Posts filed under ‘Fundamental Analysis’
பண வீக்கம் VI
நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பணம் நோட்டுகளாக (Currency Notes) மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற நகரில் அச்சடிக்கப்படுகின்றது என தெரியும். எவ்வளவு பணநோட்டுகள் அச்சடிக்கப்படும்? உதாரணத்திற்கு, இந்திய தொழிற்சாலைகளை எல்லாம் விலைக்கு வாங்க வேண்டுமென்றால் எவ்வளவு பணம் தேவையோ, அவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டுமென்றால் உலகில் காகித பற்றாக்குறை வந்து விடும். நம் நாடு மட்டுமல்ல, எந்த நாடுகளிலுமே பண நோட்டுகள் நாட்டின் பொருளாதார மதிப்பிற்கு சமமாக அச்சடிக்கப்படுவதில்லை. பிறகு, 2,400 கோடிக்கு ஒரு குழுமத்தை விலைக்கு வாங்க வேண்டுமென்றால்,அதன் முழு மதிப்பிற்கும் 1,000 நோட்டுகள், 500 நோட்டுகள் உபயோகப்படுத்த படுவதில்லை.அதற்கு பதிலாக அரசு பத்திரங்கள் பயன்படுத்தப்படும். அரசு பத்திரங்களும் ருபாய் நோட்டுகள் மாதிரி தான். மதிப்பு மட்டும் 1,000 மடங்குகளில் இருக்கும்.
சரி, நமக்கு பங்கு சந்தை என்றால் தெரியும். அதனையும் கடந்து சில சந்தைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, நம்மால் வெறும் ஐம்பது ருபாய் மட்டுமே இருந்தால், நாம் காய்கறிச் சந்தையில் மட்டுமே வணிகம் செய்ய இயலும். ருபாய் 5,000-ம் அதன் மடங்குகளும் என்றால் பங்கு சந்தையில் முதலீடு செய்வது பற்றி யோசிக்கலாம். ருபாய் 5,000 கோடிகள் மற்றும் அதற்கும் மேல் என்றால் …… அதற்கும் சில சந்தைகள் இருக்கின்றன. பணச் சந்தை (Money Market) என்று அழைக்கப்படும். இந்த பணச் சந்தையில் தான் அரசு பத்திரங்கள் வாங்கி, விற்கப்படும். அது மட்டுமில்லாமல், வேறு சில சந்தைகளும் உண்டு. தட்பவெப்பநிலைக்கான சந்தை (Weather Market) ஒன்றும் உண்டு. உலகிலேயே அதிக பணம் புழங்கும், மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் மட்டுமே வணிகம் செய்யும் தனி உலகம் அது. எந்த அரசின் அங்கீகாரமின்றியும் நடந்து வரும் சந்தை அது.
ஒரு கோடீஸ்வர தொழிலதிபருக்கு அவசரமாக ஒரு பெரும் தொகை தேவைப்படுகின்றது என்றால், அவர் தன்னிடம் இருக்கும் கடன் பத்திரங்களை வைத்து தொகை திரட்ட முனைவார். இதற்காக அக்கடன் பத்திரங்களை அவர் விற்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. அக்கடன் பத்திரங்களை வைத்துக் கொண்டு தொகையினை பெற்று, குறிப்பிட்ட காலத்திற்குள் அத்தொகையினை திரும்ப செலுத்தி அக்கடன் பத்திரங்களை மீள பெற்று விடுவார். இதற்கு அவருக்கு தேவைப்படுவது ஒரு தரகர். அந்த தரகர் தொழிலதிபரின் கடன் பத்திரங்களை பணச் சந்தையில் வைத்து அத்தொழிலதிபர் கோரும் தொகையை பெற முனைவார். இந்த பணத்தை அவருக்கு கொடுப்பது யாரென்றால், பொது மற்றும் தனியார் வங்கிகள்.
