Posts filed under ‘தின வணிகம்’
Intraday Trading VI
பங்கு தரகு நிறுவனங்களில் வணிகம் செய்யாமல், அலுவலகங்களிலிருந்தோ அல்லது வெளியிலிருந்து (On the go) தின வணிகம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விதிகள் :
1) முதலில் தங்க விதி (The Golden Rule) : தின வணிகம் செய்வதை தவிர்க்கவும். பங்கு சந்தையில் சம்பாதிக்க தின வணிகம் மட்டுமே வழியல்ல. வேறு நிறைய வழிகளும் உள்ளன. பங்கு சந்தையின் நிலைகளை தொடர்ந்து பார்க்க இயலாத பட்சத்தில் தின வணிகம் செய்வதை தவிர்ப்பதே நல்லதாகும்.
பொதுவாக தங்க விதி என்பது நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க முடியாத ஒன்றாகும். எனவே மற்ற பிற விதிகளையும் பார்ப்போம்.
2) காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் முன் அன்றைய தின வணிகத்திற்கான திட்டத்தினை மிகத் தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, இன்றைக்கு இலாபம் என்று வந்தால் இவ்வளவு, நஷ்டம் என்று வந்தால் இவ்வளவு என. நாளின் நடுவில் இன்னும் சிறிது உயர்த்தி விற்கலாம் என்ற எண்ணமே கூடாது. அதேபோல், விலை மேலேறி விடும் நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் கூடாது.
3) காலையில் தின வணிகத்திற்கான திட்டங்களை வகுக்கையில், இலக்கு விலை (Target Price) இவ்வளவு என நிர்ணயிக்கயிக்கும்போது அதே விலைக்கே உங்களின் விலையும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணத்திற்கு, காலையி்ல் டெக்னிகல் சார்ட் வைத்து பார்க்கும்போது ஐடியா செல்லுலார் முந்தைய விலை 83.55 என்றும், இன்றைக்கு அதன் இலக்கு விலை 88 என தோன்றினால், சந்தை துவக்கத்தில் அதனை நீங்கள் 83.85 என்ற விலைக்கு வாங்கினால் இலக்கு விலையான 88 என்ற விலைக்கு ஆர்டர்களை போடாமல் 87.50-87.75-க்குள் போடுவது நல்லது. நீங்கள் பங்கு தரகு நிறுவனத்தில் இருந்து வணிகம் செய்தால், கடைசி நேரத்தில் Orders மாற்ற முடியும். அவ்வாறு இயலாத பட்சத்தில் வாங்கிய உடன் உங்கள் இலக்கு விலையை போட்டுவிடுவது நல்லது. உங்கள் ஆர்டர் விலைப் வரிசையில் (Order Queue) முதலில் (Priority) இருக்கும்.
அதேபோல் ஷார்ட் (Short Positions) போகும்போது, அதே இலக்கு விலைக்கு கவர் செய்ய வேண்டும் என்பதில்லை. அதற்கு முந்தைய நிலையிலும் கவர் செய்துவிடலாம். இவை அனைத்தும் தெரிந்தும் நிறைய பேர் இந்த இடத்தில் தான் தடுமாறுகின்றார்கள். உங்கள் பங்கு இலக்கு விலைக்கு அருகில் வந்ததும் அடிக்கடி போன் செய்து இப்போது என்ன விலை, கொடுத்துவிடாதீர்கள் அல்லது பொறுமையாக கவர் செய்து கொள்ளலாம் என தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வது பெரும்பாலும் நஷ்டத்தில்தான் முடியும். இது எனது தனிப்பட்ட அனுபவம்.
4) மிக மிக முக்கியமான விதிகளில் ஒன்று. உங்களின் அன்றைய தின வணிக திட்டம் இலாபத்திலா அல்லது நஷ்டத்திலோ முடிந்தவுடன் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளை அன்று பார்ப்பது உத்தமம். இலாபத்தை அதிகரிப்பதையோ, நஷ்டத்தை குறைக்கும் பொருட்டே அன்றைய தின அலுவலக வேளை பளுவில் வகுக்கப்படும் அவசர கால திட்டங்கள் (Emergency Contingency Plans) அனைத்தும் 99% நஷ்டத்தையே மேலும் அளிக்கக் கூடும். உதாரணத்திற்கு, நீங்கள் ஷார்ட் போன பங்கு மேலும் இறங்கினால் அடுத்த ரவுண்ட் போகலாம் என்ற எண்ணமே கூடாது. இந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் எண்ணம் : காலையில் மிகச் சரியாக டெக்னிகல் பார்த்து இலக்கினை நிர்ணயித்தோம். அடுத்த நிலைக்கு அதுபோகும்போது இன்னொரு ரவுண்ட் போய் சிறிது இலாபம் பார்த்து விடலாம். அதை துடைத்துதெறிந்து விட்டு வேறு வேலை பார்ப்பது தான் நல்லது.
