Posts filed under ‘இலக்கியம்’
முக்கோணத்திற்கு எத்தனை பக்கம் அத்தியாயம் 5
வாம்பயர் கிரிஜா
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுகிராமம் அது. கிராம பெரியவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதன் பெயர் கிராமம் என்றே இந்த அத்தியாயம் முழுவதும் குறிப்பிடப்படுகிறது.
அந்த கிராமம் வழியே செல்லும்போது எதேச்சையாக என் ஆர்வம் தூண்டப்பட்டு இந்த உண்மைக் கதையினை பற்றி அறிய நேர்ந்தது.
அக்கிராம குழந்தைகள் படிக்க ஆரம்பப் பள்ளி ஒன்று அரசால் துவக்கப்பட்டு, ஒரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டார். இது நடந்து சில மாதங்கள் இருக்கும்.
அங்குள்ள திருத்தலத்தினை சுத்தம் செய்து பணியாற்ற ஒரு பாதிரியார் பால் ராஜேந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்தார். மக்களும் அவரை உபசரித்து, அங்கேயே தங்கிக் கொள்ள வசதியும் செய்துக் கொடுத்தனர்.
அப்பாதிரியார் கண்ணில் பட்ட குழந்தைகள் எல்லாம் உடல் வெளிறி, எப்போதும் களைப்பாகவே இருந்தனர். மலைப்பிராந்தியத்தில் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் குறைவாக இருப்பதால் இது நேரிட்டிற்கலாம் என பால் முடிவு செய்தார்.
மக்களிடையே பழகி அவர்களிடையே கூடிய விரைவில் நல்ல பெயர் எடுத்திருந்தார். இவரிற்கு நிகராக மக்களிடையே நன் மதிப்புடன் இருந்த மற்றொருவர் அந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியை கிரிஜா (அவரது உண்மைப் பெயர் மர்மமாக உள்ளதால் கிராமத்தில் புழங்கிய பெயரே இந்த அத்தியாயம் முழுவதும். உபயோகிக்கப்படுகிறது)
ஆறு மாதக் காலத்தில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது காலத்தின் விசித்திரக் கோலம் என்றே சொல்ல வேண்டும்.
ஒருநாள், கிராம நாட்டாமை மாணிக்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டிற்கு பாதிரியார் பால் சென்றார். அவரின் பையன் போஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடல் வெளிறி, களைப்பாக தரையில் அமர்ந்திருந்தான். அவனுடைய தாயார் ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாதிரியார் பால் மனதில் ஒரு பொறி தட்டியது.
எவ்வளவு நாளாக பையன் இப்படி இருக்கிறான்
அது போன வருசத்திலேருந்து சாமி
பையனுக்கு சாப்பாடெல்லாம் சின்ன வயசில ஒழுங்கா கொடுத்தீங்களா?
என்ன சாமி, அவங்க அப்பா இவனுக்கு டவுனுலேந்து ஆர்லிக்சா கொண்டாந்து குவிச்சுடுவாரு
போஜுக்குட்டி, என்ன படிக்கிறே
ஒண்ணாம் கிளாசு சாமி
ந,ல்லா படிக்கிறியா
ஓ, எங்க டீச்சர் சூப்பரா சொல்லிக் கொடுப்பாங்க. என்ன மடியில உக்காத்தி வச்சு பாட்டெல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க
கிராம நாட்டாமைக்கும் உள்ளூற அந்த ஆசை இருந்தாலும், மகனை பார்த்து பெருமிதமாக புன்னகை செய்தான்.
போஜனோ உற்சாகமாக அவன் டீச்சரை பற்றி சொல்ல துவங்கினான்
டீச்சர் அளகா இருப்பாங்க. அவங்களுக்கு தெத்துப் பல்லுதான் ரொம்ப அளகு. எல்லோரையும் அவங்க மடியில உக்காத்தி வச்சு கொஞ்சுவாங்க
பாதிரியார் பால் மனதில் பல்வேறு ஊகங்கள் நிழலாடிக் கொண்டிருந்தன.
நான் அந்த டீச்சர பார்க்க வேண்டுமே?
என தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டார்.
இருவரும் டீச்சர் கிரிஜாவை பார்க்க சென்றனர். அதற்கு முன்பே பாதிரியார் பால் தான் கோவிலுக்கு சென்று சில பொருட்களை எடுத்து வர வேண்டுமென்று அங்கே சென்றார்.
