Posts filed under ‘Fundamental Analysis’
பண வீக்கம் III
நம் உபகண்டத்தின் முன்னோர் (ஏனெனில் இந்தியா என்ற பெயர் அப்போது இல்லை, நடுவில் உருவானது) உலகத்திற்கு தங்களுடைய பங்களிப்பாக நிறைய கண்டுபிடிப்புகளை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, எண்கள் (Numbers) , ஏவுககணை தொழிற்நுட்பம் (Missile Technology) ( இது குறித்து இருவேறு கருத்துகள் நிலவினாலும், உந்துதலை (Inspiration) கொடுத்தது நாம்தான்), வானவியல் (Astromy), மருத்துவம் (Medicine) , நாணய பரிமாற்ற முறை (Currency) . இதுபோன்ற பலதுறைகளில் முன்னோடி முயற்சிகளை வழங்கியுள்ளோம். ஆனால், இன்றைய உலகில் மேலே சொன்ன அனைத்து துறைகளிலுமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளே கொடி கட்டி பறக்கின்றன. காரணம், மிக எளிதானது. உலகின் மிக தொன்மையான கலாச்சார பெருமையை கொண்டிருந்தபோதும், அவர்களின் பார்வையில் நம்நாட்டின் வயதென்னவோ அறுபத்தி ஒன்று தான். அறுபத்தி ஒரு ஆண்டுகள் என்பது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கலாம். ஒரு நாட்டின் பொறுத்தமட்டில் மிக குறுகிய காலமே.
டில்லியை ஆண்ட ஷெர்-ஷா சூரி என்ற மன்னனால் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளி நாணயத்திற்கு ருபயா (Rupaya) என்று பெயர். அதற்கு வெள்ளி என்று அர்த்தம். ஆங்கிலேயர் நம் உப கண்டத்தை ஆட்சி செய்ய தொடங்கிய காலகட்டம் அது. அந்த நேரத்திலும் அடிப்படையில் மிக வலுவான பணமாக ருபாய் இருந்தது. ருபாய் வெள்ளியை இருப்பில் வைத்து வெளியிடப்பட்டது. இரண்டாவது பகுதியில் குறிப்பிட்டது போல் Silver Standard முறையில். நாணயம், பொருள் உற்பத்தி, வெளியிடப்பட்ட பணத்திற்கான இருப்பு (Reserve) (வெள்ளியில்) என மிகச் சீரான விகிதத்தில் பராமரிக்கப்பட்டு வந்ததால் பண வீக்கத்திற்கான வாய்ப்பு ஏற்படவே இல்லை. “நேத்து ஒன்னருவா இருந்த ஒரு பவுன் தங்கம் இன்னிக்கு நாலு ருபாய் ஆயிருடுத்தே” என்ற புலம்பல்கள் அந்த காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. எல்லாம் ஒழுங்காகதான் போய் கொண்டிருந்தது முன்று நுாற்றாண்டுகள் வரை. அதன்பின் அமெரிக்கா மற்றும் உலகத்தின் பிற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளி சுரங்கங்களிலிருந்து ஏராளமாக வெள்ளி உற்பத்தி செய்யப்பட்டது. உலக நாடுகளில் காலனியாதிக்கம் மேற்கொண்டிருந்த நாடுகள் அனைத்தும் தங்கத்தை முக்கிய இருப்பாக வைக்கத் தொடங்கி விட்டதால், வெள்ளியும் தன் கிடைப்பதற்கரிய தன்மையை இழந்து விட்டதால் வெள்ளியை அடிப்படையாக கொண்டிருந்த நம் நாணயம் மதிப்பிழக்க தொடங்கிவிட்டது. அது முதல் அடி எனலாம். விழுந்த காலம் பத்தொன்பதாம் நுாற்றாண்டு.
ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திற்கு கீழிருந்து விடுலை பெற்ற பின் நம் இந்தியா ருபாயை தன் நாணயமாக கொண்டது. 16 அணாக்கள் கொண்டது ஒரு ருபாய். காலனியாதிக்கத்திற்கு கீழே இருந்து விடுதலை பெற்ற பின் பொருளாதார வளர்ச்சி என்பது உடனே வந்து விடாது. மிக மோசமான பண வீக்கத்தை பெற வேண்டிய நம் நாடு அதனை சந்திக்கவே இல்லை. ஏனென்றால், அப்போது உலகத்தில் மிக பலமான நாணயம் ( இரஷ்யாவின் சிதறலுக்கு பிறகு இருந்த அமெரிக்க டாலர்களின் வலிமை) போன்று எதுவுமே இல்லை. காரணம், இரண்டாம் உலகப் போர். மிக அதிகம் மனித உயிர்களை பறித்த இந்த போரால் நமக்கு இரண்டு வித நன்மைகளே வாய்த்தன. இன்னும் சொல்லப்போனால், இரண்டாம் உலகப்போரால் மிகவும் பயனடைந்த நாடு என்று இந்தியாவை தற்போது சொல்லலாம். ஒன்று, ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுதலை. மற்றொன்று, மோசமான பணவீக்கத்திலிருந்து காப்பாற்றப்படுதல். 1960-க்கு பிறகு மற்ற காலனியாட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற நாடுகள் அனைத்துமே மிக மோசமான பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. உதாரணத்திற்கு, ஜீம்பாப்வே (உலகத்தின் மோசமான பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடு),சோமாலியா, தற்சமயம் இராக் (பணவீக்க சதவீதம் 41). இன்று வரை அந்நாடுகளின் பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. சில நாடுகள் தாக்குபிடித்து முன்னேறின என்றாலும், இந்தியா அளவிற்கு எந்த நாடும் வல்லரசுகளுக்கு சவால் விடும் அளவில் தங்களுடைய பொருளாதார, இரானுவ பலத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. இந்த இடத்தில் எல்லோரும் நம் காலரை துாக்கி விட்டுக் கொள்ளலாம்.
1950-களில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே இரண்டாம் உலகப் போரினால் மி்க மோசமான பொருளாதார நிலையை அடைந்திருந்தன. பிரிட்டனின் மோசமான பொருளாதார சூழ்நிலையே இந்திய விடுதலைக்கு ஒரு முக்கிய காரணி என்று கூட சொல்லலாம். உலகின் பார்வைக்கு ஒரு மோசமானவராக இருந்தாலும், நம்நாட்டை பொறுத்தவரை Adolf Hitler நம் விடுதலைக்கு மறைமுகமாக பாடுபட்ட ஒரு ஆசாமி. அவரின் ஸ்வதிகா சின்னம் நம் நாட்டின் மிக பழமையான சின்னம் ஆகும். இது குறித்து இன்னொரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம் என்றாலும் அதற்கும் பணவீக்கத்திற்கு சம்பந்தம் இருக்காது என்பதாலும் நீங்கள் அடிக்க ஓடி வந்து விடுவீர்கள் என்பதாலும் தற்சமயம் இத்துடன் நிறுத்திவிடுகின்றேன்.
சுதந்தி்ரம் அடைந்த பிறகு முதல் பத்து வருடங்கள் வரை குறிப்பிடும் படியாக ஒன்றும் நடக்கவில்லை. 1957-ல் ஒரு ருபாய்க்கு 100 பைசாக்கள் என ஆக்கப்பட்டது. மக்கள் பைசாவிலேயே கணக்கை நடத்தியதால் மனக் கணக்கு போடுவதில் சிக்கல் இருந்ததால் அவ்வாறு ஆக்கப்பட்டது என்று திண்ணை பள்ளியில் கணக்கு வாத்தியார் நாற்காலியில் முள்வைத்த சில பொருளாதார மேதைகள் எண்ணினர். நம்நாடு இயற்கை வளம் மிக்க நாடு என்பதாலும், விவசாயம் நாட்டின் மிக முக்கிய தொழிலாக இருந்தபடியாலும், பருவ மழை தவறாமல் பொழிந்ததாலும் பணவீக்கம் என்ற சொல்லை நம் மக்கள் கேள்விபடவே இல்லை.
விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டிருந்து நாடு செழிப்பாக இருந்ததால், நம் நாடு தொழிற் துறை உற்பத்தி சம்பந்தமாக பெரிதும் அக்கறை காட்டவில்லை. வளரும் உலக நாடுகளுக்கு நிகராக நாமும் வளர தொழிற் உற்பத்தி முக்கியம் என இயற்கை நமக்கு மீண்டும் பாடம் கற்பித்தது. பஞ்சம். நாட்டில் ஏற்பட்ட உணவு பஞ்சம். நமது ஆட்சியாளர்களுக்கு தொழிற்துறை சம்பந்தமாக பல புதிய முடிவுகளை எடுக்க வைத்தது. உணவு பொருட்கள் உற்பத்திக்கு பணப்புழக்கம் இவற்றிக்கிடையில் ஒரு சீரற்ற நிலை ஏற்பட்டது. உணவு பொருட்கள் விலையை ஏற்ற உணவுப்பொருட்கள் பதுக்கப்படலாயின. உணவு பொருட்களின் விலை மிக வேகமாக மேலேற ஆரம்பித்தன. நாட்டில் பணவீக்கம் என்ற சொல்லை மக்கள் கேள்விபட ஆரம்பித்தார்கள்.
இந்தியா 1960-களில் பஞ்சத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தபோது, உலக நாடுகள் என்ன செய்துகொண்டிருந்தன? என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
பணவீக்கம் II
பண்டமாற்று முறையை எளிதாக்க வேண்டி நாணயம் அறிமுகப்படுத்தப் பட்டது. செம்பு, இரும்பு, வெள்ளி போன்ற உலோகங்களில் நாணயங்கள் அச்சிடப்பட்டு உபயோகத்தில் விடப்பட்டன. தோலில் கூட நாணயம் தயாரிக்கப்பட்டன. அந்த நாணயங்களுக்குரிய மதிப்பு இடத்திற்கு இடம், நாட்டிற்கு நாடு மாறுபட்டது. ஒரு நகரத்தில் பெரிய மதிப்பைக் கொண்ட ஒரு நாணயம் மற்றொரு நகரத்தில் அதே மதிப்பீட்டில் பரிமாற்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இந்த வரிசையில் தங்கம் சேர்ந்தபிறகுதான் பண்டமாற்று முறையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது எனலாம். உலகப் பொருளாதாரத்தில் கூட தான். அனைத்து நாடுகளுக்கும் கடற்பாதை கண்டுபிடித்த பிறகு, தங்கமே முக்கிய பண்டமாற்று நாணயமாக ஆயிற்று. அதன்பின், உலக நாடுகள் அனைத்தும் தங்கத்தை அடிப்படையாக கொண்டே நாணயங்கள் வெளியிட ஆரம்பித்தன. உலக பொருளாதாரமே தங்கத்தை மையமாக வைத்து எழுப்பப்பட்டன. தங்கம் இத்தகைய இடத்திற்கு செல்ல முக்கிய காரணங்கள் : தங்கம் கிடைப்பதற்கரிய பொருள், நெடுநாள் உபயோகப்படுத்தலாம், எந்த சூழலிலும் போலி தயாரிப்பது அரிது. நமது நாட்டில் அரசர்கள் புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு தங்கக் காசுகள் அடங்கிய பொற்கிழியை தருவார்கள் என படித்திருக்கின்றோம். தங்கம் அடர்த்தி அதிகமாதலால் எடை அதிகமாக இருக்கும். புலவர்கள் பொதுவாக ஸ்லிம்மாக தான் இருப்பார்கள். எவ்வாறு பொற்கிழியை துாக்கிக் கொண்டு போயிருக்க முடியும்? மேலும் உலகத்தில் பல பகுதிகளிலும் இம்மாதிரி புகழ்ந்து பாடினால் பரிசு என்ற வழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை.
