கோப்ரா தீவில் கோயாவி – துவக்கம் சீன ஏவுகணை
April 4, 2012 at 11:18 pm 2 comments
மலைகள் சூழ்ந்த அந்த சாலையில் ஒரு கார் வெகு வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. காரில் அமர்ந்திருந்த கோடீஸ்வரர் பொன்னம்பலத்தின் மனமோ இயற்கை எழிலை இரசிக்க இயலாமல் எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தது.
கார் மரங்களர்டந்த பங்களாவில் போய் நின்றது. ட்ரைவர் நாச்சி முத்து கதவை திறக்க, கோபத்துடன் உள்ளே நுழைந்தார் பொன்னம்பலம்.
“சரளா, ஏ,சரளா”, என கூவிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
“அத்தான், வந்து விட்டீர்களா?”, என 25-வயது நாரீமணி ஓடி வந்தாள். அவளை கண்டதும், பொன்னம்பலத்தின் கோபம் எல்லை மீறியது.
“பசப்பாதே, என் அனுமதி இல்லாமல் என் பெட்டகத்திற்கு சென்று எனக்கு சொந்தமான பொருளை எப்படியடி எடுப்பாய்” என இரைந்தார்.
“நாதா, அனுதினமும் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் என் மீதா சந்தேகப்படுகிறீர்கள்?”
“ச்சீ, சாகச வார்த்தைகள் பேசி என் மனதை மாற்ற முயலாதே. நன்றாக கேட்டுக் கொள். நாளைக்குள் எனக்கு அது திரும்ப வேண்டும்.”
“இந்த அபலை மீது இப்படியொரு தீஞ்சொற்களை உதிர்க்க எப்படி அத்தான் உங்களுக்கு மனம் வந்தது” என்றவாறு சரளா கேவினாள்.
“நாளை பகல் பன்னிரெண்டு மணி வரை உனக்கு கெடு. அப்புறம் நான் மனிதனாக இருக்க மாட்டேன். டேய், நாச்சி, வண்டிய எடுடா” என சொல்லி பொன்னம்பலம் வெளியேறினார்.
கார் மலைகள் சூழ்ந்த சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.
காரில் அமர்ந்திருந்த பொன்னம்பலம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது, ட்ரைவர் நாச்சிமுத்து ஆ வென அலறினான்.
“நாச்சி, என்னாச்சிடா”
நாச்சிமுத்து அழகன் அல்ல, இருப்பினும் பயத்தினால் அவன் முகம் விகாரமாக இருந்தது.
“முதலாளி, அங்கே பாருங்கள்”, என அலறினான்.
பொன்னம்பலத்தின் காரை நோக்கி ஒரு ஏவுகணை வந்துக் கொண்டிருந்தது. அது ஒரு சீன ஏவுகணை. அதன் முனையில் “Made In Taiwan” என்ற வாசகம் இருந்தது.
“நாச்சி, வண்டிய திருப்புடே ”
அதற்குள் ஏவுகணை அந்த காரின் மீது மோதியது.
டமால் !
Entry filed under: இலக்கியம், கதை, காமிக்ஸ், கோயாவி சாகசம், நகைச்சுவை. Tags: கோயாவி சாகசம்.
1.
shankar | April 5, 2012 at 12:56 am
மலைகள் சூழ்ந்த, மரங்கள் அடர்ந்த தாய்வானில் செய்த சீன ஏவுகணை டமால் என பெரிதாக வெடிக்கையில் டினா டர்னர் தன் 25 வருடம் ஊறவைத்த விஸ்கி குரலில் உருக, என்ன ஒரு ஆரம்பம்….
இந்த அத்தியாயம் கண்டிப்பாக சீனாவில் தடை செய்யப்படும் என்பது தவிர்க்க இயலாத நிதர்சனம்.
2.
shankar | April 7, 2012 at 12:51 am
அடுத்த அத்தியாயத்தின் தலைப்பை படித்தபின் சிரிப்பை அடக்க இயலவில்லை…. 😉