Engineering Fluid Dynamics and Mixing – C K Chopra
January 20, 2011 at 9:11 pm 11 comments
நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்ட எனக்கு ஒரு மழைநாளின்போது படிக்க புத்தகம் எதுவும் கிடைக்கவில்லை. நாட்டில் பல பேர் வீட்டில் கேபிள் கனெக்ஷனே இல்லை, இதை ஒரு பெரிய விஷயமாக சொல்ல வந்துவிட்டானே என ஒரு சாதாரண வாசகன் நினைக்கலாம். ஆனால் ஒரு இலக்கிய வாசகன் (இனி இப்பதிவில் அவன் இலக்கியன் என குறிப்பிடப்படுவான்) அவ்வாறு எண்ண மாட்டான்.
எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் உள்ள எண்ணிக்கை இடைவெளி வெகுவாக குறைந்து வரும் இந்த நேரத்தில் நல்ல ஆசிரியர்களை அறிமுகப்படுத்துவது ஒரு இலக்கியனின் கடமை. நல்லது. அந்த மழைநாளுக்கு திரும்புவோம். என் தமையனின் பழைய பொறியியல் புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருகையில்தான் எனக்கு கிடைத்தது அந்த இலக்கிய பொக்கிஷம். சி கே சோப்ரா எழுதிய Engineering Fluid Dynamics and Mixing.
சில பக்கங்களை படித்துதான் பார்ப்போம் என துவங்கினேன். அடடா…….அடடா! என்ன வித்தியாசமான அனுபவம்! வாய் வழியே புகைவிடும் ஒரு அறிமுக புகையாளி மூக்கினாலும் விட முடியும் என அறியும்போது அவனடையும் பரவசத்தை நானும் அடைந்தேன் என்றால் அது மிகையாகாது
Preface என்ற தலைப்பின் கீழ் ஆசிரியர் நூலை தன் பெற்றோர்களுக்கு அர்ப்பணிப்பதாக உருகுகிறார். தனக்கு உதவியவர்கள் என நிறைய பெயர்களை குறிப்பிடுகிறார். அதில் நிறைய மேற்க்கத்திய பெயர்களும் இடம் பெறுகின்றன.
முதல் அத்தியாயமான Fluid Dynamics – An Introduction –ல் ஆசிரியர் சில அடிப்படை விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார். நிறைய குறீயிடுகளும் இடம் பெறுகின்றன. நமக்கு நன்கு அறிமுகமான /,+,=.% குறியீடுகளோடு வேறு சில குறியீடுகளும் (உதாரணத்திற்கு ∀, ∂,⊕,⊥,∪ இடம் பெறுகின்றன. நான் முதலில் அவற்றை அந்தரங்க உறுப்புகளை குறிக்கும் குறியீடுகள் என நினைத்தேன். அத்தியாயங்கள் செல்ல செல்ல அதற்கு புதிய புதிய அர்த்தங்களை கற்பித்தவாறே திறமையாக இந்நூலை எழுதுகிறார் சி கே சோப்ரா.
உதாரணத்திற்கு, கீழ்க்கண்ட பகுதியை பாருங்களேன்.
Multiplying both sides by , and then integrating from y = − 1 to y = + 1 yields:
இது போன்று சிரிக்கவும், சிந்திக்கவும் நிறைய பகுதிகள் இந்நூலில் இருக்கின்றன.
சில பக்கங்களில் எவ்வித வார்த்தைகளும் பயன்படுத்தாமல் வெறும் குறீயிடுகளை மட்டுமே பயன்படுத்தி நிரப்பியுள்ளது அவரின் புலமைக்கு சான்று. இது போன்ற இடங்களில் ஒரு சாதாரண வாசகன் திகைத்து நிற்பது இயல்பென்றாலும், என்னால் இலகுவாக தாண்டிச் செல்ல முடிந்தது. வாசிப்பே இயல்பென்று கொண்டவர்களால் எதையும் படிக்க முடியும் என்பதை உங்களுக்கு வலியுறுத்த விழைகிறேன்.
உங்கள் கற்பனைக்கெட்டாத பல படங்கள் இந்நூலில் இடம் பெறுகிறது.
