Posts filed under ‘கோயாவி சாகசம்’

கல்வெட்டு – வரலாற்று குறுங்கதை

குஸ்தியாப்பட்டினத்து பேரரசர் கோயாவியின் அரண்மனை. பேரமைச்சர் பதட்டத்துடன் இருந்தார்.

சோழ நாட்டை தாக்க மன்னர் பிறப்பித்த ஆணையின் பேரில் கோயாவியின் பெரும் படை சென்றிருந்தது. போரின் முடிவு என்ன ஆகியிருக்குமோ என்ற பதட்டத்தில் அமைச்சர் இருந்தார்.

ஒற்றர் படை தலைவன் தேர்க்கோடகன் உள்ளே வந்து அமைச்சரை வணங்கினான்.

என்ன ஆயிற்று? ஒரே வரியில் சொல்.

அமைச்சரே, பெருந்தோல்வி.

என்னடா சொல்கிறாய்

நமது படையிலிருந்து பாதிப்பேர் பிரிந்து காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவினை பார்ப்பதற்காக சென்று விட்டனர். மீதிப் படைகளுடன் சோழ சைன்யத்துடன் போர் தொடுத்தோம். கால்நாழிகை பொழுது கூட போர் நீடிக்க வில்லை.

அங்குள்ள நமது ஒற்றன் சோழ நாடு குஸ்தியாப்பட்டினம் மீது தனது சைன்யத்தை ஏவியிருக்கிறது என தகவல் அனுப்பியிருக்கிறான். படைபலத்தினை இந்த ஒலையில் குறித்துக் கொடுத்திருக்கிறான்.

அப்போது சிரித்த முகத்துடன் வந்த பேரரசர் கோயாவி,

என்ன அமைச்சரே, சோழ நாட்டின் பேரரசனாக என்றைக்கு முடி சூடிக் கொள்ளலாம் என்று நாள் பார்த்து விட்டீர்களா?

மன்னர்பிரான் மோசமான செய்திகளை கேட்டால் எவ்வாறு சொன்னவனை தண்டிப்பார் என அறிந்த அமைச்சர், உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு,

மன்னா, சோழ நாடு நம் மீது சைன்யத்தினை ஏவியிருக்கிறது என ஒற்றரிடமிருந்து ஒலை வந்திருக்கிறது.

நமது எல்லை பாதுகாப்பு படையினரை தயார் படுத்துங்கள். அதற்கிடையில் நமது பெரும்படை புரிந்த சாகசங்களை விளக்கமாக சொல்லுங்கள்.

அமைச்சர் ஒலையினை பிரித்து படிக்க ஆரம்பித்தார்,

Suvadi

டேய், கோடகா, பூஜ்யங்களை இப்படி கவனமில்லாமல் ஒலையிலே இரைத்திருக்கிறான்.

அது சரியான எண்ணிக்கைதான், அமைச்சரே.

அதற்குள் அரசர் கோயாவி,

அமைச்சரே, அடுத்த முழுநிலவிற்குள் பட்டாபிஷேகத்தை நடத்தி விடலாமா?

தளர்ந்த குரலில் அமைச்சர்

மன்னா, சோழ படை 110000 எண்ணிக்கையில் நம் நாட்டை நோக்கி வருகிறது.

நிறைய பூஜ்யங்களை சேர்த்திருக்கிறாய். அதில் ஏதேனும் தவறுக்கு இடமிருக்குமா?

மன்னா, தெறித்து ஒடினால் மட்டுமே நாம் பிழைக்க முடியும், உடனே கிளம்புவோம்.

பெருமூச்செறிந்த கோயாவி,

சோழ நரிகள் இவ்வாறு குயுக்தியில் இறங்குவார்கள் என நான் எதிர்பார்க்க வில்லை. அந்த புரத்தில் உள்ள அரசிகளை உடன் பயணத்திற்கு தயார்படுத்துங்கள்.

ஒற்றன் தேர்க்கோடகன்,

மன்னா, அவர்கள் நாட்டின் எல்லையை தாண்டி நாழிகைகள் பல ஆகின்றன.

அமைச்சர் உண்மையான வருத்தத்துடன்,

நாம் தோற்று விட்டோம், மன்னா,

மெல்லிய புன்னகையுடன் அவரை நோக்கி திரும்பிய மன்னர் கோயாவி,

அமைச்சரே, உடன் நமது ஆஸ்தான சிற்பியை இங்கே வரச் சொல்லுங்கள்.

