Posts filed under ‘காமிக்ஸ்’

காப்டோன் அமெரிக்கா

    காப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரம் நடிக்கின்ற புதிய திரைப்படம் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. யார் இந்த காப்டன் அமெரிக்கா? அவரது பூர்வீகம் என்ன? என்பதை அறிந்து இத்திரைப்படத்தினை பார்த்தால் நன்றாக இரசிக்க முடியும்.

    ஸ்டீவ் ரோஜர் என்பவர் மற்றவர்களுக்கு உதவும் தங்கமான உள்ளமும், சண்டைக்கு பின்வாங்காத தீரமும் உள்ள பூஞ்சை உடம்புள்ள சோப்ளாங்கி. இவரை பற்றி நன்கு அறிந்த ஒரு விஞ்ஞானி அவருக்கு போடாக்ஸ் போல் ஒரு ஊசி போட்டு, கவசப் பெட்டியில் மூடி விடுகிறார்.

   சிறிது நேரத்திற்கு பிறகு அப்பளம் பொறிப்பது போல் ஸ்டீவ் ரோஜர்ஸ் விம்மி புடைத்து வெளி வருகிறார். இதற்கிடையில் விஞ்ஞானியை வில்லனின் கையாட்கள் துப்பாக்கி குண்டுகளால் துளைத்து விடுகிறார்கள். என்னே, விதியின் விந்தை?  அந்த முட்டாள் விஞ்ஞானி அந்த ஊசியை அவனுக்கே போட்டு பார்த்திருக்க வேண்டாமா? முதல் அவென்ஜராகும் பெருமை கிடைத்திருக்கும் அல்லவா? முன்னால் கொஞ்சம் முடி இல்லாத அவென்ஜராக இருந்திருப்பார். அவர் மரித்து விடுகிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் வெறுத்து போகிறார்.

    அமெரிக்க ராணுவம் அவருக்கு அழகிய உடையணிவித்து, காப்டன் அமெரிக்கா என பெயர் சூட்டி,  போர் முனைக்கு போர் வீரர்களை குஷிப்படுத்த அனுப்புகிறார்கள்.

    இவரும் ஆட்டம், பாட்டு என வீரர்களை மஜா படுத்துகிறார். இதற்கிடையில் எதிரிகளிடம் செமையாக உதைபட்டு வரும் ஒரு வீரர், இந்த மசுருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, நீ சண்டைக்கு போனா தெரியும் என உசுப்பேத்த, ஸ்டீவ் ரோஜர் தன் கலக்கல் ஆடையுடன் போரில் குதிக்கிறார்.

    இவருக்கு சண்டை போடவும் வரும் என கண்டுக் கொண்ட அமெரிக்க இராணுவம் இரகசிய பாசறைக்கு அனுப்புகிறது. அங்கே பணிபுரியும் பெண்கள் ஊசியினால் இவருக்கு வேறெந்த பாகங்கள் பெரிதாகி இருக்கின்றன என்பதை அறிய ஆர்வமுடன் இருக்கின்றார்கள். அதில் ஆர்வமில்லாமல் இருக்கும் பெகி கார்ட்டர் என்ற பெண்ணுடன் சினேகம் கொள்கிறார் ஸ்டீவ் ரோஜர்ஸ்.

    வில்லனின் இடத்திற்கு போய் தீவிர சண்டையிடுகையில், வில்லனால் நியூயார்க் நகரத்தினை அழிக்க தானியங்கி விமானம் ஏவப்படுகிறது. அதில் தொற்றிக் கொள்ளும் காப்டன் அமெரிக்கா அதை இலக்கை நோக்கி போகாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்கிறார். அந்தோ பரிதாபம், இவருக்கு போட்ட ஊசி அதற்கான அறிவை இவருக்கு தரவில்லை. மேலும், இவர் தரைப்படையில் இருப்பவர். ஆகாய விமானத்தை ஒட்ட முயற்சிப்பது எப்படி முடியும். இவர் விமானத்தை கடலுக்கடியில் மூழ்கடித்து விடுகிறார்.

    பல்வேறு பத்தாண்டுகளுக்கு பிறகு ஆழ்கடலில் ஆய்வு நடத்தும் ஒரு நீர்மூழ்கி இவர் பனிப்பாறையில் துயில் கொண்டிருப்பதை கண்டறிகிறது. பாவிப்பய, இப்படியா ஒரு மனுஷன் தூங்குவான் என வியப்புடன் இரசிகர்கள் திரையரங்கை விட்டு செல்வதுடன் முதல் பாகம் முடிகிறது.

    தொடர்ந்து அவென்ஜ்ர்ஸ் என்ற திரைப்படத்தில் காப்டன் அமெரிக்காவின் வாழ்க்கை மீண்டும் தொடரப்படுகிறது.

    துயிலில் இருந்து மீண்ட காப்டனுக்கு ஷில்ட் என்ற அமைப்பின் இயக்குநர் ப்யூரி என்பவரின் அறிமுகம் கிட்டுகிறது. ஆண்டுகள் பல ஆயினும், இவர் மெருகு குலையாமல் இருப்பதை பார்த்து வியக்கிறார். காப்டன் அமெரிக்கா தனக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதியம் பாக்கி இருப்பதாகவும், அது கிடைக்க வாய்ப்புள்ளதா என கேட்க, ப்யூரி கடுப்பாகி விடுகிறார். இதனால் இவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே மற்ற அவென்ஜர்களுக்கும் காப்டனுக்கும் உரசல்கள் ஏற்படுகின்றன.

     புதிய வில்லன் வேறு கிரகத்திலிருந்து விலங்குகளை பூமிக்கு வரவழைக்கிறான். (இது எப்படி என விரிவாக தெரிந்துக் கொள்ள இயக்குநர் ராம நாராயணன் இயக்கிய ஆடிவெள்ளி என்ற திரைப்படத்தின் உச்சக் கட்ட காட்சியை பார்க்கவும்.) கடும் போராட்டத்திற்கு பிறகு அவன்ஜர்கள் வில்லனை  வெற்றிக் கொண்டு, உணவகம் சென்று சாப்பிடுகிறார்கள்.  காப்டன் அமெரிக்கா பில்லை கொடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்று இந்த பதிவினை படிக்கும் வாசகர்கள் அறிவார்கள்.

