Archive for May 8, 2009
Ponyo on the Cliff by the Sea
மியகஷியின் மற்றொரு அற்புதம். இந்த வருடத்தில் வெளிவந்த சித்திரத் திரைப்படம். இவரின் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் மியகஷி இரசிகர் மன்ற தலைவர் ஆக ஆக்கிவிட்டார்கள். நானும் ஏதேனும் குற்றங்குறைகளை கண்டுபிடிக்கலாம் என்றுதான் பார்க்கிறேன்.
ஒவ்வொரு நாட்டிலும் கடல் பற்றிய புனைவுகள் உண்டு. கடல் சார்ந்து வாழ்க்கின்றவர்களின் புனைவுகள் சிறிது மாயத்தன்மை கலந்தவையாகவே பெரும்பாலும் இருக்கும். அவற்றிலிருந்து உருவாக்கப்பட்டது தான் இத்திரைப்படத்தின் கதை.
கடலின் ஆழத்தில் உள்ள ஒரு மந்திர நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஒரு மந்திர சக்தி வாய்ந்த, மனித முகம் கொண்ட ஒரு தங்க மீன் வெளியுலகை (நம் உலகம் மாசுலகம் என்று படத்தில் அழைக்கப்படுகிறது) பார்க்க தன் தந்தையை மீறி கிளம்புகிறது.

சஸ்கே
கடலுக்கு அருகே உள்ள ஒரு சிறு குன்றின் உச்சியில் வசிக்கும் சஸ்கே என்னும் சிறுவனின் நட்பு அவளுக்கு அங்கே கிடைக்கிறது. அவன் அவளை பொன்யோ என பெயரிட்டு ஒரு வாளியில் வைத்து நட்பு பாராட்டுகிறான்.

பொன்யோ - தங்க மீன்
இதற்கிடையில் அவளின் தந்தை பொன்யோவை தேடிக்கொண்டு வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். அவளை பிரிந்து துயரமடைகிறான் சஸ்கே.
ஆழ்கடலில் பொன்யோவிற்கும் அவள் தந்தைக்கும் கடும் வாக்குவாதம் நடக்கிறது. அவள் மீண்டும் மேலே செல்ல விரும்புகிறாள். அவள் தந்தையோ மனிதர்கள் நம்ப தகுந்தவர்கள் இல்லை என்கிறார். சொன்ன பேச்சை கேட்காத பொன்யோவை உறைய வைத்து விட்டு தந்தை வெளியேறுகிறார்.

பொன்யோவின் நைனா
சஸ்கே மீது கொண்டிருந்த நட்பு அவளை அந்த உறைநிலையிலிருந்து விடுவித்து தன் சகோதரர்களின் துணையோடு கடடலைகள் பொங்க, மனித உருவம் கொண்டு அவனை நோக்கி செல்கிறாள் பொன்யோ. மலை உச்சியை நோக்கி காரில் சஸ்கே செல்ல, அதற்கு இணையாக கடடலைகள் மேலேறி மீன்களின் மேலேறி அவனை நோக்கி பொன்யோ ஒடும் காட்சி மிக அற்புதமானது.
அவனை நோக்கி ஒடிவந்து தான் பொன்யோ என அறிமுகப்படுத்திக் கொள்ளும் குழந்தைத் தனமும் அதன் பிறகு அவனின் வீட்டில் அவள் அடிக்கும் கும்மாளங்கள் எல்லாமே குழந்தை மனதை மிகவும் படித்திருக்கின்ற ஒரு இயக்குநரின் மிகச் சிறந்த திரைக்கதையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
அவள் மனித உருவம் எடுத்திருப்பதால் இயற்கை சமநிலை குலைந்து விடுவதால் கடல் சீற்றமடைந்து அருகிலுள்ள நிலப்பகுதிகளை மூழ்கடித்து விடுகிறது. இது சீர்ப்பட வேண்டுமானால் பொன்யோ மீண்டும் தங்க மீனாக வேண்டும். தன் நண்பனை இழக்க வேண்டும். அவள் தன் நண்பனை இழந்தாளா? என்பதுதான் கதை.
இந்த படத்தின் முடிவுக் காட்சிகள் திருப்திக் கரமாக இல்லையென என் நண்பர் ஒருவர் சொன்னார். உண்மைத்தான். இவரின் அனைத்துப் படங்களிலும் முடிவு காட்சிகளை பார்க்கும் பொழுது அப்படிதான் நானும் உணர்ந்திருக்கிறேன். காரணம் என்னவென்று யோசித்துப் பார்க்கும்போது நம் மனதிற்கு பிடித்த ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் போது அவை தீடிரென முடியும் போது பிடிக்குமா என்ன?
Recent Comments