————————————————————————————————-

கி.பி. 2014-ம் வருடம், சென்னைப் பல்கலைகழகத்தில், வரலாற்று பேராசிரியர் ஷங்கரின் வகுப்பறை.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் அருகே கட்டுமான பணி நடைபெற்ற ஒரு களத்தில் இந்த கல்வெட்டு கிடைக்கப் பெற்றது. இதன்படி, சோழ பேரரசில் ஒரு பெரும் வீரனது சரித்திரம் விளக்கப்பட்டுள்ளது.

மற்ற எந்த சோழர் கால கல்வெட்டுகளிலும் இவனது பெயர் காணப்படவில்லை. சோழப் பெரும் சைன்யத்தை சிறு படை கொண்டு முறியடித்தான் என்றும், சோழ தளபதி பெருவளத்தானை சிறை பிடித்து தனது அரண்மனை பெண்டிருக்கு மேலாடை தைக்கும் பணியில் ஈடுபடுத்தினான் என இந்த பெரும் வீரனின் சாகசங்களை இக்கல்வெட்டு புகழ்ந்து பாடுகிறது.

Advertisements

July 29, 2014 at 1:41 pm 3 comments

முடிக்கப்படாத நிரல் (#!@?>

digitial கோயாவி பலூடா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவரது செல் அதிர ஆரம்பித்தது.

****, காலங்காத்தால உயிர எடுக்கிறான்ங்க என சலித்துக் கொண்டார். அப்போது மணி காலை 11.30.

வணக்கம் சார், நான் கோயாவி பேசுறேன்.

ஆபிசுல சீட்ல உன்ன காணலயே. எங்கேய்யா இருக்கே?

ஒரு இன்ஸ்வெடிகேஷன் சம்பந்தமாக….

ஒனக்கு தான் ஒரு மசுரு கேசும் கொடுக்கலையே

சரி, அதுக்கு இன்னாங்கறே என்று சொல்ல நினைத்தாலும்,

சாரி சார், இப்போ வந்துடறேன்.

கோட்டூர்புரத்தில் இருக்கும் இந்திய விஞ்ஞான கழகத்தில் ஒரு மர்டராம். போய் பாரு,

அழைப்பு துண்டிக்கப்பட்டதும், கோயாவி ஆழ்ந்த சிந்தனையில் முழ்கினார். அடுத்தது, சமோசாவா அல்லது பிரன்ஞ் பிரை சாப்பிடலாமா?

கோட்டூர்புரம், விஞ்ஞான கழகம்.

கம்ப்யூட்டர் டெர்மினல் எதிரேயுள்ள நாற்காலியில் பிணம் கிடந்தது. எதிரேயுள்ள கணிணி திரையில்,

#include

void main()

{

Printf(“Hello_

என்ற கணினி நிரல் முடிக்கப்படாமல் இருந்தது.

சிறப்பு ஆய்வாளர் பராங்குசம் பதட்டத்தில் இருந்தார். அவரால் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை. இறந்தவர் கணிணி விஞ்ஞானி பிங்களன் என்றும், அவர் இறப்பதற்கு முன்னர் ஒரு முக்கியமான கணிணி நிரலை எழுத முற்படுகையில் இறந்து விட்டார். உலகையே மாற்றவல்ல முக்கிய கணிணி நிரலாகத்தான் அது இருக்க வேண்டும். நல்லவேளை, இதை துப்புதுலக்க இன்னொரு துப்பறிவாளரை நியமித்துள்ளார்கள்.

வணக்கம் சார், நான் பராங்குசம் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கோயாவியிடம் கை குலுக்கினார். கையெல்லாம் எண்ணெய் பசை பிசுபிசுவென்றது. சுருக்கமாக, கோயாவியிடம் கொலை தொடர்பான விவரங்களை சொன்னார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தை கோயாவி அமைதியாக சுற்றிப் பார்த்தார். பிறகு, துணியை விலக்கி பிணத்தின் முகத்தை பார்த்தார். பிறகு கேட்டார்,

யார் இவர்?

கணிணி விஞ்ஞானி பிங்களன். இன்றைக்கு அவர் பணியில் சேருவதாக இருந்தது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாற்றலாகி வந்திருக்கிறார். பாவம் அல்பாயிசு.

மெள்ள ஜன்னலருகே தன் செழுமிய பின்புறத்தை மற்றவர்களுக்கு காட்டி நின்றுக் கொண்டார். அனைவரும் மூச்சை பிடித்துக் கொண்டு அவர் என்ன சொல்வார் என காத்திருந்தனர். கோயாவி மனதில் ஒன்று, இரண்டு என எண்பத்தி மூன்று வரை எண்ணினார். சடாரென்று திரும்பினார்.