    கடைசிக் காட்சியில், ஸ்டீவ் ரோஜர்ஸ் தன்னந்தனியாக மோட்டார் வாகனத்தில் கடுப்புடன் கிளம்பும்போது, அவருக்கு ஓய்வூதியம் இன்னமும் அமெரிக்க அரசால் சரிவர வழங்கப்படவில்லை என தெரிகிறது.

    இப்பதிவை படித்த பிறகு, இன்று வெளியாகும் காப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர் என்ற திரைப்படத்தினை பார்க்கும்போது உங்களால் சிறப்பாக இரசிக்க முடியும். இத்திரைப்படத்தில் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அது தொடர்பான பதிவினை விரைவில் வெளியிடுகிறேன்.

Advertisements

April 4, 2014 at 5:30 pm 3 comments

நிலவொளியில் ஒரு நரபலி

        தமிழில் வெளிவரும் சித்திரக்கதைகள் மற்றும் அதன் வெளியீட்டாளர்கள் மீது எனது சற்றே தீவிரமான கருத்துகளை வெளியிட்ட வேளையில், தமிழில் சித்திரக் கதைகளானது உரிய கால வரிசையில் வந்ததில்லை, அச்சுத் தாட்களின் தரம் வெகு மலிவாகவும், அச்சுத் தரமும் சொல்லும்படியான நிலையில் இருந்ததில்லை. வருடந்தோறும் சந்தா கட்டி அடுத்த புத்தகம் என்றைக்கு வெளியிடப்படும் என்ற நிலை சந்தாதாரருக்கும் தெரியாமல் இருந்தது.

     கடந்த சில மாதங்களில் இந்நிலை பெரிதும் மாறிவிட்டது. நான் கடந்த ஒராண்டு காலமாக எந்த சித்திரக்கதைகளையும் (தமிழில்) படிக்க வில்லை. புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்ற வகையறாக்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துக் கொண்டிருந்தேன். சற்றே தீவிர வாசிப்புதான். சித்திரக் கதைகள் படிக்க ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டேன் இதற்கிடையில் சமூக ஊடக தளங்களிலும் பெரிய மாற்றம் கடந்த ஒராண்டில் ஏற்பட்டிருந்தது. புதிய சித்திரக்கதை ஆர்வலர்கள் இவற்றில் தங்களின் கருத்துகளை தொடர்ந்து பதிய ஆரம்பித்தனர். அதற்குமுன் சக ஆர்வலர்களை சித்திரக் கதை புத்தகங்களில் வரும் கடிதங்கள் மூலமே அறிய இயன்றது. இத்தளங்கள் மூலமாக புதிய தோழமைகள் எனக்கு கிடைத்தன.

    அவர்களுக்குள் பல பிரிவுகள் உருவாயின. அது இயற்கைதான். என்றாலும், சில கருத்துக்கள் சித்திரக்கதையின் மீதுள்ள ஆர்வம் என்பதன் எல்லையை மீறி கசப்புணர்வை உண்டாக்குவதாக உணர ஆரம்பித்தேன். என் நண்பர்களும் அதில் வசைப்பாட பட்டார்கள், அவர்களது தரப்பை உறுதி செய்ய வீண் விவாதங்களில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் சமூக வலைத் தளங்களில் பார்வையாளனாக பின்வாங்கி பின்னர் எப்போதாவது செல்லும் பயணியாக மாறினேன்.

     கடந்த சில மாதங்களில் இந்நிலை மாறி, சித்திரக் கதை பதிப்பகம் புதிய வெளியீடுகளை சந்தா தாரர்களே திணறும் வண்ணம் வெளியிட ஆரம்பித்தார்கள். அச்சுத் தரமும், தாட்களும் தரமானவைகளாக அமைந்திருந்தன. இப்போது ஊடக தளங்களில் மொழி பெயர்ப்பு குறித்து புதிய விவாதங்கள் எழ ஆரம்பித்திருந்தன. படிக்காத சித்திரக் கதைகளை பற்றிய என் கருத்தினை எவ்வாறு பதிவது? என நான் விலகியே இருந்தேன். அதனால் எனக்கு லாபமோ அவர்களுக்கு நஷ்டமோ இல்லைதான்.

     நேற்றைய தினம் என் நண்பரிடமிருந்து கடந்த ஒராண்டில் வந்த அனைத்து இதழ்களையும் வாங்கி, படிக்க ஆரம்பித்தேன். காலவரிசையின்றி கிடைத்த புத்தகத்தில் ஒன்று என தேர்ந்தெடுத்தேன். டெக்ஸ் வில்லரின் நிலவொளியில் ஒரு நரபலி என்ற சித்திரக் கதையினை படித்து முடித்தேன்.

      டெக்ஸ் வில்லரின் சித்திரக் கதைகள் இலக்கியம் என கருத இயலாது. அவற்றில் ஆன்ம தேடலான உரையாடல்களோ, சிறப்பான சித்திரங்களோ. இருந்ததில்லை. டமால்களும் டூமில்களும்தான். சிறு வயதில் சித்திரக் கதைகளின் (தமிழில்) மூலமாகதான் புதிய வாழ்க்கை முறைகளை, நிலங்களை, மக்களை, கண்டறிந்தேன். அப்போது ஒரு சாகசத்தினை படிக்கும்போது ஏற்பட்ட மன எழுச்சி பெரும்பாலான ஆர்வலர்களிடத்தில் தற்சமயம் இல்லை என உணர முடிகிறது. திரைப்படங்களில் உருவான தொழிற்நுட்பம் பழைய சாகச சித்திரக் கதைகளின் மீதுள்ள ஆர்வத்தினை புறம்தள்ளி விட்டதென்றே நினைக்கிறேன்.

    The Thirteenth Warrior திரைப்படம், Eaters of the Dead  என்ற மைக்கேல் கிரைட்டனின் நாவலை ஒத்து வெளிவிந்த திரைப்படம். இச்சித்திரக் கதையும் அது போன்ற ஒரு வேட்டையாடும் இயல்பை தீவிரமாக கொள்ளும் ஒரு மக்கள் இனத்தை பற்றிய கதை. டெக்ஸ் குழுவினர் அதனை தடுப்பது எவ்வாறு என்பதுதான் கதை.

