Death at a Funeral
March 21, 2010 at 2:17 pm 5 comments
ஆங்கிலத்தில் நகைச்சுவை படங்கள் என பெரும்பாலும் பார்த்திருப்பது அமெரிக்க ஹாலிவூட் படங்களையே. அந்நகைச்சுவை படங்கள் கருப்பு, பயணம், ஸ்லாப்ஸ்டிக் என நிறைய வகைகளை கொண்டிருக்கிறது. பெரும்பாலான விமர்சனங்கள் (தமிழிலும் சரி) இப்படங்களை வைத்தே எழுதப்படுகின்றன. இதில் பிரிட்டிஷ் நகைச்சுவை படங்கள் மொத்தமாக ஒதுக்கப்பட்டு விட்டன. பிரிட்டிஷ் நகைச்சுவைப் படங்களை ரசிக்க முடிவதில்லை அல்லது நிறைய படங்களை கேள்விப்பட்டிருக்க மாட்டோம்,
இப்படங்கள் மிக குறுகிய முறையிலேயே வெளியிடப்படுகின்றன (Limited Release), அமெரிக்க ஆங்கிலம் ஏறக்குறைய நமக்கு பழகி விட்ட நிலையில் அவர்களது ஆங்கில உச்சரிப்பை புரிந்துக் கொள்ள தடுமாறி அவர்களது படங்களை ஏறக்குறைய ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க திரைப்படங்களில் தெரியும் பிரமாண்டம் இவர்களின் திரைப்படங்களில் தெரியாது. த்ரில்லர், ஆக்ஷன் வகைறாக்களை பொறுத்தமட்டில் அமெரிக்க திரைப்படங்களே பிரிட்டனிலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் நகைச்சுவைப் படங்கள் என்று எடுத்துக் கொண்டால் இவர்களது தனி வகை.
ஹாலிவூட் நகைச்சுவை படங்களை விட இவர்களது நகைச்சுவை திரைப்படங்கள் ஒரு படி மேல். இவர்களின் நகைச்சுவையானது வேறு ஒரு தளத்தில் இருக்கும். ஒரு அமெரிக்கன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ஒரு பிரிட்டிஷ் நகைச்சுவை திரைப்படத்தை பார்க்க முடியும். அவர்களின் படத்தில் மிக பிரமாண்டமான பட்ஜெட் கொண்ட வரைகலை உத்திகளோ, செட்களோ இருக்காது. ஆனால் படத்தில் ஒருவித ஸ்டைலீஷ் இருக்கும். இயக்குநர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள பெரிதும் உழைத்திருப்பார்.
பிரிட்டிஷ் நடிகர்கள் ஹாலிவூட் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்கள் என்ற போதிலும், இப்படங்களில் அவர்களை நீங்கள் வேறு மாதிரி பார்க்கலாம். காலின் ஃபர்த் (Colin Firth) , ஹ்யூ க்ரான்ட் (Hugh Grant) போன்ற நடிகர்கள் இரு பக்கங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் நகைச்சுவை உயர் தரத்திற்கு இருப்பதன் காரணம் ஐரோப்பியர்களின் கல்வித்தரம் காரணமாக கூட இருக்கலாம். கை ரிச்ஸி (Gut Ritchie) என்பாரின் படங்கள் இங்கே வேறு மாதிரி அலசப்படுகின்றன. நிழல் உலகம், இரத்தம், அடியாட்கள், பெண்கள் என இருந்தாலும் நகைச்சுவை அதில் மிக பிரதானம். காட்சி அமைப்புகளில் பெரிதும் வித்தியாசம் காணப்படும். உதாரணத்திற்கு, ஸ்நாட்ச் திரைப்படத்தில் ஒரு குழுவின் அடியாட்கள் ஒருவனை துரத்தும் காட்சியில் மற்றொரு இடத்தில் நடக்கும் ஒரு முயலை வேட்டை நாய்கள் துரத்தும் காட்சியுடன் இணைத்து வித்தியாசப்படுத்தியிருப்பார்,
சமீபத்தில் வந்த ஷெர்லக் ஹோம்ஸ் படத்தில் கூட அமானுஷ்யம் மற்றும் மர்மங்களை கலந்து வித்தியாசப்படுத்தி இருப்பார். ஷெர்லக் ஹோம்ஸை வேறுபடுத்தி காட்டியிருப்பார். மிகவும் ரசித்து பார்த்த ஷெர்லக் படங்களில் இதுவும் ஒன்று.