அவர்கள் நாம் நிரந்தர வைப்பு நிதி மற்றும் இதர நிதியில் முதலீடு செய்யும் தொகையினை (சி ஆர் ஆர் மற்றும் SLR போக மீதியுள்ள தொகையினை) இது போன்று கடன் பத்திரங்களை வைத்துக் கொண்டு கடனாக கொடுப்பார்கள். அதேபோல், தொழிலதிபர்களும் கையில் உதிரியாக உள்ள பணத்தை இவ்வாறாக கடன் பத்திரங்களாக வங்கியிடம் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். இந்த வாங்கி விற்கும் காலம் ஒரு நாள் முதல் ஒரு வருடம் கூட ஒப்பந்தத்திற்கேற்ப மாறுபடும். இதேபோல் வங்கிகளும் ரொக்கம் தேவைப்படும் போது, பணச் சந்தையில் அரசு பத்திரங்களை கொடுத்து ரொக்கம் பெற்றுக் கொள்ளும். இந்த பணச்சந்தையில், அரசு மற்றும் தொழிலதிபர்கள் இவர்களுக்கு நடுவில் இருக்கும் பாலமான தரகர் வேலையை செய்தவர்களில் குறிப்பிட தக்கவர் திரு. Harshad மேத்தா. இந்த ரெபோ-வில் அவர் எவ்வாறு சட்டத்தில் உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி பணம் ஈட்டினார் என்பதை தனி ஒரு பதிவே போடலாம்
தொழிலதிபரும், வங்கியும் பண பரிமாற்றத்திற்கு போட்டுக் கொள்ளும் ஒப்பந்தமே ரெபோ (Repo). அதாவது Repurchase Agreement (R.P.s) . இதன் முலம் வங்கியில் உள்ள உபரி தொகையானது பணச் சந்தையில் பரிமாற்றத்திற்கு விடப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலம் முடிவடைந்தவுடன் திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது.
ரெபோ ரேட்டினை ஏற்றி, இறக்குவது முலம் நாட்டில் பணப்புழக்கத்தை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதால், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெபோ ரேட்டினை ஒரு யுக்தியாக பயன்படுத்தி வருகின்றது. பணவீக்கம் என்றால் என்ன என்பதை எளிய வகையில் விளக்கி இருப்பதாக நான் நம்புகின்றேன். இதில் இன்னும் நிறைய விளக்கப்பட வேண்டிய Technical Terms உள்ளன. உதாரணமாக, பணச் சந்தை (Money Market). அது பற்றியே தனி கட்டுரை தொடர் எழுதலாம். ஆனால், இனி பணவீக்கம் நமது சந்தையை இனி ஆட்டுவிக்கப் போகிற ஒரு முக்கிய அங்கமாக விளங்கபோவதால், அதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வதற்காக இக்கட்டுரை தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
இத்துடன் இத்தொடர் முடிவடைகிறது. இனி மேல் Fundamental Analaysis-ல் Accounts பற்றி பார்க்கலாம். இத்தொடரில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். எளிய சந்தேகம் என்றால் விளக்குகிறேன். ஒரு ஒன்னாங் கிளாஸ் மாதிரி. அந்த அளவிலேயே சந்தேகம் கேளுங்கள். ஒன்னாங்கிளாசிலேயே பத்தாம் வகுப்பு கணக்கு கேட்டால், ஆசிரியருக்கு அதனை விளக்க மகிழ்ச்சியென்றாலும், மற்ற மாணவர்கள் பேந்த பேந்த முழிக்க வேண்டுமெல்லவா? சமயத்தில், ஆசிரியரே கூட முழிக்கக்கூடும் அல்லவா! அந்த அளவிலேயே கேளுங்கள். மேலும், இத்தொடர் குறித்து உங்கள் கருத்துகளையும் தவறாமல் பதிவு செய்யுங்கள். இரண்டு உலக போர்களையும் தாண்டி வந்திருக்கின்றோம், இல்லையா!
ஒரு நண்பர் (திரு கமல்) அரசு பத்திரங்கள் பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளார். அரசு பத்திரங்கள் என்பது மிகுந்த பாதுகாப்பானது என்ற போதிலும். வட்டி மிகவும் குறைவு. ஆனால், அரசு அதை வாங்குபவர்களுக்கு சில சலுகைகளையும் அறிவிக்கின்றது. உதாரணத்திற்கு, பங்கு சந்தையில் ஒரு வருடத்திற்குள் ஏற்படும் இலாபத்திற்கு 15% சதவீதம் Capital Gains வரி கட்டப்பட வேண்டும். அரசு பத்திரங்களில் (Capital Gains Bonds) முதலீடு செய்வதன் முலம், இதனை குறைக்கலாம். ஆனால், இதில் முதலீடு செய்த பணம் குறைந்தது முன்று வருடங்களுக்காவது முடக்கப்படும். எவ்வித நோக்கமும் இன்றி, முதலீட்டுக்கு மட்டுமே என்றால் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதில் இலாபமில்லை. அதற்கு தபால் நிலைய பத்திரங்களில் அதிகப்படி வட்டி கிடைக்க வாய்ப்புண்டு, நண்பரே! அப்படி அரசு பத்திரங்கள் வாங்கதான் வேண்டுமென்றால் உங்கள் ஆடிட்டரிடம் கேட்டால் அவர் வாங்கி கொடுப்பார்.
பண வீக்கம் V
பணவீக்க கட்டுரையின் முதல் பகுதியில் பார்த்த பொருள் உற்பத்தி மற்றும் பணப் புழக்கம் ஆகியவற்றிக்கிடையேயுள்ள சமன்நிலையை பேண அரசு எப்பொழுதும் முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்று பார்த்தோம். பணவீக்கம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பொருளாதாரத்திற்கு பாதிப்பு என்பதால், அரசு பல்வேறு முறைகளில் இந்த சமன் நிலையை பேண முயற்சி செய்யும். அரசுக்காக இந்த வேலையை செய்வது ரிசர்வ் வங்கி. ஒவ்வொரு நாட்டிலும் அனைத்து வங்கிகளை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு இருக்கும். அவற்றை பெடரல் வங்கி என அழைப்பார்கள். நம்நாட்டில் உள்ள மற்ற வங்கிகளை கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கமே அரசு மற்றும் தனியார் வங்கிகள் திவாலாகமல் பார்த்துக் கொள்ளுதல் தான். குறிப்பாக அரசு துறை வங்கிகள். ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு ஒழுங்காக பணத்தை பட்டுவாடா செய்ய முடியவில்லை என்றால் மக்களுக்கு அரசின் மீதுள்ள நம்பிக்கையே போய்விடும். அவ்வாறு நிகழாமல் ரிசர்வ் வங்கி சில கடுமையான கட்டுப்பாடுகளை வங்கிகளுக்கு விதித்திருக்கிறது. முதலில் அனைத்து வங்கிகளும் தாங்கள் திரட்டும் நிதியில் ஓரு குறிப்பிட்ட சதவிதம் ரிசர்வ் வங்கியிலோ அல்லது அவ்வங்கியிலோ தனியாக வைத்திருக்க வேண்டும். இதனை கேஷ் ரிசர்வ் ரேஷீயோ (Cash Reserve Ratio or C.R.R.) என்று கேள்விப்பட்டிருப்போம். இந்த நிதியை தனியாக எடுத்து வைத்த பிறகு இருக்கும் மற்ற நிதியைதான் வங்கிகள் கடன் மற்றும் இதர தேவைகளுக்கு எடுத்துக் கொள்ளும். இந்த கேஷ் ரிசர்வ் ரேஷீயோவை அதிகரிப்பது முலமாக வங்கிகள் கூடுதலாக பணத்தை உபரித் தொகையாக வைத்துக் கொள்ள நேரிடுவதால், வெளி நபர்களுக்கு கொடுக்கப்படும் கடன் தொகை கணிசமாக குறைய நேரிடும். வங்கி வைப்புநிதிக்கு (Cash Deposits or Term Deposits) கொடுக்கப்படும் வட்டி சதவீதத்தை அதிகரித்து மக்களிடம் இருந்து பணத்தை வங்கியில் முதலீடு செய்ய விளம்பரங்கள் வெளியிடப்படும். மக்களிடம் அதிகப்படியான புழங்கும் பணத்தை முதலீடு செய்ய மறைமுகமாக அனைத்து வங்கிகளும் செயல்படும். ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ஒரு யுக்தியாக இந்த ரேட்டை அதிகரிக்கும்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வங்கியும் ரிசர்வ் வங்கி குறிப்பிடும் சதவீதத்தை பணமாகவோ, அரசு கடன் பத்திரங்களாகவோ, தங்கமாகவோ கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இதற்கு Statutory Liquity Ratio என்று பெயர். இதன் முலமாக ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தன்னுடைய முதலீட்டை எப்போதும் கேட்டாலும் தயங்காமல் கொடுக்கும்படி வங்கி செயல்படும். இதுபோன்ற கடுமையான சட்டங்களை ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருவது காரணமாக, நம் நாட்டில் உள்ள மக்களுக்கு தாங்கள் வங்கிகளில் முதலீடு செய்த தொகையினை வங்கிகள் ஏமாற்றி ஒரே இரவில் திவாலாகி விடும் என்ற சந்தேகமே இதுவரை எழுந்தது இல்லை.
