Posts filed under ‘புத்தக விமர்சனம்’

பனிமலையில் பராங்குசம் – முன்னுரை

     எனது நண்பர் ஷங்கர் அவர்கள் நீண்ட நாட்களாக நெஞ்சை பிழியும் ஒரு சமூக நவீனம் ஒன்றை எழுத வேண்டுமென்ற ஆசை கொண்டிருந்தவர். நாளடைவில் அதை எழுதவும் முற்பட்டார். ஆனால், அது ஒரு துப்பறியும் மர்ம நாவலாக வந்து விட்டது. அதில் ஸோம்பிகளும் கலந்து விட்டனர். ஸோம்பிகள் அந்த நாவலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

        அதற்கு முன்னுரை வேண்டும் என என்னிடம் அந்த எழுத்துப் பிரதியினை என்னிடம் கொடுத்திருக்கிறார். இதற்கு அட்டைப் படம் வரையும் பொறுப்பை சென்னையை சேர்ந்த திரு ரபீக் ராஜா என்பவரிடம் கொடுத்திருப்பதாக தெரிகிறது.

         கதையின் நாயகன் பெயர் பராங்குசம். ஆனால் நிறைய பெயர்களில் அவன் கதைத்தளத்தில் உலா வருகிறான். அவனது உண்மையான பெயர் என்ன என்பதை கடைசிவரை ஆசிரியர் சொல்ல வில்லை. நிறைய மர்மங்களை கடைசி வரை விடுவிக்கவில்லை. படிக்கும் வாசகன் இதற்கு அடுத்த பாகம் வர வாய்ப்பிருக்கிறது என்ற சோகம் நெஞ்சை தாக்க இந்த நாவலை முடிப்பான். ஒரு நல்ல நாவல் இது போன்ற சோகம், துக்கம், வேதனை, தன்னிரக்கம், அழுகை போன்றவற்றுடன் முடிந்தால் அது க்ளாஸிக் என கருதப்படும் என ஷங்கர் என்னிடம் பலதடவை சொல்லியிருக்கிறார்.

    கதாநாயகன் போர் விமானியாக பணியாற்றி, அது போரடிக்கவே, கடற்படையில் பயிற்சி பெற்று கப்பல் கமாண்டராக பொறுப்பேற்கிறான். பின்னர், இராணுவத்திற்கு சென்று, சிறப்பு அதிரடி படையில் சேர்ந்து, அங்கேயும் தனி முத்திரை பதிக்கிறான். பீடா வாங்க சாலையை கடக்கும்போது, லாரி மோதி சில பற்கள் மற்றும் நினைவையும் இழக்கிறான்.

        அவன் பரோட்டாக் கடையில் பரத் என்ற பெயரில்  வேலை செய்துக் கொண்டிருக்கும் போது சி ஐ ஏ கண்களில் பட்டு விடுகிறான். அவனை அணுகும் சி ஐ ஏ அவன் அமெரிக்க உளவாளி ஜேம்ஸ் போர்ன் என்றும், மொராக்கோ மதுபான விடுதியில் அவன் தன் பழைய நினைவுகளை தொலைத்த கதையை சொல்கிறது. கதாநாயகன் அமெரிக்க உளவாளியாகிறான்.

     மொராக்கோவில் அவன் உளவுப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, மொஸாட் அவனை அணுகி கதாநாயகன் ஒரு இஸ்ரேலி என்றும், அவன் பெயர் மோஷே ஷரோன் என்ற புதிய கதையை சொல்ல, கதாநாயகன் மொஸாட் உளவாளியாகின்றான்.

     இவ்வாறாக, உலக உளவுத் துறைகள் கதாநாயகனை பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு கட்டத்தில், தன் நினைவை பெறும் கதாநாயகன்,

ஓ**, பழச மறந்துட்டேன்னு நினைச்சீங்களா. செருப்பால அடிப்பேன், நான் தமிழன்டா, அமெரிக்க கம்பெணிக்குதான் வேலை செய்வேன்.

என பொங்கும்போது, வாசகனின் மனமும் பொங்கும் என்பதில் ஐயமில்லை. கதாநாயகனின் பாத்திரத்தை வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார். தன் கூட பணிபுரியும் அழகு பெண்ணான ஸ்டெல்லாவின் அத்தையை மனமுருக காதலிக்கிறான் கதாநாயகன். இது ஸ்டீரியோடைப் கதாநாயகர்களிடமிருந்து இவனை பெரிதும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

    நிறைய விஷயங்களை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறார். நாவலின் கதையும் அப்படிதான். இதுவும் ஒரு புதிய முயற்சித்தான். இந்த நாவலுக்கு எழுதப்படும் விமர்சனங்கள் வித்தியாசமானவையாக தான் இருக்கும்.

    கதாநாயகனை ஒட்டியே நாவல் நகர்கிறது. நிறைய இடங்களில் வாசகன் நினைத்துக் கொண்டிருக்கும் கதையை, காட்சிகளை  கதாசிரியரே தகர்க்கிறார். உதாரணத்திற்கு,

       செம்மறியாடுகளின் ரோமத்திலிருந்து செய்யப்பட்ட நல்ல அழுத்தமான கம்பளிச் சட்டையை அணிந்துக் கொண்டு, க்ளைவ் டானர் (இது கதாநாயகன் பெயர்களில் ஒன்று) அறையை விட்டு வெளியே வந்தான். ஜெய்ப்பூரில் அப்போது நேரம் நண்பகல் 12.00.

