Archive for May 2, 2009
தேர்தல் பட்டங்கள் !
நம் மாநிலத்தில் இந்த மாதம் தேர்தல் வருகின்றது. வீட்டின் நிலவறையில் பலநாட்களாக செய்தித்தாட்களை படிக்காமல் இருந்தால் கூட உங்களால் இப்போது உணர முடியும். ஆடித் தள்ளுபடி, அட்சய திரிதியை போல தேர்தல் காலங்களிலும் சில வியாபாரங்கள் கொடி கட்டி பறக்கும்.
இந்த காலத்தை உபயோகப்படுத்தி வருமானம் பார்க்கலாம் என உத்தேசித்துள்ளேன். அதற்கு முன் ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் கண்டுபிடித்துக் கொள்வது நல்லது.
இந்த தேர்தலில் முக்கியமான பங்கு வகிப்பது எது?
1) கட்சிக் கொடிகள் (என்னிடத்தில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் வசதிகள் இல்லை)
—–இல்லை.
2) வண்ண போஸ்டர்களா? (என்னிடத்தில் அச்சடிக்கும் இயந்திரங்களும் இல்லை)
—–இல்லவே இல்லை)
3) பட்டங்கள் (இதற்கு எதுவுமே, எதுவுமே தேவை இல்லை)
—மிகச் சரியான பதில்.
எனவே தேர்தலை முன்னிட்டு சகல கட்சிகளும் பொதுவாக சில பட்டங்களை உருவாக்கி இங்கே அளித்துள்ளேன். தேவைப்படுவோர் உபயோகப்படுத்திக் கொண்டு, இந்த ஏழைக்கு ஒரு சிறிய அன்பளிப்பினை அளித்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
1) சங்க தமிழின் சகாவே!
– இந்த பட்டத்தினை இளைஞர்களும் பயன்படுத்தலாம். பள்ளி தேர்வில் தமிழில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் இதை பயன்படுத்தலாம் என்பது தான் இதன் சிறப்பு.
2) வரலாற்றை மாற்றி எழுதிய புவியியலே!
– பட்டங்களை ஆராயக்கூடாது அனுபவிக்கணும் என்பது மூத்தோர் சொல்.
3) ஆசியாவின் அடைக்கலமே!
– கொஞ்சம் க்ளோபல் டச் வேண்டுமென்றால்
4) சீனாவின் சிம்ம சொப்பனமே!
– பாராளுமன்ற தேர்தல் என்பதால் மற்றொரு க்ளோபல் டச். சீனர்களுக்கு தமிழ் தெரியாது என்பது உலகறிந்த விஷயம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
5) பாராளுமன்ற பாறையே!
– இதை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு பயன்படுத்தலாம்.
6) காவிரியின் தகப்பனே!
– இது சமயத்தில் வேறுவிதமான அர்த்தத்தினையும் அளிக்கக்கூடியது. கவனமாக உபயோகப்படுத்தவும்.
7) தமிழ்நாட்டின் தர்மதுரையே!
– கேக்கும்போதே சும்மா அதிருதுள்ளே!
8) இசை தமிழின் நாடகமே !
9) நாடகத் தமிழின் இசையே!
– வந்து.. அதாவது தமிழை இரண்டோ மூன்றாகவே பிரிக்கிறார்கள். அதான்.
இப்பட்டங்களை வலைப்பதிவர்களும் பயன்படுத்தலாம் என்றும், அதற்கு பட்ட ஆசிரியரின் முன் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
Recent Comments