Archive for December 8, 2013
முக்கோணத்திற்கு எத்தனை பக்கம் அத்தியாயம் 1
அத்தியாயம் ஒன்று
மறைபொருள் பற்றிய என்னுடைய தீவிர ஆர்வம் முளையிட்டதற்கு காரணம் என்ன என்பதை காலயந்திரத்தில் பயணித்து பார்ப்பின் கோடி விட்டு புஷ்பாவின் வீட்டின் முன் என்னை கட்டி வைத்த நிகழ்ச்சிதான் மனதில் நிழலாடுகிறது.
புஷ்பா என்னுடைய வகுப்பு தோழி. தீடீரென என்னுடைய பழகுவதை குறைத்துக் கொண்டாள். மேலும், முகத்தை கோணலாக்கி, அவளின் எலிவால் சடையை முன்னும் பின்னும் போட்டு, அதனால் நான் குழம்பி நிற்கும்போது அதை வெட்கம் என கோபத்துடன் சொன்னாள்.
அவளின் அந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என யான் அறிய முற்பட்டதுதான் என்னை உலகப்புகழ் பெற்ற மறைபொருள் ஆராய்ச்சியாளர் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
அவளிடம் மனம் விட்டு பேச அவள் வீட்டு குளியலறையில் ஒளிந்துக் கொண்டிருந்தேன். அவளும் வந்தாள். வந்தவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,
அம்மா, சோப்பை எடுத்து வாயேம்மா
என கத்தினாள்.
உன்னுடைய வலது பக்கத்தில் தானே சோப் இருக்கிறது, லூசு
என சொல்லி ஒளிந்திருந்த இடத்தை விட்டு வெளியே வந்தேன்.
அவள் அப்பன் சேகரால் கட்டி வைத்து உதைக்கப்பட்டேன். சேகருக்கு வன்முறை முற்றிலும் புதிது. கட்டி வைக்கப்பட்ட ஆளின் மீது கூட அவரால் முறையாக வன்முறை பிரயோகம் செய்ய இயலவில்லை. அவருக்கு மூச்சு வாங்கியது.
ஏண்டா உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா?
இருந்தது, உன் மகளுக்கு பதில் உன் மனைவி வந்து விட போகிறாளே என
என்ற பதில் அவரை புத்துணர்ச்சி உண்டாக்கி இரண்டாம் சுற்று உதை பிரயோகத்திற்கு உந்துதலாக அமைந்தது.
வரலாறு எத்தனையோ மர்மங்களை அடக்கியுள்ளது. சில வார்த்தைகள், சில உரையாடல்கள், சில நிகழ்ச்சிகள் இவ்வாறு நடந்திருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் புனைவின் பக்கம் போய் வரலாற்றை வரையறுக்க முயல்கிறார்கள்.
உதாரணத்திற்கு, பிரபல தளபதி மாலிக் காபூர் தன் அறையில் ஒய்வெடுக்கையில், அங்கே வந்த அலாவுதீன் கில்ஜி,
மாலி, எனக்கு மிகவும் சலிப்பாக உள்ளது, மதுரை வரைக்கும் போய் வரலாம் வாயேன்
த்தா, இவன் தொல்லை தாங்க முடியல்லையே
இந்த உரையாடல் சரித்திரத்தில் நடந்திருக்குமா என தெரியாது, ஆனால் மாலிக் காபூர் மதுரைக்கு படையெடுத்து வந்தது நடந்திருக்கிறது.
கடும் பசியில் இருந்த பிலாத்து மன்னன் முன்பு ஒரு இளைஞனை மத குருக்கள் கட்டி கொண்டு வந்து நிறுத்தினர்.
மன்னனே, இவன் தங்கள் ஆட்சிக்கு எதிராக, நம் மதத்திற்கு தீங்கு நேரும் வண்ணம் பேசுகிறான்.
என புகார் படித்தனர்.
கடுப்பான பிலாத்து, யோவ் உங்களுக்கு நேரங்காலம் தெரியாதய்யா. நீங்களே பாத்து பயல தட்டி வையுங்க
என சொல்லி, சாப்பிட கையை கழுவினார்.
இந்நிகழ்ச்சி உண்மையில் நடந்ததா என வரலாற்றாசிரியர்கள் சந்தேகப்பட்டாலும், பிலாத்து கையை கழுவியதும், குற்றவாளி உலகப் புகழ் பெற்றதும் உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வுகள்.
இது போன்ற வரலாற்று நிகழ்வுகளின் பின்னே இருக்கும் மறைபொருட்களை பற்றிய யான் இந்நூலில் விரிவாக விவரிக்கிறேன்.
Recent Comments