       இச்சித்திரக் கதையின் மொழி பெயர்ப்பில், சித்திரங்களில் சில தடுமாற்றங்கள் இருக்க செய்கின்றன இதை விட சிறப்பாக சிலர் மொழிபெயர்க்க இயலும், அவர்கள்  மொழி பெயர்த்த சித்திரக் கதைகள் மிக சிறப்பாக வந்திருக்கினறன  இந்த பதிப்பத்தால் அவ்வாறு கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் வலைத் தளங்களில் சற்றே காட்டமாக முன் வைக்கப்படுவதை பார்த்திருக்கிறேன்.

     சில மாதங்களுக்கு முன்பு சித்திரக் கதைகள் வெளிவரும் கால நேரமோ, பதிப்பகம் மற்ற வாசகர்களிடம் தற்சமயம் செய்யுமளவு கலந்துரையாடல் செய்ததாகவும்  எனக்கு நினைவு இல்லை. பெரிய மாற்றம் அவர்களிடத்தில் வந்துள்ளது. சக ஆர்வலர்களும் புதிய சித்திரக் கதைகள், நாயகர்கள், சித்திரங்கள், புதிய களன்கள்  என சித்திரக் கதைகளில் வாசிப்பை நீட்டித்த வண்ணம் செல்கிறார்கள்.

     சில கருத்து பரிமாற்றங்களில் மெல்லிய வெறுப்புணர்ச்சி ஊடாடுவதை நான் பார்க்கிறேன். விமர்சனங்களில் வெறுப்பு கலந்தால் பாதிப்பு இரு தரப்புக்கும்தான். ஒரு வாசகனாக அதை தவறென என்னால் சுட்டிக்காட்ட இயலும். இதன்மூலம் பதிப்பகம் வெளியிடும் அனைத்து வெளியீடுகளுக்கும் தரச் சான்று அளிப்பதாக அர்த்தம் இல்லை. கடந்த சில மாதங்களில் பெரிய மாற்றங்களை அவர்கள் செய்துள்ளார்கள். மொழி பெயர்ப்பு தரத்திலும் அதை வரும் காலத்தில் எதிர்பார்க்கலாம். குறைந்தபட்சம் அந்த அவகாசத்தினை அவர்களுக்கு கொடுத்தலே நியாயம் என படுகிறது.  அது தொடர்பாக சீரிய விமர்சனங்கள் தொடர்ந்து வர வேண்டும்.

      நீண்ட நாட்களுக்கு பின்பாக படித்த சித்திரக் கதையினாலயா என்று தெரியவில்லை. சிறிய வயதில் கௌபாய் சாகசக் கதைகளை படிக்கும் போது ஏற்பட்ட மன எழுச்சியினை  இன்றும் உணர்தேன். சாகசங்களை விரும்பும் ஒரு சிறுவன் என்னில் இன்னும் இருக்கிறான். ஒருவேளை சித்திரக் கதைகளை படிக்க அந்த மனநிலைதான் வேண்டுமா?

February 22, 2014 at 12:12 am 2 comments

பெயரிடப்படாத ஒரு நாவலிலிருந்து

என் பெயர் முக்கியமல்ல. நான் அரசு துறையில் வேலை செய்கிறேன்.அன்றைய தினம் வழக்கம்போல, அலுவலகத்திற்கு தாமதமாக வந்து, என் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாள் படிக்க துவங்கினேன்.

இருபது நிமிடங்களுக்கு பிறகு, என் இருக்கையின் அருகே இரண்டு பேர் வந்தனர். அவர்களை கண்டுக் கொள்ளாமல் நான் வேலையில் கவனம் செலுத்தினேன்.

சார், எனக்கு ஸ்டூடன்ட் லோன் வேண்டும். அப்ளிகேஷன் எடுத்து வந்திருக்கிறேன்.

என் தலையில் எச்சரிக்கை மணி பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், நான் வேலை செய்வது வங்கியில் அல்ல.

அதற்குள், வந்த இருவரும் சட்டையை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் இருந்த முகமூடியை போட்டு கத்தியை எடுத்துக் கொண்டனர்.

நின்ஜாக்கள்!

அய்! சட்டவோ!

என்ற கூக்குரலுடன் என்னை தாக்க ஆரம்பித்தனர்.

என் பொது வாழ்க்கைச் சூழலில், என்னுடைய கடந்த காலம் குறுக்கிடுகையில் நின்ஜாக்கள் வருவதை தவிர்க்க முடியாதுதான்.

டைப்பிஸ்ட் கற்பகம் அய்யோவென்ற கூக்குரலுடன் பதறி ஒடினாள். ஒடுகையில், தன்னுடைய கைப்பையையும், டிபன் பாக்சையும் எடுத்துக் கொண்டே ஒடினாள். அநேகமாக, போத்திக்கு போய்விட்டு, வீட்டிற்கு போய்விடுவாள். இன்றைக்கு திரும்பி வரமாட்டாள். சில முக்கிய அலுவலக ஆவணங்களை அவள் எனக்கு தட்டச்சு செய்து தர வேண்டும்.

கோபம் உடனடியாக சக்தியை கொடுக்கும். எனவே, நின்ஜாக்கள் என் அக்காவை பற்றி ஜப்பானிய மொழியில் தவறாக பேசிகிறார்கள் என எண்ணி, கோபமடைந்து, எதிர் தாக்குதலில் ஈடுபட்டேன்.

என்னுடைய சூப்ரவைசர் பதறி என்ன நடக்கிறது என வினவ, பக்கத்து சீட் சுப்ரமணி

சார், இவர் பிரைவேட் பேங்கல கடன் வாங்கி ட்யூ கட்டாம இருந்திருப்பார். அதான் ஆள அனுப்பிச்சாட்டங்க. யூனிபார்ம்லாம் இப்போ இவங்களுக்கு கொடுக்கிறாங்க

என்றார்.

இதற்கிடையில், தாக்குதல் தீவிரமடைந்து நான் பல இருக்கைகளுக்கிடையே புகுந்து ஓடி, தடுக்க வேண்டியதாகிவிட்டது.

