Archive for March 30, 2010
எங்கே செல்கிறது பங்கு சந்தை 2010?
இந்த பதிவில் தலைப்பில் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கும் என்று படிப்பவர்களுக்கு முதலிலேயே எனக்கும் தெரியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே எனக்கு தெரிந்திருந்தால் இந்த பதிவையா எழுதிக் கொண்டிருப்பேன்?
கடந்த மூன்று மாதங்களில் நிதிநிலை அறிக்கைக்கு முன்னால் வரை நம் பங்கு சந்தை உலக சந்தைகளையொட்டியே நகர்ந்து வந்திருக்கிறது. நிதிநிலை அறிக்கை 2010-க்கு பிறகுதான் குறிப்பிடதக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அப்படியானால் சிறந்த பட்ஜெட் என நினைக்கலாமா என்றால் முடியவில்லை.
நிறைய பாதகமான அம்சங்களை இந்த நிதிநிலை அறிக்கை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்க வைத்துவிட்டு, அவைகளை தவிர்த்து விட்டு வெளிவந்திருக்கும் ஒரு சாதாரண நிதிநிலை அறிக்கை இது. அந்நிய முதலீட்டாளர்கள் உள்ளே செலுத்தியிருக்கும் முதலீட்டால்தான் சந்தை மேலும் மேலும் மேலேறிக் கொண்டிருக்கிறது. டாலரின் நிலை சற்று பாதகமாக இருப்பதால் இன்னும் சிறிது காலம் அவர்கள் முதலீட்டை எடுக்க மாட்டார்கள் என நம்பலாம்.
பட்ஜெட்டின் போது எதிர்பார்த்த பாதக அம்சங்கள் வெளிவராமல் இருந்தமையால் இந்த ஆண்டு முழுவதும் அரசாங்கம் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடாது என கருத முடியாது. ரூபாயின் மதிப்பு தொடர்பாக சில கசப்பு (பங்கு சந்தைக்கு, ஏற்றுமதியாளர்களுக்கு) அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருக்கிறது.
5300 என்ற நிலையை தாண்டியிருக்கிறது. அதற்கு வெளி சந்தைகளின் நிலைகளை வைத்தே தாண்டியிருக்கிறது என்பது பாதகமான அம்சம். கடந்த மூன்று மாதங்களாக சந்தை தின வணிகத்திற்கு ஏற்றதுபோலவே நடந்து வருகிறது. புதிய முதலீட்டாளர்கள் இந்த பரபரப்பை பார்த்து இறங்க முயற்சிக்கக் கூடும். வணிக செய்தித்தாட்களிலும் பரிந்துரைகள் என ஏகப்பட்டவை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மார்ச் 2010 மாத காலாண்டு முடிவுகளால் சந்தை அலைகழிக்கப்பட்டாலும் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில்தான் உண்மையான நிலை தெரிய வரும். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்கள் கவலை பட தேவையில்லை. கடன் வாங்கி, தினமும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிற, T + 5 நாட்கள் வரை கடன் இருக்கிறது என நம்பி பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள்தான் சந்தையின் பெரிய ஏற்ற இறக்கத்தில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆக, கரெக்ஷன், டெக்னிகல் டிபிகல்டி என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் சொல்ல விரும்புவது என்னவென்றால் இனிமே பாத்து, அகல கால் வச்சிடாதீங்கப்பு !
Recent Comments