அடுத்தது ரெபோ ரேட் (Repo Rate). இதனை பார்ப்பதற்கு முன்னால், அரசு கடன் பத்திரங்கள் (Government Bonds or Government Securities) என்றால் என்ன என்பதை பார்த்து விடலாம். பெயருக்கேற்றாற்போல், அரசால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தொகை பட்டுவாடா என எழுதி கொடுக்கப்படும் பிராமிஸரி நோட்டுகள் எனலாம். ஒரு அரசின் முக்கிய கடமையே மக்களை பாதுகாப்பது, அவர்கள் நன்றாக வாழ வசதி செய்து கொடுப்பது. இதற்காக அரசாங்கம் சாலைகள், நீர்நிலை வசதிகள், மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கடமைப்பட்டிருக்கிறது. அரசுக்கு வருமான வரி, வணிக வரி மற்றும் இதர வரிகளால் வருமானம் வருகின்றன. இந்த வருமானத்தை வைத்துதான் அரசு மக்களுக்கு தேவையான நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அரசுக்கு வருகின்ற வருமானம் தினந்தோறும் வருவதில்லை. உதாரணத்திற்கு, வருமான வரி என்பது ஆண்டு முழுவதும் கட்டலாம் என்றாலும், முக்கிய காலம் என்றால் மார்ச்/ஏப்ரல் மாதங்கள்தான். அச்சமயத்தில்தான் மக்களுக்கு வருமான வரி கட்ட வேண்டுமென்று நினைவு வருவதால் வருமான வரி அதிகமாக வசூல் ஆகும். நலத்திட்டங்கள் ஆண்டு முழுவதும் செயல்படுத்தி வருவதால், இடையில் ஏற்படும் பணத் தேவைக்காக அரசு கடன் பத்திரங்களை வெளியிட்டு அதனை பணச் சந்தையில் (Money Market) விற்பது முலம் தன்னுடைய பணத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. பணச் சந்தை பற்றி அடுத்த பகுதியில் விரிவாக பார்க்கலாம். இது மட்டுமல்லாது இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. அரசின் கடன் பத்திரங்கள் குறுகிய காலம் (ஒரு வாரம், மாதம்) முதல் நீண்ட காலம் (ஒரு வருடம், ஐந்து வருடங்கள்) வரை இருக்கின்றன. நீண்ட கால கடன் பத்திரங்களை வாங்குபவர்களுக்கு அரசு சில சலுகைகளையும் வழங்குகின்றது. உதாரணத்திற்கு, குறுகிய கால முலதன வரியை குறைக்க, அரசு வெளியிடும் கேபிடல் பத்திரங்களை வாங்கினால் குறுகிய கால முலதன வரியை குறைக்கலாம். ஆனால் அதிகபட்ச தொகை ஐம்பது இலட்சம் மட்டுமே. இக்கடன் பத்திரங்களின் முதிர்வு காலத்தில் முதிர்வு தொகை மற்றும் வட்டி ( மிக சிறிய அளவே வட்டி விதம் இருக்கும்) சேர்த்து அரசு யாரிடம் அந்த பத்திரங்கள் இருக்கின்றதோ அவர்களிடம் கொடுத்துவிடும். ஆம், இக்கடன் பத்திரங்கள் ருபாய் நோட்டுகள் மாதிரி. யார் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அரசால் வெளியிடப்படும் இக்கடன் பத்திரங்கள் மிகுந்த நம்பகதன்மை கொண்டவை. ஏனென்றால், கடன் தாரர் அரசாங்கம் என்பதால் ஏமாற்ற வாய்ப்பில்லை. ஆனால் வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது, சில அரசாங்கங்கள் திரும்ப கடனை செலுத்த தவறியிருக்கின்றன. 1998-ல் இரஷ்ய அரசாங்கத்திற்கே இந்த நிலைமை உண்டாயிற்று.
ரெபோ ரேட் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம். வழக்கம்போல் உங்கள் கருத்துகளை அறிய ஆவலாய் இருக்கிறேன்.
பணவீக்கம் IV
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தின. விவசாயத்தில் நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி விளைச்சலை பெருக்கின. நமது நாடோ “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” என்று பழைய முறைகளை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டது. நாட்டின் மொத்த உற்பத்தியில் தொழிற்சாலை உற்பத்தி பெரிய அளவில் இடம் பெறவில்லை.