சூப்ரவைசர் அதற்குள்

ஏப்பா, சண்டையை நிறுத்துங்க, பேசி தீத்துக்கலாம். இல்ல உன் இன்க்ரிமெண்ட கட் பண்ணுவேன். சுப்ரமணி, அவன புடிப்பா.

சுப்ரமணி தன் கைபேசியில் சண்டையை ஆர்வமாக படமெடுத்துக் கொண்டிருந்தான்.

நின்ஜாக்களை வெல்லும் தருணத்தில், எனக்கு சகோதரிகள் யாரும் இல்லை என்ற உண்மை உறைக்க, கோபம் வடிய ஆரம்பித்தது. இந்த இடைவெளியில் நின்ஜாக்கள் தப்பி ஒடி விட்டனர்.

அலுவலகமே என்னை திக்பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த காலத்தை நான் மறந்தாலும், அது என்னை மறக்கவில்லை.

ஒரு பரிச்சயமான ஒலி தொலைவில் கேட்டது. அது ஏவுகணை ஏவப்படும் ஒலி. எப்படி மறப்பேன் அதனை?

என் பைபையும், டிபன் பாக்சையும் எடுத்துக் கொண்டு, அலுவலகத்தை விட்டு உடன் வெளியேறினேன்.

==========================================================

பெயரிடப்படாத என் நாவலிலிருந்து ஒரு அத்தியாயம். வாய்ப்பும், வளமும் கிடைத்தால் விரைவில் இதனை பூர்த்தி செய்வேன்.

October 21, 2012 at 10:41 am 3 comments

கோப்ரா தீவில் கோயாவி – துவக்கம் சீன ஏவுகணை

மலைகள் சூழ்ந்த அந்த சாலையில் ஒரு கார் வெகு வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.  காரில் அமர்ந்திருந்த கோடீஸ்வரர் பொன்னம்பலத்தின் மனமோ இயற்கை எழிலை இரசிக்க இயலாமல் எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தது.

கார் மரங்களர்டந்த பங்களாவில் போய் நின்றது.  ட்ரைவர் நாச்சி முத்து கதவை திறக்க, கோபத்துடன் உள்ளே நுழைந்தார் பொன்னம்பலம்.

சரளா, ஏ,சரளா”, என கூவிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

“அத்தான், வந்து விட்டீர்களா?”, என 25-வயது நாரீமணி ஓடி வந்தாள். அவளை கண்டதும், பொன்னம்பலத்தின் கோபம் எல்லை மீறியது.

பசப்பாதே, என் அனுமதி இல்லாமல் என் பெட்டகத்திற்கு சென்று எனக்கு சொந்தமான பொருளை எப்படியடி எடுப்பாய்” என இரைந்தார்.

“நாதா, அனுதினமும் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் என் மீதா சந்தேகப்படுகிறீர்கள்?”

“ச்சீ, சாகச வார்த்தைகள் பேசி என் மனதை மாற்ற முயலாதே. நன்றாக கேட்டுக் கொள்.  நாளைக்குள் எனக்கு அது திரும்ப வேண்டும்.”

இந்த அபலை மீது இப்படியொரு தீஞ்சொற்களை உதிர்க்க எப்படி அத்தான் உங்களுக்கு மனம் வந்தது” என்றவாறு சரளா கேவினாள்.

“நாளை பகல் பன்னிரெண்டு மணி வரை உனக்கு கெடு. அப்புறம் நான் மனிதனாக இருக்க மாட்டேன். டேய், நாச்சி, வண்டிய எடுடா” என சொல்லி பொன்னம்பலம் வெளியேறினார்.

கார் மலைகள் சூழ்ந்த சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.

காரில் அமர்ந்திருந்த பொன்னம்பலம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது, ட்ரைவர் நாச்சிமுத்து ஆ வென அலறினான்.

“நாச்சி, என்னாச்சிடா”

நாச்சிமுத்து அழகன் அல்ல, இருப்பினும் பயத்தினால் அவன் முகம் விகாரமாக இருந்தது.

“முதலாளி, அங்கே பாருங்கள்”, என அலறினான்.

Missile

பொன்னம்பலத்தின் காரை நோக்கி ஒரு ஏவுகணை வந்துக் கொண்டிருந்தது.  அது ஒரு சீன ஏவுகணை. அதன் முனையில் “Made In Taiwan” என்ற வாசகம் இருந்தது.

“நாச்சி, வண்டிய திருப்புடே ”

அதற்குள் ஏவுகணை அந்த காரின் மீது மோதியது. 

டமால் !

April 4, 2012 at 11:18 pm 2 comments

Smith & Wesson – மேற்கில் இன்னும் சில கோமாளிகள்

       Disclaimer:

       ஒரு வருடத்தில் அனைத்து நாட்களிலும் சந்தையில் நான் வணிகம் செய்வதில்லை.  வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் தொடர்ந்து இடைவெளி விட்டு விடுவேன். அப்போது சந்தையை பற்றி சிந்திக்காமல் (சந்தை எவ்வாறு ஏறி இறங்கினாலும்) பிடித்த விஷயங்களை செய்வதென சில வருடங்களாகவே செய்து வருகிறேன்.  நம் உள்ளுணர்வுகளை வலுவாக்க இந்த இடைவெளி உதவும் என்பது என் நம்பிக்கை.  இப்ப உதாரணத்துக்கு ஒரு பொண்ணு பின்னாலயே போறோம், கொஞ்ச நாள் ……..வேண்டாம், இது விபரீத எடுத்துக் காட்டாக மாறிவிடும்…. இப்ப மௌன விரதம் ….. சரி, வரல்ல விட்ருவோம் இதை. 

         இத்தகைய காலகட்டங்களில் சந்தையை பற்றிய செய்தியல்லாமால் நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்..  (எப்பதான் தெரிஞ்சத எழுதுவானோ) வாழ்க்கை என்பது பங்கு சந்தை மட்டும் தானா என்ன?

—————————————————————————————————————-

           அமெரிக்க தெற்கு கடைசியில் பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் முக்கிய தொழிலாக கால்நடை பராமரித்தலே இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தது.  பாலைவனத்தையும், செவ்விந்திய குடியிருப்புகளை சுற்றிலும் அமைந்துள்ள வெள்ளையரின் குடியிருப்புகளில் கால்நடையே முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கியது.  அந்த கால்நடைகளை பராமரிக்க பண்ணை முதலாளிகளால் பணியில் அமர்த்தப்பட்டவர்களே கௌபாய்கள்.