பிரிட்டிஷ் நடிகர்கள் உடலசைவில் ஒருவித நளினம் (elegance) இருக்கும் என்று சொல்லலாம். உச்சரிப்பு மட்டுமே சிறிது சிரமப்படுத்தும். ஆனால் கேட்க கேட்க பழகிவிடும். இவ்வகை நகைச்சுவை படங்களில் ஒன்றே Death at a Funeral (இறுதி சடங்கில் ஒரு சாவு),
ஒரு வீட்டின் வாசலில் சவப் பெட்டியை ஏற்றிக் கொண்டு வந்த வேன் நிற்கிறது. அதிலிருந்து சவப்பெட்டியை நான்கு பணியாளர்கள் இறக்கி அவ்வீட்டின் ஹாலில் வைக்கின்றார்கள். இறந்தவரின் மகனிடம் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார்கள். சவப்பெட்டியை திறக்கிறார்கள். அவரின் மகன் அவர்களிடம் கேட்கிறார், ‘யார் இது?‘.
‘உங்கள் தந்தை இவர் இல்லையா? மன்னிக்க வேண்டும், பெட்டி மாறி விட்டது, இதோ கொண்டு வந்து விடுகிறோம் உங்கள் தந்தையை.’
டேனியலின் தந்தை இறுதி சடங்கிற்கு ஒவ்வொரு உப பாத்திரங்கள் வருகின்றார்கள்.
மார்த்தா தன் காதலன் சைமனை கூட்டிக் கொண்டு தன் மாமாவின் இறுதி சடங்கிற்கு வருகிறாள். தன் தந்தையிடம் சைமன் நல்ல பேர் வாங்க வேண்டுமென்ற எண்ண்த்துடன். வரும் வழியில் அவளின் சகோதரனின் வீட்டிற்கு அவனை அழைத்து வர செல்கிறாள். அவள் சகோதரன் ட்ராய் ஒரு பார்மஸிஸ்ட், அதில் வரும் பணம் போதாமல் மாயைகளை உருவாக்கும் மாத்திரைகளையும் விற்று பணம் பார்க்கிறவன், தன் சகோதரியை கண்டவுடன் அம்மாத்திரைகளை ஒரு தூக்க மருந்து பாட்டிலில் வைத்து விட்டு தயாராக செல்கிறான்.
தன் காதலன் படப்படப்புடன் இருப்பதை கண்ட அவள், தூக்க மாத்திரை ஒன்று எடுத்துக் கொண்டால் அது குறையும் என சொல்லி, எக்டஸி வகை மாத்திரையை அவனுக்கு கொடுக்கிறாள். தன் சகோதரியுடன் புறப்படும் ட்ராய் அந்த பாட்டிலை மறக்காமல் எடுத்துக் கொள்கிறோன்.
மார்த்தாவை ஒருதலையாய் காதலிக்கும் ஒருவன் தன் நண்பனுடன் சொந்தக்கார கிழவர் அல்ஃபி என்பவரை ஏற்றிக் கொண்டு இறுதி சடங்கிற்கு வருகிறான்.
டேனியலின் சகோதரன் பீட்டர் அமெரிக்காவில் ஒரு எழுத்தாளனாக இருப்பவன். டேனியலுக்கு அவனிடம் மெல்லிய பொறாமை இருக்கிறது. தன் தந்தையின் இறுதி சடங்கிற்கு அவன் பணம் தர முடியாது என சொல்லியதற்கு அவன் மேல் கோபமும் கொள்கிறான்.
தன் தந்தைக்காக ஒரு உரை தயாரித்துக் கொண்டிருக்கும் டேனியலை ஒரு குள்ள மனிதன் உறுத்து பார்த்துக் கொண்டிருக்கிறான். யார் அவன் என டேனியலும் வியந்துக் கொண்டிருக்கையில் அவன் டேனியலுடன் தனியாக பேச விரும்புவதாக சொல்ல தனியறைக்கு செல்கிறார்கள்.
அவன் தான் டேனியலின் தந்தையின் நண்பன் என பேருந்தில், உணவகத்தில் எடுத்த சில புகைப்படங்களை காட்டுகிறான், டேனியலின் தந்தை அவர் சொத்தில் தனக்கு எதுவும் எழுதி வைக்க வில்லை என வருத்தப்படுகிறான். உனக்கு எதற்காக எழுதி வைக்க வேண்டும் என கொதிப்புடன் கேட்கும் டேனியலிடம் ‘நான் உன் தந்தையின் காதலன்‘ என்ற உண்மையை வெளியிடுகிறான், அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் காட்டுகிறான்.
அதிலிருந்து ஆரம்பிக்கும் சம்பவங்கள் ப்ளாக் மெயில், ஆட்கடத்தல், கொலை முயற்சி, கொலை, பிணத்தை அப்புறப்படுத்துதல் என எல்லா நிகழ்ச்சிகளும் அவ்விறுதி சடங்கில் நடைபெறுகின்றன.
