Posts filed under ‘திரை விமர்சனம்’
ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்
நடிகை கத்தரீன் வாட்டர்சன் (கேப்டன் டேனியல்ஸ் ஆக ஏலியன் கோவ்னன்ட் திரைப்படத்தில் நடித்தவர்) அவரின் வெளிவராத டைரிகுறிப்பு
சிகுர்னே வீவரை ஏலியன் ஆத்தான்னு கூப்டும்போதே ஏலியன் இனம் அழிஞ்சு போச்சுங்கிற நம்பிக்கையில, ஸ்காட்டு பிரோதியுமியூஸ்-ங்கற மொக்க விண்வெளி கப்பலை பறக்க விட்டார்.
அது கவுந்தும், புத்தி வராமல் எம்புருஷனோட தலைமையிலே அள்ளக்கை கும்பல கோவனன்ட்-ங்கற விண்வெளி கலத்தில ஏத்தி திரும்ப அனுப்பறாங்க. டேவிட்-னு அங்கே ஒரு டெரர் ரோபோ, அதையே வால்டர்-னு பேர மாத்தி அதே மாதிரி குடாக்கு ரோபோவோட அனுப்பறாங்க.
பாதி வழியிலேயே என்னோட வூட்டுகாரரு கள்ளநோட்டு கண்டுபிடிக்கிற மிஷினுல வைச்ச நோட்டு போல எரிஞ்சு போயிடுறாரு.
அடுத்து பதவி ஏத்துகிற கேப்டனுக்கு கிரகம் சரியில்ல. இன்னொரு கிரகத்திலிருந்து பாட்டு கேக்குதுன்னு, அதை பாக்க முடிவு செய்யுறாரு. மொக்க படத்தில அதைவிட மொக்க முடிவுன்னு நான் சொல்லியும் கேக்கல. அங்க போனா, கிரகத்து மேல புயல் அடிச்சுகிட்டு இருக்கு. இதைவிட நல்ல சகுனம் வேணுமா, கேட்டானுங்களா.
அங்கே போய் இறங்கி, மேலே சொன்ன அத்தனை மொக்க முடிவுகளையும் தூக்கி சாப்றாப்போல பல ஜிகிடி முடிவுகளை நம்ப கம்பெனி எடுக்குது. படம் முடியறச்ச நான் கோவென அழுவேன். இதுல போய் மாட்டுனேன்னேன்னு இல்லை. காட்சிக்கு தேவைப்பட்டதால் அழ வேண்டியதாயிற்று.
மீதியை வெண்திரையில் காண்க.
இத வெண் திரையில பாக்கணும்னு முடிவு பண்ணீங்க பாத்தீங்களா, அதுதான் மேல சொன்ன எல்லாத்தையும் விட பெரிய மொக்க முடிவு.
ஆனா, ஸ்காட்டு ஏலியன் கிளிமஞ்சாரோ-ன்னு ஒரு கப்பலை அனுப்பிச்சா பாக்காமயா இருக்க போறீங்க?
Legend – பாலய்யா படம்
கடைசியாக பார்த்த பாலக்கிருஷ்ணா நடித்த திரைப்படம் லாரி ட்ரைவர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடித்த லெஜென்ட் படம் பார்த்தேன்.
குறும்பு புன்னகையுடன் கை பம்பை அடிக்கா விடாத நங்கையிடம் கடலை போட்டு நடித்தவர் இப்போது நடிப்பில் வேறு ஒரு பரிணாமத்திற்கு மாறியிருக்கிறார்.
படம் ஆந்திராவில் சூப்பர் ஹிட் என கேள்வி. நடனங்களில் கடின உழைப்பினை நல்கியுள்ளார்.
அப்படத்தில் இருந்து ரணகளமான ஒரு காட்சி.
பாலக்கிருஷ்ணாவை ஒரு மத்தியஸ்தத்திற்கு அழைத்து, அவர் முன் ஆந்திராவின் அரசியல்வாதி ஒருவரும், வட இந்திய அரசியல்வாதி ஒருவரும் அமர்ந்திருப்பார்கள். (இதில் வடஇந்தியர் என நான் எழுதியதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.)