        கால்நடைகளை தாக்கவரும் விலங்கினங்கள்,  களவாடவரும் செவ்விந்தியர்கள், உள்நாட்டு எத்தர்கள் இதுபோன்ற அபாயங்களிலிருந்து அவைகளை காப்பதே இவர்களின் பணி.  இவர்களின் தோற்றம் எப்படியிருக்குமென்றால், முரட்டு அழுக்கான  துணிகள், வெயிலிருந்து பாதுகாக்க தோலினாலான தொப்பி (இவற்றை சமயத்தில் நீரரருந்தும் பாத்திரமாக உபயோகப்படுத்துண்டு), No Sunglass.  குளித்தல், பல்தேய்த்தல் போன்ற வழக்கங்கள் எல்லாம் பொதுவாக அவர்களிடம் இராது. கால்நடைகளுக்கும், அவர்களுக்கும் எவ்வித வாசனை வித்தியாசங்களும் இருக்காது.  கடமை, கண்ணியம், கட்டுபாடெல்லாம் அவர்களிடம் அவ்வளவாக இராது.  தங்கம், டாலர் இவைகளே அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள்.  சிலர் சண்டியர்-கம்-நாடோடிகளாகவும் சுற்றுவார்கள்.

          இப்படிப்பட்ட கௌபாய்களை மையமாக வைத்து இத்தாலியிருந்து உலகப் போருக்கு முன்னரே சித்திரத் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டன.  அதிலுள்ள கௌபாய்களில் சுத்தமாகவும், மிகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் கதாநாயகர்களாகப்பட்டனர்.  தொடர்கள் இத்தாலியில் பெரும் வெற்றியடைந்தன.  அமெரிக்காவை தவிர  மற்ற நாடுகளில் கெளபாய்கள் ஒரு கதாநாயக அம்சத்துடன் பார்க்கப்பட்டனர்.  நாளைய தினத்தை  பற்றிய கவலை இல்லாத வாழ்க்கை, இந்த பண்ணை இல்லாவிட்டால் அடுத்த பண்ணை, வேலைக்கு நேர்க்காணல், குரூப் டிஸ்கஷன்  போன்றவை இல்லாதது இந்த அம்சங்களுடன் இருந்த அவர்களை உலகப்போருக்கு பிறகு வேலைக்கு கஷ்டப்பட்ட மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. கௌபாய்கள் சித்திரத் தொடர்கள் காவியமாக்கப்பட்டன.  இவற்றில் புகழ் பெற்ற கதாநாயர்கள் டெக்ஸ் வில்லர், கேப்டன் ப்ளுபெர்ரி.

      இதனை கிண்டல் செய்யும் வகையில் மேலும் சில சித்திரத் தொடர்கள் உருவாக்கப்பட்டன.  பொதுவாக இவையனைத்தும் பெல்ஜியம் மற்றும் ப்ரான்ஸ்காரர்களால் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இத்தொடர்களும் பெரும் வெற்றியடைந்தன.  அதில் மிகவும் புகழ் பெற்றவர் லக்கி லுக்.

     இந்த வரிசையில் நானும் ஒரு புதிய சித்திரத் தொடர் ஒன்றினை படித்தேன்.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  சித்திரத் தொடரின் பெயர் ஸ்மித் அன்ட் வெஸன் (Smith & Wesson). Soleil பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்த சித்திரத் தொடரானது கௌபாய்களை கேலி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட தொடர்.  இரு முக்கிய பாத்திரங்கள்.  ஸ்மித் மற்றும் அவருடைய அடிப்பொடி வெஸன்.  ஸ்மித் அன்ட் வெஸன் என்பது அமெரிக்க பிரபல துப்பாக்கி ப்ராண்ட் என்பது உபரி தகவல்.

scan0001

             இது போன்ற ஆல்பங்களை வரிசையாக  படிக்க வேண்டுமென்பதில்லை.  எந்த வரிசையில் வேண்டுமானாலும் படிக்கலாம்.  கதையானது ஒரு ஆல்பத்திலேயே முடிந்து விடும்.  ஒவ்வொரு ஆல்பமானது சில நகைச்சுவை சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் அதிகபட்சம் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்து விடும்.  அதாவது பனிரெண்டு படங்களுக்குள் உங்கள் உதட்டில் புன்னகையை வரவைக்கும் முயற்சி.  அவற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். 

          இது இலகுவான வேலைதானே என நானும் ஆரம்பத்தில் நினைத்தேன்.  இரு பக்கங்களை மொழி பெயர்க்கவே ஏகப்பட்ட மணித்துளிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.  அந்த நேரத்தில்  ஒரு குழுமத்தின் கணக்கு வழக்குகளை பார்த்து தேறுமா, தேறாதா என சொல்லி விடலாம். ஆனாலும் இந்த அனுபவம் இனிதாக இருந்தது.

       இரு பக்கங்களை என்னால் முடிந்தவரை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.  உங்களுக்கு அவற்றில் புன்னகை வரவில்லையென்றால் அதை மொழிபெயர்த்த என் குறை தானே தவிர அவர்களின் தவறு இல்லை.   இது போன்ற சித்திர தொடர்கள் இந்தியாவிலும் தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனையாகின்றன.  விலை சற்று அதிகம்தான்.  தமிழ்படத்தின் ப்ளாக் டிக்கெட்டுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக அதிகமில்லை என சொல்லலாம்.

scan0001

 

 

 

scan0002

 

    பின்குறிப்பு  சித்திரத் தொடர்கள் பற்றி எழுதுவதில் எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கின்றார்கள்.  அவர்களின் தரம். உழைப்பு மற்றும் ஸ்கேன்கள் போன்றவற்றிற்கு முன்னே இது மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது என்பது உண்மை.  Please don’t say anything about my scans.  I know it sucks!

August 9, 2009 at 12:45 am 3 comments

இந்தியாவில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை?

