பனிமலையில் பராங்குசம் – முன்னுரை
January 14, 2013 at 12:41 pm 3 comments
எனது நண்பர் ஷங்கர் அவர்கள் நீண்ட நாட்களாக நெஞ்சை பிழியும் ஒரு சமூக நவீனம் ஒன்றை எழுத வேண்டுமென்ற ஆசை கொண்டிருந்தவர். நாளடைவில் அதை எழுதவும் முற்பட்டார். ஆனால், அது ஒரு துப்பறியும் மர்ம நாவலாக வந்து விட்டது. அதில் ஸோம்பிகளும் கலந்து விட்டனர். ஸோம்பிகள் அந்த நாவலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அதற்கு முன்னுரை வேண்டும் என என்னிடம் அந்த எழுத்துப் பிரதியினை என்னிடம் கொடுத்திருக்கிறார். இதற்கு அட்டைப் படம் வரையும் பொறுப்பை சென்னையை சேர்ந்த திரு ரபீக் ராஜா என்பவரிடம் கொடுத்திருப்பதாக தெரிகிறது.
கதையின் நாயகன் பெயர் பராங்குசம். ஆனால் நிறைய பெயர்களில் அவன் கதைத்தளத்தில் உலா வருகிறான். அவனது உண்மையான பெயர் என்ன என்பதை கடைசிவரை ஆசிரியர் சொல்ல வில்லை. நிறைய மர்மங்களை கடைசி வரை விடுவிக்கவில்லை. படிக்கும் வாசகன் இதற்கு அடுத்த பாகம் வர வாய்ப்பிருக்கிறது என்ற சோகம் நெஞ்சை தாக்க இந்த நாவலை முடிப்பான். ஒரு நல்ல நாவல் இது போன்ற சோகம், துக்கம், வேதனை, தன்னிரக்கம், அழுகை போன்றவற்றுடன் முடிந்தால் அது க்ளாஸிக் என கருதப்படும் என ஷங்கர் என்னிடம் பலதடவை சொல்லியிருக்கிறார்.
கதாநாயகன் போர் விமானியாக பணியாற்றி, அது போரடிக்கவே, கடற்படையில் பயிற்சி பெற்று கப்பல் கமாண்டராக பொறுப்பேற்கிறான். பின்னர், இராணுவத்திற்கு சென்று, சிறப்பு அதிரடி படையில் சேர்ந்து, அங்கேயும் தனி முத்திரை பதிக்கிறான். பீடா வாங்க சாலையை கடக்கும்போது, லாரி மோதி சில பற்கள் மற்றும் நினைவையும் இழக்கிறான்.
அவன் பரோட்டாக் கடையில் பரத் என்ற பெயரில் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது சி ஐ ஏ கண்களில் பட்டு விடுகிறான். அவனை அணுகும் சி ஐ ஏ அவன் அமெரிக்க உளவாளி ஜேம்ஸ் போர்ன் என்றும், மொராக்கோ மதுபான விடுதியில் அவன் தன் பழைய நினைவுகளை தொலைத்த கதையை சொல்கிறது. கதாநாயகன் அமெரிக்க உளவாளியாகிறான்.
மொராக்கோவில் அவன் உளவுப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, மொஸாட் அவனை அணுகி கதாநாயகன் ஒரு இஸ்ரேலி என்றும், அவன் பெயர் மோஷே ஷரோன் என்ற புதிய கதையை சொல்ல, கதாநாயகன் மொஸாட் உளவாளியாகின்றான்.
இவ்வாறாக, உலக உளவுத் துறைகள் கதாநாயகனை பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு கட்டத்தில், தன் நினைவை பெறும் கதாநாயகன்,
ஓ**, பழச மறந்துட்டேன்னு நினைச்சீங்களா. செருப்பால அடிப்பேன், நான் தமிழன்டா, அமெரிக்க கம்பெணிக்குதான் வேலை செய்வேன்.
என பொங்கும்போது, வாசகனின் மனமும் பொங்கும் என்பதில் ஐயமில்லை. கதாநாயகனின் பாத்திரத்தை வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார். தன் கூட பணிபுரியும் அழகு பெண்ணான ஸ்டெல்லாவின் அத்தையை மனமுருக காதலிக்கிறான் கதாநாயகன். இது ஸ்டீரியோடைப் கதாநாயகர்களிடமிருந்து இவனை பெரிதும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
நிறைய விஷயங்களை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறார். நாவலின் கதையும் அப்படிதான். இதுவும் ஒரு புதிய முயற்சித்தான். இந்த நாவலுக்கு எழுதப்படும் விமர்சனங்கள் வித்தியாசமானவையாக தான் இருக்கும்.
கதாநாயகனை ஒட்டியே நாவல் நகர்கிறது. நிறைய இடங்களில் வாசகன் நினைத்துக் கொண்டிருக்கும் கதையை, காட்சிகளை கதாசிரியரே தகர்க்கிறார். உதாரணத்திற்கு,
செம்மறியாடுகளின் ரோமத்திலிருந்து செய்யப்பட்ட நல்ல அழுத்தமான கம்பளிச் சட்டையை அணிந்துக் கொண்டு, க்ளைவ் டானர் (இது கதாநாயகன் பெயர்களில் ஒன்று) அறையை விட்டு வெளியே வந்தான். ஜெய்ப்பூரில் அப்போது நேரம் நண்பகல் 12.00.