        அல்ஜீரியாவில் தன்னை சுற்றி வளைத்த முரடர்களை பார்த்து, வெய்ன் மில்டன் புன்னகையுடன், கண்களை மூடி அவர்களின் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ள சொல்கிறான். அந்த முண்டங்களும் அப்படியே செய்கிறார்கள். அவர்கள் கண்களை திறந்து பார்க்கும்போது, வெய்ன் மில்டனின் முதுகு தூரத்தில் தெரிகிறது.

     பாரீஸ் மதுபான விடுதியில், கால்களை சுழற்றி ஸ்டைலாக அமர்ந்து, பியர் போர்டன் விடுதி பணியாளரிடம்,

மார்ட்டினி, குலுக்கி, ஆனால் கலக்காமல் கொடு. எவ்ளோ அது?

முப்பது யூரோ,

அப்ப வேண்டாம். சில்லுன்னு தண்ணி ஒரு க்ளாஸ் கொடு.

       இந்த நாவலில் மர்மங்களும் இல்லாமல் இல்லை. இந்தியாவில் ஒரு முக்கிய அமைச்சர் ஸோம்பி என்ற மர்மம் கதாநாயகனுக்கு தெரிகிறது. அதை யார் என்று கண்டுபிடிப்பதில் மும்முரமாக இறங்குகிறான். ஈராக் மீது போர்தொடுக்க காரணமான அமெரிக்க ஜனாதிபதி ஒரு ஸோம்பியே என்றறியும்போது நமக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அவர் மீடியாவில் பேசும் காட்சிகளை இப்போது பார்க்கும்போது அது ஊர்ஜிதமாகிறது.

    நண்பர் ஷங்கர் எழுதியுள்ள இந்த 600-பக்க நாவலானது உலகம் முழுவதும் மனிதர்களை ஆட்சி செய்வது ஸோம்பிகளே என்ற மர்மத்தை தனியாக உலகிற்கு வெளிச்சம் போட்டும் காட்டும் ஒரு நாயகனின் கதை என்று சொல்லலாமா? என்றால் சொல்லலாம்.

January 14, 2013 at 12:41 pm 3 comments

Engineering Fluid Dynamics and Mixing – C K Chopra

நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்ட எனக்கு ஒரு மழைநாளின்போது படிக்க புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை.  நாட்டில் பல பேர் வீட்டில் கேபிள் கனெக்ஷனே இல்லை, இதை ஒரு பெரிய விஷயமாக சொல்ல வந்துவிட்டானே என ஒரு சாதாரண வாசகன் நினைக்கலாம்.  ஆனால் ஒரு இலக்கிய வாசகன் (இனி இப்பதிவில் அவன் இலக்கியன் என குறிப்பிடப்படுவான்) அவ்வாறு எண்ண மாட்டான்.

எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் உள்ள எண்ணிக்கை இடைவெளி வெகுவாக குறைந்து வரும் இந்த நேரத்தில் நல்ல ஆசிரியர்களை அறிமுகப்படுத்துவது ஒரு இலக்கியனின் கடமை.  நல்லது.  அந்த மழைநாளுக்கு திரும்புவோம்.  என் தமையனின் பழைய பொறியியல் புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருகையில்தான் எனக்கு கிடைத்தது அந்த இலக்கிய பொக்கிஷம்.  சி கே சோப்ரா எழுதிய Engineering Fluid Dynamics and Mixing.

சில பக்கங்களை படித்துதான் பார்ப்போம் என துவங்கினேன்.  அடடா…….அடடா!  என்ன வித்தியாசமான அனுபவம்! வாய் வழியே புகைவிடும் ஒரு அறிமுக புகையாளி மூக்கினாலும் விட முடியும் என அறியும்போது அவனடையும் பரவசத்தை நானும் அடைந்தேன் என்றால் அது மிகையாகாது

Preface என்ற தலைப்பின் கீழ் ஆசிரியர் நூலை தன் பெற்றோர்களுக்கு அர்ப்பணிப்பதாக உருகுகிறார்.  தனக்கு உதவியவர்கள் என நிறைய பெயர்களை குறிப்பிடுகிறார்.  அதில் நிறைய மேற்க்கத்திய பெயர்களும் இடம் பெறுகின்றன.

முதல் அத்தியாயமான Fluid Dynamics – An Introduction –ல் ஆசிரியர் சில அடிப்படை விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார்.  நிறைய குறீயிடுகளும் இடம் பெறுகின்றன.  நமக்கு நன்கு அறிமுகமான /,+,=.% குறியீடுகளோடு வேறு சில குறியீடுகளும் (உதாரணத்திற்கு ∀, ∂,⊕,⊥,∪ இடம் பெறுகின்றன.  நான் முதலில் அவற்றை அந்தரங்க உறுப்புகளை குறிக்கும் குறியீடுகள் என நினைத்தேன்.  அத்தியாயங்கள் செல்ல செல்ல அதற்கு புதிய புதிய அர்த்தங்களை கற்பித்தவாறே திறமையாக இந்நூலை எழுதுகிறார்  சி கே சோப்ரா.

