Archive for July 24, 2009
Princess Mononoke – திரை விமர்சனம்
பலத்த மழைக்கு பிறகு ஆள் நடமாட்டம் குறைந்த கடற்கரையில் நடந்து செல்கின்றீர்கள். கருமேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு தீடிரென வெளிப்படும்போது கடவுள் உங்கள் அருகே கைக்கோர்த்து அமர்ந்து இருப்பது போல தோன்றியிருக்கிறதா? நல்லது. இது பற்றி உங்கள் அலுவலக நண்பர்களிடம் அப்படியே சொன்னால் அன்றைய தினத்திலிருந்து உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதை தவிர்த்து விடுவார்கள். என்னிடம் கடவுள் தன்மை இருக்கிறதா என்ற கேள்வியை உங்கள் மேலதிகாரி கண்டிப்பாக ரசிக்க மாட்டார். நான் கடவுள் என சொன்னால் சீட்டு கிழித்து விடுவார்கள்.
இன்றைய விஞ்ஞான உலகத்தில் கடவுள்கள் கோயில்களில் அடைக்கப்பட்டு விட்டார்கள். அதை தவிர வேறு எங்குமே அவரை காண இயலாது. அங்கே தவிர வேறு எங்கும் அவரை பற்றி பேச முடியாது. மின்சாரம் தடைபடும்போது மெழுகுவர்த்தியை தேடுவதுபோல பிரச்சினை வரும்போது நினைவு வரும். மின்சாரம் திரும்ப வந்தவுடன் மெழுகுவர்த்தியின் நிலைதான் அவருக்கும். விஞ்ஞானம் நம்மிடம் நெருங்கி வர, கடவுள் விலகி போய்விட்டார்.
ஆனால் உலகமெங்கும் காணப்படும் அனைத்து நாடோடி கதைகளிலும் கடவுள்கள் நம்மோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதை ஒரு சாதாரண விஷயமாகவே சொல்கின்றன. பகவத்கீதை, பைபிள் போன்ற மதநூல்களும் இந்த உண்மையை பதிந்துள்ளன. அப்போது மலையுச்சிகள், பாலைவன சோலைகள், அடர்ந்த காடுகள் கடவுள்களின் வசிப்பிடமாகவே கருதப்பட்டன.
இது போன்ற ஒரு கதைதான் ‘இளவரசி மோனோன்கோ’. இயக்கம் மியஸகி.

காட்டின் நடுவே உள்ள குளம்
தீய ஆவியினால் பீடிக்கப்பட்ட ஒரு காட்டுப் பன்றியின் தாக்குதலை தடுக்கும்போது அந்த பிராந்திய இளவரசன் அஷிடகா அதை அழித்து விடுகிறான். அந்த முயற்சியில் அவனுக்கு கையில் காயம் பட்டுவிடுகிறது. அந்த சபிக்கப்பட்ட காயம் அவன் உடம்பில் பரவி உயிரை குடித்து விடும் என அறிய வரும்போது, அந்த காட்டுப்பன்றியின் இருப்பிடத்தை தேடி ஒரு நெடும் பயணம் செல்கிறான்.
இரும்பு கோட்டை என்ற பெண்களாலேயே ஆளப்படும் ஒரு கிராமம். அதன் தலைவிக்கு அந்த கிராமத்தை சுற்றியிருக்கும் காட்டை அழிக்க வேண்டுமென்ற உத்வேகம். ஏனென்றால் அந்த கிராமத்தின் வலிமையான துப்பாக்கி தோட்டாக்கள் உருக்க தேவையான தீயை அந்த காட்டின் மரங்கள் அளிக்கின்றன. அந்த காட்டில் அவளின் உயிரை குடிக்க காத்திருக்கும் எதிரி.
இத்தகைய வளமையான, வலிமையான கிராமத்தை தாக்கி கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு சமுராய் பிரபு. அந்த கிராமத்தை கைப்பற்ற அவன் போடும் போர்வியூகங்கள்.
அந்த காட்டில் மான் தேவதை பகலில் மானாகவும், இரவில் காட்டின் பாதுகாவலரகவும் மாறி காட்டை ஆட்சி செய்கின்றது. அதன் இரத்தம் பட்டால் மட்டுமே அஷிடாகாவின் சாபம் குணமடையும். அந்த தேவதை உருமாற்றம் அடையும் அந்த நேரத்தில் அதன் தலையை வெட்டி எடுக்க அலையும் ஒரு கும்பல்.
அந்த காட்டில் மூன்று ஓநாய்களுடன் அலையும் ஒரு பெண். அந்த காட்டை அழித்துக் கொண்டிருக்கும் இரும்புக் கோட்டையின் தலைவியை அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்பவள்.
அங்கே செல்லும் அஷிடாகாவால் அந்த சூழ்நிலைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைதான் மியஸகி கவிதைமயமான தருணங்களுடன் விவரிக்கின்றார்.
மூன்று ஓநாய்களுடன் சுற்றும் பெண், காட்டின் நடுவே உள்ள ஒரு குளத்திற்கு வரும் மான் தேவதை, காட்டுப் பன்றிகளின் படை என பல்வேறு கதாபாத்திரங்களுடன் மியஸகி படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கையும் காடு வடிவத்தில் முக்கிய வேடத்தை ஏற்றிருக்கிறது.
மியஸகியின் சித்திர திரைப்படங்களில் சற்றே பெரிய திரைப்படம்தான். ஆனால் படம் முடிந்த பிறகுதான் அது நமக்கு தெரியும்.
ஜே ஆர் ஆர் டோல்கியனால் எழுதப்பட்ட ‘த லார்ட் ஆப் த ரிங்ஸ’ ( The Lord of the Rings) புத்தகத்தை பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு விமர்சனம் இருந்தது.
‘ஆங்கிலம் தெரிந்தவர்களை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று இந்த புத்தகத்தை படித்தவர்கள், மற்றொன்று இதை படிக்காதவர்கள் என.’
அதுபோலவே, மியஸகி படங்களுக்கு எந்தவித ஸ்டார் ரேட்டிங்கும் தேவையில்லை.
Recent Comments