இப்படத்தில் நீலக்கலரில் இருப்பதே Fluid என்பதை இப்பதிவை இதுவரை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள்/இலக்கியர்கள் புரிந்துக் கொள்வார்கள். பிசிறாக நீலக்கலரில் இருப்பது Fluid சில வேளைகளில் Dynamic-ஆக இருக்கும் போது ஏற்படும் நிலை. மேலும் இது ஒரு 3D படம். இடது கண்ணை மூடிக்கொண்டு உங்கள் கணினியின் வலதுபுறம் 60 டிகிரி அளவில் சென்று பாருங்களேன். வியந்துதான் போவீர்கள். அலுவலகத்தில் வேலை நேரத்தில் வலைத்தளங்களை படிப்பவர்கள் தயவு செய்து இதை செய்து பார்க்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
எட்டாவது அத்தியாயத்தில் ‘Fluid Dynamic Particles Acceleration, Deacceleration and Reacceleration’ –ல் பார்ட்டிக்கிள்கள் பலவாறு வேகமடைந்து நிதானமடைந்து மீண்டும் வேகம் கொள்வது விவரிக்கப்பட்டுள்ளது. அங்கே நயன்தாராவின் படத்தை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தேன். மூல புத்தகத்தில் வேறு படம் இருந்திருக்கலாம்.
இந்த நூலின் முடிவில் இதைத் தொடர்ந்து படித்தவர்களின் கருத்துகள் அழகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Fuck You, CK’ என்பது தனது தமையனின் கையொப்பத்தில் தெளிவாக உள்ளது. “I Love You. Shailaja” என்றும் சற்று தெளிவில்லாத கையெழுத்தில் உள்ளது. யாருடையது என தெரியவில்லை. அவனின் செல்போனை அடுத்த முறை ஆய்வு செய்தால் கண்டுபிடித்து விடலாம்.
இதை இலக்கியம் என சொல்ல எவ்வாறு சாத்தியம் என்ற கேள்விக்கு, சென்னை புத்தக கண்காட்சி முடிந்த பிறகு இலக்கியம் எவ்வாறு மதிப்பிட படுகிறது என்ற பொது அளவுக்கோல்களின் அடிப்படையில் பார்க்கலாம்.
குழப்பமான அட்டைப்படத்துடன், முன்னுரையை தவிர வேறு எந்த இடத்திலும் தெளிவாக புரிந்து விடாத எழுத்துகள், குறைந்த பக்கங்கள், அதிக விலை. மேலும் படித்தவர்கள் முகத்தில் வரும் மந்த காசம்.
ஆக இந்த இலக்கிய புத்தகத்தை என் நண்பர்களுக்கு மட்டுமல்லாமல் எதிரிகளுக்கும் பரிந்துரைக்கிறேன்.
Entry filed under: இலக்கியம், புத்தக விமர்சனம்.
1.
King Viswa | January 20, 2011 at 9:21 pm
//
Multiplying both sides by , and then integrating from y = − 1 to y = + 1 yields:
//
இந்த மேட்டரில் மூணாவது லைனில் தப்பாக பிரின்ட் ஆகி இருப்பதை கவனியுங்கள். dy பதிலாக dx என்று இருக்க வேண்டும்.
2.
King Viswa | January 20, 2011 at 9:25 pm
அடுத்த முறை பிரின்சிபல்ஸ் ஆப் அக்கவுண்டிங் என்ற புத்தகத்தை படிக்கவும், சுல்தான் சந்த் பதிப்பகம்.
அதில் மூன்றாவது சேப்டரில் இருந்து அதகளம். குறிப்பாக டெட்டர் மேனேஜ்மென்ட் பற்றிய பேரா பிரம்மாதம்.
3.
Rafiq Raja | January 20, 2011 at 10:21 pm
பங்கு வேட்டையரே, மழை கால இரவில் படிக்க வேண்டிய புத்தகமாயா இது… இப்படி படித்து கடுப்பானது பத்தாது என்று, அதை விமர்சனம் வேறு செய்து அடுத்தவர்களும் படிக்க வேண்டும் என்ற தங்கள் உயரிய மனப்பான்மை எவருக்கும் கிட்டா…
மேன்மேலும் உங்கள் பதிவுகளில் பரிணமாங்களை இம்முறையில் செம்மையாக செலுத்தவும்… வுடு ஜுட் 🙂
4.
லக்கி லிமட் | January 20, 2011 at 10:46 pm
இலக்கிய உலகை புதிய பரிணமாத்திற்கு எடுத்து சென்றதுக்கு ஜோஷ் அவர்கள் வாழ்க….