      உலக அளவில் புகழ் பெற்ற சித்திர கதை கதாநாயகர்களை பற்றி எல்லோரும் அறிந்திருப்போம்.  லுயி கிரான்டேல், ப்ரூஸ் வாய்னே, பீட்டர் பார்க்கர் என பல வெளிநாட்டு பெயர்கள்.  விஷ்வா, ரபீக், வெங்கடேஸ்வரன் என்ற பெயரில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை என யாராவது யோசித்திருப்போமா? 

       இந்த வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்கள் யாருமே இந்தியாவில் சாகசங்கள் புரிந்ததில்லை. இந்தியாவை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். அவ்வாறு சாகசங்கள் புரிய வந்தவர்களும் துண்டை காணோம் துணிய காணோம் என ஓடிவிட்டனர்.      அவர்களை இந்தியாவில் சாகசம் புரிய விடாமல் தடுத்த சந்தர்ப்பங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.                                                       

சூப்பர் மேன்
சூப்பர் மேன்

முதலில் நம் மனம் கவர்ந்த சூப்பர் மேன்.

        சென்னை மெரினா கடற்கரையின் அருகே உள்ள ஒரு கடையில் ஆட்டுக்கால் பாயாவை சூப்பிக் கொண்டு இருக்கிறார் சூப்பர் மேன்.  அப்போது அவரின் அசாதாராணமான கேட்கும் திறனில் கீழ்க்கண்ட உரையாடல் கேட்கிறது.
   ”  Control Tower, This is Air India Flight IC 420 Calling,…..”
  
  (   எளிமை கருதி கீழ்க்கண்ட உரையாடல் தமிழாக்கம் செய்யப்படுகிறது.)
 
‘என்னாய்யா’
   
‘என்னோட பிளேன்ல ஒரு என்ஜின் ஆஃப் ஆயிடுச்சி.’
    
‘அப்ப அத ஆன் பண்ண வேண்டியதுதானே முண்டம்’
    
‘முடியலை.  என்ஜின் எரிஞ்சிக் கிட்டு இருக்கு. ரெண்டாவது என்ஜினுக்கு நெருப்பு பரவிடுச்சி.’
   
‘அப்படியா (உணவு மெல்லும் சத்தம்)  இப்ப எங்க இருக்கே.’
    
’நான் நங்கநல்லுர் மேலே இருக்கேன்.’
    
‘ஐய்யய்யோ, நான் அங்கதான் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கேன்.  நீ முதல்ல மெரினா கடல் பக்கம் போயிடு.’
   
‘சரி போயிட்டேன். இப்ப என்ன பண்றது?’
   
‘என் டூயிட்டி டைம் முடிஞ்சிடுச்சி. குமார் தான் அடுத்து வருவான்.  இன்னிக்கு என்னவோ ஒன் அவர் பர்மிஷன்னு சொன்னான். அப்ப நான் கிளம்புறேன்.  யாராவது உனக்கு பேச்சி துணைக்கு வருவாங்க.’
    
‘யோவ், என்னதுய்யா இது,  Mayday, Mayday’
    
‘யோவ் மாங்காய், இது ஜனவரி மாசம்ய்யா.  மே டேக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு.’
    
         இந்த உரையாடலை கேட்ட சூப்பர் மேனின் சூப்பர் ப்ரெயின் அந்த விமானத்திற்கு ஆபத்து என பல சிக்கலான கணக்குகளை போட்டு கண்டுபிடித்தது.  உடனே தன் ஆடைகளை மாற்ற படகின் பின்புறம் சென்றார்.  பின்னர் அசடு வழிந்துக் கொண்டே, ‘சாரிங்க, நீங்க இருக்கறத நான் கவனிக்கல’ என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்து புதருக்கு சென்றார்.  அங்கும் அதே கதைதான்.
 
       வேறுவழியில்லாமல் கட்டண கழிப்பிடத்திற்கு சென்று, அதிகப்படியான கட்டணம் செலுத்தி, கழிப்பறை வாசலில் உடைமாற்றுவதற்காக நின்றுக் கொண்டிருக்கிறார். 
   
        உங்களில் யாராவது கட்டண கழிப்பிடத்தில் கழிப்பறை திறப்பதற்காக நிற்கையில் உங்கள் அருகில் நிற்பவர்களில் யாரேனும் ஒருவர் சூப்பர் மேனாக கூட இருக்கலாம்.
     
 
batman        அடுத்தது பேட்மேன்.  இரவு நேரம்.  அய்யம்பாளையம் என்னும் கிராமத்தில் ஒரு கூக்குரல் கேட்கிறது. உடனே அவ்விடத்திற்கு பாய்ந்து செல்கிறார் இரவின் பாதுகாவலர், நீதியின் செல்வர் பேட்மேன். 
   
    அங்கு அவர் கண்டது ஒரு வயதான பெரியவர் வெத்திலை பெட்டியுடன் உட்கார்ந்து கொண்டிருப்பதை.
    
   ‘வயதில் மூத்தவரே, இங்கு ஒரு அபல குரல் எழுந்ததே, யார் அது?’
   
 ‘யாரு அது, எசக்கி மவனா?’
         
  ‘இல்லை.  நான் பேட்மேன்’
      
  ‘பத்மநாபனா?’
    
  ‘ நான் பேட்மேன்யா. பேட்மேன்.’
    
   ‘சரியா கேக்கலை.  திருப்பி சொல்லுடா அம்பி’
    
   ‘கட்டையில போறவனே,  நான்தாண்டா பேட்மேன்.  இங்க எந்த நாயோ கத்திச்சின்னு ஓடிவந்து உன்னோட எழவெடுத்துக் கிட்டு இருக்கேன்.  யார்ரா அது?’
     
 ‘பாக்கு நசுக்கும்போது எங்கையில உரல் பட்டுடுச்சி.  அதான் கத்தினேன்.’
    
     கொலைவெறியுடன் பேட்மேன் கோதம் சிட்டிக்கே திரும்பி செல்கிறார்.
     
steelclaw
நம் அனைவரின் மனங்கவர்ந்த இரும்புகை மாயாவி. 
       
