Posts filed under ‘செய்தி அலசல்’
சத்யம் பற்றி பொதுமக்கள் கருத்துகள்
சத்யம் பற்றி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களின் நாடித் துடிப்பை அறிய இந்த வலைப்பூவின் ஆசிரியர் ஸ்டெதாஸ்கோப்புடன் கிளம்பி, மக்களின் கருத்துகளை இங்கே தொகுத்துள்ளார். அவர் இளவயது பெண்களின் கருத்துகளை அறிய அதிக ஆவலை காட்டியதாக சில எத்தர்கள் கிளப்பி விடும் வதந்திகளை நம்ப வேண்டாம் என இதை படிக்கும் அன்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதலில் கீரை விற்கும் முனியம்மா ( 38 )
‘என்னவோ போங்க. இந்த மாதிரி ஆயி போச்சு. அதுக்காக ஆசப்பட்டு வாங்குனத வூட்டுறலாமா? அம்பது ரூபாய்க்கு சீப்பா கெடக்கிதேன்னு வாங்குன்னேன். இப்போ பேதியில போய் பாதியான மாதிரி இருக்கு. நாந் வித்து, வித்து வாங்கி இலாபம் சம்பாரிக்கிறேன்.
‘என்னது டை கட்டின பார்ட்டிங்களா? அட கண்ணு, இங்க கீர வாங்க வர பார்ட்டிங்கள்ள பேரம் பேசிறவங்களே டை கட்டின பார்ட்டிங்கதான்.’
முனிசிலிபாலிட்டியில் வேலை பார்க்கும் கிஷ்டன் ( 42 )
‘யோவ், நிறுத்துய்யா. பெரிய பருப்பு மாதிரி விளக்க வந்துட்ட. எனக்கும் விஷயம் தெரியும்ல. காலயில டீ குடிச்சுட்டு பேப்பரு படிக்கிறோம்ல. இந்த சத்யங் கம்பெனி ஒனரு ஒரு மைதா மாவு கம்பெனிய வாங்க பாத்தாரு. அது அவரு பங்காளிகளுக்கு புடிக்கல. உடன பிரச்சினைய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த மேரி பங்காளி சண்டையில பாத்தின்னு வைச்சுகோயேன். நிறய விஷயம் டுபாக்கூரா இருக்கும். ஒரு தபா இந்த அலமேலுக்கிட்ட இட்லி வாங்கி சாப்டேன்னு இந்த பசங்க என்னமா கொளுத்தி போட்டுடாங்க தெரிமா? நாந் சாப்ற இட்லியை விட வில குறைவா இருக்கு. சுகுரா கொஞ்ச வாங்லாம்னு பாக்குறேன் நீ என்ன சொல்ற தலைவா?’
தனியார் துறையில் மார்க்கெட்டிங் மேலாளராக வேலை பார்க்கும் விஷ்வநாதன் ( 38 )
‘எனக்கு ஆரம்பத்திலயே சத்யம் பத்தி சந்தேகம் இருந்துச்சி. என் நண்பர்களிடமும் சொன்னேன். நீங்க வேணா கேட்டு பாருங்களேன். ஆனா யாருமே நம்ப வில்லை. செய்தி தாட்களை நன்றாக ஊன்றி படித்தாலே இந்த மாதிரி விஷயங்கள் புலப்பட்டு விடும். ஆனா பாருங்க, யாருமே இந்த மாதிரி செய்யறதில்ல. ஆனா நான் அப்படி இல்ல. ஆபீஸ் நேரத்துல விடாம எல்லா பேப்பரையும் படிச்சுடுவேன். ஆரம்பத்துல நான் சொன்ன மாதிரி என் நண்பர்கள் யாரும் இத நம்பல. நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம முடிவெடுத்துதாங்க. ஆனா நான் இப்ப ஒரு உண்மையை சொல்றேன். நான் போனது நயன்தாராவுக்காக தான்.