5.
shankar visvalingam | January 21, 2011 at 2:15 am
நண்பரே,
என்ன சொல்வது என்றே தெரியவில்லை; அழுதே விட்டேன். என விழிகளில் இலக்கிய ஓடை பாதை கண்டது, அந்தப் பெருமை இந்த பதிவை புத்தக கண்காட்சி புத்தகங்களின் பின்னட்டையில் அழகிய இலக்கியள்களின் இல்லாமை கண்டுணர்ந்து வெகுந்தெழுந்த கன்னி சுனாமியாய் படைத்திட்ட உங்களையே சாரும். எவ்வளவு நாட்களாகிவிட்டது இப்படியான நூல்களில் என் கைபட்டு. உங்கள் பதிவை படிக்கும்போதே, என் அறையின் ஜன்னலை நன்கு அகல திறந்து வைத்து, கைபடா மேற்கு குளிரை உள்ளழைத்து, வெப்பகாப்பானில் நல்ல சுக்கு காப்பி இட்டு வைத்து, இன்றைய இரவில் என் விழி உறக்கம் கலைத்து இப்புத்தகத்தை படித்திடுவேன் சுவைத்து என ரகசிய குறுஞ்செய்தி தருகிறது இலக்கிய மனம். இலக்கியன் அறிவான் அதன் மணம். வாழ்க உங்கள் சேவை, வளர்க உங்கள் தொண்டு.
பி.கு. தமிழ் புத்தக பதிப்பாளர்கள் கவனத்திற்கு, உங்கள் நூல்களின் பின்னட்டைகளில் நல்லெண்ணெய் விளம்பரங்களையாவது அழகிய நங்கைகளின் போட்டோக்களுடன் இடுங்கள்.
6.
sharehunter | January 21, 2011 at 7:47 am
@ விஸ்வா,
நன்றி.
@ ரபீக்
பல பரிமாணங்களை இப்பதிவில் கண்டதாக சொல்கிறீர்கள். இரவில் படித்திருப்பீர்கள். தயவு செய்து பகலிலும் ஒருமுறை படியுங்கள்
@லிமட்
நன்றி. இலக்கிய உலகை எதாவது ஒரு இடத்திற்கு எடுத்து செல்லதான் விரும்புகிறேன். விடுகிறார்களா என்ன?
@ஷங்கர்
உங்கள் கண்ணீரை கண்டேன். இப்புத்தகம் ஜெர்மன், ப்ரென்ஞ் மொழிகளிலும் கிடைக்கிறது. ப்ரென்ஞ் மொழி நூலில் மோனிகா பெலுக்கி படம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் படித்தால் சொல்லவும்.
7.
ராகின் | January 25, 2011 at 6:38 pm
உள்குத்து, வெளிக்குத்துன்னு பல குத்து இருக்கும் போல இருக்கே 🙂
8.
சாம்ராஜ்ய ப்ரியன் | January 27, 2011 at 3:49 pm
இந்தப் புத்தகம் ஓர் அருமையான இலக்கியப் புத்தகம் தான் என்பதில் எனக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. அடித்துச் சொல்வேன்.. எடுத்தவுடன் நித்திரா தேவி ஆட்கொள்வாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. :-))
9.
illuminati | January 27, 2011 at 6:49 pm
//நான் முதலில் அவற்றை அந்தரங்க உறுப்புகளை குறிக்கும் குறியீடுகள் என நினைத்தேன். //
ஹாஹா…
யோவ் பங்கு! என்ன நக்கலா? ஒருத்தன் போஸ்ட் போடாம இருந்தா நீரு உம்ம இஷ்டத்துக்கு காமெடி பண்ணுவீரா? இரும் ஓய்,சீக்கிரமே போஸ்ட் போட்டுட்டு பேசிக்கிறேன். 😉
10.
sharehunter | January 30, 2011 at 6:35 pm
@Ragin
நன்றி. அனுபவித்ததை பிறருக்கு பகிர்ந்தேன்.
@Priyan
படித்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.
@Illumi
பதிவு போட்டு நீங்கள் பேசுவீர்கள். படித்த நாங்கள் பேச முடியுமா?
11.
sundar | December 12, 2012 at 3:20 pm
100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்…click me…