பேச்சு வார்த்தை தடித்து, வட இந்தியர் என்னுடன் வம்புவைத்துக் கொள்ளாதே என எச்சரிப்பார்.
பாலக்கிருஷ்ணா அலட்டிக் கொள்ளாமல்,
நான் ஒரு கதை சொல்கிறன் கேள். ஒருவன் தண்டவாளத்தில் எதிர் வரும் ட்ரெயினை நோக்கி ஒடுகிறான். என்ன புரிகிறது உனக்கு?
அவனுக்கு தில் அதிகம் ஆனால் அல்பாயுசு
இன்னொரு கதை. தண்டவாளத்தில் ஒடிக் கொண்டிருக்கும் ஒருவனை நோக்கி ட்ரெயின் வருகிறது. என்ன புரிகிறது உனக்கு?
அவனுக்கு அல்பாயுசு,.
இந்த கதைகளில் நான் ட்ரெயின் என்று யாரை சொல்கிறேன் தெரிகிறதா?
என பாலக்கிருஷ்ணா கேட்க, அந்த வட இந்தியர் திணறி விடுவார். அவர் வட இந்தியர் அல்லவா? ஆந்திரா அரசியல் பற்றி அறிந்திருக்க வழியில்லை என்பதால், பாலக்கிருஷ்ணாவே அதை விளக்கி சொல்வார்.
அந்த ட்ரெயின் நான்தான். என்னை நோக்கி நீ வந்தாலும், உன்னை நோக்கி நான் வந்தாலும் அழிவு உனக்குதான். ஹஹஹஹ
இந்த காட்சியை பார்த்து முடித்ததும், நான் லாப்டாப்பில் படத்தை நிறுத்தி விட்டேன்.
இந்த ஒரு காட்சிக்கே பணம் சரியாக போய்விட்டது என்றோ, இனி இந்த படத்தை என்னால் பார்க்க இயலவில்லை என்றோ நீங்கள் நினைக்கலாம். அதெல்லாம் இல்லை. இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்ததால், மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். என் லேப்டாப்பில் பேட்டரி சார்ஜ் அவ்வளவாக இல்லை. அதான்.
மின்சாரம் வந்த பிறகு படத்தை தொடர்ந்து பார்த்து முடித்தேன். மேற்க்காண் காட்சியில் அவர் விளக்கியது போல் வில்லனின் அடியாட்கள் வந்த கார்களை ட்ரெயினை ஒட்டி வந்து அடித்து நொறுக்குவார். அது மற்றொரு அட்டகாசமான காட்சி. அது போல் நான்கோ ஐந்தோ காட்சிகள் உண்டு. சொன்னால், படம் பார்க்க ஆர்வம் போய்விடும்.
பார்த்து ரசியுங்கள். நல்ல மசாலா படம்.
Kingsman – The Secret Service
இருள் சூழ்ந்த தேவாலயத்தின் பிரமாண்ட தூண்கள் வழியே அவன் நடந்து கொண்டிருக்கையில், அவன் மனதில் ஏற்படுகின்ற போராட்டங்கள் போல ஒளியும், இருளும் அவன் பாதையில் ஊடாடி வரும் வகையில் ஒளிப்பதிவு செய்த
இது போன்று ரசிக்கப்படும் திரைப்படங்கள் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. பால்ய வயதிலிருந்தே மசாலா படங்கள் பார்த்து வளர்ந்ததால், என் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைப்படங்கள் என்றால், ஜம்பு, சூரக்கோட்டை சிங்கக்குட்டி (சில்க் ஸ்மிதா நடித்தது), கும்பக்கரை தங்கய்யா போன்ற படங்கள்தான்.