பைபிளை எடுத்துச் செல்லலாமா என தீவிர யோசனை செய்தார். கடவுளின் வார்த்தைகள் நடைமுறை சண்டையில் உதவாது என முடிவு செய்து, பைபிளுடன் ஈயச் சிலுவையையும் எடுத்துக் கொண்டு நாட்டாமை மாணிக்கத்துடன் அவரின் வாழ்க்கையை மாற்றவல்ல சந்திப்பினை நிகழ்த்த சென்றார்
கிராமச் சந்தையில் அவர்கள் இருவரும் சந்தித்தனர். டீச்சர் கிரிஜா பாதிரியாருக்கு வணக்கம் சொல்லி புன்னகைத்தாள். பாதிரியாருக்கு பல புதிர்களின் மர்மம் மெல்ல அவிழ ஆரம்பித்தன.
நாட்டாமை பஞ்சு மிட்டாய்க் காரனை பராக்கு பார்த்து திரும்புகையில், இருவரும் கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டார். கிரிஜா குடையுடன் பாதிரியார் பால்-ஐ தாக்கிக் கொண்டிருந்தாள். பாதிரியார் அதை பைபிளால் தடுத்து, தன் அங்கியிலிருந்த சிலுவையை அவள் முன்பு காண்பித்து வெளியே போ என கத்திக் கொண்டிருந்தார்.
கிராம மக்கள் அனைவரும் வட்டமாக சூழ்ந்து அந்த அபூர்வக் காட்சியினை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கிரிஜாவை கீழே தள்ளி தன் சிலுவையை அவள் நெஞ்சில் செருகினார், ஆவென்ற அலறலுடன் கிரிஜா அடங்கினாள். அவள் உடல் சுருங்க ஆரம்பித்தது-
பலத்த காயத்ததுடன் பாதிரியார் பால் மக்களை பார்த்து வெற்றிகரமான புன்னகை செய்தார். ஆழ்ந்த அமைதியுடன் அதை சில கணங்கள் பார்த்த கிராம மக்கள், சட்டென்று சுதாரித்து அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நீதிமன்றத்தில் நீதிபதி பாதிரியார் பாலை பார்த்து ஏன் இந்த கொலையினை அவர் செய்ய வேண்டுமென்று கேட்டதற்கு, பாதிரியார் பால்
கர்த்தருக்கு தோத்திரம் என பதிலளித்ததார்.
நீதிபதியோ அவருக்கு பதினைந்து வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளித்தார்.
கதையினை முடித்த நாட்டாமை மாணிக்கம் ஆறிய தேநீரை பருகினார். அப்போது அவரின் மகள் போஜன் அவரின் மடியில் வந்தமர்ந்தான். பையன் இன்னமும் களைப்பாக, உடல் வெளிறி இருந்தான். எனக்கோ இதயம் படீர் படீரென அடித்துக் கொண்டிருந்தது.
போஜன் என்னைப் பார்த்து,
எங்க வனஜா டீச்சர சூப்பரா சொல்லிக் கொடுப்பாங்க. என்ன மடியில உக்காத்தி வச்சு பாட்டெல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க
என்றான்.
மாணிக்கம் என்னைப் பார்த்து
அவரை பார்க்க செல்லலாமா
என்றார். நான் மறுத்து கடைசி பேருந்தினை பிடிக்க புறப்பட்டேன்.
நான் மறைபொருளை ஆராயும் எழுத்தாளன் தான். ஆனால் சில மர்மங்களை தவிர்த்து விட்டால்தான் அடுத்த அத்தியாயத்தை எழுத நான் உயிரோடு இருக்க முடியும். இல்லையா?
முக்கோணத்திற்கு எத்தனை பக்கம் அத்தியாயம் 2
எழுத்தாளர்களை தமிழ் சமூகம் மதிப்பதில்லை என்றதொரு கருத்தினை பரவலாக கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மைதான். என் வாழ்க்கையில் நடந்ததொரு சம்பவத்தை இங்கே விவரிக்கிறேன்.
மர்மங்களை விடுவிப்பவனுக்கு பயணம் இன்றியமையாத ஒன்று. அது தொடர்பாக நான் புகைவண்டியில் சென்றுக் கொண்டிருந்தேன்.