          ஒரு வெளிநாட்டு சதியின் ஆணிவேரை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள சாத்தான் குளத்திற்கு நம் இரும்புகை மாயாவி வருகிறார்.  அவரின் துப்பறியும் நோக்கத்தை எதிரி கண்டறிந்து விடுகிறான்.  அவரை இருபது பேர் கொலைவெறியுடன் லுங்கிக் கட்டிக் கொண்டு துரத்துகிறார்கள்.  அவர்களிடம் தப்பி ஒடும் மாயாவி சற்று தொலைவில் ஒரு மின்சார ட்ரான்பார்மரை பார்க்கிறார்.  அவரின் இதழில் புன்முறுவல் பூக்கிறது.
     
       சூப்பர் ஹீரோக்களின் குல வழக்கப்படி மின்சார ட்ரான்பார்மரின் அருகே நின்றுக் கொண்ட மாயாவி கீழ்க்கண்டவாறு பஞ்ச் டயலாக் பேசுகிறார்.
     
     ‘சாத்தான் குளத்தில் சாகசம் புரியவந்த என்னை சாகடிக்க பார்க்கும் சண்டாளர்களே,  இரும்புகை மாயாவியிடமா குறும்பு செய்கிறீர்கள்?’
      
        ஆனால் அவர் இருப்பது தமிழ்நாடு. அவரின் பஞ்ச் டயலாக் முடிந்தவுடன் மின் வெட்டு ஆரம்பமானது.  அவர் லுங்கிவாலாக்களால் சிதைக்கப்படும் முன் பேசிய கடைசி டயலாக்.
      
      ‘அடங்கொக்க மக்கா’
      
hulk
    அடுத்து கோபம் வந்தால் ஒரு சுற்று பெருத்து விடும்  ஹல்க். 
    
     சென்னை, தி நகரில் உள்ள இரங்கநாதன் தெருவில் ஹல்க் நடந்துக் கொண்டிருக்கிறார்.  எதிரே வந்த ஒருவர் இடித்தவுடன் கோபம் கொண்டு ஹல்க் பெருக்கிறார்.
    
      அப்போது அவர் அருகில் இருந்த 60-வயது பெண் கடுப்பாகி, ‘டேய் நாற கம்னாட்டி,  எருமை மாதிரி இருந்துக்கீனு ஒரு வயது பொண்ணை இடிக்கிறேயே, அறிவு கீதா?’ என கேட்டார்.
      
      அதற்கு ஹல்க், கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘தாய்க்குலமே, நான் ஹல்க்.  என்னை கோபப்படுத்தி விட்டார்கள்.  நான் என்ன செய்வது?’ என வினவினார்.
     
      ‘பேர பாரு, அல்க் சில்க்னு.  டேய் எருமைக்கடா, போய் ஒன் டவுசர ஒழுங்கா போட்டுகினு வா.’
     
    ஹல்க் வேதனையுடன் சென்னை மீனம்பாக்கம் சென்று அமெரிக்காவிற்கு டிக்கெட் வாங்க செல்கிறார்.
     
      இன்னும் பல சூப்பர் ஹீரோக்கள் ஏன் இந்தியாவிற்கு வரவில்லை என்பதை ஆராய்ந்து வெளியிடுவேன் என்பதை மட்டும் தற்சமயம் சொல்லிக்கொள்கிறேன்.

January 23, 2009 at 8:58 pm 19 comments

சித்திரங்களின் இரசிகன் II – மை நேம் இஸ் பில்லா

        நான் மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில் சூப்பர்  ஸ்டார் இரஜினி காந்தின் பில்லா படம் வெளியாகியது.  மிகுந்த பரபரப்பை உருவாக்கிய படம்.  என் வகுப்பில் படிக்கும் அனைவரும்  அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற பரபரப்பில் இருந்தோம். 

         ஆறாவது படிக்கும் ஒரு அண்ணன் எங்கள் வகுப்பிற்கு ஒருநாள் தான் அந்த படத்தை பார்த்து விட்டதாக கூறியபோது,  ஒலிம்பிக் போட்டியில் ஒரு டஜன் தங்கங்களை வாங்கி வந்த ஒரு சிங்கத்தை பார்ப்பது போல அவரை பார்த்து வியந்து போனோம்.  படத்தின் கதையை கூற அவர் மிகவும் பிகு பண்ணினார்.  அவர் சில காட்சிகளை பற்றி பட்டும் படாமலும் கூற ஆரம்பித்தார்.

‘இரசினி துப்பாக்கியால பட்டுபட்டுன்னு நுாறு பேரை சுடுவார் தெரியுமா?’ ஒவ்வொரு காட்சியை விவரிக்கும் போதும் தெரியுமா என்ற கேள்வியுடனேயே முடித்தார்.

‘துப்பாக்கியால நுாறு பேர ஒரு தடவையில சுட முடியுமா?’  இந்த கேள்வியை கேட்டது நான்.

‘அப்ப முடியாதுன்னு சொல்றீயா?’  என ஒருவித தன்னம்பிக்கையுடன் கேட்டார்.  உலகம் உருண்டை என்று சொன்னபோது கலீலியோவை இந்த உலகம் எப்படி பார்த்ததோ அதேபோல் வகுப்பே என்னை ஒருவித வெறியில் பார்த்தது.

‘பொதுவா முடியாது தான்.  ஆனா இரஜினியால முடியும்’ என சொல்லி சமாதான புறாவானேன்.

      அந்த அண்ணன் என்னை முறைத்துவிட்டு மேலும் சில காட்சிகளை விவரிக்க தொடங்கினார்.  அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்களுக்கு அதிகரித்தது.  பொதுவாக இரஜினியை நாங்கள் அப்போது ஒருவித சூப்பர் மேன் போலவே பார்த்துக் கொண்டிருந்தோம்.  படத்திலும் அம்மாதிரியான சித்தரிப்புகள் தான் வரும்.  பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அண்ணன்களும் அதே போல் நம்பினர். அப்போது மறு துருவமாக இருந்த கமல் ஹாசனை யாருக்கும் அவ்வளவாக பிடிக்காது.  காரணங்கள் : அவர் படங்களில் இருபத்தைந்து அல்லது முப்பது ஆட்களையே அடிப்பார்.  துப்பாக்கியை சரியாக கையாள தெரியாது.  முக்கிய காரணம் அவர் படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நடந்து கொள்ளும் முறை எங்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. 