உதாரணத்திற்கு, கீழ்க்கண்ட பகுதியை பாருங்களேன்.

\varphi(y)=a\cos\frac{\pi y}{2}+a'\cos 3\frac{\pi y}{2}+a''\cos5\frac{\pi y}{2}+\cdots.

Multiplying both sides by \cos(2k+1)\frac{\pi y}{2}, and then integrating from y = − 1 to y = + 1 yields:

a_k=\int_{-1}^1\varphi(y)\cos(2k+1)\frac{\pi y}{2}\,dy.

இது போன்று சிரிக்கவும், சிந்திக்கவும் நிறைய பகுதிகள் இந்நூலில் இருக்கின்றன. 

     சில பக்கங்களில் எவ்வித வார்த்தைகளும் பயன்படுத்தாமல் வெறும் குறீயிடுகளை மட்டுமே பயன்படுத்தி நிரப்பியுள்ளது அவரின் புலமைக்கு சான்று. இது போன்ற இடங்களில் ஒரு சாதாரண வாசகன் திகைத்து நிற்பது இயல்பென்றாலும், என்னால் இலகுவாக தாண்டிச் செல்ல முடிந்தது.   வாசிப்பே இயல்பென்று கொண்டவர்களால் எதையும் படிக்க முடியும் என்பதை உங்களுக்கு வலியுறுத்த விழைகிறேன். 

உங்கள் கற்பனைக்கெட்டாத பல படங்கள் இந்நூலில் இடம் பெறுகிறது. 

fluid

இப்படத்தில் நீலக்கலரில் இருப்பதே Fluid என்பதை இப்பதிவை இதுவரை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள்/இலக்கியர்கள் புரிந்துக் கொள்வார்கள்.  பிசிறாக நீலக்கலரில் இருப்பது Fluid சில வேளைகளில் Dynamic-ஆக இருக்கும் போது ஏற்படும் நிலை.  மேலும் இது ஒரு 3D படம்.  இடது கண்ணை மூடிக்கொண்டு உங்கள் கணினியின் வலதுபுறம் 60 டிகிரி அளவில் சென்று பாருங்களேன்.  வியந்துதான் போவீர்கள்.  அலுவலகத்தில் வேலை நேரத்தில் வலைத்தளங்களை படிப்பவர்கள் தயவு செய்து இதை செய்து பார்க்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

எட்டாவது அத்தியாயத்தில் ‘Fluid Dynamic Particles Acceleration, Deacceleration and Reacceleration’ –ல் பார்ட்டிக்கிள்கள் பலவாறு வேகமடைந்து நிதானமடைந்து மீண்டும் வேகம் கொள்வது விவரிக்கப்பட்டுள்ளது.  அங்கே  நயன்தாராவின் படத்தை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தேன்.  மூல புத்தகத்தில் வேறு படம் இருந்திருக்கலாம்.   

இந்த நூலின் முடிவில் இதைத் தொடர்ந்து படித்தவர்களின் கருத்துகள் அழகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘Fuck You, CK’ என்பது தனது தமையனின் கையொப்பத்தில் தெளிவாக உள்ளது.  “I Love You. Shailaja” என்றும் சற்று தெளிவில்லாத கையெழுத்தில் உள்ளது.  யாருடையது என தெரியவில்லை.  அவனின் செல்போனை அடுத்த முறை ஆய்வு செய்தால் கண்டுபிடித்து விடலாம்.

இதை இலக்கியம் என சொல்ல எவ்வாறு சாத்தியம் என்ற கேள்விக்கு, சென்னை புத்தக கண்காட்சி முடிந்த பிறகு இலக்கியம் எவ்வாறு மதிப்பிட படுகிறது என்ற பொது அளவுக்கோல்களின் அடிப்படையில் பார்க்கலாம்.

குழப்பமான அட்டைப்படத்துடன், முன்னுரையை தவிர வேறு எந்த இடத்திலும் தெளிவாக புரிந்து விடாத எழுத்துகள், குறைந்த பக்கங்கள், அதிக விலை. மேலும் படித்தவர்கள் முகத்தில் வரும் மந்த காசம்.

     ஆக இந்த இலக்கிய புத்தகத்தை என் நண்பர்களுக்கு மட்டுமல்லாமல் எதிரிகளுக்கும் பரிந்துரைக்கிறேன்.

 

January 20, 2011 at 9:11 pm 11 comments

வேட்டையாடும் தேவதைகள்

கிறிஸ்தவ ஆதிநூல்களில் ஒன்றான  Enoch புத்தகத்திலிருந்து

                 கடவுள் தனது பிரியத்திற்குரிய மனிதர்களை படைத்தபின் அவர்களை கண்காணிக்கும் பொருட்டு தேவதை குழுவினை பணித்தார்.  இவர்கள் கண்காணிப்பாளர்கள் எனப்பட்டனர். கடவுளின்  ஆணைப்படி மறைந்திருந்து மனித இனத்தை கண்காணித்தபடி இருந்தனர். 

          the-book-of-enoch நீண்ட காலத்திற்கு பிறகு கண்காணிப்பாளர்கள் மானிட பெண்களின் மேல் மையல் கொண்டு அவர்களுடன் கலந்தனர்.  அவர்களது பிள்ளைகள் தேவதைகளின் குணங்களை பெற்றும், மனித குணங்களையும் பெற்றும் பிறந்தன. 