என் எதிரில் இருவர் அமர்ந்திருந்தனர். அழகிய நங்கை மற்றும் சற்று ஒடிசலான அவள் அப்பன். அவளை பார்த்ததும் என் மனதில் இந்த பாடல்தான் ஒடியது.
என் ஊரு தூத்துக்குடி
நான் தாரேன் சாத்துக்குடீ
ஊத்திக்குடி மாமா
ஒருவேளை இப்பாடலை நான் வாய் வழியாக பாடியிருக்க வேண்டும். அவளின் அப்பன் என்னை பார்த்து
தம்பி, என்ன பண்றீங்க?
அடுத்தவர்களின் அந்தரங்கங்த்தினை ஊடூருவும் எந்த கேள்விகளும் எனக்கு பிடிப்பதில்லை, அவற்றை நான் கேட்டாலொழிய.
நான் ஒரு விஞ்ஞான மர்மங்களை விடுவிக்கும் எழுத்தாளன்.
அவர் முகம் மாறியதை என் கண்களால் பார்த்தேன். நானும் கேள்விக் கணைகளை எய்தேன்.
எங்கே படிக்கிறே
மருதாணி போட்றீக்கியே, எப்போ?
பாய்ப்ரண்ட் இருக்கானா?
மொபைல் நம்பர் என்னா?
எப்ப ப்ரீயா இருப்பே?
இந்த கேள்விகளை தவிர்க்கும் பொருட்டு, அவளின் அப்பன் என்னிடம் பல கேள்விகள் கேட்டிருக்கிறான் என்பது அவனின் ஆக்ரோஷமான முகத்தில் இருந்து பிறகு தெரிந்துக் கொண்டேன்.
என்ன மாதிரி மர்மங்களை நீ பார்ப்பாய்?
சற்றே கடுப்பான நான்,
உதாரணத்திற்கு, அந்த அழகான பெண் உன் மகள் என்பதே மர்மம்தானே?
அதன் பிறகு, எங்களுக்குள் வார்த்தை தடித்து, அவன் என் சட்டையில் கையை வைக்கும் நிலை வந்தது.
அந்தாளுக்கு வயது அறுபது, அறுபத்தைந்து இருக்கும். பூஞ்சையான உடம்பு. கமாண்டோ திரைப்படங்களை கூட பார்க்கவியலாத உடல், நானோ வாலிபத்தின் உச்சத்தில், சற்று புஷ்டியாக இருப்பவன். நியாயப்படி என்ன செய்திருக்க வேண்டும். அதைத்தான் செய்தேன்.
நச் நச்சென்று நாலு குத்துக்கள் அவன் முகத்தில் விட்டேன். கையை முறுக்கி முதுகில் படார் படாரென அறைந்தேன். அவன் பெருத்த ஒலமிட்டு அலறினான். அப்பெண் அதைவிட குறைந்த டெசிபலில் உதவி உதவி என கூக்குரலிட்டாள். என் மீது உள்ள மையல் அவள் குரலின் உச்சத்தை குறைத்திருக்க வேண்டும்.
புகைவண்டி பயணச் சீட்டு பரிசோதகரும், காவலர்களும் தடுக்கா விட்டில் அந்தாளை கொத்து பரோட்டோ ஆக்கியிருப்பேன்.
என்ன சொல்ல வந்தேன்? எழுத்தாளர்களை இச்சமூகம் மதிப்பதில்லை. அந்நிலை மாற வேண்டுமென்பதே என் அவா.
என் தனிப்பட்ட அனுபவமே இந்த அத்தியாயத்தினை முழுவதும் ஆக்கிரமித்து விட்டது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் உலகமெங்கும் உள்ள மர்மங்களை தொடர்ந்து ஆராய்வோம்.
விரைவில் வெளிவர இருக்கும் எனது புதிய புத்தகத்திலிருந்து அத்தியாயம் 2 மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
பெயரிடப்படாத ஒரு நாவலிலிருந்து
என் பெயர் முக்கியமல்ல. நான் அரசு துறையில் வேலை செய்கிறேன்.அன்றைய தினம் வழக்கம்போல, அலுவலகத்திற்கு தாமதமாக வந்து, என் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாள் படிக்க துவங்கினேன்.