பெயர் மற்றும் கட்சி விவரம் தெரிவிக்காத ஒரு அரசியல்வாதி ( 48 )
‘ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாள் நல்ல பேரு வாங்கி டெண்டரு எடுத்து பணம் அடிக்கறதுக்குள்ள டாவு தீந்து போய்டுது. இந்த அண்ணாச்சி அப்டி நேக்கா தட்டிட்டாரே. காத கூடு வாத்தியாரே, ஒரு விஷயம் சொல்றேன். நம்ம கச்சியில அண்ணாச்சிய சேக்க இப்ப பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவரு காட்டியும் நம்ம கச்சியில சேந்தாருன்னு வைச்சிகோயேன். அடுத்த கம்பூட்டர் மினிஸ்டரே அண்ணந்தான்.
பெயர் தெரிவிக்காத ஒரு கல்லுாரி மாணவி ( 32 ) (முந்தைய அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருப்பது வயசல்ல)
‘வாவ், சத்யம் இப்டி போகும்ன்னு நான் எதிர்பாக்கவே இல்லை. ரொம்ப ஷாக்கா இருந்துச்சி. அக்ச்சுவலி, இவ்ளோ பெரிய தொகையில ஊழல் இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல. எங்க நைனா தான் நிறைய ஷேர் வாங்கிட்டு இப்போ நெஞ்சை பிடிச்சிக்கிட்டு இருக்கு. முன்னாடியெல்லாம் நான் போடுற டிரெஸ்ச பாத்து நெஞ்ச பிடிச்சுக்கும். இப்போ சத்யத்தால என்ன கண்டுகறத இல்ல. டேங்ஸ் சத்யம். என் பாய் ப்ரெண்ட் கூட சத்யத்துல தான் வேலை செய்றான். இப்போ அவன கழத்தி வுட்றலாம்னு பாக்குறேன்.
என்னது……தேங்க் யூ, நிஜமா தான் சொல்றீங்களா? ச்சீய் போங்க.
Tata, the Lion-hearted
டாடா தொழிற்குழுமத்தின் ஒரு அங்கமான டாடா மோட்டார் (Tata Motor) நிறுவனம் “ஏழைகளின் கார்” என்று அழைக்கப்படும் டாடா நேனோ (Nano)-வை தயாரிக்க மேற்கு வங்கத்தில் சிங்கூர் என்ற இடத்தில் சில நுாறு ஏக்கர்களை அரசு உதவியுடன் வாங்கி, தொழிற்சாலை கட்ட ஆரம்பித்தது. பின்னர், அம்மாநில எதிர்கட்சி தலைவி செல்வி மம்தா பானர்ஜீ என்பாரின் தலைமையில் எதிர்ப்பு போராட்டம் வலுத்து, சட்ட திட்டங்களை மறந்து சட்ட ஒழுங்கை அவர்களே கையில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு, அக்குழும தலைவர் திரு இரத்தன் டாடா இந்நிலை தொடர்ந்தால் தாங்கள் சிங்கூர் தொழிற்சாலையை இழுத்து முடிவிட்டு வேறு மாநிலம் பார்த்துக் கொள்ள நேரிடும் என அறிக்கை விடும்படி ஆயிற்று. தற்போதைய நிலவரப்படி, அம்மாநில அரசு இதை சுமுகமாக முடிக்க பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றது. தொழிற்சாலை மீண்டும் பழையபடி இயங்குமா என்பது சில வாரங்களுக்கு பிறகுதான் தெரியும்.