        தேவதை குணங்களை பெற்ற பிள்ளைகளை இவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர்.  தங்கள் தந்தைகளிடமிருந்து போர்த்திறமைகளை கற்றுக் கொண்ட அவர்கள் நெப்லியம் (Nephilim) என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆறரை அடி உயரத்தில் நீலக் கண்களுடன் மிகுந்த அழகுடன், தாங்கள் நினைப்பதை அடைவதற்கு எத்தகைய குரூரமான வழிகளையும் பின்பற்ற தயங்காதவர்கள்.

        மிகச் சிறந்த போர் வீரர்களான இவர்கள் மனித இனத்தை கூடிய விரைவில் அடிமைப்படுத்தினர். தங்களை முதன்மை உயிர்களாக  இந்த பூமியில் கருதினர். fallen angels

        கோபம் கொண்ட கடவுள் தலைமை தேவதைகளை கொண்டு கண்காணிப்பாளர்களை பாதாள உலகில் சிறையலடித்து  விட்டார். பாதாள உலகில் அவர்கள் வீழ்ந்துக் கொண்டிருக்கையில் அவர்களது தீனக்குரலை  கேட்ட போர்த் தேவதையான கேப்ரியல் இரக்கங்கொண்டு தனது கையிலிருந்த தெய்வீக யாழை அவர்களை நோக்கி வீசியது.

        பாதாளத்திலிருந்து  தங்களை தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்க யாரேனும் வருவார்களா என அவர்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

              

               நாம் அடிப்படையாக மனதில் வைத்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை தகர்க்கும் வண்ணம் எழுதப்படும் புத்தகங்களே நம்மிடம் நல்ல வரவேற்பை  பெறுகின்றன.  டேன் ப்ரவுன் தன்னுடைய The Da Vinci Code நாவலில் கிறிஸ்துவின் புனித கோப்பை குறித்து புதிய எண்ணங்களை புகுத்தினார்.  அதற்கு தேவையான ஆதாரங்களையும் அப்புத்தகத்தில் முன்னிலைப்படுத்தினார். கிறிஸ்தவர்களின் எண்ணத்தை பரவலாக அது காயப்படுத்தியபோதும், விற்பனை ரீதியில்   முதலிடத்தை பிடித்தது.

        author அது போலவே, தேவதைகள் குறித்து நம்மிடம் இருக்கும் அடிப்படை எண்ணங்களை  Danielle Trussoni எழுதிய Angelology நாவல் மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறது.  இந்த கதாசிரியரின் முதல் நாவல் இது.  இதற்கு முன்னர் தன்னுடைய தந்தையின் வியட்நாம் போர் அனுபவங்களை (அவர் தந்தை ஒரு சுரங்க எலி (Tunnel Rat) )  வைத்து ஒரு நூல் எழுதியிருந்த போதிலும், கற்பனை என்ற வகையில் அவரின் முதல் புத்தகம் இது.       

              1942-ல் ஐரோப்பா இரண்டாம் உலகப்போரினால் நிலைகுலைந்திருந்த சமயத்தில் ஒரு ஆராய்ச்சி குழுவினர் பல்கேரிய மலையடிவாரத்தில் உள்ள சாத்தானின் வாய் என்றழைக்கப்படுகின்ற பெரும் பள்ளத்தின் அருகே ஒரு தேவதையின் இறந்த உடலை ஆராய்ச்சி செய்கின்ற காட்சியுடன் துவங்கிறது இந்த நாவல்.

                            lyre பத்தாம் நூற்றாண்டில் ஒரு மறைநூல் அறிஞரால்  தெய்வீக யாழை தேடி கண்டடைந்த குறிப்புகள்  1943-ல்  தேவதைகளை பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளும் குழுவினருக்கு கிடைக்கிறது.  அதை வைத்து அவர்கள் அந்த தெய்வீக யாழை கண்டுபிடிக்கின்றார்கள்.  அதன் சக்திகள் சரிவர தெரியாத நிலையில், இவர்களை தொடர்ந்து வரும் தேவதைகளுக்கு அது கிடைத்துவிடக் கூடாது என அமெரிக்காவிற்கு கொண்டுச் சென்று மறைத்து விடுகின்றனர்.

          1999-ல் க்ரிகோரி என்ற பழமையான நெப்லியம் குடும்பத்தினரின் வாரிசு பெர்ஸிவல் க்ரிகோரி.  தனக்கு ஏற்பட்ட தீடீர் சுகவீனத்தால் தனது அழகிய இறக்கைகள் செயலிழந்து, உதிர்ந்து போனதால் அதை தீர்க்கும் பொருட்டு அவர் தெய்வீக யாழை தேட ஆரம்பிக்கிறார்.

          angel1 இதற்காக வெர்லேன் என்ற தனியார் துப்பறிவாளரை அவர் அமர்த்தி அந்த தெய்வீக யாழ் கடைசியாக தென்பட்ட  ரோஸ் கான்வென்ட்டில் தேட பணிக்கிறார். ரோஸ் கான்வென்ட்டில் இருக்கும் கன்னியாஸ்திரியான ஈவான்ஜலின் வெர்லேன் கோரும் தகவல்களினால் கவரப்பட்டு தனது கடந்த காலத்தை அறிய முற்படுகிறாள்.