இருபது நிமிடங்களுக்கு பிறகு, என் இருக்கையின் அருகே இரண்டு பேர் வந்தனர். அவர்களை கண்டுக் கொள்ளாமல் நான் வேலையில் கவனம் செலுத்தினேன்.
சார், எனக்கு ஸ்டூடன்ட் லோன் வேண்டும். அப்ளிகேஷன் எடுத்து வந்திருக்கிறேன்.
என் தலையில் எச்சரிக்கை மணி பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், நான் வேலை செய்வது வங்கியில் அல்ல.
அதற்குள், வந்த இருவரும் சட்டையை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் இருந்த முகமூடியை போட்டு கத்தியை எடுத்துக் கொண்டனர்.
நின்ஜாக்கள்!
அய்! சட்டவோ!
என்ற கூக்குரலுடன் என்னை தாக்க ஆரம்பித்தனர்.
என் பொது வாழ்க்கைச் சூழலில், என்னுடைய கடந்த காலம் குறுக்கிடுகையில் நின்ஜாக்கள் வருவதை தவிர்க்க முடியாதுதான்.
டைப்பிஸ்ட் கற்பகம் அய்யோவென்ற கூக்குரலுடன் பதறி ஒடினாள். ஒடுகையில், தன்னுடைய கைப்பையையும், டிபன் பாக்சையும் எடுத்துக் கொண்டே ஒடினாள். அநேகமாக, போத்திக்கு போய்விட்டு, வீட்டிற்கு போய்விடுவாள். இன்றைக்கு திரும்பி வரமாட்டாள். சில முக்கிய அலுவலக ஆவணங்களை அவள் எனக்கு தட்டச்சு செய்து தர வேண்டும்.
கோபம் உடனடியாக சக்தியை கொடுக்கும். எனவே, நின்ஜாக்கள் என் அக்காவை பற்றி ஜப்பானிய மொழியில் தவறாக பேசிகிறார்கள் என எண்ணி, கோபமடைந்து, எதிர் தாக்குதலில் ஈடுபட்டேன்.
என்னுடைய சூப்ரவைசர் பதறி என்ன நடக்கிறது என வினவ, பக்கத்து சீட் சுப்ரமணி
சார், இவர் பிரைவேட் பேங்கல கடன் வாங்கி ட்யூ கட்டாம இருந்திருப்பார். அதான் ஆள அனுப்பிச்சாட்டங்க. யூனிபார்ம்லாம் இப்போ இவங்களுக்கு கொடுக்கிறாங்க
என்றார்.
இதற்கிடையில், தாக்குதல் தீவிரமடைந்து நான் பல இருக்கைகளுக்கிடையே புகுந்து ஓடி, தடுக்க வேண்டியதாகிவிட்டது.
சூப்ரவைசர் அதற்குள்
ஏப்பா, சண்டையை நிறுத்துங்க, பேசி தீத்துக்கலாம். இல்ல உன் இன்க்ரிமெண்ட கட் பண்ணுவேன். சுப்ரமணி, அவன புடிப்பா.
சுப்ரமணி தன் கைபேசியில் சண்டையை ஆர்வமாக படமெடுத்துக் கொண்டிருந்தான்.
நின்ஜாக்களை வெல்லும் தருணத்தில், எனக்கு சகோதரிகள் யாரும் இல்லை என்ற உண்மை உறைக்க, கோபம் வடிய ஆரம்பித்தது. இந்த இடைவெளியில் நின்ஜாக்கள் தப்பி ஒடி விட்டனர்.
அலுவலகமே என்னை திக்பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த காலத்தை நான் மறந்தாலும், அது என்னை மறக்கவில்லை.
ஒரு பரிச்சயமான ஒலி தொலைவில் கேட்டது. அது ஏவுகணை ஏவப்படும் ஒலி. எப்படி மறப்பேன் அதனை?
என் பைபையும், டிபன் பாக்சையும் எடுத்துக் கொண்டு, அலுவலகத்தை விட்டு உடன் வெளியேறினேன்.
==========================================================
பெயரிடப்படாத என் நாவலிலிருந்து ஒரு அத்தியாயம். வாய்ப்பும், வளமும் கிடைத்தால் விரைவில் இதனை பூர்த்தி செய்வேன்.
Recent Comments