Legend – பாலய்யா படம்
May 14, 2015 at 4:39 pm Leave a comment
கடைசியாக பார்த்த பாலக்கிருஷ்ணா நடித்த திரைப்படம் லாரி ட்ரைவர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடித்த லெஜென்ட் படம் பார்த்தேன்.
குறும்பு புன்னகையுடன் கை பம்பை அடிக்கா விடாத நங்கையிடம் கடலை போட்டு நடித்தவர் இப்போது நடிப்பில் வேறு ஒரு பரிணாமத்திற்கு மாறியிருக்கிறார்.
படம் ஆந்திராவில் சூப்பர் ஹிட் என கேள்வி. நடனங்களில் கடின உழைப்பினை நல்கியுள்ளார்.
அப்படத்தில் இருந்து ரணகளமான ஒரு காட்சி.
பாலக்கிருஷ்ணாவை ஒரு மத்தியஸ்தத்திற்கு அழைத்து, அவர் முன் ஆந்திராவின் அரசியல்வாதி ஒருவரும், வட இந்திய அரசியல்வாதி ஒருவரும் அமர்ந்திருப்பார்கள். (இதில் வடஇந்தியர் என நான் எழுதியதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.)
பேச்சு வார்த்தை தடித்து, வட இந்தியர் என்னுடன் வம்புவைத்துக் கொள்ளாதே என எச்சரிப்பார்.
பாலக்கிருஷ்ணா அலட்டிக் கொள்ளாமல்,
நான் ஒரு கதை சொல்கிறன் கேள். ஒருவன் தண்டவாளத்தில் எதிர் வரும் ட்ரெயினை நோக்கி ஒடுகிறான். என்ன புரிகிறது உனக்கு?
அவனுக்கு தில் அதிகம் ஆனால் அல்பாயுசு
இன்னொரு கதை. தண்டவாளத்தில் ஒடிக் கொண்டிருக்கும் ஒருவனை நோக்கி ட்ரெயின் வருகிறது. என்ன புரிகிறது உனக்கு?
அவனுக்கு அல்பாயுசு,.
இந்த கதைகளில் நான் ட்ரெயின் என்று யாரை சொல்கிறேன் தெரிகிறதா?
என பாலக்கிருஷ்ணா கேட்க, அந்த வட இந்தியர் திணறி விடுவார். அவர் வட இந்தியர் அல்லவா? ஆந்திரா அரசியல் பற்றி அறிந்திருக்க வழியில்லை என்பதால், பாலக்கிருஷ்ணாவே அதை விளக்கி சொல்வார்.
அந்த ட்ரெயின் நான்தான். என்னை நோக்கி நீ வந்தாலும், உன்னை நோக்கி நான் வந்தாலும் அழிவு உனக்குதான். ஹஹஹஹ
இந்த காட்சியை பார்த்து முடித்ததும், நான் லாப்டாப்பில் படத்தை நிறுத்தி விட்டேன்.
இந்த ஒரு காட்சிக்கே பணம் சரியாக போய்விட்டது என்றோ, இனி இந்த படத்தை என்னால் பார்க்க இயலவில்லை என்றோ நீங்கள் நினைக்கலாம். அதெல்லாம் இல்லை. இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்ததால், மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். என் லேப்டாப்பில் பேட்டரி சார்ஜ் அவ்வளவாக இல்லை. அதான்.
மின்சாரம் வந்த பிறகு படத்தை தொடர்ந்து பார்த்து முடித்தேன். மேற்க்காண் காட்சியில் அவர் விளக்கியது போல் வில்லனின் அடியாட்கள் வந்த கார்களை ட்ரெயினை ஒட்டி வந்து அடித்து நொறுக்குவார். அது மற்றொரு அட்டகாசமான காட்சி. அது போல் நான்கோ ஐந்தோ காட்சிகள் உண்டு. சொன்னால், படம் பார்க்க ஆர்வம் போய்விடும்.
பார்த்து ரசியுங்கள். நல்ல மசாலா படம்.
Entry filed under: திரை விமர்சனம், நகைச்சுவை.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed