Archive for July, 2009
நிதி நிலை அறிக்கை #1
கடந்த திங்களன்று மத்திய அரசால் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் தாக்கம் சந்தையில் உடன் எதிரொலித்தது. அநேகமாக அடுத்த திங்கள் கிழமைக்குள் இந்நிதி நிலை அறிக்கையை மறந்து விட்டு சந்தையை பாதிக்கும் அடுத்த காரணிகளை தேடி போய் விடுவோம். அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை சதவீதம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் சரிவு, டாலரின் தொடர்ந்த சரிவு என நிறைய இருக்கின்றன.
ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் வெளியிட்டின்போதும், சந்தையானது அலைகழிக்கப்படும். சமயத்தில் சந்தையானது வெகுவேகமாக உயர்ந்தும் இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையின்போது கிட்டதட்ட 280 புள்ளிகள் தேசிய பங்குசந்தை இழந்திருக்கிறது. அப்போது இதனை ஒரு மோசமான நிதி நிலை அறிக்கை என முடிவு செய்து விடலாமா? திரு மன்மோகன் சிங் அளவிற்கோ, திரு ப சிதம்பரம் அளவிற்கோ தற்போதைய நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையை சமர்பிக்க வில்லை என கருதலாமா?
நிதி நிலை அறிக்கை இந்தியாவின் மிகச் சிறந்த நிதி நிர்வாக இயலாளர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்படுவது. தலைமை வகிப்பது நிதி அமைச்சர். எவ்வளவு பாதுகாப்பாக இவ்வறிக்கை உருவாக்கப்படுகிறது என்றெல்லாம் நமக்கு தெரியும். இவ்வளவு பேரின் உழைப்பினால் உருவாகும் அறிக்கையை இரு நாட்கள் வணிக தாட்களின் தலைப்புகளை மட்டும் படித்து விட்டு நம்மில் எத்தனை பேர் விமர்சனம் செய்கிறோம் அல்லது மனதில் நினைத்து கொள்கிறோம்.
ஒரு குழுமத்தின் காலாண்டு அறிக்கை வரும்போதும் சந்தையிலுள்ள ஆபரேட்டர்கள் இலாப நஷ்டத்தை பற்றி வதந்திகள் வெளியிட்டு பங்கின் விலையை ஆட்டுவிப்பார்கள். அதுபோலவே ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின்போதும் இவர்களின் Misinformation வணிக ஊடகங்களில் பரவி இது பற்றிய ஊகங்களை வளர்க்கும்.
இவ்வகையான ஊகங்களை ஊன்றி பார்த்தாலே சந்தை எவ்வாறு இருக்கும் என்பதை தர்க்க ரீதியாக சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு, வரவிருக்கும் நிதி நிலை அறிக்கையில் வருமான வரியே கிடையாது என சொல்லியிருக்கிறார்கள் என்ற ஒரு ஊகம் கிளம்பும். இது உண்மையா என நமக்கு தோன்றுவதற்கு முன்னரே, ஒரு ஊடகத்தில் ஒரு பெரிய புள்ளியோ அல்லது தொழிலதிபரோ இது ஒரு புரட்சிகரமான முயற்சி, ஏழைகளின் தோழன் என அரசு நிரூபிப்பதற்கு இதை தவிர வேறு காரணம் தேவையில்லை என தன் கருத்துகளை பகிர்ந்திருப்பார்.
அடுத்த ஜூன் மாதம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை என கற்பனை செய்து பார்க்கும்போதே தித்திக்கும். இதனால் நமக்கு கிட்டதட்ட பத்து சதவீதம் வரை வருமானம் அதிகமாக வரும், பக்கத்தில் ஒரு வீடு வேற விலைக்கு வருது வாங்கலாமா? என சிந்தனையோட்டம் போகும். இது போலவே ஒவ்வொரு துறை பற்றியும் ஏராளமான ஊகங்கள் அள்ளி வீசப்படும்.
நிதிநிலை அறிக்கையின்போது இப்படி ஒரு அறிவிப்பு வந்தால் என்னாகும் என கற்பனை செய்து பார்ப்போம்.