                      நாவல் 1943-ல் நடக்கும் தெய்வீக யாழை தேடும் முயற்சிகள், தற்காலத்தில் தேடும் முயற்சிகள் என இரு தளங்களில் பயணித்து செல்கின்றது.  கூடவே, க்ரிகோரி  குடும்பத்தின் இரத்த வரலாறும் நடுநடுவில் விவரிக்கப்படுகிற்து.

        ஒரு உதாரணமாக,

க்ரிகோரி குடும்பத்தை சேர்ந்த ஆர்தர் க்ரிகோரி என்பவர் 1800-ல் ஈஸ்ட் இந்தியா என்ற குழுமத்தின்  பங்குகளை மிக் குறைந்த விலையில் வாங்குகிறார்.  இந்தியா அவர்களிடத்தில் வீழ்ந்த பிறகு அக்குழுமத்தின் மதிப்பு அதிகரிக்கிறது.  வடக்கிந்தியாவில் சில கிராமங்களில் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து புரட்சி நடக்கிறது.   அதை தடுக்க வழிவகை தெரியாமல் அக்குழுமத்தினர் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  குழும பங்குகளின் விலை மெள்ள மெள்ள சரிந்துக் கொண்டிருக்கிறது. 

         mutiny தானே களத்தில் இறங்குகிறார் ஆர்தர் க்ரிகோரி.  அக்குழுமத்தின் உதவிக்காக அனுப்பப்பட்ட சொற்ப இராணுவ படையுடன் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிராமத்தில் நுழைகிறார்.  கிராம மக்களை ஒன்றாக்கி மைதானத்தில் நிறுத்தி வைத்து அவர்களிடத்திலிருந்து சிறுவர்களையும், சிறுமிகளையும் தனியே பிரிக்கிறார்.

         மற்ற ஆங்கிலேயரிடமிருந்து வித்தியாசமாக இருக்கும் இவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமியை கூப்பிட்டு, அவள் கையை பிடித்து மெள்ள அழைத்துச் சென்று, பீரங்கியின் வாயில் திணித்து திகைத்து நிற்கும் சிப்பாயிடம் திரியை பற்ற வைக்கச் சொல்கிறார்.

            சில நாட்களுக்கு பிறகு புரட்சி முற்றிலுமாக நசுக்கப்படுகிறது.

         கன்னியாஸ்திரி ஈவான்ஜலின் வாழ்க்கையில் உள்ள மர்மம் என்ன?  அந்த தெய்வீக யாழை கண்டறிந்தார்களா?  அதன் சக்தி என்ன? அந்த யாழை எப்படியும் கண்டுபிடித்து விட வேண்டுமென்று துடிக்கும் தீய தேவதைகளின் முயற்சிகள் வெற்றி பெற்றதா?

      மறைநூல்களில் காணப்படும் தேவதைகள் பற்றிய பத்திகள், அவர்களின் குணங்கள் என ஆதாரங்களை  நாவலின் ஊடே  முன்னிலைப்படுத்துகிறார்.  தன்னுடைய முதல் நாவலையே ஒரு தொடர் நாவலாக எழுதுவதற்கு முனைந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். 

        angels3 தேவதைகள் குறித்த புதிய பார்வையை இந்த நாவல் வைக்கிறது.   கிறிஸ்வ, முஸ்லீம் மற்றும் இந்து மதங்களிலும் தேவதைகள் பற்றிய கதைகளில் ஒரு பொதுவான தன்மை காணப்படுகின்றன.  எனவே, இந்த நாவலை படிப்பதற்கு தேவதைகளின் வரலாறு பற்றிய அடிப்படை சிறிது தெரிந்திருந்தால் போதும்.

மேற்கொண்டு படிக்க, இரசிக்க

1,  Patrick Heron எழுதிய Nephilim and the Pyramid of the Apocalypse

2.   Elizabeth Clare Prophet எழுதிய   Fallen Angels and the Origins of Evil: Why Church Fathers Suppressed the Book of Enoch and Its Startling Revelations

     இது தொடர்பாக படிக்க ஏராளமான புத்தகங்கள் இருப்பினும், மேற்சொன்ன இரு புத்தகங்கள் வெகு எளிதான அறிமுகத்தை வழங்குகின்றன.

3.  Dogma என்ற கெவின் ஸ்மித் இயக்கிய திரைப்படம்.  தேவதை கதையினை வெகு எளிதாக நகைச்சுவையுடன் புரிந்துக் கொள்ள இத்திரைப்படத்தை பார்க்கலாம். .

4.  சுரங்க எலி (Tunnel Rats)  என்பவர்கள் போர்முறையை அறிய Frederick Forsyth எழுதிய The Avenger என்ற நாவலை பரிந்துரை செய்கிறேன்.