மேற்கண்டவாறு செய்திகளை நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். முதலில் சில தகவல்கள் :
இந்திய குழுமங்களிலேயே டாடா குழுமம் உலக நாடுகளில் உள்ள குழுமங்களில் நேர்மையான குழுமங்கள் (chosen by Ethics Committee) என்ற வரிசையிலே முதல் பத்து இடங்களில் ஒன்றை வகிக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு குழுமம் சில நுாறு ஏக்கர் நிலங்களை அரசு உதவியுடன் தங்கள் தொழிற்சாலைக்கு வாங்கும்பொழுது நிர்வாக முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே. நிலங்களுக்கு மதிப்பு போட்டு விற்கும்போது, ஏறக்குறைய சரியான மதிப்பு ( சந்தை அளவில்) போட்டுதான் கொடுத்திருக்கின்றார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு தொழிற்சாலை கட்ட நுாறு ஏக்கர் நிலம் தேவைப்படும்பொழுது, 98 ஏக்கர் நிலங்கள் உரிமையாளர்களால் விற்கப்பட்ட பிறகு மீதியிருக்கும் 2 ஏக்கர் நில உரிமையாளர்கள் தாங்கள் கொடுக்காமல் மறுக்க இயலாது. ஒரு தொழிற்சாலை எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு தருகின்ற போது, இவர்கள் நிலத்தை விலைக்கு கொடுக்க மறுப்பதால் அந்த வேலை தடைபடுகின்ற போது அவர்கள் நிலங்களை விற்பதை தவிர வேறு வழியில்லை. எந்த கோர்ட்டும் அதற்கு தடை விதிக்கப் போவதில்லை. இது சரியா என்று பார்த்தோமென்றால், பொது நோக்கத்திற்காக விட்டுக் கொடுப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலும் அவர்கள் நிலத்திற்கேற்ற மதிப்பை சந்தை விலையில் பெறுகின்றார்கள்.
இதில் தேவையில்லாமல் அரசியலை கொண்டுவந்து, பெரும் போராட்டத்தை நடத்தி, அவை நியாயமாக வெற்றி பெறாது என்றபோது வன்முறையை புகுத்தி, தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்தி இது தான் வெற்றி என முழக்கமிட்டுக் கொண்டிருப்பவர், அந்நிலங்கள் விளைநிலங்களாக இருக்கையில் அவ்விவசாயிகளுக்கு என்னென்ன உதவிகள் செய்தார் என்று சற்று பின்னோக்கி பார்த்தோமென்றால், அந்த ஊர் இருக்கின்றதே அவர்களுக்கு டாடா குழுமம் தன் தொழிற்சாலையை அங்கு ஆரம்பிக்க போகிறது என்ற போது தான் தெரியும் என்ற அளவில் இருக்கிறது.
இதில் என்ன ஒரு அழகு என்றால் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்வது கணினி மயமாக்கலை எதிர்த்த இடது சாரிகள். இந்த போராட்டத்தை ஆதரிப்பது பொருளாதார தாரளமயமாக்கலை கொண்டுவந்த காங்கிரஸ் ஆதரவு பெற்ற கட்சி. இந்தியாவில் தேசிய கட்சிகளே இல்லை என்ற அளவில் தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. தேசிய கட்சி என்பது இந்திய அளவில் ஒரு கொள்கை என முடிவெடுத்து அதன்படி செயல்படுவதாகும். முதலில் கொள்கை என்பது இருக்கின்றதா என்று நீங்கள் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள்?
இதில் பாராட்டப்பட வேண்டியவர்கள் : திரு இரத்தன் டாடா அவர்களும், மேற்கு வங்க முதல்வர் திரு புத்ததேவ் பட்டாசார்யா அவர்களும் தான்.
தான் பல நுாறு கோடி ருபாய் செலவில் ஆரம்பித்த தொழிற்சாலையில் வேலைசெய்யும் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்காத போது, போட்ட முதல் என்னாவது, அரசிடமிருந்து மறைமுகமான பாதுகாப்பு கோருதல்( இத்தனைக்கும் அரசு அவர் பக்கம் தான் இருக்கிறது) அல்லது வழக்கம்போல் எதிர்கட்சியை “அனுசரித்து போதல்” என்ற நிலைக்கு போகாமல் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவது என எடுத்து உறுதியான முடிவுக்கு அவரை பாராட்டாமல் இருக்க முடியாது.
அடுத்தது மேற்கு வங்க முதல்வர் இடதுசாரி கட்சியை சார்ந்தவராக இருந்தபோதிலும், டாடா குழுமம் பற்றியும், பந்த் பற்றியும் அவர் தெரிவித்த துணிச்சலான கருத்துகளுக்காக அவரை பாராட்டலாம். இடது சாரிகள் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் தொழிற்பேட்டைகளாகவும், எதிர்கட்சிகளாக இருக்கின்ற மாநிலங்களில் விவசாய நண்பர்களாகவும் இருப்பது முரண்நகை.