       மாணவர்களுக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்ற ஒரு தவறான கருத்து தற்போது நிலவுகிறது.  ஆனால் பில்லா படத்தை பார்க்க வேண்டுமென்பதற்காக அப்போதே நாங்கள் போலி வாக்குறுதிகளை கொடுக்க ஆரம்பித்தோம்.  எல்லோரும் வீட்டில் காலாண்டு தேர்வில் முதல் ரேங்க் வாங்குவதாக வாக்குறுதி அளித்தோம்.  சிலர் வீட்டில் நம்பினார்கள்.  சிலர் வீட்டில் அது மிகுந்த நகைச்சுவை அளிக்கும் வாக்குறுதியாக நம்பப்பட்டது.  எது எப்படியோ, எல்லோரும் ஒரு வாரக்கடைசியில் பில்லா பார்த்து விட்டோம்.

           திங்கள் கிழமை பள்ளி திறப்பதை எண்ணி வாழ்க்கையிலே முதன்முதலாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம்.  பில்லா படம் எங்கள் வாழ்க்கை முறைகளை வெகுவாக மாற்றியது.  நாங்களும் பில்லாவானோம்.  அப்போது வழக்கத்தில் இருந்த சில பிரசித்தி பெற்ற வாசகங்கள் :

‘பில்லா வீட்டுக் கணக்கு செய்யமாட்டான்.’

‘பில்லாவுக்கு உன் இரப்பரை தரியா? உனக்கு ஏற்கெனவே ஒரு பென்சில் குடுத்துருக்கேன். மறந்துறாத’

‘பில்லா டியுசனுக்கு போகமாட்டான்.’

 ‘பில்லாவுக்கு சரக்கு எடுத்துட்டு வந்திருக்கீயா?’  இந்த கேள்வி எங்கள் பள்ளி வாசலில் நாகப்பழம், நெல்லிக்காய் விற்கும் ஒரு தாத்தாவிடம் கேட்கப்படும் கேள்வி.  அவரும் எங்களை பில்லா என மதித்து சரக்கு வந்துருக்கு பில்லா என ஒவ்வொருவரிடம் சொல்லி தன் வருமானத்தை பெருக்கினார்.

        சில எட்டாம் வகுப்பு மாணவர்களால் சென்சார் செய்யப்படும் அளவில் சில வாக்கியங்கள் புழங்கப்பட்டன.  பில்லாவின் புகழை தாங்க இயலாத எங்கள் வகுப்பு ஆசிரியர் ஒருநாள் பொங்கி எழுந்து எல்லோருக்கும் வில்லனானார். அப்போது சொல்லப்பட்ட  ஒரே பிரசித்தி பெற்ற வாக்கியம் :

 ‘நான் பில்லா இல்ல, இல்ல, இல்ல  சார், சார், சார்  அடிக்காதீங்க……….அம்மா’

       பொதுவாக சிறுவர்களுக்கு சூப்பர் ஹீரோக்களைதான் பிடிக்கும்.   கமல் ஹாசன் எங்கள் மத்தியில் அப்போது இரசிக்கப்படாததற்கு காரணமும் அதுவே.   வெகு சில இயக்குநர்கள் இயக்கத்தில் மட்டுமே நடித்ததால், எம் ஜி ஆரால்  சூப்பர் ஹீரோ ஆக முடியவில்லை.  எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் அது போன்று முதன் முதலில் அறிமுகம் ஆனவர் இரஜினிகாந்த் மட்டுமே.  அவர் குணசித்திர வேடங்களில் நடித்த படங்கள் எல்லாமே ஏறக்குறைய திரையரங்கிலிருந்து திருப்பியனுப்பப்பட்டன.

        சிவாஜி படம் வரையில் அவர் தன்னுடைய சூப்பர் ஹீரோ தோற்றத்தை மாற்றிக் கொள்ளவில்லை.  பொதுவாக நீண்ட காலத்திற்கு ஒருவரே அவ்வாறு நடிக்க முடியாது அல்லவா?  பேட் மேனையே இதனால்தான் போட்டு தள்ளிட்டார்கள்.  இப்போது சூப்பர் ஹீரோக்களின் காலம் மிகவும் உச்சத்தில் இருக்கிறது.  எந்த கதாநாயகனும் அறிமுகமாகம்போது சூப்பர் ஹீரோவாகவே அறிமுகம் ஆகிறார். ஒரே அடி, அந்த நகரத்தில் மின்சாரம் மங்க வேண்டும், அடியாட்கள் ட்ரான்ஸ்பார்மரில் மோதி பொறி பறக்க வேண்டும்.  இதைத்தான் இன்னமும் மக்கள் (முழு வளர்ச்சியடைந்த ஹோமோசேபியன்கள்) இரசிக்கிறார்கள். 

         என்னுடைய சிறு வயதிலிருந்தே இந்த இரசனை மாறவில்லை.  இதனை இரசிக்க தற்போது யாரும் வெட்கப்படுவதில்லை.  ஆனால், சிறுவயதில் படித்த சித்திர கதைகளை தற்போது படிக்கிறேன் என சொல்லுவதற்கு இன்னும் நிறைய பேர் வெட்கபடுகிறார்கள்.  அது அவர்களை Immature  என மற்றவர்கள் நினைக்க வைக்கும் என நம்புகிறார்கள். 

       சித்திர கதைகளை சிறு வயதில் படித்து இரசித்திருக்கிறோம்.  ஆனால், அவற்றின் தரம் இப்போது எங்கேயோ போய்விட்டது.   சித்திர கதைகள் மற்றும் திரைப்படங்கள் என்பதை இரு கோடுகளாக ஒரு கிராப் (Graph)   வரைபடத்தில் குறிக்க முடிந்தால்,  ஒன்று கீழிலிருந்து மேல்நோக்கியும், மற்றொன்று நேர்கோடாகவே இருக்கும்.  இப்போது வெளிவரும் ஒரு சித்திர கதையினை நீங்கள் படித்தால், உங்கள் இளமைக் காலங்களில் நீங்கள் படித்ததை விட முன்னேற்றம் (சித்திரத்திலும், கதை அமைப்புகளிலும்)  அடைந்ததாகவே இருக்கும் என நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்.

December 21, 2008 at 9:11 am 2 comments

Older Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 5 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 5 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 6 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 6 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 6 years ago
June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930