இருக்கின்றன.  அவ்வாறாக நிறைய உலகங்கள் இருக்கின்றன.  உதாரணத்திற்கு, பேட் மேன் வாழும் கோதம் சிட்டி,  ஹாரி பாட்டர் படித்த ஹாக்வர்ட்ஸ்.  இது போன்ற மாய உலகங்களில் மிடில் எர்த் என ஜே ஆர் ஆர் டோல்கியன் உருவாக்கிய உலகம் உலகெங்கும் இன்னும் நிலைத்திருக்கிறது.

புத்தகத்தின் அட்டைப் படம்

புத்தகத்தின் அட்டைப் படம்

      லார்ட் ஆப் த ரிங்ஸ் என்னும் நாவலின் முன்னோடியே த ஹாபிட்.  இந்த நாவலும் உலகப் போர் நிகழ்வுகளுக்கிடையில் எழுதப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது.  இரண்டாவது வெளிவந்த லார்ட் ஆப் த ரிங் நாவலினால் ஹாபிட் அதற்குரிய முக்கியத்துவம் பெறாமலேயே போய்விட்டது.  ஆனாலும் என் மனதை கவர்ந்த கதைகளில் இதுவும் ஒன்று.  டோல்கியனின் மிகச் சிறந்த புதினமே இதுதான்.

           வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொண்டிருக்கும் பில்போ பேகின்ஸ் அந்த வாழ்க்கையை விட்டு சிரமங்கள் நிறைந்த ஒரு சாகச வாழ்க்கையை நோக்கி போகும் கதையே இது. 

மர்மங்களை அடக்கியுள்ள ஒரு காட்டின் நுழைவு பாதை

மர்மங்களை அடக்கியுள்ள ஒரு காட்டின் நுழைவு பாதை

        சுக வாழ்க்கை கசந்து போய் ஒருவித விரக்தியில் இருக்கும் பில்போ பேகின்ஸ்  நீண்ட பயணத்திற்கு  கூப்பிடும் கண்டல்பை (Gandalf the grey)  நம்பி இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையை உதறி  சாகசத்திற்கு தயாராகிறார். தனித்திருக்கும் மலை (Lonely Mountain ) என்ற பகுதியில் ஒரு டிராகனால் பாதுகாக்கப்படும் புதையலை தேடி, குள்ளர்கள் இனத்தை சேர்ந்தவர்களுடன், கன்டல்ப் என்ற மந்திரவாதியுடன் துணைக் கொண்டு பில்போ பேகின்ஸ் ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகின்றார்.  போகும் வழியில்  மற்ற இனத்தவர்களால் ஏற்படும் அபாயங்கள், நீண்ட, அபாயகரமான பயணப் பாதை, வஞ்சக நண்பர்கள், பல விந்தை மிருகங்களால் ஏற்படும் அபாயங்கள் என பல்வேறு இடையூறுகளை தாண்டி  இவர்களுடன் பயணிக்கும் பில்போ, கோலம்   என்ற விசித்திர ஜீவனிடமிருந்த தந்திரமாக மாயசக்தி கொண்ட  மோதிரத்தை அபகரிக்கின்றார். அந்த மோதிரத்தின் கதை லார்ட் ஆப் த ரிங்ஸ் புதினத்தில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கும்.

வழியில் நேரும் அபாயங்கள்

வழியில் நேரும் அபாயங்கள்

      இடையில் கண்டல்ப் காணாமல் போய்விடுகின்றார்.   எல்லாப் பயணங்களிலும் ஒருமுறையாவது காணாமல் போய்விடுகிறார் கண்டல்ப்.   அவரின் துணையில்லாமலே பயணக் குழுவினர்    பல்வேறு சிக்கல்களுக்கிடையே டிராகன் இருக்கும் மலைத் தொடரை அடைகின்றார்கள்.   டிராகனை தந்திரமாக ஏமாற்றி புதையலை இவர்கள் வசம் ஆக்கிக் கொள்கின்றார்கள்.  இப்போது டிராகனை விட மோசமான எதிரி ஒருவர் உருவாகிறார்.  பேராசை.  டிராகன் வைத்திருக்கும் புதையல் பல்வேறு இனத்தவர் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி ஒரு பெரிய யுத்தம் அவர்களுக்கிடையே நடைபெறுகிறது.  