August 14, 2010 at 2:49 pm 4 comments

The Hobbit – மாய காவியம்

       அழகான வீடு.  உழைத்து பணம் சேர்க்க தேவையில்லாத அளவிற்கு செல்வம்.  வாழ்க்கையை கொண்டாடும் மக்கள்.   மழைக்காலத்தில் கணப்பின் அருகே அமர்ந்து மதுவை அருந்திக் கொண்டே உறவினர்களுடன் பழங்கதை பேசுதல்.  சுகமான வாழ்க்கை.  இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?  இவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் பில்போ பேகின்ஸ் இல்லத்திற்கு ஒரு மழை இரவில்  ஒரு பயணி வருகிறார்.  சாகசத்திற்கு தயாரா என்கிறார்.       சுக வாழ்க்கை வாழ்கின்ற பில்போ பேகின்ஸ் அதற்கு சம்மதிக்க   த ஹாபிட் (The Hobbit)  என்னும் மாய காவியம் ஆரம்பமாகிறது.

பயணத்தின் ஆரம்பம்

பயணத்தின் ஆரம்பம்

        சூப்பர் ஹீரோக்களையும், மாய உலகங்களையும் எடுத்துக் கொண்டால் ஒரு ஒற்றுமை தென்படும்.  அவற்றில் பெரும்பாலனவை உலகப் போரின் இறுதியிலோ, பங்கு சந்தை வீழ்ச்சியிலோ உருவாக்கப்பட்டவை.  மிகுந்த சிரமமான பொருளாதார சூழலின் நடுவில் இருக்கும்போது இப்படிப்பட்ட கற்பனை உலகங்கள் நமக்கு தேவையாக இருக்கின்றன.  அவ்வாறாக நிறைய உலகங்கள் இருக்கின்றன.  உதாரணத்திற்கு, பேட் மேன் வாழும் கோதம் சிட்டி,  ஹாரி பாட்டர் படித்த ஹாக்வர்ட்ஸ்.  இது போன்ற மாய உலகங்களில் மிடில் எர்த் என ஜே ஆர் ஆர் டோல்கியன் உருவாக்கிய உலகம் உலகெங்கும் இன்னும் நிலைத்திருக்கிறது.

புத்தகத்தின் அட்டைப் படம்

புத்தகத்தின் அட்டைப் படம்

      லார்ட் ஆப் த ரிங்ஸ் என்னும் நாவலின் முன்னோடியே த ஹாபிட்.  இந்த நாவலும் உலகப் போர் நிகழ்வுகளுக்கிடையில் எழுதப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது.  இரண்டாவது வெளிவந்த லார்ட் ஆப் த ரிங் நாவலினால் ஹாபிட் அதற்குரிய முக்கியத்துவம் பெறாமலேயே போய்விட்டது.  ஆனாலும் என் மனதை கவர்ந்த கதைகளில் இதுவும் ஒன்று.  டோல்கியனின் மிகச் சிறந்த புதினமே இதுதான்.

           வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொண்டிருக்கும் பில்போ பேகின்ஸ் அந்த வாழ்க்கையை விட்டு சிரமங்கள் நிறைந்த ஒரு சாகச வாழ்க்கையை நோக்கி போகும் கதையே இது. 

மர்மங்களை அடக்கியுள்ள ஒரு காட்டின் நுழைவு பாதை

மர்மங்களை அடக்கியுள்ள ஒரு காட்டின் நுழைவு பாதை

        சுக வாழ்க்கை கசந்து போய் ஒருவித விரக்தியில் இருக்கும் பில்போ பேகின்ஸ்  நீண்ட பயணத்திற்கு  கூப்பிடும் கண்டல்பை (Gandalf the grey)  நம்பி இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையை உதறி  சாகசத்திற்கு தயாராகிறார். தனித்திருக்கும் மலை (Lonely Mountain ) என்ற பகுதியில் ஒரு டிராகனால் பாதுகாக்கப்படும் புதையலை தேடி, குள்ளர்கள் இனத்தை சேர்ந்தவர்களுடன், கன்டல்ப் என்ற மந்திரவாதியுடன் துணைக் கொண்டு பில்போ பேகின்ஸ் ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகின்றார்.  போகும் வழியில்  மற்ற இனத்தவர்களால் ஏற்படும் அபாயங்கள், நீண்ட, அபாயகரமான பயணப் பாதை, வஞ்சக நண்பர்கள், பல விந்தை மிருகங்களால் ஏற்படும் அபாயங்கள் என பல்வேறு இடையூறுகளை தாண்டி  இவர்களுடன் பயணிக்கும் பில்போ, கோலம்   என்ற விசித்திர ஜீவனிடமிருந்த தந்திரமாக மாயசக்தி கொண்ட  மோதிரத்தை அபகரிக்கின்றார். அந்த மோதிரத்தின் கதை லார்ட் ஆப் த ரிங்ஸ் புதினத்தில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கும்.