அல்ஜீரியாவில் தன்னை சுற்றி வளைத்த முரடர்களை பார்த்து, வெய்ன் மில்டன் புன்னகையுடன், கண்களை மூடி அவர்களின் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ள சொல்கிறான். அந்த முண்டங்களும் அப்படியே செய்கிறார்கள். அவர்கள் கண்களை திறந்து பார்க்கும்போது, வெய்ன் மில்டனின் முதுகு தூரத்தில் தெரிகிறது.
பாரீஸ் மதுபான விடுதியில், கால்களை சுழற்றி ஸ்டைலாக அமர்ந்து, பியர் போர்டன் விடுதி பணியாளரிடம்,
மார்ட்டினி, குலுக்கி, ஆனால் கலக்காமல் கொடு. எவ்ளோ அது?
முப்பது யூரோ,
அப்ப வேண்டாம். சில்லுன்னு தண்ணி ஒரு க்ளாஸ் கொடு.
இந்த நாவலில் மர்மங்களும் இல்லாமல் இல்லை. இந்தியாவில் ஒரு முக்கிய அமைச்சர் ஸோம்பி என்ற மர்மம் கதாநாயகனுக்கு தெரிகிறது. அதை யார் என்று கண்டுபிடிப்பதில் மும்முரமாக இறங்குகிறான். ஈராக் மீது போர்தொடுக்க காரணமான அமெரிக்க ஜனாதிபதி ஒரு ஸோம்பியே என்றறியும்போது நமக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அவர் மீடியாவில் பேசும் காட்சிகளை இப்போது பார்க்கும்போது அது ஊர்ஜிதமாகிறது.
நண்பர் ஷங்கர் எழுதியுள்ள இந்த 600-பக்க நாவலானது உலகம் முழுவதும் மனிதர்களை ஆட்சி செய்வது ஸோம்பிகளே என்ற மர்மத்தை தனியாக உலகிற்கு வெளிச்சம் போட்டும் காட்டும் ஒரு நாயகனின் கதை என்று சொல்லலாமா? என்றால் சொல்லலாம்.
Entry filed under: நகைச்சுவை, புத்தக விமர்சனம்.
1.
RAMESH | January 14, 2013 at 2:02 pm
உங்களுடைய இந்த விமர்சத்தினை பார்க்கும்போலுதே தெரிகின்றது, ஷங்கரின் கைவண்ணம். கண்டிப்பாக இந்தக்கதை மூன்று உலகத்திலும் வெற்றிப்படைப்பகா இருக்கும். ஒரு சிறந்த நாவல், 600 பக்கங்களுக்குமேல் இருக்கும், அதை இந்த கதைகளமும் கொண்டுள்ளது. அதுவும் இல்லாமால் ரபிக் கைவண்ணத்தில் அட்டைப்படம்…. ஆக கேக்கவே நாவில் இனிக்கின்றது. நெஞ்சை பிளியவைக்கும் இந்த நாவல் எப்பொழுது வெளிவரும்? புத்தக வெளியீடு எங்கு? யார் கையால்? ஏதாவது டிபன் காப்பி கிடைக்குமா அன்று?
கடைசியாக ஒன்று, தலையில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையென்றால் நாமளும் ஒற்றர்கள் ஆகிவிடுவோம்.
2.
shankar | January 14, 2013 at 5:45 pm
//கடைசியாக ஒன்று, தலையில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையென்றால் நாமளும் ஒற்றர்கள் ஆகிவிடுவோம்.// ஹாஹாஹா ….. தூள்! ரமேஷ்… ஹெல்மெட்டின் ரகசியத்தை இப்படி போட்டு உடைத்து விட்டீர்களே.
3.
shankar | January 14, 2013 at 5:51 pm
நான் எழுதிய பிரதி குறித்த விமர்சனத்திற்கு நான் கமெண்டு போடாவிடில் அதை எழுதியது ஜோஸ் என வதந்தியைக் கிளப்ப இங்கு ஒரு கூட்டமே தயார்நிலையில் புத்தக கண்காட்சியில் கமெரா தொலைபேசி சகிதம் அலைந்தவாறே காமிக்ஸ் விற்கும் ஸ்டால்களில் நடந்தேறும் நிகழ்வுகளை இணையத்தில் அப்டேட் செய்து கொண்டிருக்கிறது. அவர்களிற்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். என் புத்தக வெளியீடு அங்கு அல்ல….. எங்கு என்று சொல்ல மாட்டேன்…. சொன்னால் மொஸாட் சும்மா விடாது…. அருமையான விமர்சனம், குறிப்பாக வரிகளிற்கு இடையில் கண்ணிற்கு தெரியா எழுத்துக்களில் டைப் செய்யப்பட்டிருக்கும் வரிகள் சூப்பரோ சூப்பர்…. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நான்காம் பாகத்தை நீங்கள் கண்டிப்பாக இயக்கியே ஆக வேண்டும்…. 🙂