பண்டமாற்று முறையை எளிதாகதான் பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்றால் அதை அச்சடித்து கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். முதல் பகுதியில் சொன்ன பணம் மற்றும் பொருட்களின் சமநிலையை பேண வேண்டியதும் அரசின் கடமை என்பதால், இஷ்டப்படி பணத்தை அச்சடித்து வெளியிட முடியாது. எவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்படுகிறதோ, அந்த அளவு மதிப்பிற்கு தங்கத்தை சேமிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முறை இருந்தது. இந்த முறைக்கு Gold Standard என்று பெயர். இந்த முறையில் உள்ள நன்மைகள் என்னவென்றால், பணவீக்கத்தை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும், பொருள்-பணம்-பரிமாற்றம் போன்றவற்றிற்கு சமநிலையை சீராக பேண முடியும். மிக வலுவான பொருளாதாரம் நாட்டில் ஏற்படும். ஆனால், சந்தை பொருளாதாரம் வளர வளர அதற்கேற்ப பணத்தை புழக்கத்தில் விட இயலவில்லை. பணத்தின் மதிப்பிற்கேற்ப தங்கத்தை சேமிப்பில் வைக்க வேண்டியிருந்ததே இம்முறையின் தோல்விக்கு காரணம் என சொல்லலாம். தற்போது இம்முறையை எந்த நாடுகளும் முழுவதும் பின்பற்றுவதில்லை. ஸ்விட்சர்லாந்தை தவிர. இதில் Silver Standard என்ற முறை கூட உண்டு.
தற்போது அனைத்து நாடுகளும் பின்பற்ற தொடங்கியிருப்பது பியட் பணம் (Fiat Currency) (கார் இல்லீங்க) என்ற முறையே ஆகும். பியட் என்ற சொல் இலத்தீன் மொழியில் வந்தது. அதற்கு அர்த்தம் “அடிச்சு பட்டய கிளப்புங்க”. அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கேற்ப பணத்தை அச்சடித்து விநியோகம் செய்யலாம். அச்சிடும் பணத்தின் மதிப்பிற்கேற்ப வேறு எந்த பொருளையும் கையிருப்பில் வைத்திருக்க அவசியமில்லை. இது எப்படியென்றால் பலசரக்கு கடை மாதிரி. முறையான கணக்கு ஏதும் சரிவர பேணப்படாமல், தினசரி ரொடேஷன் செய்து வணிகம் செய்வது மாதிரி. இது பற்றி மிக விரிவாக பேசலாம் என்றாலும், தற்சமயம் இதன் சில இருண்ட முகங்களை மட்டும் பார்ப்போம். அரசாங்கம் நீண்ட கால நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி சமநிலையை பேணாமல், குறுகிய கால நோக்கில், சரியான திட்டநோக்கு இல்லாமல் செயல்படுத்தினால் தீவிர பணவீக்க பிரச்சினை (Hyperinflation) வர வாய்ப்பும் உண்டு. முதல் உலகப்போர் முடிந்த பிறகு ஏற்பட்ட தீவிர பணவீக்கத்தால் ஜெர்மனியில் குளிருக்கு தீ முட்ட பணக்கட்டுகளே பயன்படுத்தப்பட்டன. விறகு வாங்குவதை விட பணக்கட்டுகளை உபயோகிப்பது செலவு குறைவாக இருந்தது. இந்த முறை உலகில் ஒரு சமச்சீரற்ற பொருளாதார நிலையை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் வளர்ந்து வரும் உலக பொருளாதாரத்திற்கேற்ப இன்னும் Gold Standard முறையை பயன்படுத்த முடியாது என்றபோதிலும், இம்முறையை இன்னும் சீரமைக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் ( இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்) கருதுகின்றார்கள். இந்த முறையால் இருபத்தோராம் நுாற்றாண்டில் இனி நடக்கப்போவது எல்லாம் பொருளாதார போர்களே. எந்த நாடும் எந்த நாட்டின் பணத்தை வேண்டுமானாலும் மதிப்பிழக்க வைக்க முடியும். நாம் தலையில் துாக்கி வைத்து கொண்டாடும் அமெரிக்க டாலர்கள் கூட விதிவிலக்கல்ல.