நிதி நிலை அறிக்கை வெளியாகும்போது, இந்தியாவில் உற்பத்தியாகும் நூல்களுக்கு விற்பனை வரியில் தள்ளுபடி என அறிவிப்பு வரும். அதனை வைத்து இந்தியாவில் உற்பத்தியாகும் உள்ளாடைகள் அதாவது ஜட்டிகளின் விலை குறையும் என பெரிய எழுத்தில் தொலைக்காட்சியில் வரும்போது, நீங்கள் எதிர்பார்த்தது நடக்காமல் ஜட்டி விலை குறைஞ்சு நாம என்ன செய்ய போறோம். அடப்பாவிகளா, இந்தாளு நம்மள நல்லா ஏமாற்றிட்டாரு என எண்ணி சந்தையானது கீழே போக ஆரம்பிக்கும்.
வருகின்ற நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு, அடுத்த காரணிகளுக்காக காத்துக் கொண்டிருப்போம். உண்மையில் ஜட்டி என்பது ஒரு சாதாரண விஷயமாக போய்விடுகிறது. ஆனால் அப்படியல்ல. ஜட்டியின் பின்னால் நிறைய விஷயம் இருக்கிறது அடச்சே இதுல வேற அர்த்தம் வருதே.. ஜட்டிக்கு பின்னால ஒரு பெரிய தொழிற்சாலையே இருக்கு. இந்த இடத்தில் படம் போட்டா நிறைய ஹிட்கள் கிடைக்கும் என்றாலும் தவிர்த்து விடுகிறேன்.
வருடந்தோறும் வாங்கப்படும் ஒரு பண்டமாகவே ஜட்டி இருக்கிறது. இது வாங்குவதற்கு சீசன் தேவையில்லை. ஏழை, பணக்காரன் என எல்லோரும் வாங்கும் ஒரு பண்டமாகவே இது இருந்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கும் ஒரு விஷயம். இந்தியாவின் மக்கள் தொகையில் 99 சதவீதம் வாங்கும் ஒரு விஷயமான இதற்கு எவ்வளவு பெரிய சந்தை இருக்க வேண்டும். எத்தனை கோடி ரூபாய் புழங்கும் சந்தை. அது எத்தனை பேருக்கு தெரியும்.
ஒரு இந்தியன் ஆண்டிற்கு சராசரியாக 10 ஜட்டிகளை உபயோகிக்கறார் என வைத்துக் கொள்வோம் (அட, ஒரு பேச்சுக்கு). மக்கள் தொகை 80 கோடி என வைத்துக் கொள்வோம். இந்தியாவில் அப்போது வருடத்திற்கு 800 கோடி ஜட்டிகள் விற்பனையாகின்றன. ஒரு ஜட்டியின் விலை சராசரியாக 20 ரூபாய் என வைத்துக் கொண்டால், 16,000 கோடி ரூபாய்கள். ஒரு ஜட்டியில் ஒரு குழுமத்திற்கு ரூபாய் நான்கு லாபம் என வைத்துக் கொண்டால், வருடத்திற்கு லாபம் ரூபாய் 2,400 கோடி.
மேலும் சில முக்கிய குறிப்புகள்: வருடந்தோறும் விற்பனை கூடுமே தவிர குறையாது. லாபத்தின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிக வண்ணங்கள் தேவையில்லை. புதிய டிசைன்கள் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. வந்தாலும் பழைய சரக்குகளுக்கு மவுசு உண்டு. சைஸ் மட்டும் பார்த்து சில நிமிடங்களில் தேர்வு செய்யும் ஒரு பண்டம் இது. (‘அட, சட்டுன்னு ஒரு ஜட்டி எடுத்துட்டு வாப்பா, நேரமாகுது’)
இதில் ரூபாய் ஆயிரத்திற்கு மேலாகவும், ரூபாய் பத்திற்கும் உள்ளாடைகள் கிடைக்கின்றன. இதில் வெளிநாட்டு பிராண்ட்கள் வேறு. கல்வின் க்ளைன், ஹன்ஸ் போன்ற அமெரிக்க பிராண்ட்கள். பூம்புகார், டான்டெக்ஸ் போன்ற உள்ளூர் பிராண்ட்கள். பிராண்ட் எதுவுமில்லாத உள்ளூர் காட்டன் ஜட்டிகள்.