முதலில், இவர் கணிணி விஞ்ஞானி பிங்களனே இல்லை. பிங்களன் என பேர் வைத்துக் கொண்டு, கணிணி விஞ்ஞானி என்றால் சோதிக்க வேண்டாமா?

அதிர்ச்சி அலையலையாய் பராங்குசத்தை தாக்கியது.

பிறகு யார் இவர்? எப்படி கண்டுபிடித்தீர்கள்?

இவன் இந்த கட்டிடத்து வாட்ச்மேன் குமார். ஒரு துப்பறிவாளன் எப்போதும் அனைத்தையும் சொல்வதில்லை.

அனைவரும் பிரமித்தனர், நிம்மதி பரவியது. செத்தது இரவு காவலனாம். அனைவரும் புன்னகைத்தனர். கோயாவியின் துப்பு துலக்கும் திறனை பாராட்டினர். அனைவருடனுடம் கைகுலுக்கி, மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டு, பிஸ்கட், டீ அருந்தி விட்டு கோயாவி கிளம்பினார்.

வாசலில் மெள்ள சிரித்துக் கொண்டார்.

சரசா புருஷனை எனக்கு தெரியாதா என்ன?
துப்பறிவாளன் எப்போதுமே அனைத்தையும் சொல்வதில்லை.

May 11, 2013 at 1:58 pm 4 comments

கோப்ரா தீவில் கோயாவி – கடிதங்கள்

இந்த தொடரை எழுதும்போது இவ்வளவு பாராட்டு வரும் என நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.  நிஜத்திலும் அப்படி பெரிய அளவில் பாராட்டுக்கள் வந்து குவிந்து விடவில்லைதான். இருப்பினும், சில கடிதங்கள் என்னை ஊக்கப்படுத்தின. நிறைய நாடுகளிலிருந்து இந்த தொடரை இரசிகர்கள் படிக்கின்றார்கள்.  கவுதமாலாவிலிருந்து கூட படிப்பது என் மனதில் கிலியை கிளப்புகிறது.

காப்பி தானே அடிச்சே, சொல்லு! பாரீஸிலிருந்து மோரீஸ்

டாய் பொறுக்கி,

         இதெல்லாம் ஒரு பொழப்பாடா? பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்ட்றான், உனக்கெதுக்கு? ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரத்தின் கதையை அப்படியே காப்பியடித்து வேறு மாதிரி எழுதினா தெரியாதுன்னு நினைச்சியா?

வெட்கங்கெட்டவனே, அடுத்து என்னடா? தமிழ்த் திரைப்படம் இயக்க திட்டம் உள்ளதா?

இப்படிக்கு

மோரீஸ் ப்ரம் பாரீஸ்

டியர் மோரீஸ்,

ஏன்ய்யா?  விஷ்ணுபுரம் நாவலின் உட் கட்டமைப்பை உள் வாங்கி அதன் வெளி மையங்களை சீர்படுத்தி அதை இந்த தொடரில் கொண்டு வந்திருக்கிறேன்.  அநேகமாக இதை நான் மட்டுமே செய்திருப்பேன்.  அதை நியாயமாக நீங்கள் பாராட்டி இருக்க வேண்டும்.

பக்கோடா எதன் குறியீடு என்பதை உணர முடிகிறது. இருப்பினும், கஜ்ஜீரா என்ற உதாரணம் சாலச் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து படியுங்கள். அடிக்கடி எழுதாதீர்கள். அடியோஸ் அமிகோஸ்.

இலங்கையிலிருந்து ஸ்ரீபதி,

அண்ணேன்,

நான் உங்கட பரம இரசிகன்.  நான் எட்டாம் வகுப்பு வாசித்து வருகிறேன்.  கோயாவி கதைன்னா எனக்கு அப்படி இஷ்டம்.  அண்ணேன், உங்கட வலைப்பூவிற்கு காலையிலிருந்து இராத்திரி வரை திரையில் வச்சு இரசித்துக்கிட்டு இருக்கேன்.

அண்ணேன், நீங்க எண்ட தெய்வம். கோயாவிக்கு ஷீலாவை கட்டி வையுங்கோள். கோயாவி ஒரு நல்ல ஏஜெண்டாக்கும். அவருக்கு பெலத்தை கொடுங்கோள்.

தண்டனிட்டு

ஸ்ரீபதி

தம்பி ஸ்ரீ,

கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளதடா.  இப்படிதான் இலுமின்னு ஒரு தம்பி இருந்தான். நேரம் சரியில்லாம பய ரௌடியாக போய்ட்டான். யார் எது சொன்னாலும், அதுக்கென்ன இப்போ-ன்னு திரியறான். நல்ல வாசகனாக்கும். ஆனா கண்டதை படிக்கிறான். அது போலவே, நீயும் ஆயுடாதே, கண்ணா.