வானம் பொய்த்து, நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டபிறகு தான் இதன் தீவிரத்தை உணர்ந்தோம். உணவு தானியங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்போதுதான், அந்நிய செலாவணியின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். விவசாய அறிவியல் மேதை திரு எம். எஸ் சுவாமிநாதன் மற்றும் திரு சுப்ரமணியன் போன்றோர்களின் மேதைமையால் நம்நாடு கடுமையான உணவு பற்றாக்குறையிலிருந்து தப்பித்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவும் எய்தியது. அந்த காலகட்டங்களில்கூட ஒரு டாலருக்கு இந்திய மதிப்பு 8 ருபாய் மட்டுமே.
1980-களில் நம்நாடு ஒரு பெரும் புதையலை கண்டுக் கொண்டது. நம்முடைய தர்க்க அறிவு தான் அது. இந்த தர்க்க அறிவை வைத்துக்கொண்டு வெட்டிப்பேச்சு மட்டுமின்றி, கணினி மென்பொருளும் எழுதலாம் என்று தெரிந்துக் கொண்டபிறகு நாட்டின் பொருளாதாரம் வேறுதிசையில் திரும்பியது. குறிப்பாக நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கணினி மென்பொருள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்தது. வருடத்திற்கு வருடம் அது பன்மடங்காக பெருக ஆரம்பித்தன. 1990-ல் ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ருபாயின் மதிப்பு 17 ருபாய். இரண்டு மடங்கு அதிகரித்தது.
வகுப்பில் நன்றாக படிக்கும் ஒரு பையன் எப்படி ஆசிரியருக்கு செல்லமாக மாறுகின்றானோ அவ்வாறே தகவல் தொழில்நுட்ப குழுமங்கள் (Information Technology Companies) அரசின் செல்லப்பிள்ளைகளாக மாறின. நாட்டின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் அக்குழுமங்கள் பெருமளவில் பாதிக்காமல் இயற்றப்பட்டன.
நாம் இரண்டாவது முறையாக அனுகுண்டு வெடித்தபோது, உலக நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட குறுகிய காலத்தில் அந்நிய செலாவணி நெருக்கடியிலிருந்து காத்தது இந்நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஈட்டிக் கொடுத்த அந்நிய செலாவணிதான்.
ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத்தை செல்லமாக பாவித்து வளர்த்ததில் வேறு சில விளைவுகளும் ஏற்பட்டன. பணப்புழக்கம் அளவுக்கு அதிகமாக அதிகரித்தது. உதாரணத்திற்கு, ஐதாரபாத் மற்றும் சென்னையில் கணினி குழுமங்கள் ஆரம்பிக்கப்பட்டபின் அந்நகரங்களில் விலைவாசி எவ்வாறு அதிகரித்தது என்பதை 1990-99-களில் அங்கே வசித்தவர்களை கேட்டால் தெரியும். நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தற்கு தகவல் தொழில் நுட்பக் குழுமங்களையும் ஒரு காரணமாக சொல்லலாம்.
மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் Outsourcing குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தால் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கே பெரிய இடர் வந்த மாதிரி ஊடகங்களில் செய்தி வெளியாக ஆரம்பித்து, சந்தையும் பலமாக பாதிக்கப்பட்டது. பல துறைகள் இருக்கும்போது, அரசாங்கம் இத்துறையையே முதன்மையாக கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. 2000-களில் டாலரின் மதிப்பு நாற்பதைந்து ருபாய்கள்.
தற்போது நிலைமை சிறிது மாற ஆரம்பித்திருக்கிறது. மற்ற துறைகளையும் கரிசனத்துடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் விளைவாக டாலரின் மதிப்பு வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கலாம். டாலரின் மதிப்பு குறைவதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன என்றாலும் வெளிநாடுகளிலிருந்து இயந்திர வகைகளை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். அதனால் நம் நாட்டு தொழிற்துறை வளர்ச்சியடைய மறைமுகமாக உதவலாம் என்பதையும் மறந்து விடக் கூடாது. உதாரணத்திற்கு, டாலரின் விலை பத்து ருபாய் குறைந்தால், ஒரு ஐ-போட்(i-Pod)-டின் விலை கிட்டத்தட்ட ருபாய் ஆயிரத்து எழுநுாற்று ஐம்பது அளவில் குறைய வாய்ப்புள்ளது.
பணப்புழக்கம் பற்றியும், கடந்த ஆண்டுகளில் ருபாயின் செயல்பாடுகளை பற்றியும் ஒரளவு பார்த்தோம். அடுத்தடுத்த கட்டுரைகளில் ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளான, ரெபோ (Repo) ரேட், சி ஆர் ஆர் (Cash Reserve Ratio) அதிகரிப்பு போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.
Recent Comments