இன்னும் சில விதிகளை நண்பகலில் பதிவேற்றம் செய்கின்றேன்.
5) இன்னொரு தங்க விதி : டெக்னிகல் சார்ட் (Technical Charts) 100% நம்பகமானவை கிடையாது. டெக்னிகல் அனாலிஸ் நீங்கள் செய்தாலும் சரி, ஒரு Professional செய்தாலும் சரி, குறிப்பிட்ட இலக்கு விலை 100% அன்றைய தினத்தில் எய்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் (சற்று காரமான வார்த்தை தான் என்ற போதிலும். உண்மைநிலையை விளக்கிக் சொல்ல மென்மையான வார்த்தைகள் உதவாது).
டெக்னிகல் அனாலிஸ் என்பது தேவையற்றது, அவை உபயோகமில்லை என்று நான் கூறவில்லை. அவற்றை கண்முடித்தனமாக நம்பக் கூடாது என்பதையே சொல்ல வருகின்றேன். ஏனென்றால், மேற்கண்ட பத்தியை தவறாக புரிந்துக் கொள்ளக் கூடிய சாத்தியமுண்டு என்பதால் இந்த விளக்கம்.
6) சில நாட்கள் வெளியுர் பயணம் சென்றுவிட்டு, எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் சிலர் இறங்குவார்கள். நான் அம்மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கின்றேன். பெரும்பாலும், ஆன்மீக தலங்களை தரிசித்துவிட்டு வந்து, கடந்த சில நாட்களாக சந்தையை பற்றி எந்த விவரங்களையும் படிக்காமல், சந்தை கடைசியாக முடிந்த நிலையை மட்டும் பார்த்துவிட்டு தின வணிகத்தில் இறங்குவார்கள்.
எத்தனை வருடங்களாக சந்தையை பார்த்துக் கொண்டிருக்கின்றேன், சந்தை எங்கே ஏறும், எங்கே சறுக்கும் என்று எனக்கு தெரியாதா என்று டயலாக் அடிப்பவர்களை விட்டு விலகியிருப்பது நல்லது. அந்த மனநிலையில் வணிகம் செய்பவர்களை கூர்ந்து ஒரு மாதகாலம் கவனித்தீர்களென்றாலே உங்களுக்கு ஒரு முக்கிய விஷயம் தெரிந்துவிடும். பங்கு சந்தையை பற்றி 100% சதவீதம் அறிந்தவர்கள் யாரும் இல்லை என்று.
Intraday Trading V
பங்கு சந்தையில் நுழைந்த ஒவ்வொருவரும் முதலில் ஈர்க்கப்படுவது தின வணிகத்தில்தான். குறிப்பாக எந்த அனுபவமும் இல்லாமல், குழுமங்களை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட, இதில் மிகுந்த உற்சாகமாக ஈடுபடுவார்கள். சிலருக்கு முதல் சில தின வணிகங்களில் இலாபம் கூட கிடைக்கலாம்.இவர்கள் இதனை பங்கு சந்தை என்று பார்த்தால் கூட, என்னை பொறுத்தவரை இவர்களுக்கு பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்டக் கூடம் என்று தான் சொல்வேன். சிலர் முற்றிலும் அதிர்ஷ்டத்தை நம்பி மட்டுமே தின வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். வாரன் பப்பெட் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பங்கு சந்தை முதலீட்டை மட்டுமே மேற்கொண்டு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரானவர். 1960-களில் தொடக்கத்தில் முதலீடு செய்ய அவரிடம் தொகை இருந்தபோதிலும், சரியான விலையில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டுமென்று கிட்டத்தட்ட 10 வருடங்கள் காத்திருந்தார். அதற்கு பிறகு வந்த ஒரு பெரும் அமெரிக்க பங்கு சந்தை சரிவில் அனைவரும் விற்றுவிட்டு ஒடும்போது, இவர் பெரும் தொகையுடன் நுழைந்தார். பத்து வருடங்கள் காத்திருக்கும் அளவிற்கு பொறுமை. நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று.