தீவிர உலக சினிமா இரசிகர்களான நண்பர்களிடம் ஜம்பு ஒரு க்ளாஸிக் என நிறுவ முற்படுகையில் தாக்கப்பட்டிருக்கிறேன். தன் அன்னையை காப்பாற்ற, காட்டுக்கொடியினை பற்றி மரங்களுக்குள் ஊடாடி செல்லும் நாயகனின் மனப்போராட்டத்தினை உணர முடியாதவர்களிடம் வேறென்ன பேசுவது!
மசாலா என்று வந்துவிட்டால் எல்லைகள் பிரிப்பது தவறு என தெலுங்கு மசாலாக்களையும் விரும்பி பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத அனுபவம் என்றால், லாரி டிரைவர் என்ற படத்தில் இரசிகர்களின் விசில்களுக்கு நடுவில் வரும் ஒரு காட்சி. அந்த வயதில் எனக்கு அந்த காட்சி புரியவில்லை லாரி ட்ரைவரான பாலக்கிருஷ்ணா ஒரு அத்துவான காட்டில் இறங்குகையில், கை பம்பு ஒன்று பூட்டு போடப்பட்டிருப்பதை பார்ப்பார். அங்குள்ள நங்கையிடம் அவர் அது பற்றி கேள்வி கேட்க, அவர் பதிலளிக்க அவற்றிற்கு இரசிகர்களின் ஆரவாரமான விசில் சத்தத்திற்கிடையே கேட்கையில் ஏற்படும் அனுபவம் கலை படங்களில் எனக்கு சத்தியமாக ஏற்பட்டதே இல்லை.
ஏய், என்ன பம்ப்பை பூட்டி வைச்சிருக்கே
கண்டவனும் கை வச்சிட்டா என்ன பண்றது?
என்ற ரீதியில் போகும் உரையாடல் கைபம்ப்பினை பற்றி இல்லை எனவும், அது ஒரு குறியீடு என்றும், உலக திரைப்படங்களில் காட்சி குறியீடு போல என்பது பிற்பாடுதான் புரிந்தது.
இன்னொரு படத்தில் விக்ரம் என்ற பெயருடைய கதாநாயகனின் குடும்பம் வில்லனால் கொல்லப்படுவதால், பத்து நிமிடங்களுக்கு முன்பு கதாநாயகியுடன் புரண்ட நாயகன், கடலில் பாறைகளுக்கு நடுவில் வறண்ட முகத்துடன் நின்று கொண்டிருப்பார். கதாநாயகி அடுத்த பாடலுக்கு அவரை அழைக்கையில், அவன் தற்சமயம் அதற்கு இடமில்லை என மறுப்பான். நாயகி, விக்ரம் என விம்முகையில், வறண்ட குரலில் நாயகன் சொல்வான். விக்ரம் என்று யாரும் இங்கில்லை. நான் விக்கி தாதா.
மேற்கண்ட காட்சிக்கு நான் விசிலடித்திருக்கிறேன் என்று சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை.
சட்டையை மாற்றிக் கொண்டு, நாயகியை புரட்டினால் மட்டும் மசாலா படங்கள் வெற்றி பெறுவதில்லை. மசாலா படங்கள் எடுப்பதற்கும் தனித்திறமை வேண்டும் என்பதை உலக திரைப்பட ரசிகர்கள் அறிய மாட்டார்கள். குரசோவாவின் செவன் சமுராயும், கர்ணனின் இரட்டைக் குழல் துப்பாக்கியும் என் மனதில் சம இடங்களை பெற்றிருக்கின்றன என சொல்கையில் உலக திரைப்பட ஆர்வலர்கள் அதிர்வதை என்னால் உணர முடிகிறது.
