Posts filed under ‘நகைச்சுவை’
ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்
நடிகை கத்தரீன் வாட்டர்சன் (கேப்டன் டேனியல்ஸ் ஆக ஏலியன் கோவ்னன்ட் திரைப்படத்தில் நடித்தவர்) அவரின் வெளிவராத டைரிகுறிப்பு
சிகுர்னே வீவரை ஏலியன் ஆத்தான்னு கூப்டும்போதே ஏலியன் இனம் அழிஞ்சு போச்சுங்கிற நம்பிக்கையில, ஸ்காட்டு பிரோதியுமியூஸ்-ங்கற மொக்க விண்வெளி கப்பலை பறக்க விட்டார்.
அது கவுந்தும், புத்தி வராமல் எம்புருஷனோட தலைமையிலே அள்ளக்கை கும்பல கோவனன்ட்-ங்கற விண்வெளி கலத்தில ஏத்தி திரும்ப அனுப்பறாங்க. டேவிட்-னு அங்கே ஒரு டெரர் ரோபோ, அதையே வால்டர்-னு பேர மாத்தி அதே மாதிரி குடாக்கு ரோபோவோட அனுப்பறாங்க.
பாதி வழியிலேயே என்னோட வூட்டுகாரரு கள்ளநோட்டு கண்டுபிடிக்கிற மிஷினுல வைச்ச நோட்டு போல எரிஞ்சு போயிடுறாரு.
அடுத்து பதவி ஏத்துகிற கேப்டனுக்கு கிரகம் சரியில்ல. இன்னொரு கிரகத்திலிருந்து பாட்டு கேக்குதுன்னு, அதை பாக்க முடிவு செய்யுறாரு. மொக்க படத்தில அதைவிட மொக்க முடிவுன்னு நான் சொல்லியும் கேக்கல. அங்க போனா, கிரகத்து மேல புயல் அடிச்சுகிட்டு இருக்கு. இதைவிட நல்ல சகுனம் வேணுமா, கேட்டானுங்களா.
அங்கே போய் இறங்கி, மேலே சொன்ன அத்தனை மொக்க முடிவுகளையும் தூக்கி சாப்றாப்போல பல ஜிகிடி முடிவுகளை நம்ப கம்பெனி எடுக்குது. படம் முடியறச்ச நான் கோவென அழுவேன். இதுல போய் மாட்டுனேன்னேன்னு இல்லை. காட்சிக்கு தேவைப்பட்டதால் அழ வேண்டியதாயிற்று.
மீதியை வெண்திரையில் காண்க.
இத வெண் திரையில பாக்கணும்னு முடிவு பண்ணீங்க பாத்தீங்களா, அதுதான் மேல சொன்ன எல்லாத்தையும் விட பெரிய மொக்க முடிவு.
ஆனா, ஸ்காட்டு ஏலியன் கிளிமஞ்சாரோ-ன்னு ஒரு கப்பலை அனுப்பிச்சா பாக்காமயா இருக்க போறீங்க?
குதிரை வீரன் குணா 11 ஒற்றன்
மரணம் காத்திருக்கும் இடமென்று தெரிந்தும், மனத் திடத்துடன் அத்திசை நோக்கி செல்லும் வீரன் போல அன்றி, கலங்கும் வயிறுடன், கண்களில் கலக்கத்துடன் சாணக்கியபுரி நோக்கி குணாவும், காரியும் சென்று கொண்டிருந்தனர்.
காரி ரணபுஜனின் பாசறை பற்றி ஒற்று வேலைக்கு உதவும் பல தகவல்களை சொல்லிக் கொண்டே வந்தான்.
ரணபுஜன் பல கலைஞர்களை பாசறையில் வேலைக்கு வைத்திருக்கிறான். அவர்கள் அடிக்கும் அடியில் உன் கொட்டைகள் தானாகவே உதிர்ந்து விழுந்து விடும்.
பின்னால் ஒரு உருளையை செருகி,அதில் அழுத்தத்துடன் நீர் பாய்ச்சப்படும்போது, வாய் வழியாக இரகசிய தகவல்களும் வந்து விழும் என கேள்விப் பட்டிருக்கிறேன்.
அவர்கள் இதனை ஆரம்பிக்கும்போது கைதியின் நாபியில் பெரிய கற்பூரத்தினை கொளுத்தி அனைவரும் சூழ்ந்து, இச்சித்திரவதை வெற்றியடைய வேண்டுமென்று வணங்குவார்கள். மனதை உருக்கும் அந்நிகழ்ச்சியை வாழ்நாளில் ஒருமுறையேனும் காண வேண்டும்.
உன் தொப்பையில் கற்பூரத்தை ஏற்றுகையில் தெளிவாக காண்பாய்
என குணா மனதில் நினைத்துக் கொண்டான்.