            சின்ன வயசு வாசகர்களும் எனக்கு முக்கியம்தான். குருவி கொத்தி, குதிரை குதிச்சா கொப்பறகேசரியும் குப்புற விழுவான் என்பது ஆன்றோர் மொழி.

நான் பாராட்டுதலையும், விமர்சனத்தையும் சமமாகவே பாவித்து வருகிறேன். இத்தொடருக்கு நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.  ஆன்லைன் சாட்டில் வாசகர்களுடன் கதைக்கையில், அவர்கள் எண்ணத்தை அறிய முடிகிறது.

         தனிப்பட்ட காரணங்களால், வெளியூர் அன்பர்களின் ஆன்லைன் சாட்டை நான் தவிர்க்க நேரிடுகிறது. இருப்பினும், உங்கள் அன்புதான் என்னை இத்தொடரை எழுத வைத்திருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

ஆன்லைன் சாட் நாள் 15.07.2012 நேரம் மாலை நான்கு மணி

மோரீஸ் டேய்
நான் வணக்கம் மோரீஸ், நலமாக உள்ளீர்களா?
மோரீஸ் ஜெயமோகன் ஒரு சூரியன் போல, நீயெல்லாம் கடன் வாங்கிதான் எழுதற. ஒரு சூரியன்தான். தெரிஞ்சிக்கோ.
நான் கிட்ட இருப்பது ஒரு சூரியன்தான்.  அனைத்து நட்சத்திரங்களும் சூரியன்தான் என்பதை மறவாதீர்கள். 😉
மோரீஸ் பெரிய பருப்பு மாதிரி பேசிட்டதாக நினைப்பா?
நான் டேய், செருப்பால அடிப்பேன்.
மோரீஸ் பொறுக்கி ராஸ்கல், உனக்கு தைரியம் இருந்தா அட்ரஸ் சொல்லுடா
நான் உங்கக்காக்கிட்ட கேளுடா, புறம்போக்கு. 😉
மோரீஸ் என்னைக்காச்சும் எங்கையில் நீ மாட்டுவடா?
நான் ஓ, ரெய்டு போலீசா நீ, ஹஹஹஹஹஹஹஹ

 

Happy Weekend!

July 20, 2012 at 11:10 pm 5 comments

கோப்ரா தீவில் கோயாவி – 03 நெஞ்சில் ஓர் ஆலயம்

உளவாளிகள் உளவுப் பணியில் ஈடுபடுவதற்கு முன் , கைபேசியில் பேசுவதற்கு என டாப் அப் செய்ய மறக்கக் கூடாது. மிஸ்ட் கால் என்றுமே அவசரத்தை தெரிவிக்காது,
     
  – இராவின் டைரிக் குறிப்பு

 

காதல் மூன்றெழுத்து
ஊடல் மூன்றெழுத்து,
உயிர் மூன்றெழுத்து,
நீ இல்லாத வாழ்க்கை எனக்கு மயிர்,
பி, கு, அதுவும் மூன்றெழுத்து.

– கோயாவிக்கு துலுக்காணம் அனுப்பிய குறுஞ்செய்தி.

 

நீ போம்போது மசிரா போச்சு என உணராமல்,
                                 உசிரே போச்சு என உணர்கிறேன்.

– ஷீலா, இராவிற்கு காப்பி வாங்க கடைக்கு சென்றபோது அவளிற்கு கோயாவி அனுப்பிய குறுஞ்செய்தி.

 

தலைமையகம் சென்ற கோயாவி, தன்னுடைய முதலாளி அறையில் குழல் விளக்கும், மின் விசிறியும் எரிவதை கண்டு வியப்புற்றார்.  மின்சார பில் கட்டணத்தை குறைக்க, இராவ் மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கையை கடைப்பிடித்து வந்தது, தலைமையகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். மொத்தம் மூன்று பேருக்கு.

இராவின் குளியலறை

இராவின் காரியதரிசியான ஷீலாவிடம் அவசரமாக கூப்பிட்ட காரணத்தை அறிய எண்ணி, அவளிடம் கோயாவி பேச்சுக் கொடுத்தார்.

சீலா, எப்டி கீறே?

அக்காங்

உன் புருஷன் உன்ன சந்தோஷமா வச்சுகிறானா?

