Archive for May 25, 2009

Hava Nagila – Song

        பங்கு சந்தையை பற்றி முதலில் எழுதும்போது சந்தையில் நுழையும்போது நம் மனநிலை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை பற்றி இரு பதிவுகள் எழுதினேன்.  அதன் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன

 1 Enter with Joy

 2 Enter with Joy II

       அதனை தொடர்ந்து இந்த பதிவினை எழுதி பதிவேற்றம் செய்யவில்லை.  எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை பற்றி பகிர்ந்து கொள்வதற்காக எழுதினேன்.  அந்த சமயத்தில் இதனை பதிவேற்றம் செய்தால் இவ்வலைப்பூவினை படிக்கும் நண்பர்கள் குழம்பிவிடுவார்களே (ம்க்கூம்.. இப்போ மட்டும் என்ன வாழுதான்) என எண்ணி ட்ராப்டாகவே வைத்து விட்டேன்.

      சந்தை எந்த டெக்னிகலிலும் மாட்டாத இந்த வாரத்தில் பழைய பதிவுகளை எல்லாம் பார்ததுக் கொண்டே வரும் போது இந்த பதிவு பதிவேற்றப்படாமலே இருந்ததை பார்த்தேன்.

      ஹவா நகிலா என ஆரம்பிக்கும் இந்த பாடல் ஒரு யூத பாடலாகும்.  அதன் வரிகள் ஹீப்ரூ மொழியை சேர்ந்தவை.  சில வரிகளே அந்த பாடல். 

    ‘  வாருங்கள் கொண்டாடுவோம், மகிழ்ச்சியாக பாடுவோம், சகோதரர்களே விழித்துக் கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக ஆடுவோம்‘’

      இவ்வளவுதான் இப்பாடல் வரிகளின் அர்த்தம்.  இதென்ன பிரமாதம்?  கேட்டு பாருங்களேன். தெரியும். 

      இந்த பாடலை கேட்டு ஆடாத யூதர்களே கிடையாது.  இஸ்ரேல் நாட்டின் ஆரம்ப வருடங்களில், இஸ்ரேலை சுற்றி அரபு நாடுகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த போதிலும் யூத மக்கள் இந்த பாடலை பாடி ஆடியிருக்கிறார்கள். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துக் கொண்டிருக்கின்றன,  விமானங்கள் எந்த நேரத்திலும் குண்டு போட்டு தாக்கும் நிலை, உலக நாடுகள் பெரும்பாலும் ஆதரிக்காத நிலை, தோல்வியானது கண்ணுக்கு எட்டிய தொலைவில்தான் இருக்கிறது. இருந்த போதிலும் அவர்களால் அந்த  நெருக்கடியான சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக, மன உறுதியுடன் இருந்து  பாடி ஆடிய பாடல் இது.

      இப்பாடலை நீங்கள் மறைமுகமாக நிறைய தடவை கேட்டிருப்பீர்கள். இப்போது கேட்டால் எங்கேயோ கேட்டது போலவே தெரியும்.  பொதுவாகவே உலக புகழ் பெற்ற பாடல்களை நாம் தமிழ் திரைப்படங்களில் எடுத்தாண்டிருப்பார்கள். எல்லாமே கேட்ட மாதிரிதான் இருக்கும். 

      இந்த பாடலானது விக்ரம் திரைப்படத்தில் இளையராஜா இசையில் ‘எஞ்சோடி மஞ்சக்குருவி’ என ஆரம்பிக்கும்.  இளையராஜா இந்த பாடலின் மூலத்தை தெரியப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன்.  சரியாக நினைவில்லை. இந்த பாடலானது உலகத்தில் பல்வேறு இசை குழுக்களால் பாடப்பட்டு வந்தபோதிலும் இந்த பாட்டிற்கு அவர்கள் கிரெடிட் கொடுத்திருப்பார்கள்.  இப்பாடலானது இந்தி திரைப்படங்களிலும் கண்டிப்பாக வந்திருக்கும்.  அந்த காலக்கட்டங்களில் தமிழ் திரைப்பட இசையைதான் இந்தியில் எடுத்தாண்டிருப்பார்கள்.

     சமீபத்தில் வந்திருக்கும் ‘மொழி’ திரைப்படத்தில் இந்த பாடல் மிக அருமையாக அப்படியே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். நினைவு இருக்கிறதா?  பிரகாஷ் ராஜ் குளித்துவிட்டு துண்டுடன் பாடி ஆடுவாரே?  பின்னணியில் இப்பாடல்தான் ஒலிக்கும். அவர்களாவது இப்பாடலை உபயோகப்படுத்தியதற்கு கிரெடிட் கொடுத்தார்களா என தெரியவில்லை. 

    இப்பாடலை நிறைய குழுவினர் பாடியிருக்கிறார்கள். முதலில் Andre Rieu இசைக் குழுவினரால் பாடப்பட்ட இப்பாடலை கேட்க கீழே உள்ள சுட்டியில் பாருங்கள்.

                                 

                     http://www.youtube.com/watch?v=BFtv5qe5o3c

 

                காலையில் எழுந்து  உற்சாக மனநிலைக்கு மாற கண்டிப்பாக இப்பாடலை கேட்கலாம்.  துண்டுடன் ஆட்டம் போடுவது உங்கள் விருப்பம்.

May 25, 2009 at 11:38 pm 6 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
May 2009
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031