மார்த்தாவின் காதலன் மாத்திரையினால் ஏற்படும் மாயையினால் அடிக்கும் லூட்டிகள், டேனியலும் பீட்டரும் தன் தந்தையின் கௌரவத்தை காக்க எடுக்கும் முயற்சிகள், தன் காதலனை காப்பாற்ற மார்த்தாவின் முயற்சிகள். இவைகளை மிகச் சிறப்பான திரைக்கதையால் கோர்த்து படத்தை இயக்கியிருப்பவர் ப்ராங்க் ஓஸ் (Frank Oz).
ஒவ்வொரு நடிகரும் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பாத்திரத்தை கன கச்சிதமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் நகைச்சுவை படங்களை அறிமுகம் செய்து கொள்ள முதற்கட்டமாக இப்படத்தை பார்க்கலாம். வசன உச்சரிப்புகளை சரியாக புரிந்துக் கொள்ள துணையெழுத்துக்களுடன் பாருங்கள்.
ஒரு கட்டத்தில் வசன உச்சரிப்புகள் பழகியவுடன் ஒரு புதியவகை நகைச்சுவை உலகிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.
Entry filed under: திரை விமர்சனம்.
1.
shankar visvalingam | March 21, 2010 at 3:28 pm
நண்பரே,
சிறந்ததொரு அலசலுடன், இறுதிச் சடங்கில் ஒரு மரணம் எனும் பிரித்தானிய நகைச்சுவைத் திரைப்படம் குறித்த உங்கள் விமர்சனம் அருமை.
நீங்கள் படத்தில் காட்டியிருக்கும் மாண்டி பைத்தோன் இங்கும் கூட இன்றுவரையில் பிரபலமாக பேசப்படும் ஒரு படைப்பாகும். மேடை நாடகங்களாகக் கூட இன்றும் அரங்கேறுகிறது.
ரசனை என்பது இடங்களிற்கு இடம் வேறுபடுவதன் காரணம் அங்கு கிடைக்கும் மது வகைகளாலேயே என்கிறார் ஜுவாமி குத்தானந்தா 🙂
பிரிட்டிஷ் பிளாக் ஹ்யூமர் மிகவும் பிரசித்தமானது. அனுபவித்து ரசிக்கப் பட வேண்டியது.
அதே போன்று முட்டாள்களின் இரவு விருந்து, சொர்க்கத்தில் ஒரு குற்றம், அமிலி, போன்ற பிரெஞ்சு திரைப்படங்கள் குறித்தும் நீங்கள் எழுதிட வேண்டும். இது என் அன்பான வேண்டு கோள். இல்லையேல் ஏற்காட்டில் கோஸ்ட் பஸ்டர்ஸ் எனும் தொடரை ஜூவாமி குத்தானந்தா ஆரம்பிக்க தயாராக இருக்கிறார்!
கய் ரிச்சியின் கைகளில் ஷெர்லாக் எவ்வளவு ஸ்டைலிஷாக, கூலாக உருவாக்கப்பட்டிருக்கிறார். அவரது படங்களை அவரது பாணிக்காகவே ரசிக்கலாம். ரிச்சியின் கைகளில் நம் இளைய தளபதியை தந்தால் என்ன நடக்கும் என்ற கற்பனை உருவாகிறது.
சைமனிற்கு மட்டுமா பச்சையாய் தெரிகிறது 🙂
2.
sharehunter | March 21, 2010 at 4:12 pm
அன்பு நண்பரே,
கை ரிச்ஸியின் ஷெர்லக் ஹோம்ஸ் ஒருவித பித்த நிலையில் இருக்கும் ஒரு அதி புத்திசாலியை போல் காட்டியிருப்பார். படத்தின் வசனங்கள், வாட்சனுடன் உள்ள நெருக்கம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த படத்தின் கடைசிக் காட்சி ஒரு மாஸ்டர் பீஸ். நேரம் மற்றும் வாய்ப்பு கிடைப்பின் பாருங்கள். இப்படத்தை அமெரிக்காவில் மீண்டும் படமாக்குகின்றார்கள். எவ்வாறு அமையும் என தெரியவில்லை.
3.
கார்திக்கேயன் | March 21, 2010 at 9:07 pm
நண்பரே மிகவும் பிடித்த படம்,பகிர்வுக்கு நன்றி
தமிழிஷில் ஓட்டு போட்டுவிட்டேன்.
4.
manohar | March 23, 2010 at 11:03 am
thankyou sir.
5.
manohar | March 23, 2010 at 11:19 am
thankyou sir. what about share market technical analysis articles.