இந்த கேள்வி கேட்டதன் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி உள்ளது.  ஷீலாவின் கணவன் (புருஷன் அல்லது வூட்டுக்காரன்) துலுக்காணம் பேட்டையில் ஒரு மாவீரன்.  நல்ல உயரத்தில், ஆஜானுபாகுவாக இருப்பான்.  சுற்றியுள்ள அனைத்து பேட்டைகளிலும், சக ரவுடிகள் அவனை மாமூல் வாங்க அவனை அழைத்துச் செல்வதுண்டு. கீரை , மோர், காய்கறி மற்றும் பூக்கள் வியபாரம் செய்பவர்கள் துலுக்காணத்தின் தோற்றத்தை கண்டே பயந்தார்கள், கசாப்பு கடை ஹக்கிம் பாயை தவிர. இரத்தம் படிந்த உடலுடன், கையில் பெரிய கத்தி இரண்டை வைத்திருப்பவர் கிட்டே யாரும் மாமூல் கேட்டதில்லை.

         கோயாவி துலுக்காணத்தின் சம்சாரம் ஷீலாவின் மீது இரண்டு கண்களை வைத்திருந்தார். துலுக்காணத்திடம் நட்பு பாராட்டுவது எதிர்காலத்தில் பயனை தரும் என அவனிடமும் பேசி பழகி வந்தார். ஒருநாள், இருவரும் மாந்தோப்பில் தென்னங்கள்ளை மூக்கு மூட்ட குடித்து போதையில் மூழ்கினர்.

Mango        

போதை தெளிந்து எழுகையில் இருவரும் அரை நிர்வாணமாக இருந்ததை உணர்ந்தனர். எந்த அரை என்பதை கோயாவி மிக இரகசியமாக வைத்திருந்தார். ஆனால், அந்த நாளில் இருந்து, துலுக்காணம் கோயாவியிடம் முற்றிலும் மாறுபட்டு பழக ஆரம்பித்தான். நள்ளிரவு ஒன்று, மூன்று, நான்கு மணிக்கெல்லாம் கைபேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பத் தொடங்கினான். கோயாவியை அவன் பார்க்கும் போதெல்லாம் வெட்கப் பட்டது, கோயாவியின் வயிற்றுல் கிலியை கிளப்பியது.

ந்தே, உன்ன பெருசு கூப்பிடு, போவியா?

Rao Office

கோயாவி இராவின் அறைக்குள் நுழைந்தார். அவர் முன் ஒரு வாட்டசாட்டமான இளைஞன் உட்கார்ந்திருந்தான். அவன் முன்னால் ஒரு டீ க்ளாசும், இரண்டு மசால் வடைகளும் இருந்தன.  அவன் ஒரு முக்கியமான புள்ளியாக இருக்க வேண்டுமென்று கோயாவி ஊகித்தார்.

அந்த இளைஞன் கோயாவியை பார்த்து,

நான் ஒரு அவசரப் பணி காரணமாக இங்கே உங்களுடன் இணைந்து வேலை செய்ய வந்துள்ளேன். ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த ஏஜெண்ட் தன்னுடைய பணி எல்லையில் புதியவர்களை உடனே அனுமதிப்பதில்லை என அறிவேன்.  ஆனால், பணியின் முக்கியத்துவம் அப்படி.  என்னால் உங்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.

எனக் கூறி கைகளை நீட்டினான்.

கோயாவி சுற்றி வளைத்து பேசும் கலையை என்றுமே அறிந்திருக்கவில்லை. தன் மனதில் பட்டதை அவர் என்றுமே மறைத்ததில்லை. தடாலடியாக அதை பேசக் கூடியவர்.

எனக்கு மசால் வடை சொல்லலியா?

(தொடரும்)

July 14, 2012 at 4:57 pm 1 comment

கோப்ரா தீவில் கோயாவி – 2. ஆபரேஷன் நாத்தங்காய்

 

               அக்ஷய் குமார், விஜய், சுரேஷ் கோபி, பவன் கல்யாண் போன்ற நடிகர்களின் தீவிர இரசிகர்களை உளவுத் துறையில் சேர்க்கக் கூடாது.

                                                                      – இராவின் டைரிக் குறிப்பு

 

        எந்த ஒரு உளவாளிக்கும் கடந்த காலம் உண்டு. அதுதான் அவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. கோயாவியின் கடந்த காலத்திய ஆபரேஷன் இப்போது உங்கள் கண்களிற்கு. 

ஆபரேஷன் நாத்தங்காய்

(சிலர் கண்களிற்கு மட்டும்)

ஆனைமலையில் நடைபெறும் கள்ளச் சாராயக் கும்பலை பற்றி ஊடூருவி  உளவறிதல் மற்றும் நாட்டு பாதுகாப்பிற்கு அவர்களால் ஏற்படும் தீங்குகளை பற்றி அலசி ஆராய்தல்.