புதையல் காக்கும் டிராகன்

புதையல் காக்கும் டிராகன்

     இதற்கிடையில் பயணத்தில் இவர்கள் சந்தித்த எதிரி இனத்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து இவர்களை தாக்க தங்களது இராணுவத்தால் அம்மலையை முற்றுகை இடுகின்றார்கள்.  கண்டல்ப் தமிழக காவல்துறை போல கடைசி நேரத்தில் வந்து இவர்களை சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து எதிரியை தாக்கி யுத்தத்தில் வெற்றி பெறுகின்றார்கள்.  யுத்த வெற்றிக்கு பிறகு புதையல் பங்கு பிரிக்கப்படுகிறது.  இந்த யுத்தம் பில்போ பேகின்ஸ் மனதில் ஒரு பெரிய சலனத்தை உருவாக்குகிறது.  புதையலில் பெறவிருக்கும் பங்கினை மறுத்து விடுகிறார்.  எந்த சுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாரோ அந்த இடத்ற்கு  போக மனம் இப்போது ஏங்குகிறது.  பணக்காரராக தன்னுடைய வீட்டிற்கு திரும்புகிறார்.  இப்போது வீடே அவருக்கு சொர்க்கமாகின்றது. 

அற்புதமான சாகசத்திற்கு பிறகு வாழ்க்கை அனுபவித்தல்

அற்புதமான சாகசத்திற்கு பிறகு வாழ்க்கை அனுபவித்தல்

      இந்த நாவலை எத்தனை தடவை படித்திருப்பேன் என்பதற்கு கணக்கு இல்லை.  ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டி அதிலிருந்து படிப்பது என மாதத்திற்கு சில தடவையாவது இந்த புத்தகத்தை புரட்டி விடுகிறேன்.  ஒரு பயணம் ஒருவரை எவ்வாறு மாற்றுகின்றது என்பதை அழகாக விவரிக்கும் நாவல் இது.  இந்த நாவல் வரிசைக்கென தனியாக ஒரு மொழியையே உருவாக்கினார் டோல்கியன்.  இவரின் தீவிர ரசிகர்களால் இம்மொழி ஈல்விஷ் என அழைக்கப்பட்டு இன்றும் உலகெங்கும் பேசப்படுகிறது.   ஒரு மாயஜால புத்தகத்திற்கு முதன் முதலாக இலக்கிய அந்தஸ்தை வழங்கப்பட்டது இதற்குதான்.

     இவரின் படைப்புகள் பல இருந்தாலும் படிக்க வேண்டிய வரிசை என்றால் முதலில் த ஹாபிட் பிறகு த லார்ட் ஆப் த ரிங்ஸ்.  அதற்கு பிறகே மற்றவைகள்.  இந்த புத்தகங்கள் வாயிலாக அவர் உருவாக்கிய மிடில் எர்த் என்ற உலகத்தில் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவர உங்களுக்கு மனசு வராது.  தமிழில் இவரது படைப்புகள் இதுவரை  மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை.  இந்திய மொழிகளில் வேறு எதிலும் வந்தனவா என்றும் தெரியவில்லை.   

      பீட்டர் ஜாக்சனால் இயக்கப்பட்டு வெளிவந்த த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற வெற்றிப் படத் தொடர்களினால் இவரின் புத்தகங்கள் மேலும் பிரபலமடைய தொடங்கின.  டோல்கியனின் தீவிர ரசிகர்களால் அப்படத் தொடர்களையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை விட இப்படைப்பின்  வெற்றிக்கு வேறென்ன வேண்டும்?

10 comments September 30, 2009

twit…twit….twit

        உலக சோம்பேறிகளில் ஒருவரான நான் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளேன்.  என்னுடைய ட்விட்டர் ஐடி

marcopolo7

       இதை கொடுப்பது என்னை தொடர வேண்டுமென்பதற்காக இல்லை.  சந்தை நாளின் ஏதாவது எண்ணங்கள் தோன்றினால் (இதுவரை தோன்றியதில்லை) அதை பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான்.

      இன்று நிப்டியானந்தரின் பரிந்துரை பகுதியை புதுப்பித்திருக்கிறேன் (என்னா தமிளு). இது போல….

         எனக்கு மிகவும் பிடித்த பயணிகளில் மார்க்கோ போலாவும் ஒருவர்.  இவர் எழுதிய பயணக்கட்டுரை (இவர் சொல்ல எழுதிய என்றும் சொல்லலாம்) பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது.  இன்றும்.  இவரை போலவே நானும் ஆக வேண்டுமென்ற ஆசையும் உண்டு. என்னுடைய பயணக்கட்டுரைக்கு இப்போது பெயர் மட்டுமே வைத்திருக்கிறேன்.  பயணங்கள் இன்னும் முழுமையடையவில்லை.

தலைப்பு:  சுந்தரி பின்னே ஞான்………………

4 comments August 11, 2009

Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

November 2009
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30