இப்போதைய காலக்கட்டத்தில் மசாலா திரைப்படங்களுடன் நுண் இரசனையை கலப்பதால், நல்ல மசாலா திரைப்படங்களை காண்பதரிதாக உள்ளது. தற்போதைய தமிழ் படங்களில் நாயகனின் புஜபல பராக்கிரமங்களையே போற்றுவதாக சித்தரிப்பது நல்ல மசாலா படங்களுக்குரிய இலக்கணம் அல்ல. அது உப்பு போல. அதிபாகு லவணம் ஸர்வ நாஸ்ய. இந்த பத்தியில் சம்ஸ்கிருதத்தை உபயோகித்த விதமே இந்த பத்தியை சிறப்பானதாக ஆக்கியுள்ளது என்பதை சிறந்த வாசகர்கள் அறிவார்கள். உபயோகித்த விதம் இலக்கண ரீதியாக சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதிபாகு க்ரமேர் you know?
உலக சினிமா திரைப்படங்களை இரசிப்பவர், ஒவ்வொரு ப்ரேமிலும் கலை நுணுக்கத்தினை எதிர்பார்ப்பவர் என நாம் இரசனையை வளர்த்துக் கொண்டாலும், பால்ய வயதில் மசாலா திரைப்படங்களை பார்த்தே வளர்ந்திருக்கிறோம். அந்த மசாலா நம் இரத்தத்தில் கலந்தே இருக்கிறது. ஜம்பு திரைப்படத்தினை இப்போதும் உங்கள் நண்பர்களுடன் பாருங்கள். உங்களால் ரசிக்க முடியும். அதுவே ஒரு செம்மையான திரைப்படத்திற்குரிய அம்சம் என கருதுகிறேன்.
இந்த வகையில் கிங்ஸ்மேன் ஒரு செம்மையான மசாலா திரைப்படம். காலின் பர்த் கனவான் வேடங்களிலேயே நடித்தவர். அவரின் உச்சரிப்பு, பாவனைகள் அனைத்துமே அதையே பிரதிபலிக்கும். அவரை ஒரு அதிரடி உளவாளியாக காட்டி அதில் வெற்றி பெற்றதே இயக்குநரின் முதல் வெற்றி.
கிங்ஸ்மேன் என்ற உளவு நிறுவனத்தில் பணியாற்றும் உளவாளிகள் வாழ்க்கை, பயிற்சி, உளவு வேலைகள் ஆகியவை அடங்கிய திரைப்படம் இது. அதை காட்டிய விதத்தில்தான் இயக்குநர் தூள் கிளப்பியிருக்கிறார். பழைய மசாலா படங்களில் நாம் ரசித்த அனைத்துக் காட்சிகளும் இத்திரைப்படத்தில் உண்டு. ஸ்டாலோன் இது போன்றே எக்ஸ்பென்டபுள் பட வரிசையை நாயகர்களுடன் ஆரம்பித்தார். மாத்யு வானோ மசாலா திரைப்பட நிகழ்வுகளை கொண்டு இப்படத்தினை அமைத்திருக்கிறார்.
மதுபான விடுதியில் கதவை மூடி போடும் சண்டையும், தேவாலயத்தில் நடக்கும் இரத்த வெறியாட்டமும், இறுதியில் சிதறும் படலமும் திரைப்படத்தில் இவ்வளவு இரத்தத்துடன் கூடிய வன்முறையை புன்னகையுடன் பார்க்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
சாமுவேல் ஜாக்ஸனின் வில்லத்தனம், அதன் காரணத்தை அவர் நியாயப்படுத்தும் விதம்,ஜே பி என்கிற பக் இன நாய், ஸ்வீடிய இளவரசி என திரைப்படத்தின் ஒவ்வொரு தருணங்களையும் வெகுவாக ரசிக்கத்தக்க வகையில் எடுத்திருக்கிறார்.
பால்ய வயதில் சனிக்கிழமை காலை எழுந்தோடி, நெடுஞ்சாலையை ஒட்டிய சுவரை பார்க்கையில் அதில் காலை 11 மணிக் காட்சிக்கென ஒரு திரைப்படத்தின் போஸ்டர் (படங்களற்றது) ஒட்டியிருப்பார்கள். இனிய பாடல்கள் பயங்கர சண்டைகள் நிறைந்த கலர் என. அதைப் போல படம் இது.
Recent Comments