Archive for July 28, 2009
ஹாரிபாட்டரும் மிக்சரும் க்வாட்டரும்
சொந்த வாழ்வில் துயரத்துடன் தன் மகளுடன் ஒருநாள் ரயிலில் சென்றுக் கொண்டிருக்கையில் உதித்த ஒரு எண்ணத்தை வைத்து ஜே கே ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதைத் தொடர்கள் இந்த அளவிற்கு பிரபலமாகும் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஹாரிபாட்டரை தெரியவில்லையென சொன்னால் பொடிசுகள் நம்மை பார்க்கும் கேவலமான பார்வையை தவிர்க்க படிக்க ஆரம்பித்தவர்கள் அப்படியே அந்த புத்தகத்திலே ஆழ்ந்துவிட்டார்கள். அடுத்த பகுதிக்காக உலகமே காத்திருக்க ஆரம்பித்தது.
மாயாஜாலம் கலந்த கதைத் தொடர்கள் நிறைய ஆங்கிலத்தில் உண்டு. கொஞ்சம் டிராகன்கள் (‘யோவ், யாருய்யா நீ, மேஜிக் கதைன்னு எடுத்துட்டு வந்துட்ட, ஒரு டிராகன் கூட இல்லை’) , குள்ள மனிதர்கள், சூனியக்காரி என ரெடி ரெஸிப்பிகளும் உண்டு. அதைத் தாண்டி இந்த தொடர் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரு புதிய உலகத்தை உருவாக்கி மெள்ள மெள்ள அதில் நம்மை இழுத்ததுதான். இதற்கு முன் எழுத்தில் இந்த மாயாஜாலத்தை ஜே ஆர் ஆர் டோல்கியன் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் நிகழ்த்தியிருக்கிறார். த ஹாபிட் மற்றும் த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற புத்தகங்களில் மிடில் எர்த் என்ற ஒரு மாய உலகை உருவாக்கி அதன் பாத்திரங்களுடன் நம்மை உலவ விட்டிருப்பார்.
இரண்டாம் உலகப்போரின் நடுவே எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் வழக்கமாக மாயாஜால புத்தங்களுக்கு கொடுக்கப்படாத இலக்கிய அந்தஸ்தை அடைந்தன. அதனை ஹாலிவூட் படமாக்க நினைத்த போது உலகமெங்கும் இருந்த டோல்கியன் இரசிகர்கள் கோபம், கொலைவெறி என இரசிப்புத்தன்மைக்கேற்ப உணர்ச்சியை அடைந்தனர். ஆனால் பீட்டர் ஜாக்ஸ்ன் கதையை சிதைக்காமல் அவருக்குரிய சுதந்திர தன்மையுடன் கதையை திரை வடிவில் சிறப்பாக அளித்து பாதிப்பேரின் (இன்னும் நிறையபேர் திரைப்படத்தினை பார்த்து உறுமிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்) பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டார்.

இன்னுமாடா இந்த உலகம் நம்ம நம்பிட்டு இருக்கு
ஆனால் ஹாரிபாட்டருக்கு நேர்ந்த கதி கொடுமையானது என்றுதான் சொல்ல வேண்டும். கதைத் தொடர் முடிவடையும் முன்னரே ஹாலிவூட் இந்த கதைத் தொடரை சிதைக்க தயாராகிவிட்டது. ஆரம்பத்திலிருந்து இந்த கதைத் தொடரை காத்திருந்து படித்தவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரை ஒரு படம் கூட தேறவில்லை. வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் இரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் வயிற்றெரிச்சலுக்கு ஆளாக்கிய படங்கள் இவை.
ஹாரிபாட்டர் கதைத் தொடரின் முக்கிய அம்சத்தை நாம் சின்ன வயதிலேயே படித்திருப்போம். ஒரு ரூபாய், ஐம்பது பைசா விலைகளில் வந்த அழுக்கு காகிதங்களில் அச்சான ‘அந்தரத்தில் வந்த மந்திர பூதம்’, ‘மேகமலை ராட்சதன்’, ‘சரசுக்குட்டி’ போன்ற புத்தகங்களில் வந்த கதைதான்.
