Archive for May 11, 2013
முடிக்கப்படாத நிரல் (#!@?>
கோயாவி பலூடா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவரது செல் அதிர ஆரம்பித்தது.
****, காலங்காத்தால உயிர எடுக்கிறான்ங்க என சலித்துக் கொண்டார். அப்போது மணி காலை 11.30.
வணக்கம் சார், நான் கோயாவி பேசுறேன்.
ஆபிசுல சீட்ல உன்ன காணலயே. எங்கேய்யா இருக்கே?
ஒரு இன்ஸ்வெடிகேஷன் சம்பந்தமாக….
ஒனக்கு தான் ஒரு மசுரு கேசும் கொடுக்கலையே
சரி, அதுக்கு இன்னாங்கறே என்று சொல்ல நினைத்தாலும்,
சாரி சார், இப்போ வந்துடறேன்.
கோட்டூர்புரத்தில் இருக்கும் இந்திய விஞ்ஞான கழகத்தில் ஒரு மர்டராம். போய் பாரு,
அழைப்பு துண்டிக்கப்பட்டதும், கோயாவி ஆழ்ந்த சிந்தனையில் முழ்கினார். அடுத்தது, சமோசாவா அல்லது பிரன்ஞ் பிரை சாப்பிடலாமா?
கோட்டூர்புரம், விஞ்ஞான கழகம்.
கம்ப்யூட்டர் டெர்மினல் எதிரேயுள்ள நாற்காலியில் பிணம் கிடந்தது. எதிரேயுள்ள கணிணி திரையில்,
#include
void main()
{
Printf(“Hello_
என்ற கணினி நிரல் முடிக்கப்படாமல் இருந்தது.
சிறப்பு ஆய்வாளர் பராங்குசம் பதட்டத்தில் இருந்தார். அவரால் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை. இறந்தவர் கணிணி விஞ்ஞானி பிங்களன் என்றும், அவர் இறப்பதற்கு முன்னர் ஒரு முக்கியமான கணிணி நிரலை எழுத முற்படுகையில் இறந்து விட்டார். உலகையே மாற்றவல்ல முக்கிய கணிணி நிரலாகத்தான் அது இருக்க வேண்டும். நல்லவேளை, இதை துப்புதுலக்க இன்னொரு துப்பறிவாளரை நியமித்துள்ளார்கள்.
வணக்கம் சார், நான் பராங்குசம் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கோயாவியிடம் கை குலுக்கினார். கையெல்லாம் எண்ணெய் பசை பிசுபிசுவென்றது. சுருக்கமாக, கோயாவியிடம் கொலை தொடர்பான விவரங்களை சொன்னார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தை கோயாவி அமைதியாக சுற்றிப் பார்த்தார். பிறகு, துணியை விலக்கி பிணத்தின் முகத்தை பார்த்தார். பிறகு கேட்டார்,
யார் இவர்?
கணிணி விஞ்ஞானி பிங்களன். இன்றைக்கு அவர் பணியில் சேருவதாக இருந்தது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாற்றலாகி வந்திருக்கிறார். பாவம் அல்பாயிசு.
மெள்ள ஜன்னலருகே தன் செழுமிய பின்புறத்தை மற்றவர்களுக்கு காட்டி நின்றுக் கொண்டார். அனைவரும் மூச்சை பிடித்துக் கொண்டு அவர் என்ன சொல்வார் என காத்திருந்தனர். கோயாவி மனதில் ஒன்று, இரண்டு என எண்பத்தி மூன்று வரை எண்ணினார். சடாரென்று திரும்பினார்.
முதலில், இவர் கணிணி விஞ்ஞானி பிங்களனே இல்லை. பிங்களன் என பேர் வைத்துக் கொண்டு, கணிணி விஞ்ஞானி என்றால் சோதிக்க வேண்டாமா?
அதிர்ச்சி அலையலையாய் பராங்குசத்தை தாக்கியது.
பிறகு யார் இவர்? எப்படி கண்டுபிடித்தீர்கள்?
இவன் இந்த கட்டிடத்து வாட்ச்மேன் குமார். ஒரு துப்பறிவாளன் எப்போதும் அனைத்தையும் சொல்வதில்லை.
அனைவரும் பிரமித்தனர், நிம்மதி பரவியது. செத்தது இரவு காவலனாம். அனைவரும் புன்னகைத்தனர். கோயாவியின் துப்பு துலக்கும் திறனை பாராட்டினர். அனைவருடனுடம் கைகுலுக்கி, மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டு, பிஸ்கட், டீ அருந்தி விட்டு கோயாவி கிளம்பினார்.
வாசலில் மெள்ள சிரித்துக் கொண்டார்.
சரசா புருஷனை எனக்கு தெரியாதா என்ன?
துப்பறிவாளன் எப்போதுமே அனைத்தையும் சொல்வதில்லை.
Recent Comments