இப்போது தாய்நாட்டிற்கு திரும்புவோம். 1965-1977 வரை நம்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள். அந்த நேரத்தில் அயல்மொழிகளில் வரும் புத்தகங்கள், செய்திதாட்கள் அனைத்துமே இந்தியா பக்கீர்களும், மிகுந்த குழப்பமான சாலைப் போக்குவரத்தையும், நாகரிகமற்ற மக்களையும் கொண்டிருக்கும் நாடு என்ற கருத்திலேயே இருந்தன. சிறுவர், சிறுமியருக்கு பிரியமான டின் டின் சித்திர தொடரில் கூட அதன் கதாசிரியர் இத்தகைய கண்ணோட்டத்திலேயே எழுதியிருப்பார். தற்போதைய கார்ப்ரேட் இந்தியா பற்றி யாரேனும் கனவு கண்டு சொல்லியிருந்தால் அவரை ஒரு மாதிரியாகவே பார்த்திருப்பார்கள்.
இந்திய-பாகிஸ்தான் போர் 1965 ( இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப் பெரிய இரானுவ யுத்தம் என்று இதை சொல்லலாம். அதன் பிறகு வந்த யுத்தங்கள் அனைத்திலும் அதி நவீன போர்க் கருவிகள் பங்கேற்க ஆரம்பித்தன), வறட்சி, போன்ற சிக்கல்களில் நம்நாடு முழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா மற்றும் அதன் சார்பு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை செல்லப்பிள்ளையாக பாவித்த கால கட்டம் அது. லால் பகதுார் சாஸ்திரி மரணமடைந்து இடைக்கால பிரதமர் பதவியேற்று முடித்து இந்திரா காந்தி பதவிக்கு வருகிறார். அரசாங்கம் ஒரளவு ஸ்திரதன்மை பெற்றது. அந்த நேரத்தில் தான் நம்ம சூப்பர் ஸ்டார் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்து அறிமுகம் ஆவார்.(யோவ், இதுக்கும் பணவீக்கத்திற்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்காதீர்கள், நமக்கு பிடிச்ச பழமொழிகளை மட்டும் தான் கட்டுரையில்ல சேர்க்க வேண்டும் என்று விதி இருக்கா). 1971-ல் பாகிஸ்தானுடன் மீண்டும் யுத்தம் செய்து பட்டையை கிளப்பி பங்களாதேஷ்-ஐ உருவாக்கினோம். ஒரு நாட்டை ஆரம்பத்திலிருந்து உருவாக்குவது என்பது எவ்ளவு கடினமான காரியம் என்று தெரியுமா! தற்போது ஈராக்கில் மாட்டிக் கொண்டு முழிக்கும் அமெரிக்காவை பார்த்தால் தெரியும். நாம் அதை 1972-லேயே செய்து விட்டோம். நம்முடைய பொருளாதாரம் அப்போது எந்த நிலையில் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். போதாக்குறைக்கு பொக்ரானில் அனுக்குண்டு வெடிக்க இரகசியமாய் திட்டங்களையும் தீட்டிக் கொண்டிருந்தோம். எவ்வளவு மிகவும் தைரியமான அரசாங்கம் அது!
அந்த காலகட்டத்தில் 1975-ல் ஒரு அமெரிக்க டாலர் எத்தனை ருபாய்க்கு சமம் என்று தெரியுமா? வெறும் எட்டே ருபாய் தான். அப்போது அனுகுண்டு வெடிக்கவில்லை, பெரிய அறிவியல் முன்னேற்றங்களை அடைந்திருக்கவில்லை. தகவல் தொழிற்நுட்பங்களில் …. அதை விடுங்கள், கணிப்பொறிகளே நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தன. இப்பொழுது நாம் உலக வல்லரசுகளின் மதிப்பிற்குரிய நாடு. ஒரு அமெரிக்க டாலருக்கு நாற்பத்தி நான்கு ருபாயாக பரிமாற்ற விலை இருக்கிறது. இதற்கிடையில் என்ன நடந்தது, நாம் சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கின்றோமா, பணவீக்கத்தின் அடிப்படையை நாம் நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால் நமது ருபாயின் வரலாறையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
பணவீக்கம் I
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் பணவீக்கம் பற்றி எம்மாதிரியான புள்ளி விவரம் வரும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றோம். பண வீக்கம் பற்றி பல புள்ளி விவரங்கள் வாரா வாரம் சந்தையை அலைகழித்துக் கொண்டிருக்கின்றது. உண்மையில் பண வீக்கம் என்றால் என்ன அது எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்று பார்த்தால் வெள்ளிக் கிழமைதோறும் நண்பகல் 12.00 மணிக்கு வரும் ஒரு வித பயம் தெளியும் என்று நினைக்கின்றேன். சில அடிப்படையான விஷயங்களை இத்தொடர் கட்டுரையில் விளக்க முயல்வதால், இக்கட்டுரையை Fundamental Analysis பகுதியில் சேர்க்கலாம் என்று இருக்கின்றேன்.
பல வயதான மனிதர்கள் இவ்வாறு பேசுவதை நீங்கள் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள் “அந்த நாளையிலே இரண்டு ருபாய்க்கு டவுனுக்கு போய் ஒரு சினிமா பார்த்துவிட்டு, பீம விலாஸ்ல நல்லா சாப்பிட்டுவிட்டு, மஸ்தான் கடையிலெ ஒரு மசாலா பால் சாப்டுட்டு கடலையை கொறிச்சுகிட்டே ஊர் வரைக்கும் வந்துற முடியும்”.
தற்போதைய சூழலில், இன்னும் கூட இரண்டு ருபாய் இருந்தால்தான் கடலையையாவது வாங்கமுடியும். எவ்வளவு வித்தியாசம்? இப்போதும் டவுன்,சினிமா தியேட்டர், உணவகங்கள், மசாலா பால் எல்லாம் இருக்கின்றது. விலை மட்டும் பல மடங்காகியிருக்கிறது. கேட்டால் தெரிந்தவர்கள் கூறும் காரணம், பணவீக்கம். தெரியாதவர்கள் கூறும் காரணம், அப்போ நாங்க கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம், அரசியல்வாதிகள் வந்து கெடுத்து விட்டார்கள். கருப்புப் பண முதலைகள் நிறைய இருக்கின்றன. எங்கும் ஊழல். யாருக்கும் பொறுப்பு இல்லை. நாற்பது ருபாய் சம்பளத்தில் ரொம்ப சுபிட்சமாக இருந்தேன். In Nineteen Fifty Five …. என்று பயங்கரமாக ஆரம்பித்து விடுவார்கள்.
உண்மையில் பணவீக்கம் ஆதிகாலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. ஒரு அடிப்படையான விளக்கத்தினை முதலில் பார்க்கலாம். பணவீக்கம் என்றால் பணம் வீங்கி (அது என்ன கட்டியா?) போகுதல். அதாவது பெரியதாக ஆகுதல் அப்படியென்று மிகவும் அடிப்படையான பொருள் கூட கொள்ளலாம். சாதாரணமாக இருக்கிற ஒரு பகுதி தீடிரென பெரியதாக ஆகுதல். இதைப் பற்றி நாம் ரொம்ப பின்னாடி போய் பார்ப்போம்.