வழியில் நேரும் அபாயங்கள்

வழியில் நேரும் அபாயங்கள்

      இடையில் கண்டல்ப் காணாமல் போய்விடுகின்றார்.   எல்லாப் பயணங்களிலும் ஒருமுறையாவது காணாமல் போய்விடுகிறார் கண்டல்ப்.   அவரின் துணையில்லாமலே பயணக் குழுவினர்    பல்வேறு சிக்கல்களுக்கிடையே டிராகன் இருக்கும் மலைத் தொடரை அடைகின்றார்கள்.   டிராகனை தந்திரமாக ஏமாற்றி புதையலை இவர்கள் வசம் ஆக்கிக் கொள்கின்றார்கள்.  இப்போது டிராகனை விட மோசமான எதிரி ஒருவர் உருவாகிறார்.  பேராசை.  டிராகன் வைத்திருக்கும் புதையல் பல்வேறு இனத்தவர் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி ஒரு பெரிய யுத்தம் அவர்களுக்கிடையே நடைபெறுகிறது.  

புதையல் காக்கும் டிராகன்

புதையல் காக்கும் டிராகன்

     இதற்கிடையில் பயணத்தில் இவர்கள் சந்தித்த எதிரி இனத்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து இவர்களை தாக்க தங்களது இராணுவத்தால் அம்மலையை முற்றுகை இடுகின்றார்கள்.  கண்டல்ப் தமிழக காவல்துறை போல கடைசி நேரத்தில் வந்து இவர்களை சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து எதிரியை தாக்கி யுத்தத்தில் வெற்றி பெறுகின்றார்கள்.  யுத்த வெற்றிக்கு பிறகு புதையல் பங்கு பிரிக்கப்படுகிறது.  இந்த யுத்தம் பில்போ பேகின்ஸ் மனதில் ஒரு பெரிய சலனத்தை உருவாக்குகிறது.  புதையலில் பெறவிருக்கும் பங்கினை மறுத்து விடுகிறார்.  எந்த சுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாரோ அந்த இடத்ற்கு  போக மனம் இப்போது ஏங்குகிறது.  பணக்காரராக தன்னுடைய வீட்டிற்கு திரும்புகிறார்.  இப்போது வீடே அவருக்கு சொர்க்கமாகின்றது. 

அற்புதமான சாகசத்திற்கு பிறகு வாழ்க்கை அனுபவித்தல்

அற்புதமான சாகசத்திற்கு பிறகு வாழ்க்கை அனுபவித்தல்

      இந்த நாவலை எத்தனை தடவை படித்திருப்பேன் என்பதற்கு கணக்கு இல்லை.  ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டி அதிலிருந்து படிப்பது என மாதத்திற்கு சில தடவையாவது இந்த புத்தகத்தை புரட்டி விடுகிறேன்.  ஒரு பயணம் ஒருவரை எவ்வாறு மாற்றுகின்றது என்பதை அழகாக விவரிக்கும் நாவல் இது.  இந்த நாவல் வரிசைக்கென தனியாக ஒரு மொழியையே உருவாக்கினார் டோல்கியன்.  இவரின் தீவிர ரசிகர்களால் இம்மொழி ஈல்விஷ் என அழைக்கப்பட்டு இன்றும் உலகெங்கும் பேசப்படுகிறது.   ஒரு மாயஜால புத்தகத்திற்கு முதன் முதலாக இலக்கிய அந்தஸ்தை வழங்கப்பட்டது இதற்குதான்.

     இவரின் படைப்புகள் பல இருந்தாலும் படிக்க வேண்டிய வரிசை என்றால் முதலில் த ஹாபிட் பிறகு த லார்ட் ஆப் த ரிங்ஸ்.  அதற்கு பிறகே மற்றவைகள்.  இந்த புத்தகங்கள் வாயிலாக அவர் உருவாக்கிய மிடில் எர்த் என்ற உலகத்தில் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவர உங்களுக்கு மனசு வராது.  தமிழில் இவரது படைப்புகள் இதுவரை  மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை.  இந்திய மொழிகளில் வேறு எதிலும் வந்தனவா என்றும் தெரியவில்லை.   

      பீட்டர் ஜாக்சனால் இயக்கப்பட்டு வெளிவந்த த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற வெற்றிப் படத் தொடர்களினால் இவரின் புத்தகங்கள் மேலும் பிரபலமடைய தொடங்கின.  டோல்கியனின் தீவிர ரசிகர்களால் அப்படத் தொடர்களையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை விட இப்படைப்பின்  வெற்றிக்கு வேறென்ன வேண்டும்?

September 30, 2009 at 7:56 pm 10 comments

திராட்சைகளின் இதயம் – புத்தக விமர்சனம்

     இஸ்லாம் பின்னணியை கொண்ட சிறுகதைகள் பல படித்திருக்கிறேன்.  அவைகள் உருது மொழி நடைமுறை வார்த்தைகள் அதிகம் என்றாலும், அதற்கு தமிழாக்கம் பக்கத்தின் கீழே கொடுத்திருப்பார்கள்.  இவ்வாறு மேலே, கீழே என படித்து முடிப்பதற்குள் கதை முடிந்து விடும்.  சிறுகதை தானே? திரும்ப படிக்க தோணாது.  சரி, மவுத்தானது என்றால் டிக்கெட் வாங்குதல் என புதிய வார்த்தையை  தெரிந்து கொண்ட திருப்தியும் கிடைக்கும்.