ஒவ்வொரு ஜட்டிக்கும் எலாஸ்டிக் தேவை. இந்த பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்குழுமங்கள். உள்ளூர் ஜட்டிகளை ஊக்குவிக்கும் பொருட்டு கொடுக்கப்படும் இந்த வரி சலுகையினால் இனி வரும் பன்னிரண்டு மாதங்களில் இது தொடர்பான குழுமங்கள் ஒரு கணிசமான அளவு லாபத்தினை ஈட்டும். நாம் சாதாரணமாக வாங்கும் ஒரு ஜட்டிக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என புரிந்து கொண்டால் நிதி நிலை அறிக்கையின் ஒவ்வொரு பத்திகளும் ஆர்வமூட்டுவதாக ஆகிவிடும்.
இந்த வாரம் வெளியான நிதிநிலை அறிக்கையின் சில முக்கிய விஷயங்களை வரும் பாகங்களில் பார்ப்போம்.
நிதிநிலை அறிக்கை 2009
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிதிநிலை அறிக்கை மங்களகரமாக 06.07.2009 அன்று வெளியாகிவிட்டது. எதிர்பார்த்தவாறே சந்தையும் 280 புள்ளிகள் வரை இறங்கி தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறது.
கடந்த வெள்ளியன்றே, உப்புசப்பற்ற ரயில்வே நிதிநிலை அறிக்கையின்போதே, அமெரிக்க சந்தை 280 புள்ளிகள் இறங்கியபோதிலும், நமது சந்தை ரயில்வே அமைச்சரை பாராட்டி 75 புள்ளிகள் ஏறி முடிந்தது. அதை கெட்ட சகுனமாகவே நினைத்தேன். நேற்றைய காலைவரை சந்தை 30 புள்ளிகளில் ஏறி மெள்ள மெள்ள விற்பனை பளு அதிகரிக்கும்போதும் நிறைய பேர் சுதாரித்துக் கொள்ள வில்லை என தெரிந்தது. 150 புள்ளிகள் இறங்கிய பின்னரும் மீண்டும் ஏறிவிடும் என நம்பி வாங்கியவர்கள் நிறைய பேர் என கேள்விபடுகிறேன்.
இதற்கெற்றாற்போல் நிதிநிலை அறிக்கைக்கு பிறகு சந்தை 5 முதல் 10 சதவீதம் வரை ஏறும் என செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. பொதுவாக நிதிநிலை அறிக்கை வெளியாகும்போது ஒருவித பொது மனநிலைக்கு சந்தை தள்ளப்படும். அன்றைய தினம் கரடிகள் கை ஒங்கியிருந்தால், நல்ல முடிவுகளும் தவறாக எண்ணப்படும். காளைகள் சந்தையில் தவறான முடிவுகளும் சரியாக எண்ணப்படும்.
நிதியமைச்சர் அறிக்கையை படிக்கும்போது வெளியாகும் சின்னச் சின்ன அறிவிப்புகளை வைத்து ஒரு முழு நிதிநிலை அறிக்கையை அளக்க முடியாது. எதிர்கட்சிகள் பொதுவாக இது ஒரு வெத்துவேட்டு பட்ஜெட் என்பார்கள். ஆளுங்கட்சியினர் இது ஏழைகளின் பட்ஜெட் என்பார்கள். குறைந்தபட்சம் 24 மணி நேரம் சென்றபிறகு தான் இந்த நிதி நிலை அறிக்கை எவ்வாறு என்பது தெரியும். ஒவ்வொரு நிதி அமைச்சரும் தன்னுடைய ஸ்டைலில் சமர்பிக்க வேண்டிய அறிக்கை இது. மறைமுகமாக அவர் புகுத்தியிருக்கும் சில செய்திகளை அறிய சிறிது கால அவகாசம் கொடுத்தே படிக்கப்பட வேண்டிய அறிக்கை இது.
நிதிநிலை அறிக்கை படித்தாயிற்று, சந்தையும் ஆடி அடங்கிவிட்டது. அடுத்தது என்ன? என மறந்து விடக் கூடாது. அடுத்த பனிரெண்டு மாதங்கள் வரை இதன் தாக்கம் எவ்வாறு என்பதை சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டாமா? இந்த நிதிநிலை அறிக்கை படிப்படியாக சிறிது விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட புதிய வேலை பளுவினால் இணையம் பக்கமே வர முடியாமல் போய்விட்டது. இருப்பினும் எழுத நேரம் ஒதுக்கி முயற்சிக்கிறேன்.
தினமும் இங்கே கருத்தினை எதிர்பார்த்து வந்த நண்பர்களுக்கு என் நன்றியையும், என் இயலாமையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thanks for your support, guys!
Recent Comments