ஒரு நாட்டினை ஒரு ராட்சதன் அல்லது ஒரு பூதம் அல்லது ஒரு மந்திரவாதி பயமுறுத்திக் கொண்டிருப்பான். ராஜகுரு கதாநாயகனான இளவரசனை அழைத்து இந்த நாடே உன்னை நம்பிதான் இருக்குன்னு சொல்ல, இளவரசன் தன் அள்ளக்கையுடன் குதிரையில் கிளம்பி, போகும் வழியில் ஒரு பிகரை பிக்அப் பண்ணும்போது ஒரு உண்மையை கண்டறிவான்.
அதாகப்பட்டது, அந்த ரா (அ) பூ (அ) ம-யை நேரடியாக யுத்தம் செய்து கொல்ல முடியாது. அவனது உயிர் ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி அங்குள்ள ஒரு குகையில் உள்ள ஒரு வண்டில் உள்ளது. அந்த வண்டை கைமா செய்தால் பலானவர் டிக்கெட் வாங்கிவிடுவார்.
ஹாரிபாட்டரின் கதைத்தொடரில் முக்கிய அம்சமே இதுதான். ஆனால் கதையுலகை உருவாக்கிய விதத்தில் கதாசிரியரின் திறமையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும். அம்மாயவுலகை அப்படியே வார்த்தைகளில் செதுக்கியிருக்கிறார். கதைத் தொடரை படிப்பவர்கள் அவ்வுலகில் வாழ வேண்டும் விரும்ப ஆரம்பித்தாலே கதாசிரியர் வெற்றி பெற்று விட்டார். உலகின் பல்வேறு பிரபலங்கள் அவ்வுலகின் வலையில் விழுந்ததே கதையின் வெற்றிக்கு காரணம். வாடிகன் இந்த புத்தகத்தை வெறுக்க ஆரம்பித்ததும் அப்போதுதான்.

நான் உன்னோட பத்திரமா இருக்கேன், ஹாரி. (நாங்க அப்படி இல்லீயே நைனா)
ஆனால் திரைப்படங்கள்…… சகிக்க முடியாத வகையில் எடுக்க ஆரம்பித்தனர். நானும் விடாமல் ஏதாவது ஒரு பாகத்தில் புரிந்துக் கொண்டு நன்றாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பார்த்தால்… நல்லவன்னு நினைச்சுட்டாங்க.. சமீபத்தில் வெளியாகிய The Half-Blood Prince பார்த்து நொந்து போய் வெளியில் வந்தால் திரைப்படம் அமெரிக்காவில் வசூலை அள்ளுகிறது என தகவல் வர வெறுத்துபோய்விட்டேன்.
இக்கதைத் தொடரை படிக்காதவர்கள் இப்படங்களை பார்க்கும்போது எவ்வாறு உணர்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை. படித்தவர்கள் வேதனைப்படுவார்கள் என்றே நான் உணர்கின்றேன். ஹாரிபாட்டர் அவனுடைய நண்பர்கள் மற்றும் செவரஸ் ஸ்னேப் ஆக ஆலன் ரிக்மேன் இதைத்தவிர மற்ற துணை கதாபாத்திரங்களை பற்றி எதுவும் விசேஷ அக்கறை எடுத்ததாக தெரியவில்லை. கதையை படிக்கும்போது அந்த உலகத்தினை பற்றி ஏற்பட்ட ஒரு கற்பனையை படத்தில் சிதறடித்திருக்கிறார்கள்.
கதைத் தொடர் முடிவதற்குள் மற்றும் அதன் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்கள் வயது ஏறிக் கொண்டே இருப்பது போன்ற நேரக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்த பிரமாண்ட கதைத் தொடரை தயாரிக்கும்போது உரிய முன் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அல்லது சித்திர திரைப்படமாகவாது எடுத்திருக்கலாம். இப்போது வேண்டுமானால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வசூலை அள்ளலாம். இன்னும் சில காலம் கழித்து விமர்சகர்களின் நேர்மையான விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இந்த நூற்றாண்டின் இறுதியில் வந்த மிகச் சிறந்த கதைத் தொடரானது படமாக்க பட்ட விதத்தை ஹாலிவூட் ஒரு அவமானமாக கருதும். அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.
Recent Comments