     இந்த சமயத்தில் புத்தக கடைகளில் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வித்தியாசமான அட்டைப்படத்துடன் நாகூர் ரூமி எழுதிய ‘திராட்சைகளின் இதயம்’ தென்பட்டது.  இதற்கு முன்னெல்லாம் தமிழ் புத்தகங்களில் அப்புத்தகங்களை பற்றிய குறிப்பே இருக்காது.  முன் அட்டையில் கதை குறித்த படம். பின் அட்டையில் எழுத்தாளர் கையில் எழுதுகோலுடன் அல்லது எழுதுகோல் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் படம்.  அவ்வளவு தான் இருக்கும்.  வாங்கி படித்த பிறகு தான் தெரியும்.  அதே போல் முன்னுரை, மதிப்புரை மற்றும் வரவேற்புரை போன்றவைகள் இருக்கும்.   தற்போது வரும் புத்தகங்களில் எல்லாம் மிக நேர்த்தியான அட்டைப் படங்கள் மற்றும் அப்புத்தகம் பற்றிய குறிப்புகளுடன் வெளிவருகின்றன. 

       இந்த புத்தகத்தில் சூஃபி குருமார்களின் உலகை சித்தரிக்கும் நாவல் என குறிப்பு காணப்பட்டதால் வாங்கினேன்.  ஒஷோவின் சூஃபி ஞானிகள் பற்றிய சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன்.  சூஃபி ஞானிகள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.  அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த, நிகழ்த்திய அற்புதங்கள் மட்டுமே நிறைய பேருக்கு தெரியும்.  அதையும் தாண்டி அவர்கள் வாழ்க்கையிலிருந்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.

         அது போல ஒரு ஞானியின் குழுவில் இருந்த ஒருவர் சொல்வதாக இந்நாவல் அமைந்துள்ளது.   முதலில் கதைசொல்லி அவர் மீது கொண்டிருந்த அவநம்பிக்கையும், பின்னர் சில சம்பவங்களால் மனம் மாறி அவர் மீது மரியாதை கொண்டவராக மாறுவதை இந்நாவல் விவரிக்கின்றது.  பொதுவாக நாம் ஒருவர் மீது வைக்கின்ற நம்பிக்கையும் இப்படிதான் இருக்கிறது.  நம்பி உயிரை கொடுக்க தயாராக இருப்பதும், பின்னர் முதல் எதிரி இவர்தான் என வெறுப்பின் உச்சக் கட்டத்திற்கே செல்வதுமான இரு நிலைகளை தவிர வேறு நிலையை நாம் எடுப்பதில்லை.     புனித சாமியார் போலி சாமியார் என ஒரே நாளில் மாறுவதும் வெகு எளிதில் நிகழ்ந்து விடுகிறது. 

       அது போல அவர் வீட்டு அருகில் இருக்கும் ஹஜ்ரத் என்றழைக்கப்படும் ஒரு இஸ்லாமிய பெரியவரிடம் அந்த ஊர் மக்கள் எல்லோரும் தங்கள் பிரச்சினைகளை சொல்லி தீர்வு கண்டு செல்கின்றனர்.  ஆரம்பத்தில் இதனை  அவர்களின் மூட நம்பிக்கை என கதைசொல்லி நம்புகிறார்.  ஒரு கட்டத்தில் அவரை வேறு பரிணாமத்தில் இவர் கடற்கரையில் பார்க்கும்பொழுது, இவருக்கு வேறு ஏதோ புரிய ஆரம்பிக்கிறது.  நமக்கும் உள்ளே சில பளிச்சிடுகின்றன.  பயப்பட வேண்டாம், படித்த வேகத்திலேயே நமக்கு அவைகள் மறந்து போகும்.  நல்ல விஷயங்கள் பொதுவாக நீண்ட நாட்கள் நினைவில் நீடிப்பதில்லை அல்லவா?

       அந்த மறைஞானி கொடுக்கும் உரைகள் மிக எளிதாக புரியும் வண்ணம் இருப்பது சிறப்பு. பிறகு அவர் போதனைகள் மீது கதைசொல்லி சஞ்சலபடுவதும் சில சம்பவங்கள் மூலம் அழகாக சொல்லப்படுகிறது.  இந்நாவலானது சம்பவத்திற்குள் சம்பவங்கள் என சொல்லப்படுகின்றது. இந்த விமர்சனம் சற்று குழப்பமாக இருக்கிறது என புத்தகத்தை படிக்காமல் இருந்து விட வேண்டாம்.  நகைச்சுவை கலந்த மொழி நடை, உருது வார்த்தைகள் கலந்திருந்தாலும் படிக்கும் ஆர்வத்தில் நமக்கு அது தெரிவதில்லை.   தமிழில் இது வித்தியாசமான முயற்சி. அவசியம் படியுங்கள்.

        இவ்வாசிரியர் எழுத்துகளை மேலும் படிக்க வேண்டுமென்றால் இங்கே பறவையின் தடங்கள்  செல்லுங்கள்.

      புத்தக விவரம் :  திராட்சைகளின் இதயம், ஆசிரியர் நாகூர் ரூமி, பக்கங்கள் 182, கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.  விலை ரூ. 75-.  சில புத்தக கடைகளில் தள்ளுபடியுடன் கொடுக்கின்றார்கள்.

October 26, 2008 at 4:15 pm 3 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 7 years ago
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930