மன்னர் காலங்களில் பணப்புழக்கம் என்றே கிடையாது. மிகவும் அடிப்படையான பண்டமாற்ற முறையில் தான் வியாபாரம் நடக்கும். இரண்டு கோழிகளுக்கு அரை முட்டை நெல்/கால் முட்டை காய்கறிகள்/ஒரு தங்க நாணய வில்லை என்ற ரீதியில் வியாபாரம் நடக்கும். மக்கள் தங்களிடம் உள்ள உபரியாக உள்ள ஒன்றை கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார்கள். எல்லாம் நல்லபடியாக தான் நடந்துக் கொண்டிருந்தது. ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு ஏரியா ராஜாக்களும் ரொம்பவும் மானமிகு, வீரமிகு சிங்கங்களாக இருந்ததுதான். என் மீசையைப் பற்றி தவறாக பேசிய அண்டை நாட்டு மன்னனின் நாக்கை வெட்டி ஊறுகாய் போட்டுவிட்டுதான் மறுவேலை என்று வெட்டிபந்தா பேசி முனுக்கென்றால் போருக்கு தயாராக இருந்தார்கள். இந்த மாதிரி வெட்டிப்போர்களால் நாட்டின் பண்டமாற்று முறை மிகவும் பாதிக்கப்பட்டது. கத்தி கபடாவுக்கெல்லாம் மவுசு ஏறிபோய்விட்டது. இதை சமநிலைப்படுத்த அப்போது ரொம்ப கிராக்கியாக இருந்த தங்கம் ( இப்போதுகூட தான்), வெள்ளி போன்ற உலோகங்களைக் கொண்டு வில்லை தயார் செய்து பண்டமாற்று முறையை மேம்படுத்திக் கொண்டார்கள். ஒரு ஏரியா ராஜா அடுத்த பேட்டையில் காலை ஊன்றியவுடன் அந்த ஏரியா காசெல்லாம் செல்லாக் காசாகிவிடும். இந்த மாதிரி தான் ஏரியா பொருளாதாரம் இருந்தது.
இப்ப அப்படியே தசாவதாரம் ஸ்டையில்ல 21-ம் நுாற்றாண்டிற்கு வருவோம். நிலைமை சிறிது கூட மாறவில்லை. ஏரியாவெல்லாம் பெரிசா ஆயிருக்கு. அவ்வளவுதான். அதே வெட்டி பந்தா. வெட்டிப் போர்கள். பண்டமாற்று முறை தான். சிறிய வித்தியாசம் : பண்டமாற்று முறை பணத்தை (Currency) அடிப்படையாக வைத்து நடக்க ஆரம்பித்தது. அதனை மேம்படுத்தி, வழிநடத்த வங்கி போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
இப்போது ஒரு சின்ன கற்பனை : நம்நாட்டில் பதினைந்து கோடி ருபாய் பணம் இருந்து, இருபது கோடி ருபாய்க்கு நாடு பொருட்களை உற்பத்தி செய்கின்றது (விவசாயம், தொழிற்சாலை என்று எல்லா துறைகளையும் சேர்த்து) என்று வைத்துக் கொண்டால் எது குறைவாக கிடைக்கின்றதோ அதற்கு தான் கிராக்கி இல்லையா? பணத்தின் மதிப்பு அதிகரித்துவிடும் அல்லவா. இவ்விரண்டையும் ஒரு தராசில் வைத்தால் எது குறைவோ அது மேலேறிவிடும். மேலேறிவிடுவதற்கு தான் மவுசு அதிகம். இந்த சமநிலையை புரிந்துகொண்டால் பணவீக்கத்தின் அடிப்படையை வெகு எளிதாக புரிந்துக் கொள்ளலாம்.
இந்த சமநிலையை எவ்வாறு அரசாங்கம் பேணி வருகின்றது? அரசாங்கம் எந்த முறைகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வருகின்றது? என்று வரும் வாரங்களில் பார்க்கலாம். பொருளாதார பாடங்களில் பண வீக்கத்தைப் பற்றி படிப்பது மிகவும் மந்தமான காரியம். (பொருளாதாரம் முழுவதுமே இப்படிதான் என்று கூறும் ஒரு சாராரும் இருக்கின்றார்கள்) . இந்த வகுப்புகள் எல்லாம் ஒரு தவ சாலை மாதிரி ஆகிவிடும். ஆசிரியர் மந்திர உச்சாடனம் சொல்வது போல் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். மாணவர்கள் எப்போதும் ஒருவித யோக நிலையில் இருப்பார்கள். இதனாலேயே யாராவது ஒருவர் பி.ஏ (பொருளாதாரம்) படிக்க போகின்றேன் என்று சொன்னால் இச்சமுகம் அவர்களை பரிதாபமாக பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இது பற்றிய அறிவு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருப்பதனால் கூடிய வரையில் எளிய வகையில் எழுத முயற்சி செய்கின்றேன்.
Recent Comments