நமது தமிழக முதல்வரும் டாடா தொழிற்சாலையை தமிழகத்திற்கு கொண்டுவருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார். டாடா தொழிற்குழுமத்திடம் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் தருவதாக தமிழகத்தை சேர்ந்த ஒரு அலுவலர் கூறியபோது அவர்கள் விழுந்து விழுந்து சிரித்ததாகவும், மேற்கு வங்கத்தில் அவர்களுக்கு நேர்ந்த சோகத்திலிருந்து மீள அவர்களுக்கு இது போன்ற ஜோக்குகள் அவசியம் தேவை எனவும் தெரிவித்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள்(?) தெரிவிக்கின்றன.
பொருளாதாரமும், பலியாடும்
இன்றைக்கு பிஸீனஸ் லைன் (Business Line) செய்தித் தாளில் முதல் பக்கம் வந்திருக்கும் பார்க்ளேஸ் கேப்பிடல் (Barclays Capital) நிறுவனத்தின் அறிக்கையில் இந்திய நிதி அமைச்சர் கூடிய விரைவில் மாற்றப் படலாம் என்ற செய்தி.
பார்க்ளேஸ் நிறுவனம் (Barclays Inc) உலகளாவிய நிதி நிறுவனங்களின் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பார்ட்சூன் 500 (Fortune 500) நிறுவனமாகும். ஆசிய, ஐரோப்பிய கண்டங்களில் இந்நிதி நிறுவனம் ஏகப்பட்ட முதலீடு செய்திருக்கிறது. குறிப்பாக சீனா, இந்தியா. இந்நிலையில், இந்நிறுவனத்திலிருந்து வெளிவந்த அறிக்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு கூடிய விரைவில் புதிய பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தி பணவீக்கத்தை குறைக்க வாய்ப்பிருக்கிறது. புதிய பொருளாதார கொள்கைகளை புதிய நிதி மந்திரி முலமாக செயல்படுத்த வாய்ப்பிருக்கிறது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பணவீக்கம் என்றால் என்ன என்று நமக்கு ஒரளவு தெரிந்தாலும், இந்த ஏறும் விலைவாசிக்கு மத்திய அரசையே முழுவதும் குறைசொல்ல முடியாது. பணவீக்கம், விலைவாசி ஏற்றம் ஆகியவை நம் நாட்டில் மட்டும் ஏறவில்லை. எல்லா நாடுகளிலும் தான் ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால், மற்ற நாடுகள் இதனை எதிர்கொள்ளும் விதமும், நம்நாடு எதிர்கொள்ளும் விதமும் வேறுமாதிரியாக இருக்கின்றது. இவற்றை நீண்டகால நோக்கில் எதிர்கொள்ளும் வகையிலேயே பொருளாதார கொள்கைகள் அமைக்கப்பட வேண்டும். ஒருவேளை, அக்கொள்கைகள் பயனளிக்கும் காலத்தில் தாங்களே ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுவது தாய்நாட்டுக்கு செய்கின்ற துரோகம். அவ்வாறு செயல்படும்போது, கொள்கைகளை அனைத்தும் குறுகிய காலத்தில் பயனடைகின்ற மாதிரி அமைக்கும்போது, நாட்டின் பணப்புழக்கம் முற்றிலும் குறைக்கப்படுகின்றது. பணப்புழக்கமும் இரத்தம் மாதிரி. அது குறைக்கப்படும்போது நாட்டின் தொழிற்துறை முன்னேற்றம் மந்தமாகின்றது.