உளவாளி : மிஸ்டர் கோயாவி (கோட் நேம் : லெமன் )

நாட்குறிப்பு

15.04.••   காலை 8.00 மணி ஆனைமலைக்கு பேருந்தில் புறப்படுதல்.

காலை 9.30 மணி – ஆனைமலை அடிவாரம் வந்தடைதல். ஹோட்டல் செல்வ விலாசில் டிபன். நான்கு இட்லி, ஒரு பூரி கிழங்கு, பொங்கல் மற்றும் வடை. பிறகு காபி.

காலை 10.45 மணி – ஆனை மலையில் மிக இரகசியமாக ஊடூருவுதல்.

காலை 11.55 மணி – தவறான மலை.  ஆனை மலைக்கு செல்ல இன்னொரு பேருந்தை பிடிக்க வேண்டும்.

மதியம் 2.00 மணி – உண்மையான ஆனைமலை அடிவாரம்.  வேலு மிலிட்டரியில் பிரியாணி. பிறகு பீடா.

மதியம் 3.00 மணி – ஆனை மலையில் மிக இரகசியமாக ஊடூருவுதல்.

மாலை 5.00 மணி – சாராயக் கும்பலை பற்றி விசாரித்தல்.

மாலை 5.05 மணி – அவர்களால் சுற்றி வளைத்து சாராயக்கூடத்திற்கு தூக்கிச் செல்லப்படுதல்.

15.04.•• முதல் 18.04.•• வரை அவர்களால் கட்டி வைத்து உதைக்கப்படுதல்.

19.04.•• அன்று காலையில் போதையில் மயங்கிக் கிடக்கும் கும்பலிடமிருந்து தப்பிச் செல்லல்.

காலை 8.00 மணி -  தாவி குதித்தோடி மலைப் பாதைக்கு வந்து, அங்குள்ள பெட்டிக் கடையை பார்த்து கண்ணீர் விடுதல். பின்னர், ஒரு சோடாவினை குடித்து ஆசுவாசப்படுதல்.

காலை 8.30 மணி – விரைவு பேருந்தை பிடித்து தலைமையகத்திற்கு விரைதல்.

அங்கே டைரக்டர் ராவிடம் விளக்க அறிக்கை அளித்தல். மற்றும் செலவின அறிக்கையையும்.

இராவின் குறிப்புகள். (கோயாவியின் பதில்கள்)

01. ,இரகசியமாக ஊடூருவது என்பது இரண்டே சொற்கள். அதில் எந்த சொல் உனக்கு புரியவில்லை. காலை டிபன் இவ்வளவு அதிகமாக சாப்பிடதான் வேண்டுமா?

(கோயாவி இராவின் மனநிலையை சந்தேகிக்கிறார்.)

02. எந்த நேரத்திலும் ஒரு உளவாளி தன் எண்ணங்களை வெளிக்காட்டக் கூடாது. ஆனைமலையில் பெட்டிக் கடை வைத்திருக்கும் திரு சுடலை என்பாரின் வார்த்தையில்

சட்டை இல்லீங்க, பேர் பாடிங்க. கொஞ்சம் புஸுபுஸூன்னு இருந்தாருங்க. பட்டாபட்டி மட்டுந்தான் போட்ருந்தாரு. என்னை பாத்த உடனேயே மம்மி. மம்மின்னு ஒரே அழுகைங்க. நாந்தான் லெமன் லெமன் அடிக்கடி சொன்னாரு. யாரு பெத்த புள்ளையோ.

என்னை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமெல்லாம் கொடுத்தாருங்க. அப்புறம் என் சம்சாரம் பரிமளத்தை பாத்து அதே மாதிரி செய்ய பாத்தாரு. நான் தார்க்குச்சிய எடுத்து நல்லா நாலு கொடுத்தேன். அப்புறமா பரிதாபபட்டு, சோடா உடைச்சி கொடுத்து பஸ் ஏத்தி அனுப்பி வைச்சேன்.

நாறக்கம்மானட்டி, போம்போது என் பொண்டாட்டிக்கு பறக்கும் முத்தம் கொடுத்துட்டு போனான்ங்க.

(கோயாவி இராவின் பிறப்பினை சந்தேகிக்கிறார்.

03. உளவாளி கோயாவி நான்கு நாளைக்கு உணவு படி கேட்டு செலவின அறிக்கை அனுப்பியிருக்கிறார். ஆனால், மூன்று நாள் சாராயக் கும்பலின் பிடியில் இருந்திருக்கிறார். அவர்கள் சாப்பாடு போட்டுதான் அவரை அடித்திருக்க வேண்டும். எனவே, ஒரு நாள் உணவு படி மட்டுமே வழங்கப்படும்.