தின வணிகத்தில் நாம் எவ்வாறு ஈடுபடபோகிறோம் என்பதை விட எங்கிருந்து ஈடுபட போகிறோம் என்பதை முதலில் பார்ப்போம். நாம் பொதுவாக கீழ்க்கண்ட வகையில் தின வணிகம் செய்து கொண்டிருக்கிறோம்.
1) பங்கு தரகு நிறுவனத்திலிருந்து
2) வீட்டிலிருந்து ( இணையம் முலமாக)
3) அலுவலகத்திலிருந்து (On the Road)
பங்கு தரகு நிறுவனத்திலிருந்து என்றால் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை அங்கிருப்போம். சந்தையின் தீடீர் சரிவு, ஏற்றம் போன்றவை நமக்கு உடனே தெரியும். அதற்கேற்ப நாமும் தயார்நிலையில் இருப்போம். அங்கு தவிர்க்க வேண்டியது என்னவெனில் . உங்களை போலவே நிறைய பேர் பல்வேறு வணிக குறிப்புகளுடன் வந்திருப்பார்கள். சிலர் அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் செய்வார்கள். அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் காலையில் என்ன திட்டத்தில் வந்திருக்கின்றீர்களோ அதை மட்டும் பார்த்தால் நல்லது. முதலில் காலையில் உள்ளே வரும்போது நீங்கள் தின வணிகம் செய்யபோகும் பங்குகளுக்கான வணிக குறிப்புகளுடன் நுழைவது அவசியம். அங்கே போய் எது ஏறுதோ அதை பிடிப்போம் என “குதிரைப் பந்தய” நிலையில் நுழையவே கூடாது. அனுபவம் இல்லாதவர்கள் ஒரு பங்கிற்கு மேல் கவனம் செலுத்தமால் இருத்தல் நலம்.
சந்தை துவங்கிய பிறகு, நீங்கள் தின வணிகம் செய்யும் பங்குகளின் நிலையை மட்டும் கவனமாக பார்த்தால் போதும். அப்போதுதான் உங்கள் அருகிலுள்ளவர் ” Positive News வந்துடுச்சி. இவன் பாய போறான் பாரு. பார்த்துக்கிட்ட இரு” என்று சொல்லி distract செய்தாலும் நீங்கள் கவனத்தை விலக்காமல் இருக்க ஒரு அசாத்தியமான self-discipline தேவை. நீங்கள் அந்த “பாயும் புலியை” பார்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் Counters Close பண்ணி விடுவார்கள்.
வீட்டிலிருந்து செய்பவர்கள் என்றால் அங்கும் distractions இருக்க வாய்ப்புண்டு. முக்கியமாக இணைய தொடர்பு மற்றும் மின்சாரம். இணைய தொடர்பு துண்டிக்கப்படுதல் மற்றும் மின் தடை இவற்றை எதிர்பார்த்து அதற்கேற்ப கண்டிப்பாக Contingency Plans செய்து கொள்ள வேண்டும். இவை மட்டுமில்லாமல் Domestic distractions கூட இருக்க வாய்ப்புண்டு. “ஏங்க, சோப்பு தீர்ந்து போயிடுச்சி. வாங்கிட்டு வாங்களேன்!”. நீங்கள் கடைக்கு போய் சோப்பு வாங்கி வருவதற்குள், சந்தை உங்களை குளிப்பாட்டி விட்டிருக்கும்.
அலுவலகத்திலிருந்து, பயணத்தின்போது சிலர் தின வணிகம் செய்யலாம். அலுவலகத்திலிருந்து என்றால் ஒவ்வொரு தடவையும் சூப்பர்மேன் தன் உடையை மாற்ற மறைவிடத்திற்கு செல்வது போல செல்போனை துாக்கிக் கொண்டு, மறைவிடத்திற்கு சென்று உங்கள் பங்குகளின் நிலவரங்களை கேட்டுக் கொண்டிருப்பீர்கள். அலுவலகப் பணியும் பாதிக்கப்படும். பயணத்தின்போது Distractions மிகவும் அதிகம். செல்போனில் ஆர்டர்கள் சொல்லும்போது பிற இரைச்சல்கள் உங்களை பாதிக்கும். உங்கள் ஆர்டரை செல்போனில் நீங்கள் சொல்லும்போது “நேற்று இராத்திரி யம்மா” பாட்டு உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருக்கும். உங்கள் பங்கு தரகரும் சரியாக புரிந்துக் கொள்ளாமல் வேறு எதையாவது செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
முதலில் தின வணிகத்திற்கு தேவை என்று பார்த்தோமென்றால் மிகத் தெளிவான திட்டம். தின வணிகத்தில் ஈடுபடுபவர்கள் நிறைய பேர் ஸ்டாப் லாஸ் பற்றியே யோசித்திருக்க மாட்டார்கள். வாங்கும் விலை, இலக்கு விலை இவையிரண்டும் மட்டுமே தெரியும். ஸ்டாப் லாஸ் என்று கொடுத்திருந்தால் கூட அதை பொருட்படுத்துவதில்லை. இவ்வளவு இலாபம் என்று கணக்கிடும்பொழுதே இவ்வளவு நஷ்டம் மட்டுமே வரும் என்ற கணக்கீடும் முக்கியம்.