தற்போது நம் நிதி மந்திரி திரு ப சிதம்பரம் அவர்களை மாற்ற வாய்ப்பு இருக்கின்றது என கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நானும் நம்புகின்றேன். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், நாட்டின் விலைவாசி உயர்வு என்ற பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும்போது, இதற்கு காரணம் காட்ட ஒரு பலியாடு ஒன்றை தற்போதைய மத்திய அரசு தேர்ந்தெடுக்க முயலக்கூடும். மத்திய அரசு வரும் காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது தெரியவிட்டாலும், நமது நிதி மந்திரி மாற்றப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு தமிழர் என்ற வகையில் இல்லாமல், அவரும் நம்மைப்போல ஒரு இந்தியர் என்ற அளவில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
எல்லா கொள்கைகளும் தேர்தல், ஒட்டுகள் என அமைவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சியே ஆகும். ஆனால், அனுசக்தி கொள்கையில் நம்நாட்டு பிரதம மந்திரி எடுத்த உறுதியான செயல்பாடு மிகவும் பாராட்டுதலுக்குறியது. அந்த முடிவினால் நம்நாட்டு வளர்ச்சிக்கு ஆபத்து, ஆபத்தில்லை என இருவேறு கருத்துக்கள் இருவேறு தளங்களில் இயங்கிவந்தாலும் இதன் நன்மை, தீமைகளை இன்னும் ஐந்து வருடங்கள் கழித்தே அறிய இயலும். இவ்வாறு ஐந்து, பத்தாண்டுகள் வரை நீண்டகால நோக்கினையொட்டி திட்டங்கள் தீட்டுவது நம் நாட்டில் இப்போது மிகவும் குறைந்து வருகின்றது. எந்த திட்டங்களை எடுத்தாலும், இதனால் எந்த பகுதி மக்கள் வளமடைகின்றனர், அந்த பகுதியில் நம் கட்சியின் செல்வாக்கு எப்படி, இத்திட்டத்தினால் கட்சி செல்வாக்கு வளருமா இக்கேள்விகள் தான் முக்கியமாக இருக்கின்றன. இராஜீவ்காந்தி கணினி பயன்பாட்டை நம்நாட்டிற்கு எடுத்துவந்தபோது, கணினி பயன்பாட்டால் நாட்டின் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிடும், நாட்டில் உள்ள 20-25-வயதுக்குட்பட்ட வாலிபர்கள் வேலையில்லாமல் நடுத்தெருவில் நிற்க நேரிடும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த காலக்கட்டத்தில் எழுத்தாளர் இரங்கராஜன் (சுஜாதா) போன்றோர் கணினி செயல்பாடு வேலையில்லா திண்டாட்டத்தை பெருக்காது என கூறிய போதும் அக்கருத்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டன. ஏனெனில், நீண்டகால நோக்கில் கருத்துக்களை சொல்லும் நிபுணர்கள் எல்லாம் மக்களுக்கு புரியும் வண்ணம் பேசமாட்டார்கள். அவர்கள் கருத்தும் ஊடகங்களால் திரித்து கூறப்படும். அவர்கள் கருத்துகளும் மென்மையாக கூறப்படும். குரலை ஏற்றி, இறக்கி நாடகபாணியில் கருத்துக்கள் கூற அவர்களால் இயலாது. கணினி பயன்பாட்டைக் கொண்டுவந்ததால் ஏற்பட்ட விளைவுகள் நல்லதா, கெட்டதா என்ன என்பதை தற்சமயம் நாமே பார்த்துப் புரிந்துக் கொள்ளலாம். இந்த நீண்டகால திட்டங்களை நிறைவேற்றும்பொழுது நம்நாட்டில் ஏற்படும் தடங்கல்கள் சொல்லி மாளாது. பாரதீய ஜனதா அரசும் அனுசக்தி சார்பாக சில கொள்கைகளை வகுத்தபோது, எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் அதனை கடுமையாக எதிர்த்தது. இதில் என்ன லாஜீக் என்றே புரியவில்லை. தற்போதைய அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் பேசுகையில், வெங்காயம் விலை என்னாட்சி என்ற கோஷத்தை எழுப்புகின்றார்கள். வெங்காயமும் முக்கியம்தான். நாட்டின் இறையான்மையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது அல்லவா!
இந்தியன் என்று சொல்வதில் நாம் இங்கு பெருமை படலாம். வெளிநாட்டில் வசிக்கும் நம் மக்களும் இந்தியன் என்று சொல்வதில் பெருமைபட வேண்டுமல்லவா!
Recent Comments