(கோயாவி மீளவும் இராவின் பிறப்பினை சந்தேகிகிறார்)

(ஆபரேஷன் நாத்தங்காய் – முடிவு – ஆனைமலையில் உண்மையாகவே ஒரு கள்ளச் சாராயக் கும்பல் இருக்கிறது.  வதந்திகள் உறுதி செய்யப்பட்டன.  இந்த தகவல் தமிழக காவல் துறையிடம் உடன் அளிக்கப்பட்டது.)

July 6, 2012 at 9:31 pm 5 comments

கோப்ரா தீவில் கோயாவி – 1.The Ghost Protocol

 

இந்திய உளவாளிகள் பெண்களை மயக்குவதில்லை.  மாறாக மயங்குகிறார்கள். மொக்கை பிகர்களிடம் கூட.

                                                                         – ராவின் டைரிக்குறிப்பு

 

கோயாவி தன் பாசறையில் பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவருக்கு ஒரு மிஸ்ட் கால் வந்தது.  அது தலைமையகத்தின் அழைப்பு.  புன்முறுவலுடன் பதிலுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு புறப்பட எழுந்தார்.

அவர் சைக்கிளை எடுத்து சீட்டை துடைத்துக் கொண்டிருக்கையில் அவருக்கு மீண்டும் ஒரு மிஸ்ட் கால் வந்தது.  அதுவும் தலைமையகமே. அதை கண்டதும் கோயாவியின் முகத்தில் புன்முறுவல் மறைந்து, வியர்வை அரும்ப தொடங்கியது. தலைமையகம் இரண்டு மிஸ்ட் கால் கொடுத்ததென்றால், அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான்.

அது கோஸ்ட் ப்ரோட்டகால். பாஸ் அழைக்கிறார். அவசரமாக. சனியன், தாமதமாக போனால் பிசாசு போல பிடுங்கி எடுக்கும்.

உடனடியாக தலைமையகத்திற்கு செல்ல வேண்டும். கோயாவி சைக்கிளை வைத்து விட்டு பேருந்தை பிடிக்க விரைந்தார்.

கோயாவியின் பாஸ் திரு சாம்பசிவ ராவ், ஐ பி எஸ் (அட்டெம்ப்ட்). இந்திய உளவுத் துறையில் பல வருடங்கள்  உளவாளியாக பணியாற்றியவர். அவர் தன் உளவு அனுபவங்களின் அடிப்படையில்  ஒரு விரிவான அறிக்கையை தன் பழைய டைரியில் எழுதி, தன் மேலதிகாரிகளுக்கு சமர்பித்தார்.

அது உளவுத் துறை வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியலையை உருவாக்கியது.  நிறைய பிரிவுகள் இருக்கும் இந்திய அரசாங்கத்தில் மேலும் பிளவு ஏற்பட்டது. இதை தடுக்க அவரின் அறிக்கையை பழைய டைரியில் எழுதியதால், அதை ஏற்க இயலாது என ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணை கமிஷன் குழுவால் அவ்வறிக்கை நிராகரிக்கப்பட்டது. திரு ராவ் உளவுத் துறையில் இருந்து நீக்கப்பட்டார்.

  இருப்பினும், அந்த அறிக்கை “ராவின் டைரிக்குறிப்பு என உளவுத் துறை வட்டாரங்களில் மிகவும் புகழ் பெற்றது.  சில அனுபவம் மிக்க உளவுத் துறை ஜாம்பவான்கள் அவர் திறமை மீது மதிப்பு வைத்து அவருக்கு பட்ஜெட்டில் ஒரு ஷேர் கொடுத்து, அவரை ஒரு சிறிய உளவுத் துறை அலுவலகத்தை அமைக்க முடிவு செய்தனர்.

மிக சொற்ப தொகையில் ஒரு புண்ணாக்கு மண்டியில் அமைக்கப்பட்டதே தலைமையகம்.  கோயாவி பணியாற்றுவது அங்கேதான். பணப் பற்றாக்குறையினால் பணியில் பல இன்னல்கள் ஏற்பட்டாலும், திரு ராவ் அதனை தொடர்ந்து நடத்தி வந்தார்.