இரண்டாவது அம்சம் பொறுமை. ஆம். தின வணிகத்திலும் பொறுமை மிக முக்கியம். காலை 10.00 மணிக்கு வாங்கிய பங்கு அதன் இலக்கு விலையை மாலை 3.25 அளவில் கூட எட்டலாம். அடுத்த ஒரு மணிநேரத்திலேயே இலக்கு விலையை எட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அவ்வாறு எட்டாவிடில் அதை விட்டுவிட்டு நமது திட்டத்தில்லாத வேறு ஒரு பங்கிற்கு தாவுவது தவிர்க்கப்பட வேண்டும்.
முன்றாவது சுய கட்டுப்பாடு. உங்கள் பங்குகள் அதன் இலக்கினை ஒரு மணி நேரத்திலேயோ அதற்குள்ளேயே எட்டி விட்டால் சந்தையை விட்டு ஒதுங்கியிருப்பது உத்தமம். சந்தையை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்று சொல்லவில்லை. அவ்வாறு செய்வதும் தவறில்லை. சந்தையில் வேறு எந்த வித தின வணிகமும் அன்றைய தினம் செய்யாமல் இருப்பது உத்தமம்.
தின வணிகத்தில் மிகவும் அடிப்படையான யுக்திகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
Intraday Trading IV
சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லியதற்கு நன்றிகள். அதில் இன்னும் சில பகுதிகள் விட்டுப் போயிருக்கின்றன.
தின வணிகத்தை பொறுத்தவரை தரகு நிறுவனங்கள் கையிருப்பில் உள்ள தொகை மற்றும் பங்குகளின் மதிப்பினை பொறுத்து ஐந்து முதல் பத்து மடங்கு வரை Cash Exposure அதிகமாக கொடுக்கின்றன. இதனை மார்ஜீன் வணிகம் (Margin Trade) என்று சொல்வார்கள். தரகு கட்டணமும் Delivery based வணிகத்தை விட குறைவாகவே வசூலிக்கின்றன. காரணம் என்னவென்றால், வணிகம் செய்வதற்கு உங்களுக்கு மிக அதிகமான தொகை கிடைக்கின்றது. அதனை வைத்து நீங்கள் பங்குகளை வாங்கினாலும், அன்றைய தினக் கடைசிக்குள் கணக்கு முடித்துவிட வேண்டும். சில பங்கு தரகு நிறுவனங்கள் மதியம் 2.45-க்குள் கணக்கு நேராகவிட்டால் தாங்களே விற்று கணக்கினை நேராக்கிவிடுகின்றன. உங்கள் கணக்கில் ரு.100 இருந்தால், குறுகிய கால முதலீட்டாளரோ அல்லது நீண்ட கால முதலீட்டாளரோ அந்த தொகைக்கு மட்டுமே பங்குகளை வாங்குவார். இதையே தின வணிகத்தில் பார்க்கும்போது, அவருக்கு ரு.500 மற்றும் அவர் கையிருப்பிலுள்ள பங்குகள் மதிப்பினை பொறுத்து மேலும் தொகை அவருக்கு வணிகம் செய்யக் கிடைக்கும். பங்கு தரகு நிறுவனத்திற்கு அதிக தரகு கட்டணம் கிடைக்கும்.
இதில் பங்கு தரகு நிறுவனங்களை தவறு சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் உங்களுக்கு Cash Exposure மட்டுமே கொடுக்கின்றார்கள். வணிகம் செய்வது நாம்தானே. பங்கு முதலீட்டில் ஈடுபட்டு அமெரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான வாரன் பப்பெட் (Warren Buffett) தின வணிகமே செய்ததில்லை என்பது தெரியுமா! அவர் ஒரே நாளில், ஒரே ஆண்டில் கோடீஸ்வரராகவும் இல்லை.