சாணக்கியபுரி கோட்டை வெளிவாயிலை அவர்கள் நெருங்கினார்கள்.
இதற்கு முன் இளவரசியின் கோபத்திற்கு பயந்து, சாணக்கியபுரி கோட்டையை அணுகிய குணா வேறு இப்போதைய குணா வேறு என நினைத்து தனக்குள் நகைத்துக் கொண்டான்.
தனக்குள் நகைத்துக் கொள்வது ஒற்றர்களின் பழக்கம் என அவன் மனதில் மின்னலென ஒரு எண்ணம் ஒடியது. அதையும் எண்ணி தனக்குள் நகைத்துக் கொண்டான்.
கோட்டைக் காவலன் அவர்களை மறித்து,
வீரர்களே, இந்த சீலையில் இருக்கும் உருவத்தினை பார்த்திருக்கிறீர்களா? அவனை இளவரசர் ரணபுஜனின் பாசறை கலைஞர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வீரரே, எழுதப் படிக்க தெரியாத தற்குறி நான் என்னைப் போய் கேட்கிறீர்களே?
என கண்ணீர் வழியும் கன்னங்களுடன் குணா மறுமொழி பகிர்ந்தான்.
அவர்களுக்கு கோட்டையில் நுழைய அனுமதி கிடைத்தது.
மிகச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி கோட்டைக்குள் நுழைந்திருக்கிறாய்,பலே, என குணாவின் உள்மனம் கெக்கலித்தாலும், அவனது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டேயிருந்தது, உடலில் நடுக்கங்கள் நிற்கவில்லை. அவனது உள்உள்மனம் அவன் சற்றும் மாறவில்லை என்று சொல்கிறதா?
தனக்குள் நகைத்துக் கொண்டான் குணா.
(கூடிய விரைவில் எத்தனை பேர் அவனுடன் சேர போகிறார்களோ?)
குதிரை வீரன் குணா 10 தோமா குருசு
குணாவின் முகவாயை பிடித்து முரட்டு தனமாக திருப்பி, காவல் தலைவன் காரி சொன்னான்
மூடனே, கொட்ட தெறிக்க தோமா குருசு போல ஒடினா உன்னை பிடிக்க இயலாது என்றா நினைத்தாய்?
இளவரசி பூங்காவனம்
யாரந்த தோமா குருசு
என வினவினாள்
அவனொரு ஒடுகாலி யவனன், இளவரசி
என பவ்யமாக பதிலளித்தான் காரி.
இளவரசி மெல்லியதாய் தலையை அசைக்க, குணாவின் பற்கள் ஆடும் வகையில் ஒரு பேரறை கொடுத்தான் காரி.
எருமையே, அவன் கட்டுக்களை அவிழ்த்து விட சமிக்ஞை காட்டினேன்
கண்களில் நட்சத்திரம் பறப்பதை பார்த்த வண்ணம் குணா மெல்லிய குரலில்
பாவம், கொட்டை அளவிற்கே அவன் மூளையும் இருக்கிறது, இளவரசி.
அவனை சுத்தம் செய்து ஆலோசனை அறைக்கு அழைத்து வா
என ஆணையிட்டு திரும்பி சென்றாள்.
குணா நல்ல ஆடையுடன் இளவரசியின் ஆலோசனை அறைக்குள் காவல் தலைவன் காரி பின்தொடர நுழைந்தான்.
சாணக்கியபுரி என் நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கிறது. அந்நாட்டு இளவரசனை நான் மணப்பது மூலம் போரின்றி அடைய நினைக்கிறான் ரணபுஜன். அதற்கு தடையாக இருப்பது என் காதலனென்று அவன் கருதும் உன்னைத்தான். உன்னை தீர்த்துக் கட்ட அவன் ஆட்கள் இந்நாட்டின் எல்லை தாண்டி காத்துக் கொண்டிருப்பார்கள். இந்நாட்டை தாண்டினால் உன்னை மரணம் துரத்தக் காத்துக் கொண்டிருக்கிறது. உன் நிலைமை புரிகிறதா?
நன்றியுண்ர்வுடன் குணா
புரிகிறது இளவரசி. என் உயிரை காப்பாற்றியதற்கு பெரும் கடன் பட்டிருக்கிறேன்.
நல்லது, இன்றிரவே நீ காரியுடன் சாணக்கியபுரி கிளம்புகிறாய். அங்கே உனக்கான உத்தரவுகள் என் உளவு ஆள் மூலம் அளிக்கப்படும்,
காரி,குணாவின் பின் மெல்லிய புன்னகையுடன், அவன் காதில் விழுமாறு கிசுகிசுத்தான்
ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்றால், அவன் யானை மீது போனாலும் நாய் கடிக்குமாம்.
(குணாவை நாய் கடிக்குமா?)
Recent Comments