ஒருமுறை, சீன உளவாளிகள் இரவில் நடமாட தொந்தரவு செய்யும் தெரு நாய்களை ஒழிக்க, சீனா வைரஸ் கிருமியுடன் ஒரு உளவாளியை அனுப்பி வைத்தது.  அந்த கிருமியினால் தெரு நாய்களை ஒழித்து விடலாம் என்ற மிகப் பெரிய அபாயம் இருந்தது. அதை தலைமையகம் கண்டறிந்து, முறியடித்தது.  விமானத்தில் தப்பியோடிய அந்த உளவாளியை பிடிக்க,  இரயிலில் ஸ்லீப்பர் வகுப்பில்  துரத்தி சென்ற கோயாவி ஓரிசாவை சேருவதற்குள், அவன் பெய்ஜிங் சென்றடைந்து, அங்கே ஒரு திருமணமும் செய்துக் கொண்டான்.

அந்த ஆபரேஷன் தோல்வியடைந்ததை ஒட்டி, கோயாவி டாஸ்மாக்கில் குடித்து புலம்பிக் கொண்டிருக்கையில் அவருக்கு இலவசமாக சைட் டிஷ் கொடுத்த சக குடிகாரர் கோலிவூட்டில் பணியாற்றும் ஒரு அஸிஸ்டென்ட் டைரக்டர். சில மாதங்களுக்கு பிறகு, இந்த உண்மைச் சம்பவத்துடன் புத்தரை சேர்த்து ஒரு முழு நீள ஆக்ஷன் படம் வெளிவந்தது.

தலைமையகம் அவசரமாக கூப்பிடுகிறது என்றால், மீண்டும் ஒரு அவசரப் பணி. நாட்டை நோக்கி மிகப் பெரிய அபாயம் வருகிறது. அதை தடுக்க கோயாவி தலைமையகத்தை நோக்கி விரைந்தார்,

http://www.youtube.com/watch?v=XAYhNHhxN0A

April 8, 2012 at 2:15 pm 6 comments

கோப்ரா தீவில் கோயாவி – துவக்கம் சீன ஏவுகணை

மலைகள் சூழ்ந்த அந்த சாலையில் ஒரு கார் வெகு வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.  காரில் அமர்ந்திருந்த கோடீஸ்வரர் பொன்னம்பலத்தின் மனமோ இயற்கை எழிலை இரசிக்க இயலாமல் எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தது.

கார் மரங்களர்டந்த பங்களாவில் போய் நின்றது.  ட்ரைவர் நாச்சி முத்து கதவை திறக்க, கோபத்துடன் உள்ளே நுழைந்தார் பொன்னம்பலம்.

சரளா, ஏ,சரளா”, என கூவிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

“அத்தான், வந்து விட்டீர்களா?”, என 25-வயது நாரீமணி ஓடி வந்தாள். அவளை கண்டதும், பொன்னம்பலத்தின் கோபம் எல்லை மீறியது.

பசப்பாதே, என் அனுமதி இல்லாமல் என் பெட்டகத்திற்கு சென்று எனக்கு சொந்தமான பொருளை எப்படியடி எடுப்பாய்” என இரைந்தார்.

“நாதா, அனுதினமும் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் என் மீதா சந்தேகப்படுகிறீர்கள்?”

“ச்சீ, சாகச வார்த்தைகள் பேசி என் மனதை மாற்ற முயலாதே. நன்றாக கேட்டுக் கொள்.  நாளைக்குள் எனக்கு அது திரும்ப வேண்டும்.”

இந்த அபலை மீது இப்படியொரு தீஞ்சொற்களை உதிர்க்க எப்படி அத்தான் உங்களுக்கு மனம் வந்தது” என்றவாறு சரளா கேவினாள்.

“நாளை பகல் பன்னிரெண்டு மணி வரை உனக்கு கெடு. அப்புறம் நான் மனிதனாக இருக்க மாட்டேன். டேய், நாச்சி, வண்டிய எடுடா” என சொல்லி பொன்னம்பலம் வெளியேறினார்.

கார் மலைகள் சூழ்ந்த சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.

காரில் அமர்ந்திருந்த பொன்னம்பலம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது, ட்ரைவர் நாச்சிமுத்து ஆ வென அலறினான்.

“நாச்சி, என்னாச்சிடா”

நாச்சிமுத்து அழகன் அல்ல, இருப்பினும் பயத்தினால் அவன் முகம் விகாரமாக இருந்தது.

“முதலாளி, அங்கே பாருங்கள்”, என அலறினான்.

Missile

பொன்னம்பலத்தின் காரை நோக்கி ஒரு ஏவுகணை வந்துக் கொண்டிருந்தது.  அது ஒரு சீன ஏவுகணை. அதன் முனையில் “Made In Taiwan” என்ற வாசகம் இருந்தது.

“நாச்சி, வண்டிய திருப்புடே ”

அதற்குள் ஏவுகணை அந்த காரின் மீது மோதியது. 

டமால் !

April 4, 2012 at 11:18 pm 2 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

November 2018
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930