சூதாட்டத்திற்கு மனம் அடிமையாவது போல் தின வணிகத்தையும் சிலர் வெறி பிடித்தது போல் செய்கின்றார்கள். ஆயிரம் ருபாயை இழந்து எப்போதாவது கிடைக்கும் நுாறு ருபாய்க்காக எந்த ஒரு அடிப்படையும் தெரியாமல் பல்வேறு விதமான பங்குகளை, பல்வேறு இடங்களில் கிடைக்கும் பரிந்துரைகளின் பேரில் வாங்கி பணத்தை இழக்கின்றார்கள். இதில் நமக்கென்ன வந்தது, அவர்களாகவே தங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொள்வதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று நினைக்கவே கூடாது. இவ்வாறு நஷ்டமடைந்தவர்கள் தான் பங்கு சந்தை ஆபத்தானது என்ற ஒரு நிலையை மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கின்றனர். பங்கு சந்தையில் இறங்குவதால் என்ன நன்மைகள் இருக்கின்றன என்று பார்க்கும்பொழுது பொருளாதார ரீதியாக மட்டும் பார்க்காமல், நாம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் என்னென்ன கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது, தவறான கொள்கைகளை தேர்ந்தெடுக்கும்போது சந்தை பாதிக்கப் படுகின்றது, அதனால் நம்முடைய முதலீடும் பாதிக்கப் படுகின்றது. இவ்வாறு யோசிப்பதன் முலம் நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் அரசியல்வாதிகள் வெறும் இலவசங்களை காட்டி நம்மை ஏமாற்ற இயலாது. ஏனென்றால் அவர்களின் ஒவ்வொரு தவறான முடிவுகளிலும் பாதிக்கப் படுவது நம்முடைய முதலீடு. மேலும் நம்முடைய சொந்த பணத்தை முதலீடாக போட்டிருப்பதால் தேர்தலின்போது எந்த கட்சி சார்பான ஒரு ஆதரவையும் நாம் எடுக்காமல் ஒரு நடுநிலை தன்மையுடைய முடிவினை கட்சியின் கொள்கைகளுக்கேட்ப எடுக்க இயலும். இது நம் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது. வளர்ந்த நாடுகளில் (அமெரிக்கா உட்பட) உள்ள அரசியல்வாதிகள் அவர்கள் நாட்டு மக்களை மிகவும் எளிதாக ஏமாற்ற இயலாது. நிறைய கஷ்டப்பட்டுதான் ஏமாற்றுகின்றார்கள்.
தின வணிகம் குறித்து எழுத இன்னும் நிறைய இருக்கின்றது. தின வணிகம் செய்வதற்கு Technical Analysis, Average Volume Data, பற்றி தெரிய வேண்டும். பல்வேறு Charts அலசும் திறனும் வேண்டும்.நானும் தின வணிகம் செய்கின்றேன். ஆனால் தினமும் அல்ல. தற்போதைய சந்தை நிலவரம் தின வணிகம் செய்தவற்கு ஏற்றதாக இல்லை. நல்ல செய்திகள் மற்றும் கெட்ட செய்திகள் எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழல் நிலவுகின்றது. நம் சந்தையை பொறுத்தவரையில் தற்போது இன்னும் இறங்கக் கூடிய சூழ்நிலையில்தான் உள்ளது. 3700 என்பது எட்டக் கூடிய துாரம் தான். மிக வேகமாக இறங்குவதற்கான சூழ்நிலையே தற்போது உள்ளது. தற்போதைய சந்தை முதலீட்டுக்கெற்ற சந்தை. உங்களில் பலர் வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு வணிகம் செய்பவர்களாக இருந்தால் தின வணிகத்தை சில நாள் ஒதுக்கி வைத்திருப்பது நல்லது. அதற்கு பதிலாக சில பங்குகளை தேர்ந்தெடுத்து அதன் movements கண்காணிக்கலாம். தினவணிகம் குறித்து ஆரம்பித்த இத்தொடரை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தற்போது ஆரம்பித்த Fundamental Analysis தொடரை மீண்டும் தொடரலாம் என்று இருக்கின்றேன். வழக்கம்போல் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.
Recent Comments