Archive for April 18, 2009
Kiki’s Delivery Service – விமர்சனம்
ஒரு இளம் மாலை நேரம். காற்று மெள்ள மெள்ள வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு அழகான ஏரிக்கரை. அருகிலுள்ள புற்களின் மேல் ஒரு இளம் சிறுமி கண்மூடி படுத்து வானொலி கேட்டுக் கொண்டிருக்கிறாள். Hayao Miyazaki எனும் அற்புதமான இயக்குநரின் மாயாஜாலம் திரையில் ஆரம்பமாகிறது.

பட போஸ்டர் (ஆங்கில மொழி)
அது ஒரு சூனியக்காரிகள் வசிக்கும் கிராமம். அக்கிராம வழக்கப்படி பதிமூன்று வயதாகும் இளம் சூனியக்காரிகள் அக்கிராமத்தை வெளியேறி ஒரு வருடம் வெளியே வசிக்க பழகிக் கொண்டிருக்க வேண்டும். அந்த காலமானது அவர்களது திறமைகளை அடையாளம் காண உதவும் என நம்புகிறார்கள். இளம் சூனியக்காரியான கிகி தனது பெற்றோரின் தயக்கமான அனுமதிக்கு பிறகு தன் தாயாரின் துடைப்பத்தில் தன் செல்லக் கருப்புப் பூனையுடன் ஏறி தான் வசிக்கப் போகும் நகரத்தைத் தேடி பறந்து செல்கிறாள்.
கடலையே பார்த்திராத அவள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு நகரத்திற்கு வந்து சேர்கிறாள். அந்த நகரம் அவளை எவ்வாறு எதிர்கொள்கிறது, கிகி நகர வாழ்க்கைக்கேற்ப மாறிக் கொண்டாளா? அந்நகரம் அவளுக்கு கற்றுக் கொடுத்த பாடம்தான் என்ன?
ஆரம்பத்தில் அந்நகரத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்படும் கிகிக்கு ஒரு பேக்கரி நடத்தும் பெண்மணி அடைக்கலம் கொடுக்கிறாள். தன் பறக்கும் சக்தியால் ஒரு கூரியர் சர்விஸ் ஒன்று நடத்தவும் ஆரம்பிக்கிறாள். அவளுடன் பழக விரும்பும் ஒரு சிறுவனை ஆரம்பத்தில் புரிந்துக் கொள்ளாமல் விரட்டியடிக்கும் கிகி பின்னர் மனம் மாறி அவனுடன் நட்பு கொள்கிறாள். அந்த சமயத்தில் அவளுடைய பறக்கும் சக்தி அவளை விட்டு போய்விடுகிறது.
அதற்கு காரணம் அவன்தான் என துயரமடையும் கிகி தன் சக்தியை ஒரு தேடுதலுக்கு பிறகே அடைகிறாள். அதன் பின்னர் அவனுக்கு ஏற்படும் ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றி அவனுடன் தன் நட்பை மீண்டும் தொடர்கிறாள். இந்த கதையை அவர் எடுத்திருக்கும் விதம் பிரமிக்கதக்கது.

படத்தின் ஆரம்பக் காட்சி
ஒரு மழைக்கால இரவில் பயணத்தை தொடங்கும் அவள் பயணம் தன் இனிய நண்பனை காப்பாற்றுவது வரைக்கும் அருமையான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு கடற்கரை நகரம் மழைக்காலத்தில் எவ்வாறு இருக்கும், பறக்கும்போது காற்று திசைமாறும்போது ஏற்படும் திருப்பம், காட்டின் நடுவே இருக்கும் அழகிய ஒவியப் பெண்ணின் சிநேகிதம் என ஏகப்பட்ட கவிதைமயமான சித்திர திருப்பங்கள்.
உங்களுக்கு நான்கு வயது முதல் பத்து வயது வரையிலான குழந்தைகள் இருந்தால் அவர்களோடு உட்கார்ந்து பாருங்கள். நாமும் இப்படிதானே? ஆரம்பத்தில் நமது வீட்டின் அருகேயே பெற்றோர்களின் அருகாமையில், பாதுகாப்பாக இருந்திருக்கிறோம். நம்முடைய திறமைகள் எல்லாம் நாம் வெளியே சென்ற பின்புதான் நமக்கே தெரிய ஆரம்பிக்கின்றன. அந்நேரம் நமக்கு ஏற்படும் உணர்வுகள் அனைத்தையும் இந்த சிறுமியிடம் பார்க்கும்பொழுது நம் இளம் பருவத்தை மீண்டும் பார்த்தது போலவே இருக்கிறது. இவர் இயக்கிய திரைப்படங்களில் காணப்படும் இவரின் முத்திரையும் இதுவே.

தன் கனவு நகரத்தை நோக்கி கிகி போகும் காட்சி
இவருடைய படங்கள் ஜப்பானிய படங்கள் என்பதால் ஆங்கில மூலம் இருக்கிறதா என ஆரம்பத்தில் தேடினேன் அவரின் இரு படங்கள் பார்த்த பிறகு. அவரின் படங்களை எந்த மொழியில் வேண்டுமானாலும் பார்க்கலாமென புரிந்துக் கொண்டேன். கலைக்கேது மொழிகள்!
Recent Comments